எனது சிந்தனைகள் 2



இதைக் கேட்டதும் சீடர் ,எனக்குத் தீட்சை தருவதற்கான விருப்பத்தை இதன் மூலம் சுவாமிஜி தெரிவிக்கிறாரா? என்று எண்ணினார். அந்த நாட்களில் சீடர் தீவிர வைதீகராகவும் வேதாந்தியாகவும் இருந்தார். குருவாக ஒருவரை ஏற்றுக்கொள்வதுபற்றி அவர் எந்த முடிவும் செய்யவில்லை. ஜாதி, குலம், ஆசாரம் இவற்றைப் பின்பற்றுவதிலும், அவற்றைப் பிறர் பின்பற்றுமாறு எடுத்துக் கூறுவதிலும் உறுதியானவராக இருந்தார்.

பல்வேறான பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்த போது ஒருவர் வந்து, மிரர் பத்திரிக்கையின் ஆசிரியரான நரேந்திரநாத் சேன் சுவாமிஜியைப் பேட்டிகாண வந்திருப்பதாகச் சொன்னார். சுவாமி ஜி அவரை அழைத்துவருமாறு கூறினார். நரேந்திரநாத் சேன் உள்ளே வந்து அமர்ந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காபற்றி பல விஷயங்களைப் பேசத் தொடங்கினார். அவரது கேள்விகளுக்குப் பதிலாக சுவாமிஜி கூறினார்:

அமெரிக்காவைப் போன்ற வேறொரு நாட்டை உலகில் எங்குமே காண முடியாது. தாராள மனப்பான்மை பரந்த மனம் விருந்தோம்பும் பண்பு, புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கு உண்மையான ஆர்வம் இவை கொண்டவர்களாக அந்த நாட்டு மக்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் நான் எங்கு வேலை செய்திருந்தாலும். அது எனது சக்தியால் செய்யப்பட்டதல்ல. அமெரிக்க மக்கள் வேதாந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்றால், அது அவர்களின் நல்ல மனத்தாலேயே ஆகும்.

இங்கிலாந்தைப்பற்றிக் குறிப்பிடும்போது கூறினார்: இங்கிலாந்தைப் போல், புதியவற்றை ஏற்றுக் கொள்ளாத நாடு உலகில் வேறு எங்கும் இருக்க முடியாது. அவர்கள் சுலபத்தில் புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விடாமல் முயற்சி செய்து அவர்கள் ஒரு கருத்தைப் புரிந்து கொள்ளும்படிச் செய்து விட்டால் , பிறகு அந்தக் கருத்தை எந்தக் காரணத்திற்காகவும் விடவே மாட்டார்கள். அத்தகைய உறுதியான உள்ளத்தை வேறு எந்த நாட்டினரிடமும் நீங்கள் பார்க்க முடியாது. அதனால் தான் அவர்கள் இந்த உலகத்தில் அதிகாரத்திலும் நாகரீகத்திலும் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

பிறகு, தகுந்த பிரச்சாரகர்கள் கிடைப்பார்களானால் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வேதாந்த போதனையை நிலைநிறுத்துவதற்குப் பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று கூறிய அவர் தொடர்ந்து, நான் அதற்கான அஸ்திவாரம் மட்டும் தான் இட்டிருக்கிறேன். எதிர் காலப் பிரச்சாரகர்கள் என் பாதையைப் பின்பற்றுவார் களானால், காலப்போக்கில் மகத்தான காரியங்கள் செய்யப்படலாம் என்றார்.

நரேந்திரபாபு : இந்த வழியில் நாம் மதப் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்காலத்தில் என்ன வாய்ப்பு இருக்கிறது ?.

சுவாமிஜி: நமது நாட்டில் இந்த வேதாந்தம் மட்டும் தான் இருக்கிறது. மேலை நாகரீகத்தோடு ஒப்பிட்டால் வேறு எதுவும் நம்மிடம் இல்லை என்றே சொல்லலாம் ஆனால் எல்லா வகையான மத நம்பிக்கைகளையும் மத சாதனைகளையும் கொண்ட எல்லா மனிதர்களுமே ஆன்மீகத்தை அடையச் சம உரிமை கொடுப்பதும் உலகம் தழுவியதுமான வேதாந்த மதத்தை அவர்களிடம் பிரச்சாரம் செய்வதன் மூலம் எத்தகைய மகத்தான ஆன்மீகம் இந்தியாவில் வளர்ந்திருக்கிறது அது இன்றும் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாகரீகம் மிகுந்த மேலைநாடு அறிந்து கொள்ளும். இந்த மதத்தைப் படிப்பதன் மூலம் மேலை நாடுகளுக்கு நம்மிடமுள்ள மதிப்பும் அனுதாபமும் அதிகரிக்கும் ஏற்கனவே அது ஓரளவிற்கு வளர்ந்திருக்கிறது. இவ்வாறு நாம் அவர்களது அனுதாபத்தையும் மதிப்பையும் பெற்றால் நமது பொருளாதார வாழ்வை உயர்த்துகின்ற விஞ்ஞானங்களை அவர்களிடமிருந்து அறிந்துகொள்ளலாம். அதன் மூலம் வாழ்க்கைப் போராட்டத்திற்கு நம்மை நாம் நல்ல முறையில் தயார் செய்துகொள்ள முடியும். அதுபோலவே நம்மிடமிருந்து வேதாந்தத்தைக் கற்பதன் மூலம் அவர்கள் தங்கள் ஆன்மீக வாழ்வை உயர்த்திக் கொள்ளவும் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

நரேந்திரபாபு:இத்தகைய கருத்துப் பரிமாற்றத்தால் நமது அரசியல் மேம்பாட்டிற்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?

சுவாமிஜி : அவர்கள் (மேலை நாட்டினர்) பெருவீரனான விரோசனனின் குழந்தைகள். தங்கள் சக்தியால் அவர்கள் பஞ்சபூதங்களையும் பொம்மைகள் போல் ஆட்டி வைக்கின்றனர். இத்தகைய சக்திகளைப் பயன் படுத்தி அவர்களோடு போரிட்டு நாம் சுதந்திரம் பெறலாம். என்று நினைத்தால் உங்கள் எண்ணம். முற்றிலும் தவறு. இமயமலையின் முன் ஒரு சிறு கல் நின்றால் எப்படி இருக்குமோ, அதுபோல்தான் அவர்களை இந்தப் பௌதீக சக்திகளால் எதிர்த்து நாம் நிற்பதும்.

என் கருத்து என்ன தெரியுமா? வேதாந்தத்தின் மிக உன்னதமான ரகசியங்களை மேலை நாடுகளுக்கு உபதேசிப்பதன் மூலம் அந்த மகத்தான நாடுகளின் அனுதாபத்தையும் மதிப்பையும் பெற்று, நாம் அவர்களுக்கு என்றென்றும் ஆன்மீக குருவாக இருப்போம். அவர்கள் எல்லா பௌதீக விஞ்ஞானிகளிலும் நமக்கு ஆசிரியர்களாக விளங்குவார்கள். இதை மறந்து என்றைக்கும் நம் நாட்டினர் ஆன்மீகத்தை அவர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, மதத்தைக் கற்பதற்காக அவர்கள் காலடியில் அமர்கிறார்களோ அன்றைக்கு, ஏற்கனவே சீரழிந்துள்ள இந்த நாடு, என்றென்றைக்குமாக அழிந்து நாசமாகி விடும். எங்களுக்கு இதைக் கொடுங்கள் அதைக் கொடுங்கள் என்று இரவுபகலாக அவர்களின் முன் அழுவதால் எதுவும் வராது. அதற்குப் பதிலாக நாடுகளுக்கிடையே மதிப்பும் அனுதாபமும் நிறைந்த இத்தகைய கொடுக்கல் வாங்கல் உறவு வளருமானால் இதுபோன்ற கூச்சல்களுக்கு இடமில்லை. அனைத்தையும் அவர்கள் தாமாகவே செய்வார்கள். இவ்வாறு இரண்டு நாடுகளுக்கிடையே வளரும் மதத் தொடர்பாலும், வேதாந்தத்தைப் பெருமளவில் பரப்புவதாலும் இந்த நாடும் மேலை நாடுகளும் அதிக நன்மை அடையும் இதனுடன் ஒப்பிடும்போது அரசியல் விஷயங்கள் இரண்டாம்பட்சமாகவே எனக்குத் தோன்றுகிறது. மேற்சொன்ன காரியத்தை நடைமுறைப் படுத்துவதற்காக நான் என் வாழ்க்வையே அர்ப்பணம் செய்வேன், வேறு ஏதாவது வழியில் இந்தியாவிற்கு நன்மையை ஏற்படுத்த முடியும் என்று நீங்கள் நம்பினால் நல்லது, உங்கள் வழியிலேயே நீங்கள் செல்லுங்கள். 

நரேந்திர பாபு சுவாமிஜியின் கருத்துடன் தன் கருத்து ஒத்துப் போகாது என்று கூறிவிட்டுச் சிறிது நேரத்தில் புறப்பட்டுச் சென்றார் . சீடர், சுவாமிஜிக்கும் நரேந்திர பாபுவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலைக் கேட்டபடி சுவாமிஜியின் ஒளி தவழும் உருவத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

நரேந்திர பாபு சென்றதும் பசுக்களைப் பாதுகாக்கும் சங்கத்தின் பிரச்சாரகர் ஒருவர் சுவாமிஜியைக் காண உள்ளே வந்தார். அவர் காவித் தலைப்பாகை அணிந்து ஏறக்குறைய ஒரு துறவி போலவே உடைஉடுத்திருந்தார். வட இந்தியாவைச் சார்ந்தவர் அவர் என்பது தெளிவாகத் தெரிந்து. அவர் வருவது தெரிவிக்கப்பட்டதும் சுவாமிஜி அவரைக் காண்பதற்காக வெளியறைக்கும் வந்தார் . பிரச்சாரகர் சுவாமிஜியை வணங்கித் தன் கையில் இருந்த பசுமாதாவின் படம் ஒன்றைக் கொடுத்தார். சுவாமி ஜி அதை வாங்கிச் சிறிது நேரம் பார்த்து விட்டு அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். பிறகு இருவருக்கும் கீழ்வரும் உடையாடல் தொடர்ந்தது.

சுவாமிஜி: உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?

பிரச்சாரகர்: நாங்கள் கசாப்புக் கடைக்காரனிடமிருந்து பசு மாதாவைக் காப்பாற்றுகிறோம். பல இடங்களில் பசுக்காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே நோயுற்ற, வயதான பசுக்களையும், கசாப்புக் கடைக்காரர் களிடமிருந்து மீட்டு வந்த பசுக்களையும் தீனி முதலியவை கொடுத்துக் காப்பாற்றுகிறோம்.

சுவாமிஜி: உண்மையில் இது நல்ல காரியம்தான் செலவிற்கு உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது?

பிரச்சாரகர்: உங்களைப் போன்ற பெரியவர்கள் கருணையுடன் தரும் நன்கொடைகளால்தாம் இந்தக் காரியங்கள் நடக்கின்றன.

சுவாமிஜி: இதுவரையில் எவ்வளவு பணம் செலவழித்திருக்கிறீர்கள்?

பிரச்சாரகர்:மார்வாரிகள் இதற்கு மிக அதிகமாக உதவினார்கள் இந்த நல்ல காரியத்திற்கு அவர்கள் ஒரு பெரிய தொகையைத் தந்திருக்கிறார்கள்.

சுவாமிஜி: மத்திய இந்தியாவில் இப்போது பயங்கரமான பஞ்சம் மக்களை வாட்டுகிறது. அந்தப் பஞ்சத்தில் ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் செத்துப் போனதாக இந்திய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது! உங்கள் சங்கம் இந்தப் பஞ்சத்தில் மக்களைக் காப்பாற்ற ஏதாவது செய்ததா?

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,