விவேகானந்தரின் ராமநாதபுரம் சொற்பொழிவு


விவேகானந்தரின் ராமநாதபுரம் சொற்பொழிவு
29ஜனவரி 1897 அன்று மன்னர் பாஸ்கர சேதுபதி அளித்த வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்.

மிக நீண்ட இரவு விலகுவதுபோல் தோன்றுகிறது மிகக்கடுமையான துன்பம் கடைசியாக முடிவுக்கு வந்துவிட்டது போல் தோன்றுகிறது, பிணம் போல் கிடந்த உடம்பு விழிப்பதுபோல் உள்ளது. இந்த நேரத்தில் ஒரு குரல் நம்மைக் நோக்கி வருகிறது- வரலாறும் மரபுகளும்கூட எட்டிப் பார்க்க முடியாத இருள்சொறிந்த அந்தக் கடந்தகாலத்திலிருந்து புறப்பட்டு , ஞானம் பக்தி மற்றும் கர்மமாகிய எல்லையற்ற இமயம் சிகரங்கள் தோறும் எதிரொலிப்பது போல் நம் தாய் நாடாகிய இந்தியாவின் குரல் நம்மை நோக்கி வருகிறது. மெதுவாக ஆனால் உறுதியாக, மிகவும் தெளிவாக அது வருகிறரது. நாளுக்கு நாள் அதன் ஒலி அதிகரித்துகொண்டே வருகிறது. தூங்கியவன் விழிக்கிறான் ! இமயத்திலிருந்து தவழ்ந்து வரும் தென்றல் காற்றைப்போல், அது ஏறத்தாழ உயிரிழந்த நிலையில் இருக்கின்ற எலும்புகளுக்கும் தசைகளுக்கும் உயிர்த் துடிப்பைத் தருகிறது. சோம்பல் நீங்கத் தொடங்குகிறது. நமது பாரதத்தாய் நீண்ட ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிக்கிறாள். அவள் விழித்து வருவதைக் குருடனும் குதர்க்கவாதிகளும் காண முடியாது. அவளை யாவரும் தடுக்க முடியாது. இனிஅவள் தூங்கப் போவதுமில்லை. புற சக்திகள் எதுவும் அவளை அடிமைப்படுத்த முடியாது. ஏனெனில் அவளது காலடியில் எல்லையற்ற ஆற்றல் எழுந்து கொண்டிருக்கிறது.

ராமநாதபுர மன்னர் அவர்களே ! ராமநாதபுரத்தின் குடிமக்களே நீங்கள் அன்போடும் கனிவோடும் எனக்கு அளித்த வரவேற்பிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அன்பையும் கனிவையும் என்னால் உணர முடிகிறது. ஏனெனில் வாய்ச் சொற்களை விட இதயத்துடன் இதயம் பேசுவதே உயர்ந்த மொழி. உயிருடன் உயிர் கலந்து ஆழ்ந்த அமைதியில் அவை பேசுகின்ற அந்த மொழி சிறிதும் தவறில்லாத தூய மொழி. அதை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் உணர்கிறேன்.

மேன்மை தங்கிய ராமநாதபுர மன்னர் அவர்களே மேலை நாடுகளில் நமது மதத்திற்காகவும் நம் தாய் நாட்டிற்காகவும் என்னால் ஏதாவது சிறிய வேலை செய்ய முடிந்தது என்றால், தங்கள் சொந்த வீடுகளிலேயே ஆழமாகப் புதைந்து கிடக்கின்ற விலை மதிப்பற்ற ரத்தினங்களை அறியாத நம் நாட்டு மக்களின் கவனத்தை அதன்மீது திருப்பி, அவர்களின் உணர்ச்சிகளை விழிக்கச் செய்ய முடிந்ததென்றால், அறியாமையாகிய குருட்டுத்தனத்தின் காரணமாக தாகத்தால் தவித்து வாடி , உயிர்பிழைக்கும் வழிதேடி எங்கோ உள்ள சாக்கடைத் தண்ணீரைக் குடித்து கொண்டிருந்தவர்களை அழைத்து, தங்கள் சொந்த வீட்டிலேயே வற்றாமல் பொங்கிக் கொண்டிருக்கின்ற நிரந்தர ஊற்றுநீரைக் குடிக்குமாறு என்னால் செய்யமுடிந்தது என்றால் , நமது மக்களை விழிப்புணர்த்தி, செயல்படத் தூண்டி, எல்லாவற்றிலும் இந்தியாவின் உயிர்த்துடிப்பு மதம்,மதம் மட்டுமே என்பதைப் புரிய வைக்க முடிந்ததென்றால் அந்த உணர்வு இல்லாது போனால் எத்தனை அரசியல்கள் இருந்தாலும் எத்தனை சமூகச் சீர்திருத்தங்கள் இருந்தாலும், இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் தலைமீதும் குபேரனின் செல்வத்தைக் கொட்டிக் குவித்தாலும் இந்தியா அழிந்துவிடும் என்று நான் அவர்களுக்கு உணர்த்த முடிந்தது என்றால், இதற்காக இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் என்னால் ஏதாவது செய்ய முடிந்தது என்றால் அதற்கான பெருமை முக்கியமாக தங்களையே சாரும்.

ஏனெனில் நீங்கள்தான் எனக்கு முதன்முதலில் இந்த எண்ணத்தைத் தந்தீர்கள். நீங்கள்தான் இடைவிடாமல் என்னை இத்தகைய வேலையில் தூண்டிவந்தீர்கள். எதிர்காலத்தை உள்ளுணர்வால் புரிந்து கொண்டது போல் நீங்கள்தான் என் கைகளைப் பிடித்து அந்தப் பணிகளுக்கு அழைத்துச் சென்றீர்கள், அதற்காக எல்லா வழிகளிலும் உதவினீர்கள். ஒருபோதும் தயங்காமல் இந்தக் பணியில் என்னை உற்சாகப்படுத்தினீர்கள். எனவேதான் ,எனது வெற்றியில் மகிழ்கின்ற முதல் மனிதராக நீங்கள் இருக்கிறீர்கள். அதைக் காணவே நான் இந்தியாவிற்குத் திரும்பும் வழியில் உங்கள் அரசில் முதன்முதலில் இறங்க நேர்ந்தது போலும்!

மேன்மை தங்கிய மன்னரே, தாங்கள் ஏற்கனவே கூறியது போல் மகத்தான வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது; வியக்கத்தக்க ஆற்றல்கள் செயல் படத்தப்பட வேண்டியுள்ளது. மற்ற நாடுகளுக்கு நாம் பலவற்றைப் போதிக்க வேண்டியுள்ளது. தத்துவத்தின், ஆன்மீகத்தின், பண்பின், இனிமையின், மென்மையின், அன்பின் தாயகம் இந்தப் பூமி. இந்தக் குணங்கள் இன்றும் இருக்கின்றன. பல நாடுகளுக்குச் சென்றதில் கிடைத்த என் அனுபவங்கள் எனக்கு இதையே அழுத்தமாகத் தெரிவிக்கின்றன. உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் இந்தக் குணங்கள் இன்றும் மிகச்சிறந்த அளவில் இருக்கிறது. என்பதை உறுதியாக, தைரியமாக என்னால் சொல்ல முடியும்.

இந்த விந்தையைப் பாருங்கள். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இங்கு எத்தøøயோ அரசியல் மாற்றங்கள் நடந்துள்ளன. பல்வேறு நாடுகளில் உள்ள அமைப்புகளை அழிப்பதற்காகப் பெரிய இயக்கங்கள் வேலை செய்து வருகின்றன. மேலை நாடுகளில் அவை குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுவருகின்றன. இதைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா என்று நம் மக்களைக் கேளுங்கள். ஒரு வார்த்தையும் அவர்கள் கேள்விப்பட்டதில்லை. ஆனால் சிகாகோவில் சர்வ சமயப் பேரவை ஒன்று நடைபெற்றது, அந்தப் பேரவையில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து ஒரு துறவி அனுப்பப்பட்டது, அவர் அங்கே மிகுந்த பாராட்டுபெற்றது. அப்போதிலிருந்து அவர் அங்கே பணியாற்றி வருவது போன்ற விவரங்கள் சாதாரண பிச்சைக் காரனுக்குக்கூடத் தெரிந்திருக்கிறது.

நம் மக்கள் மழுங்கிய மூளை உடையவர்கள், அவர்கள் கற்க விரும்புவதில்லை, எந்தச் செய்திகளையும் அறிந்து கொள்ள விரும்புவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் நானும் அத்தகைய முட்டாள்தனமான கருத்தையே கொண்டிருந்தேன். ஆனால் உலகைச் சுற்றி வருகின்ற யாத்திரிகர்களும், மேலோட்டமாக விஷயங்களைப் புரிந்துகொள்கின்ற அவசர புத்திக்காரர்களும் எழுதுகின்ற நூல்களில் உள்ள கருத்துக்களைவிட, கற்பனைகளைவிட அனுபவமே சிறந்த ஆசானாக உள்ளது. நம் மக்கள் முட்டாள்கள் அல்ல, மந்தமானவர்கள் அல்ல, கதிரவனின் குடையின் கீழ் இந்த உலகத்தில் வாழ்க்கின்ற எல்லாமக்களைப் போலவே அவர்களும் செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வமும் தாகமும் உடையவர்களாக உள்ளனர் என்பதைத்தான் இந்த அனுபவம் எனக்குப் போதித்தது..

ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென்று தனிப் பங்கு உள்ளது. இயல்பாகவே ஒவ்வொரு நாடும் தன்னோடு பிறந்த, தனக்கென்றே உரிய விசித்திரங்களும் தனித்தன்மையும் கொண்டதாக உள்ளது. உலக நாடுகளில் அனைத்தின் இந்த இயைபில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப் பங்கு உள்ளது. அதுவே அந்த நாட்டின் உயிரோட்டமாகவும் ஆதாரமாகவும் உள்ளது. அதுவே அந்த நாட்டு தேசிய வாழ்வின் முதுகெலும்பாகவும் அஸ்திவாரமாகவும் அசைக்க முடியாத அடித்தளப் பாறையாகவும் அமைந்துள்ளது.

நமது இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாட்டின் அடித்தளமாகவும் முதுகெலும்பாகவும் உயிர்நிலை மையமாகவும் இருப்பது மதம், மதம் மட்டுமே. மற்றவர்கள் அரசியலைப்பற்றிப் பேசட்டும், வியாபாரத்தின் மூலம் குவிக்கின்ற அளவற்ற செல்வத்தின் பெருமையைப் பேசட்டும், பரவி வருகின்ற வாணிப வளாகத்தைப்பற்றி பேசட்டும், சுதந்திரத்தின் மகிமையைப்பற்றி பேசட்டும். இவைகளை எல்லாம் இந்துவின் மனம் புரிந்து கொள்ளாது. புரிந்து கொள்ளவும் விரும்பாது. ஆன்மீகம், மதம், இறைவன், ஆன்மா, எல்லையற்ற பரம் பொருள், முக்தி- இவை பற்றியெல்லாம் பேசிப்பாருங்கள்.பிற நாடுகளின் உள்ள தத்துவ ஆசிரியர்கள் என்று கூறப்படுகின்றவர்களைவிட நம்நாட்டில் உள்ள சாதாரண குடியானவன் இவற்றைபற்றி அதிகமாக அறிந்திருப்பான். இது உறுதி. அன்பர்களே , நாம் இந்த உலகத்திற்குப் போதிக்க வேண்டியவை சில உள்ளன என்று கூறினேன். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு காலம் கொடுமையிலும் அன்னிய ஆதிக்கத்திலும் அவர்களின் தண்டனைகளின் கீழும் வாழ்ந்தும் இந்த நாடு அழியாமல் இருப்பதற்குரிய ஒரே காரணம், இந்த உலகத்திற்குப் போதிக்க வேண்டியதை அது பெற்றிருப்பது தான். இந்த நாடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் அது கடவுளையும் மதம் மற்றும் ஆன்மீகக் கருவூலங்களையும் கைவிடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது அரசியல் பேராசைகளாலும் சமூகத்திட்டங்களாலும் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்ட, பாதி செத்துவிட்ட மேலை நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் புதிய வாழ்வையும் புதிய சக்தியையும் வெள்ளம் போல் பாய்ச்சுவதற்கான மதம் மற்றும் ஆன்மீகத்தின் ஊற்றுக்கள் இன்னும் இந்த நாட்டில் நல்ல தான் இருக்கின்றன.

இந்தியச் சூழலை நிறைத்துக் கிளம்புகின்ற, இயைபானதும் மாறுபட்டதுமான பல்வேறு குரல்களுக் கிடையே மகத்தான, தனித்தன்மையான, முழுமையான ஒரு குரல் எழுகிறது; அது துறவு. துறந்துவிடு! இதுதான் இந்திய மதங்களின் அடிப்படையான கருத்து, இந்த உலகம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருக்கின்ற ஒரு மாயை . இப்போதைய வாழ்க்கையும் வெறும் ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே. இதற்குப் பின்னால், மாயையாகிய இந்த உலகத்திற்கு பின்னால் எல்லையற்ற ஒன்று உள்ளது; அதனை நாம் தேடுவோம். முடிவில்லாதாகக் கருதப்படுகின்ற இந்தப் பிரபஞ்சம்கூட ஒரு சேற்றுக்குட்டை மட்டுமே என்று எண்ணுகின்ற ஆற்றல்மிக்க பரந்த மனங்களாலும் அறிவாலும் ஒளிபெறுகின்ற நாடு இது. இதற்குப் பின்னால், அதற்கு பின்னால் காலம், எல்லையற்ற காலம்கூட அவர்களைப் பொறுத்தவரை வெறுமையே. காலத்திற்கும் அப்பால் வெகு அப்பால் அவர்கள் சொல்கிறார்கள். இடம் என்பது அவர்களுக்கு ஒன்றுமே இல்லை. அதையும் கடந்து செல்ல அவர்களுக்கு ஒன்றுமே இல்லை. அதையும் கடந்து செல்ல அவர்கள் விரும்புகிறார்கள். இப்படி,இந்த உலகம், காலம், இடம் அனைத்தையும் கடந்து செல்வதுதான் மதத்தின் ஆதாரம்.

எல்லாவற்றையும் கடந்து செல்வது தான், அனைத்தையும் கடந்து செல்வதற்கான இந்தப் போராட்டம்தான், எதனை இழக்க நேரினும், எந்த ஆபத்துக்களை எதிர் கொள்ள நேரினும் எல்லாவற்றிக்கும் அப்பால் இருக்கின்ற ஒன்றின் காட்சியைப் பெறுவதற்காக இயற்கையின் முகத்திரையைக் கிழிக்கின்ற தைரியம்தான் நமது நாட்டின் பண்பு. அதுவே நமது லட்சியம்.ஆனால் ஒரு நாட்டிலுள்ள எல்லோருக்கும் முற்றிலுமாகத் துறந்துவிட முடியாது தான். அவர்களுக்கு உற்சாகமூட்ட விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கான வழி இதோஉள்ளது. உங்கள் அரசியல், சமூகச் சீர்திருத்தம், பணம் சம்பாதிப்பது, வாணிப வளம் - இவை பற்றிய உங்கள் பேச்சுக்கள் எல்லாம் வாத்தின் முதுகில்பட்ட தண்ணீர் போல் வழிந்து போய்விடும். பிறகு? நீங்கள் உலகிற்குப் போதிக்க வேண்டிய தெல்லாம் ஆன்மீகத்தை தான். நாம் வேறு ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமா? இந்த உலகத்திடமிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதாவது இருக்கிறதா? ஆம் ; உலகப் பொருட்களைப் பற்றிய அறிவு, நிறுவனங்களின் சக்தி, அதிகாரங்களைக் கை யாளும் திறமை, நிறுவனங்களை உருவாக்குகின்ற திறமை, குறைந்த சக்தியைச் செலவழித்து அதிக பலன்களை அடையும் -திறமை- இவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவு மேலை நாட்டிடமிருந்து ஒரு வேளை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

ஆனால் உண்பதும் உடுப்பதும் குடித்துக் களிப்பதுமான லட்சியத்தை இந்தியாவில் யாராவது உபதேசித்தாலும், உலகியல் வாழ்க்கையை ஆன்மீகத்திற்குள் புகுத்த நினைத்தாலும் அவன் பொய்யன். இந்தப் புனித பூமியில் அவனுக்கு இடமில்லை; அவனது பேச்சைக் கேட்கவும் இந்திய மனம் விரும்பாது. மேலை நாகரீகம் மினுமினுப்பும் பளபளப்பும் கொண்டதாக இருக்கலாம், நாசூக்கானதாக இருக்கலாம் , அதிகார ஆற்றல் மிக்கதாக இருக்கலாம் . ஆனால் அவை அனைத்தும் வீண் என்பதை இந்த மேடையில் நின்று கொண்டு அவர்களின் முகத்திற்கு நேராகச் சொல்கிறேன். அவை வெறும் டம்பமே.கடவுள் மட்டுமே வாழ்கிறது. ஆன்மீகம் மட்டுமே வாழ்கிறது. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

என்றாலும், மிக உயர்ந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கான பக்குவம் பெறாத சகோதரர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்பத் தீவிரம் குறைக்கப்பட்ட சிறிது உலகாயதம் ஒருவேளை நன்மையை தரலாம். அவர்கள் மீது உயர் உண்மைக்களை திணிக்ககூடாது. சமீப காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சமூகத்திலும் இந்தக் தவறே செய்யப்பட்டு வருகிறது. உயர் உண்மைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் இல்லாதவர்களிடமும் அவை திணிக்கப் படுகின்றன. இப்படித் திணிப்பது தவறு என்ற உண்மை நன்றாகப் புரிந்து கொள்ளப்படுகின்ற இந்தியாவில் மிகவும் வேதனை தருகின்ற அளவில் இது நடைபெறுகிறது. என் வழி உங்கள் வழியாக இருக்க வேண்டிய தில்லை. இந்து வாழ்க்கையின் லட்சியம் சன்னியாசம் என்பது உங்களுக்குத் தெரியும்; எல்லோரையுமே துறக்கும் படி நமது சாஸ்திரங்கள் கட்டாயப்படுத்துகின்றன. உலகியல் இன்பங்களை அனுபவித்த பிறகு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் ஒவ்வொர் இந்துவும் உலகைத் துறக்க வேண்டும். அப்படித் துறக்காதவன் இந்து அல்ல . அவன் தன்னை இந்து என்று கூறிக்கொள்ள உரிமையில்லை .உலக வாய்வின் நிலைமையைத் கண்ட பிறகு , வாழ்க்கையை அனுபவித்தபிறகு அதை விட்டு விட வேண்டம் இதுதான் லட்சியம் என்பது நமக்குத் தெரியும் . போக வாழ்க்கை உள்ளீடற்றது, வெற்றுச் சாம்பல் என்பதை அறிந்ததும், அதைத் துறந்துவிடு, திரும்பிவிடு. மனம் புலன்களை நோக்கிச் சுழன்று செல்வது போலுள்ளது. அந்த மனத்தைப் பின்னால் திரும்பிச் சுழலச் செய்ய வேண்டும். பிரவிருத்தி நின்று போக வேண்டும்; நிவிருத்தி துவக்கப்பட வேண்டும். இதுதான் லட்சியம்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு அனுபவம் ஏற்பட்ட பிறகே, அந்த லட்சியத்தை அடைய முடியும். துறவின் உண்மையை ஒரு குழந்தைக்குப் போதிக்க முடியாது. குழந்தை இன்பநோக்குடன் பிறக்கிறது; அதன் உலகம் புலன்களிலேயே உள்ளது; அதன் வாழ்க்கை முழுவதும் புலன்களில் உள்ளது; இந்தக் குழந்தையைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓரளவு அனுபவம் வேண்டும், போகம் வேண்டும்; இவற்றின் மூலம் அவர்கள் உலகின் நிலையாமையை அறிந்து கொள்வார்கள். அதன்பிறகே அவர்களுக்குத் துறவு வரும். நமது சாஸ்திரங்களில் அத்தகையோருக்கான வழிகள் நிறைய உள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சன்னியாசிகளுக்குகான நியதிகளால் எல்லோரையும் கட்டுப்படுத்தும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. இது மிக பெரிய தவறாகும். இந்தத் தவறைத் தவிர்த்திருந்தால் இப்போது நீங்கள் இந்தியாவில் காண்கின்ற இவ்வளவு வறுமையும் துன்பமும் இருந்திருக்காது. சாதாரண ஏழையின் வாழ்க்கைக்கு கூட அவனுக்கு சிறிதும் பயனில்லாத ஆன்மீக மற்றும் ஒழுக்க விதிகளால் கட்டி நெருக்கப்பட்டுள்ளது. உங்கள் கைகளை விலக்கிக் கொள்ளுங்கள் ! அவன் வாழ்க்கையை கொஞ்சம் அனுபவிக்கட்டும்று. அதன்பிறகு அவன் தன்னை உயர்த்திக் கொள்வான். தானாகவே அவனிடம் துறவு தோன்றும்.

மேலைநாட்டினர் இந்த வகையில் ஏதோ சிறிது நமக்குப் போதிக்கலாம். ஆனால் இவற்றைக் கற்றுக்கொள்வதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனின் மேலைநாட்டுக் கருத்துக்களின் படி தங்கள் வாழ்க்கை பெரும்பாலும் தோல்வியாகவே உள்ளது. இதைச் சொல்வதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.

இந்தியாவில் நமது பாதையில் இரண்டு தடைகள் உள்ளன. ஒன்று பழங்கால வைதீகம், மற்றொன்று தற்கால ஐரோப்பிய நாகரீகம். இரண்டுமே அளவை மீறினால் அபாயம் விளைவிக்கக் கூடியவை, ஒன்றை விட்டால் மற்றொன்றினால் நேரும் அபாயம் பெருகும். இந்த இரண்டுள் பழங்கால வைதீகத்தையே நான் தேர்ந்தெடுப்பேன் ஐரோப்பியமயமாகும் முறையை நான் விரும்பவில்லை. ஏனெனில் பழைய வைதீக மனிதன் அறிவிலியாக இருக்கலாம், முரடனாக இருக்கலாம்; ஆனால் அவன் மனிதன். அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது, வலிமை உள்ளது. அவன் சொந்த கால்களில் நிற்கிறான். ஐரோப்பியமானவனுக்கோ முது கெலும்பில்லை; பல்வேறு இடங்களிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திரட்டப்பட்ட, பொருந்தாத, ஜீரணிக்க முடியாத, ஒன்றுபடாத பல்வேறு கருத்துக்களின் ஒரு கூட்டுக் குழப்பமாக அவன் இருக்கிறான். அவன் சொந்தக் காலில் நிற்கவில்லை , அவனது தலை சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. அவனது செயல்களின் நோக்கம் எது தெரியுமா? ஆங்கிலேயர் சிலரிடமிருந்து பெறும் சபாஷ் தான் அவனது சீர் திருத்தத்திட்டங்கள், ஏதோ சில சமுதாயத்தீமைக்களுக்கு எதிரான அவனுடைய வசைமாரிகள் - இவையெல்லாம் முக்கியமாகச் சில ஐரோப்பியர்களின் ஆதரவிலேயே நடக்கிறது. நமது சில பழக்கங்கள் கொடியவை என்று ஏன் அவன் சொல்கிறான் ? ஏனென்றால் ஐரோப்பியர்கள் அப்படிச் சொல்கிறார்கள், இதுதான் அவன் கூறும் காரணம். நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். உங்கள் வலிமையிலேயே எழுந்து நில்லுங்கள், உங்கள் வலிமையிலேயே இறந்து போங்கள். இந்த உலகத்தில் பாவம் என்று ஏதாவது இருக்கிறது என்றால் அது பலவீனம் மட்டுமே. எல்லா வகையான பலவீனங்களையும் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் பலவீனம் தான் பாவம், பலவீனம்தான் மரணம். தன் கால்களில் நிற்கின்ற அளவுகூடச் சமநிலை பெறாத இந்தப் பிராணிகள் இன்னும் எந்தப் பெயாராலும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆகவில்லை - ஆண்கள் என்றா, பெண்கள் என்றா, மிருகங்கள் என்றா?

ஆனால் அந்தப் பழைய வைதீகர்கள் உறுதி வாய்ந்தவர்கள், அவர்கள் மனிதர்கள். அவர்களுள் சில சிறந்த உதாரண புருஷர்கள் இன்னும் இருக்கிறார்கள் அவர்களுள் ஒருவரை உங்கள் முன் காட்ட விரும்புகிறோம். அவர்தான் உங்கள் ராமநாதபுர அரசர் . இவரைப்போல் ஆர்வம் நிறைந்த ஒரு மனிதர் இந்த நாடு முழுவதிலும் இல்லை. இதோ இளவரசர் இருக்கிறார் இவரைப்போல் கீழை மற்றும் மேலை நாட்டு விவகாரங்களை அறிந்த எல்லா நாடுகளிலிருந்து தன்னால் முடிந்த அளவிற்கு நாடுகளிலிருந்து தன்னால் முடிந்த அளவிற்கு எடுத்துக் கொள்கின்ற வேறெந்த நாட்டு இளவரசரும் இல்லை. மிகக் கீழான ஜாதியில் பிறந்தவராயினும் அறிவால் உயர்ந்திருப்பின் அவரிடமிருந்து உயர் அறிவை மிகுந்த பக்தியுடன் கற்றுக் கொள். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவரிமிருந்து வருமானாலும் முக்திக்கு உரிய வழியை அவருக்கு தொண்டுகள் செய்து அறிந்து கொள். -ஒருத்தி சிறந்தவளாக இருப்பாமானால், கீழான குலத்தில் பிறந்திருந்து தாலும் அவனை மணந்து கொள் - இவை நமது மகத்தான இணையற்ற சமுதாய விதி அமைப்பாளரான, தெய்வீக மனு அமைத்த சட்டங்கள். இது உண்மை உங்கள் சொந்தக் காலிலேயே நில்லுங்கள். உங்களால் முடிந்தவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் இந்து என்ற வகையில் அவை எல்லாம் நமது தேசியக் கொள்கைகளுக்கு அடுத்த படியிலேயே இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் நோக்கம் ஒன்று இருக்கிறது. இந்த நோக்கம், கணக்கில்லாத அவனது கடந்தகால கர்மங்களின் விளைவாகும். அது போல் உங்கள் பெருமைக்குரிய நாட்டின் முடிவில்லாத கடந்தகால வாழ்க்கையின் முழுமையான விளைவான மிகச் சிறந்த பாரம் பரியத்துடன் நீங்கள் ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறீர்கள். லட்சக்கணக்கான உங்கள் முன்னோர் உங்கள் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களள் என்று தோன்றுகிறது. எனவே விழிப்போடு இருங்கள். ஒவ்வோர் இந்துக் குழந்தையும் எந்த நோக்கத்துடன் பிறக்கிறது? தர்மமாகிய புதையலைக் காப்பதற்கே என்றல்லவா அவர் கூறுகிறார். இது பிராமணனின் லட்சியம் மட்டுல்ல , இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பூமியில் பிறக்கின்ற ஆண் பெண் பேதமின்றி ஒவ்வொரு குழந்தையின் லட்சியமும் தர்மமாகிய புதையலைக் காப்பதே என்று நான் கூறுவேன். வாழ்க்கையின் மற்ற பிரச்சனைகள் எல்லாம் அந்த நோக்கத்திற்கு அடுத்த படியிலேயே வைக்கப்பட வேண்டும் . சங்கீதத்தில் தாளலயங்களின் இடத்தைப் போன்றதே இது.

அரசியலையே நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு நாடு இருக்கலாம். அங்கே மதம் முதலான மற்றவையெல்லாம் அந்த லட்சியத்திற்கு அடுத்தபடியாகத்தான் அமைய வேண்டும் . ஆனால் இந்த நாட்டின் மகத் தான வாழ்க்கை லட்சியம் ஆன்மீகமும் , துறவும்தான் இவர்களுடைய அடிப்படை முழுக்கம், இந்த உலகமே வெறுமை மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலைக்கும் மாயை; மற்ற எல்லாமே - விஞ்ஞானம் ஆகட்டும் அதிகார அனுபவம் ஆகட்டும் செல்வம் பெயர் புகழ் என்று எதுவும் ஆகட்டும் அந்த மேலான லட்சியத்திற்கு அடுத்த நிலையில் தான் இருக்க வேண்டும் என்பதே. ஐரோப்பிய விஞ்ஞான அறிவு , கல்வி செல்வம் அதிகாரம் பெயர் முதலிய அனைத்தையும் ஒவ்வோர் இந்துக் குழந்தையின் பிறப்புடனே அதனுடன் ஆகிய முக்கிய நோக்கத்திற்கு அடுத்த நிலையில் வைப்பதே ஓர் உண்மையான இந்துவினுடைய பண்பின் ரகசியம் ஆகும்.

ஆகையால் இந்த இரண்டுவகையான மனிதர்களுள் வைதீக மனிதன் தன் இனத்தின் வாழ்க்கை ஊற்றான ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளான். மற்றவன் முற்றிலுமாக மேலைநாட்டு போலி நாகரீகத்தின் பிடியிலுள்ளான் ; உயிரூட்டும் லட்சிய மான ஆன்மீகத்தில் அவனுக்குப் பிடிப்பில்லை. இந்த இருவருள் வைதீக மனிதனையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இங்குள்ள ஒவ்வொருவருமே ஏற்றுக் கொள்வீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஏனென்றால் அவனிடம் சிறிது நம்பிக்கைக்கு இடமிருக்கிறது ; அனவிடம் தேசியக் கொள்கை உள்ளது, பிடித்து நிற்க ஏதோ இருக்கிறது. எனவே அவன் உயிர் வாழ்வான் மற்றவனோ அழிந்து போவான். தனி மனித வாழ்க்கையில் வாழ்க்கையின் லட்சியம் தடைபடாமல் இருந்தால், உயிர்த்துடிப்பான அந்த லட்சியம் செயல்பட்டுக் கொண்டிருக்குமானால் மற்ற செயல்களுக்கு ஏற்படுகின்ற தடைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அந்தக் தடைகள் அவவை அழிக்காது. அதுபோலவே நமது வாழ்க்கையின் இந்த நட்சியம் தடைபடாதவரை எதுவும் நம் நாட்டை அழிக்க முடியாது. ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; அந்த ஆன்மீகத்தைவிலக்குவீர்களானால், விலக்கி விட்டு மேலை நாட்டின் உலகியல் நாகரீகத்திற்குப் பின்னால் செல்வீர்களானால் மூன்று தலைமுறைகளுள் உங்கள் இனம் ஒன்றுமே இல்லாமல் அழிந்து போகும். ஏனெனில் நாட்டின் முதுகெலும்பு முறிந்துவிடும்; தேசிய மாளிகை எழுப்பப்பட்டுள்ள அஸ்திவாரம் தகர்க்கப்பட்டுவிடும் ஆனால் எல்லாம் அழிந்தே தீரும்.

எனவே அன்பர்களே முதலும் மிக முக்கியமானதுமான நமது வேலை பரம்பரைபரம்பரையாக நமக்கு நமது முன்னோர்களால் அளிக்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத செல்வமான ஆன்மீகத்தை நிலையாக , உறுதியாகப் பற்றிக்கொள்வதே.மன்னர் பரம் பரையைச் சார்ந்தவர்கள், ஏழை யாத்திரிகர்களைக் கொள்ளையடித்து, புராதனமான கோட்டை கொத்தளங்களில் வாழ்ந்த ஏதோ அரச வம்சத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறுவதில் பெருமை கொள்ளாமல் காடுகளில் வாழ்ந்த அரை நிர்வாண சாதுக்களைத் தங்கள் முன்னோர்களாகக் கொண்டாட முயல்கின்ற பேரரசர்கள் வாழ்ந்த நாட்டைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அத்தகைய ஒரு நாடு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது இந்த நாடுதான். மற்ற நாடுகளின் மகத்தான மதவாதிகள் தங்கள் மூதாதையர்களாகச் சில அரசர்டளைச் சொல்கிறார்கள் ஆனால் இங்கே பேரரசர்கள் தங்கள் பரம்பரையின் துவக்கத்தை ஓர் ஆன்மீகத்தை நம்புகிறீர்களோ இல்லையோ நம் தேசீய வாழ்விற்காவது ஆன்மீகத்தை நம்பிக்கை கொண்டு அதை ஒழர கையால் பற்றிக் கொள்ளுங்கள். பின்னர் மற்றொரு கையை நீட்டி, மற்ற இனங்களிடமிருந்து எதையெல்லாம் பெற முடியுமோ அவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ளுங்கள் ஆனால் அவை எல்லாமே உங்கள் வாழ்வின் ஒரே லட்சியமாகிய ஆன்மீகத்திற்கு அடுத்த படியில்தான் இருக்க வேண்டும். அத்தகைய ஆச்சரியஆச்சரியமான, உன்னதமான வாழ்க்கையிலிருந்து எதிர்கால இந்தியா உருவாகும்.

இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் அத்தகைய இந்தியா உருவாகிக் பெரும் சிறப்புடன் அத்தகைய இந்தியா உருவாகிக் கொண்டிருக்கறது என்பதில் சந்தேகமில்லை. பழங்கால ரிஷிகள்அனைவரைவிடவும் மகத்தான ரிஷிகள் தோன்றப் போகின்றனர். மற்ற உலகங்களில் வாழ்கின்ற உங்கள் முன்னோர்கள் தங்கள் வழித்தோன்றல்களாகிய உங்களின் புகழையும் கீர்த்தியையும் கண்டு திருப்தி மட்டும் அடையவில்லை, பெருமையும் அடைவார்கள் என்பதை நான் காண்கிறேன். என்சகேதரர்களே, நாம் எல்லோரும் கடுமையாக உழைப்போம். தூங்குவதற்கு இது நேரமில்லை எதிர்கால இந்தியா நம்முடைய உழைப்பைப் பொறுத்தே அமையப் போகிறது. இப்போது இந்தியத் தாய் தயாராகக் காத்திருக்கிறாள். தூக்கத்தில் இருக்கிறாள் , அவ்வளவுதான். எழுந்திருங்கள், விழித்திருங்கள். அழியாத தன் அரியாசனத்தில் புத்திளமையோடும் முன்பு எப்போதும் இல்லாத பெருமையோடும் அவள் வீற்றிருப்பதைக் காணுங்கள்.

கடவுளைப் பற்றிய கருத்து நமது தாய்த்திருநாட்டில் வளர்ந்துள்ளது போல் வேறெங்கும் இவ்வாறு முழுமையாக வளரவில்லை ஏனென்றால் கடவுளைப் பற்றிய இந்தக் கருத்து உலகில் வேறெங்கும் இருக்கவேயில்லை நான் இவ்வாறு உறுதியாகச் சொல்வதைக் கேட்டுநீங்கள் திகைக்கலாம். ஆனால் பிற மத சாஸ்திரங்கள் எவற்றிலேனும் கடவுளைப் பற்றிய நமது கருத்துக்களுக்குச் சமமான கருத்துக்கள் இருந்தால் காட்டுங்கள். அவர்களின் தெய்வங்கள் எல்லாம் ஒவ்வொரு குழுக்களுக்கு உரியவர்கள்; யூதர்களின் தெய்வம், அரேபியரின் தெய்வம் அந்த இனத்தின் தெய்வம் இந்த இனத்தின் தெய்வம் என்றிப்படி உள்ளவர்கள். ஆனால் எல்லோருக்கும் நன்மை தருகின்ற, மிகுந்தகருனை வாய்ந்த நம் தந்தையாகவும் ,தாயாகவும், நண்பனாகவும் நண்பனுக்கும் உற்ற நண்பனாகவும் ஆன்மாவின் ஆன்மாவாகவும் உள்ள கடவுள் கருத்து இங்கு இங்கு மட்டுமே உள்ளது. சைவர்களுக்கு சிவபெருமானாகவும் வைணவர்களுக்கு விஷ்ணுவாகவும், கர்ம நெறியினருக்கு கர்மமாகவும், பௌத்தர்களுக்கு புத்தராகவும் சமணர்களுக்கு அருகராகவும் கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் ஜெஹோவாவாகவும் முகமதியர்களுக்கு அல்லாவாகவும் ஒவ்வோர் இனத்திற்கும் ஒவ்வொரு தெய்வமாகவும், வேதாந்திகளுக்கு பிரம்மமாகவும் இருக்கின்ற, அந்த ஒரே கடவுளே எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற உண்மையும் அந்த இறைவனின் பெருமையும் இந்த நாட்டிற்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். அவர் நம்மை ஆசீர்வதிப்பாராக, உதவுவாராக! இந்தக் கருத்தினைச் செயல்படுத்த அவர் வலிமையும் ஆற்றலலும் தருவாராக. நாம் கேட்டவையும் படித்தவையும் நமக்குச் சக்தியைத் தரும் உணவாகட்டும், நமக்குள் வலிமையாக மாறட்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்யும் ஆற்றலாக மாறட்டும் ஆச்சாரியரும் சீடனுமாகிய நாம் ஒருவருக்கொருவர் பொறாமையின்றி இருப்போமாக. ஓம் சாந்தி; சாந்தி;சாந்தி;ஹரி: ஓம்

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,