பக்தியின் இலக்கணம்!


பக்தியின் இலக்கணம்!
1
பிரார்த்தனை:

ஸ தன்மயோ ஹ்யம்ருத ஈசஸம்ஸ்தோ
ஜ்ஞ ஸர்வகோ புவனஸ்யாஸ்ய கோப்தா
ய ஈசோஸ்ய ஜகதோ நித்யமேவ
நான்யோ ஹேதுர்வித்யத ஈசனாய

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாசம்
முமுக்ஷúர்வை சரணமஹம் ப்ரபத்யே

அவர் பிரப்ஞசத்தின் ஆன்மா . அவர் அழிவற்றவர் அவரே ஆள்பவர், ஆட்சி அவர் எல்லாம் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர், பிரபஞ்சத்தைக் காப்பவர், என்றென்றும் ஆள்பவர், அதனை ஆள்வதற்கு அவரைவிடத் திறமை வாய்ந்தவர்கள் வேறு யாரும் இல்லை.

படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மாவைத் (அதாவது பிரபஞ்ச உணர்வை) தோற்றுவித்து, வேதங்களை அவருக்கு அளித்தவர் அவர். முக்தி பெறுவதற்காக அந்த ஒளி வடிவினரை நான் அடைக்கலாம் புகுகிறேன். அவரது ஒளியே புத்தியை ஆன்மாவை நோக்கித் திரும்புகிறது.

1. பக்தியின் இலக்கணம்

உண்மையாக, இயல்பாக இறைவனைத் தேடுவதே பக்தி யோகம். இந்தத் தேடல் அன்பில் தொடங்கி, அன்பில் தொடர்ந்து, அன்பிலேயே நிறைவுறுகிறது. இறைவனிடம் தீவிர அன்புவெறி நம்மிடம் கணப்பொழுது தோன்றினால் போதும், அது அழிவற்ற முக்தியைத் தந்துவிடும். நாரதர் தமது பக்தி சூத்திரங்களில் இறைவனிடம் நாம் பூணும் ஆழ்ந்த அன்பே பக்தி என்கிறார் அதைப் பெறுகின்ற ஒருவன் அனைவரையும் நேசிக்கிறான். யாரையும் வெறுப்பதில்லை என்றென்றைக்குமாகத் திருப்தியுற்று விடுகிறான். உலகப் பொருட்களை அடைவதற்குரிய ஒரு சாதனமாக இந்த அன்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் ஆசைகள் இருக்கும்வரை இத்தகைய அன்பு வராது. பக்தி கர்மத்தைவிடச் சிறந்தது. யோகத்தைவிட மேலானது. ஏனெனில் இந்த இரு நெறிகளும் ஒரு பயனை முன்வைத்தே கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் பக்தியின் பயன் பக்தியே. வழியாகவும் முடிவாகவும் பக்தியே விளங்குகிறது.

பக்தி நமது ரிஷகளின் முக்கியக் கருத்தாக இருந்து வந்துள்ளது. பக்தி ஆச்சாரியர்களான சாண்டில்யர் நாரதர் போன்றோர் மட்டுமன்றி, ஞானத்தையே சிறப்பித்துப் பேசுபவர்களும், வியாச சூத்திரங்களின் உரைபித்துப் பேசுபவர்களும், வியாச சூத்திரங்களின் உரையாசிரியர்களுமான ஆச்சாரியர்களும் பக்தியைச் சுட்டிக் காட்டியுள்ளனர். எல்லா வியாச சூத்திரங்களுக்கும் இல்லாவிடினும். பெரும்பாலான சூத்திரங்களுக்கான விளக்கவுரை எழுதும்போது, அவை ஒருவித வறண்ட் ஞானத்தைக் கூறுகின்றன என்பதை நிலைநாட்டுவதில் தான் உரையாசிரியர்கள் ஆர்வம் காட்டினர். என்றாலும் சில சூத்திரங்கள், குறிப்பாக உபாசனை காண்டத்திலுள்ள சில சூத்திரங்களும் எளிதில் திரித்துப் பொருள் கூற அவர்களால் இயலவில்லை.

மக்கள் பொதுவாக எண்ணுவதுபோல், ஞானத்திற்கும் பக்திக்கும் இடையே உண்மையில் அவ்வளவு வேறுபாடு இல்லை இறுதியில் அவை இணைந்து ஒரு மையத்தில் சந்திப்பதை இந்த நூலின் உள்ளே போகப் போக நாம் காணலாம். ராஜயோகத்தைப் பற்றிய உண்மையும் இதுதான் (துரதிர்ஷ்டவசமாக இன்று அது மந்திரவாதிகளிடமும் ரகசிய வித்தைக்காரர்களிடமும் ஏறத்தாழ சிக்கிக் கிடக்கிறது) பாமர மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு கருவியாக அதைப் பயன்படுத்தாமல், முக்தியை அடைவதற்குரிய சாதனமாகப் பின்பற்றுவோமானால் அதே லட்சியத்திற்கு அது நம்மை இட்டுச் செல்லும்.

இறைவனை அடைவதற்குரிய நெறிகளில் பக்தி எளிமையானதும் மனித இயல்புக்கு ஏற்றதுமான நெறியாகும். இது பக்தி நெறியினால் வருகின்ற பெரியதொரு நன்மை. ஆனால் பக்தியின் ஆரம்ப காலங்களில், அதாவது கீழ்நிலைகளில், அது அருவருக்கத்தக்க கொள்கை வெறியாக மாறித் தாழ்ந்து போகிற ஆபத்தும் பலவேளைகளில் ஏற்பட்டுவிடுகிறது. இந்து மதத்திலுள் சரி, முகமதிய, கிறிஸ்தவ மதங்களிலும் சரி, அதில் காணப்படும் மத வெறியர்களின் கூட்டம், பக்தியின் கீழ்மட்ட நிலைகளில் இருப்பவர்களிலிருந்தே உருவாகியிருப்பதைக் காணலாம். தான் அன்பு செய்கின்ற ஒருவரிடம் ஒருமித்த பற்று (நிஷ்டை) இல்லாமல் தூய அன்பு வளர முடியாது. ஆனால் பல நேரங்களில் இந்தப் பற்றே மற்ற எல்லாவற்றையும் வெறுத் ஒதுக்குவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, எந்த நாட்டிலும் சரி, பலவீனமான, வளர்ச்சியுறாத மனிதர்களைப் பொறுத்தவரை, தங்கள் சொந்த லட்சியத்தை நேசிப்பதற்கான ஒரே வழி பிற லட்சியங்கள் அனைத்தையும் வெறுப்பதே. அதனால் தான், தான் வழிபடுகின்ற தெய்வத்திடம் பேரன்பும் பற்றும் கொண்டவன், தனது மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவன், பிற மதத்தினரைக் கண்டாலோ கேட்டாலோ எதிர்க்கிறான். எஜமானனுடைய சொத்தைப் பிறர் கவர்ந்து விடாமல் காத்து நிற்கின்ற நாயின் பிறடிக் குணத்தைப் போன்றதே இத்தகைய வெறி, சொல்லப் போனால் நாயின் குணம் மனிதனின் பகுத்தறிவை விட மேலானது. ஏனெனில் எஜமான் எந்த வேடத்தில் வந்து நின்றாலும் நாய் அவனை அறிந்துகொள்ளும் அவனை அது பகைவன் என்று நினைப்பதில்லை. கொள்கை வெறியனோ எல்லா பகுத்தறிவையும் இழந்து விடுகிறான். தன் சொந்த எண்ணங்களிலேயே ஊறிப்போய் கண்மூடிக் கிடக்கும் இந்த வெறியன், ஒருவன் என்ன சொல்கிறான், அவன் சொல்வது நல்லதா கெட்டதா என்பது பற்றியே கவலைப்படுவதில்லை. சொல்பவன் யார் என்பதுதான் அவனது கவலையெல்லாம். தன் மதத்தினரிடம் இரக்கமுடையவனாக, நல்லவனாக, நேர்மையாளனாக அன்புடையவனாக இருக்கின்ற இவனே தனது மதக் கோட்பாடுகளுக்குப் புறம்பாக உள்ளவர்களிடம் கொடிய ஈனச் செயல்களைச் செய்வதற்கும் தயங்குவதில்லை.

இந்த அபாயம் ஆரம்ப நிலையில் உள்ள பக்தியில் தான் (கௌணீ பக்தி) உள்ளது. பக்தி கனிந்து உயரிய (பரா) பக்தியாக உருவெடுக்கும்போது மதவெறியால் ஏற்படும் பயங்கரச் செயல்கள்பற்றி பயம் கொள்ள வேண்டியதில்லை . பராபக்திக்கு வசப்பட்டிருக்கும் பக்தன் அன்பே வடிவமான இறைவனுக்கு மிகமிக அருகில் சென்று விடுவதால் வெறுப்பைப் பரப்புகின்ற ஒரு கருவியாக இருப்பதில்லை.

நல்ல பண்புகளை இயைபுடன் வளர்த்துக்கொள்ள நம் அனைவராலும் முடிவதில்லை. ஆனால் ஞானம், பக்தி, யோகம் என்ற மூன்றும் இயைபுடன் இணைவதே மிக உன்னதமான பண்பாடு என்பதும் நமக்குத் தெரியும் ஒரு பறவை பறப்பதற்கு மூன்று விஷயங்கள் தேவை: இரண்டு இறக்கைகள் மற்றும் வழி காட்டுகின்ற சுக்கான் போல் ஒரு வால், ஞானம் ஓர் இறக்கை, பக்தி மற்றோர் இறக்கை, சமநிலையைக் காக்கின்ற வால் யோகம், இந்த மூன்று வழிபாட்டு முறைகளை இயைபுடன் பின்பற்றிற இயலாமல் அதன் காரணமாக பக்தி ஒன்றையே தங்கள் நெறியாக மேற்கொள்பவர்கள் ஒன்றை என்றும் நினைவில் கொள்ள வேண்டும்; முன்னேறிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு உருவங்களும் சடங்குகளும் மிகவும் இன்றியமையாதவைதான் ஆனால் ஆழ்ந்த பக்தியை நாம் உணர்கின்ற நிலைக்கு அவை நம்மை இட்டுச் செல்லுமே தவிர, அதற்குமேல் அவற்றால் எந்தப் பயனும் இல்லை.

ஞான ஆச்சாரியர்களும், பக்தி ஆச்சாரியர்களும் பக்தியின் வலிமையை ஒப்புக்கொண்டாலும் அவர்களிடையே சிறிதளவு கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. முக்திக்கு பக்தி ஒரு கருவி மட்டுமே என்று ஞானிகள் நினைக்கிறார்கள். பக்தர்களோ, அதைக் கருவியாகவும் அதேவேளையில் முடிவிடமாகவும் கருதுகின்றனர். இந்த வேறுபாடு ஒரு பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. உண்மை என்னவென்றால் பக்தி ஒரு கருவியாகப் பயன்படும்போது அது ஒரு கீழ்நிலை வழிபாடு. சற்று உயர்ந்த நிலையில் இதுவே உயர்நிலை வழிபாட்டிலிருந்து பிரித்தறிய முடியாத ஒன்றாகி விடுகிறது. பக்தி முதிரும்போது, பக்தன் தேடாவிட்டாலும் உண்மைஞானம் தானாகவே அவனிடம் வந்து சேர்கிறது. அதுபோல் நிறைஞானத்திலிருந்து உண்மை பக்தியையும் பிரிக்க முடியாது. இதனை மறந்துவிட்டு ஒவ்வொரு வரும் தத்தம் வழிபாட்டு முறையே சிறந்தது என்று வலியுறுத்துவதுபோல் தோன்றுகிறது.

இதை மனத்திற்கொண்டு வேதாந்த உரையாசிரியர்கள் இதுபற்றி என்ன சொல்கின்றனர் என்பதைக் காண்போம். ஆவ்ருத்திரஸக்ருத் உபதேசாத் என்ற பிரம்மசூத்திரத்தை விளக்குகையில் பகவான் சங்கரர் கூறுகிறார். இவன் அரசனிடம் பக்தி கொண்டுள்ளான், இவன் குருவிடம் பக்தி கொண்டுள்ளான் என்று மக்கள் கூறுகின்றனர். குருவையே புகலிடமாகக் கொண்டு அவரையே வழிபட்டு வருபவனைப்பற்றி இவ்விதம் கூறுகின்றனர். இங்கும் ஒருவிதமான ஆர்வத்தோடு கூடிய தொடர்ச்சியான நினைப்புத்தான் குறிக்கப்படுகிறது. சங்கரரின் கருத்துப்படி இதுவே பக்தி.

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா என்ற சூத்திரத்தின் உரையில் பகவான் ராமானுஜர் கூறுகிறார். ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படும் இடையீடற்ற எண்ணெய் ஒழுக்கைப் போன்று இடையீடின்றிச் (தியானிக்கப்படும் பொருளை)சிந்திப்பதே தியானம். இப்படி இடையீடின்றித் தொடர்ச்சியாக (இறைவனை) நினைக்க இயலும்போது தளைகள் எல்லாம் அறுபடுகின்றன. எனவேதான் இடையீடற்ற சிந்தனை, முக்திக்கு வழி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் இவ்வாறு இடையறாது நினைப்பது காண்பதற்கு நிகரானது. ஏனெனில் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான், இதைப் பின்வரும் பகுதியினால் அறியலாம்.

தூரத்திலும் அருகிலும் இருப்பவர் யாரோ அவரைக் கண்டுவிட்டால் இதயத்தளைகள் அறுபடுகின்றன, ஐயங்கள் அழிகின்றன, வினைப்பயன்கள் அடியோடு மறைகின்றன. அருகில் இருப்பவனைக் காணலாம். தொலைதூரத்தில் இருப்பவனை நினைக்கத்தான் முடியும். ஆனால் அருகிலும் தொலைவிலுமாக இருப்பவனைக் காண வேண்டும் என்றே கூறுகிறது சாஸ்திரம். எனவே மேற்கூறியதுபோல் நினைப்பது பார்ப்பதற்குச் சமமானது என்பதுதான் சாஸ்திரத்தின் முடிவு என்பது தெளிவு. நினைப்பது தீவிரமாகும்போது அது காண்பதாகவே ஆகிவிடுகிறது. இடையீடற்ற நினைப்புதான் வழிபாடு என்று சாஸ்திரங்களின் முக்கியப் பகுதிகளும் கூறுகின்றன. தொடர்ந்த வழிபாடே ஞானம். இந்த ஞானம் என்பது இடையீடற்ற நினைப்பு என்று விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நினைவு என்பது பிரத்தியட்சமாக ஒன்றைக் காண்பது என்ற நிலைக்கு உயர்ந்து விடுமானால், அது முக்திக்கு வழியாகிறது என்றும் சுருதிகள் முழங்குகின்றன. இந்த ஆன்மா பல்வேறு விஞ்ஞானங்களாலோ, கூர்த்த அறிவாலோ, வேதங்களைக் கரைத்துக் குடிப்பதாலோ அடையப்படுவது அல்ல. ஆன்மா யாரை விரும்புகிறதோ அவனாலேயே அது அடையப்படுகிறது. அவனுக்குத்தான் ஆன்மா தன்னை வெளிப்படுத்துகிறது வெறுமனே கேட்பதோ, சிந்திப்பதோ, தியானிப்பதோ ஆன்மாவை அடையும் வழிகள் அல்ல என்று கூறிய சுருதி மேலும் இந்த ஆன்மா யாதர விரும்புகிறதோ அவனாலேயே அடையப்படுகிறது. என்று கூறுகிறது. ஆழ்ந்த அன்பிற்குரிய பொருளே விரும்பப்படுகிறது. யார் இந்த ஆன்மாவை ஆழ்ந்து நேசிக்கிறானோ அவன் ஆன்மாவின் ஆழ்ந்த அன்பிற்கு உரியவன் ஆகிறான். தன் அன்பிற்குரிய அவன் ஆன்மாவை அடைய ஆண்டவனே அவனுக்கு உதவுகிறான். ஏனெனில் கீதையில் அவரே என்னிடம் நீங்காத பற்றுக் கொண்டவர்கள் என்னையே வந்தடையுமாறு அவர்களது புத்தியை நான் தூண்டுகிறேன் என்றல்லவா கூறுகிறார். நேரில் காண்பதற்கு ஒப்பான இந்த நினைப்பு அந்த நினைப்பின் பொருளுடைய ஆன்மாவின் நேசத்திற்கு உரியதாகையால் அதிக நேசத்திற்கு உரியதாக யாரிடம் இருக்கிறதோ, அவனையே பரமாத்மாவாகிய இறைவன் விரும்புகிறார். அவனாலேயே ஆன்மாவும் அடையப்படுகிறான் என்று அதனால்தான் கூறப்படுகிறது. இந்த இடையீடற்ற நினைப்பே பக்தி என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.

பதஞ்சலி முனிவருடைய ஈச்வர ப்ரணிதானாத்வா இறைவனை வழிபடுவதால் என்னும் யோக சூத்திர உரையில் போஜர் புலனின்பங்கள் முதலான எந்தப் பலன்களையும் நாடாமல் செய்யும் செயல்களை எல்லாம் குருவுக்கெல்லாம் குருவாக விளங்கும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்ற பக்தியே ப்ரணிதானம் என்று கூறுகிறார் பகவான் வியாசரும் இந்தச் சூத்திரத்தின் விளக்கத்தில் எந்த வகை பக்தியின் விளைவாக இறைவனின் கருணை யோகியின்மீது பொழிந்து அவன் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதுடன் ஆசியுள் வழங்குகிறதோ அதுவே ப்ரணிதானம் என்று கூறுகிறார். சாண்டியல்யர் ஆழ்ந்த இறையன்பே பக்தி என்கிறார்

ஆனால் பக்திக்கு மிகச் சிறந்த விளக்கம் பக்த சிகாமணியாகிய பிரகலாதனால் கூறப்பட்டுள்ளது

யா ப்ரீதிரவிவேகானாம் விஷயேஷ்வனபாயினீ
த்வாமனுஸ்மரத ஸாமே ஹ்ருதயான் மாபஸர்ப்பது

நிலையற்ற புலனின்பப் பொருட்கள்மீது பாமரர்கள் வைக்கின்ற அழிவில்லாத அதே அன்பு, உன்னைத் தியானம் செய்யும்போது என் மனத்தில் சிறிதும் வழுவாதிருக்குமாக!

அன்பு! யாருக்காக? மாபெரும் தலைவனாகிய இறைவனுக்காக, இறைவனைத் தவிர்த்துப் பிற பொருட்களின்மீது அவை எவ்வளவுதான் உயர்ந்தவையாக இருந்தாலும் நாம் வைக்கும் அன்பு பக்தியாக முடியாது. காரணம் ஒரு புராதன ஆச்சாரியாரின் கூற்றை மேற்கோள் காட்டி ராமானுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் கூறுவது போல்

ஆப்ரஹ்மஸ்தம்ப பர்யந்தா ஜகதந்தர்வ்யவஸ்திதா
ப்ராணின கர்மஜனித ஸம்ஸாரவர்த்தின யதஸ்ததோ
தே த்யானே த்யானினாமுபகாரகா அவித்யாந்தர்கதா
ஸர்வே தே ஹி ஸம்ஸார கோசரா

பிரம்மா முதல் புல் வரையில் உலகில் வாழும் எல்லாஙம வினைப்பயனால் வரும் பிறப்பு மற்றும் இறப்பின் அடிமைகளாக உள்ளன. அவை எல்லாமே அறியாமையில் அழல்பவை. மாறும் இயல்புடையவை. எனவே தியானிக்கப்படும் பொருட்களாக அவை நமக்குத் தியானத்தில் உதவு முடியாது.

சாண்டில்யர் பயன்படுத்திய அனுரக்தி என்ற சொல்லை விளக்கும்போது சுவப்னேசுவரர் தமது உரையில் கூறுகிறார் அனு என்றால் பின்னர் ரக்தி என்றால் பற்று. அதாவது இறைவனின் இயல்பையும் பெருமைகளையும் அறிந்த பிறகு அவரிடம் ஏற்படும் பற்று. இல்லாவிடில் மனைவிமக்களிடம் ஏற்படுகின்ற குருட்டுத்தனமான பற்று பக்தி என்றாகிவிடும். எனவே சாதாரண வழிபாட்டில் ஆரம்பித்து, ஆழ்ந்த உயரிய இறையன்பில் முடிவடைவதான இறையனுபூதிக்காக தொடர்ந்து மனத்தால் செய்யப்படும் இடைவிடாத முயற்சியே பக்தி என்பது தெளிவாகத் தெரிகிறது.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,