விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் (பகுதி-4)


விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் (பகுதி-4)
தீமையும் நன்மையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல் எப்போதும் சேர்ந்தே உள்ளன என்று நம் தத்துவம் போதிக்கிறது. ஒன்று வேண்டுமென்றால் மற்றதை ஏற்றாக வேண்டும். கடலில் ஓரிடத்தில் அலை எழுந்தால் மற்றோர் இடத்தில் பள்ளம் உண்டாகியிருக்கிறது. ஏன், வாழ்க்கையே தீமைதான் உயிரைக் கொல்லாமல் மூச்சுக்கூட விட முடியாது. யாரிடமிருந்தோ பறிக்காமல் ஒருபிடி சோறுகூட உண்ண முடியாது. இதுதான் நியதி, இதுதான் தத்துவம். எனவே தீமைகளை எதிர்ப்பதற்காகச் செய்யப்படுகின்ற பணிகள்யாவும் எந்தப் புற அளவுகோலாலும் அளக்கப்படக் கூடியவையல்ல, அவை அகம் சம்பந்தப்பட்டவை மனிதனுக்கு மனிதன் வேறுபடக்கூடியவை என்பதைப் புரிந்துகொள்வது மட்டுமே நாம் செய்யக் கூடியது. எவ்வளவோ பெரியவை என்றெல்லாம் நாம் பேசினாலும் அத்தகைய பணிகள் சொந்தப் படிப்பினைக்காகவே தவிர, அவற்றால் தீமைகள் எல்லாம் உடனே அழிந்துவிடப் போவதில்லை.

தீமைக்கு எதிரான வேலையைப் பற்றிய முதல் கருத்து இதுதான்- அது நம்மை மேலும்மேலும் அமைதியானவர்களாக ஆக்க வேண்டும், கொள்கை வெறியை நம் ரத்தத்திலிருந்து அகற்ற வேண்டும். கொள்கை வெறியுடன் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்கள் எல்லாம் தங்கள் தோல்வியைத் தாமாகவே தேடித் கொண்டன என்பதை உலகின் வரலாறு நமக்குக் காட்டுகிறது. உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக நடைபெற்ற புரட்சிகளுள், அமெரிக்காவின் அடிமை முறை ஒழிப்புப் போரைவிடப் பெரிய ஒன்றைக் கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாது. உங்கள் எல்லோருக்கும் அதைப்பற்றித் தெரியும். ஆனால் அதன் விளைவுகள் என்ன? இன்றைக்கு அந்த அடிமைகள், அடிமைமுறையை ஓழிப்பதற்கு முன்னால் இருந்ததை விட நூறு மடங்கு மோசமான நிலையில் உள்ளனர் அடிமை முறையை நீக்குவதற்கு முன்பு இந்த அப்பாவி நீக்ரோக்கள் சிலருடைய சொத்துக்களாகவேனும் இருந்தார்கள் சொத்துக்கள் அழிந்து போய்விடக் கூடாது என்ற அளவில் பராமரிக்கப்பட்டும் வந்தார்கள். இன்றைக்கோ அவர்கள் யாருடைய சொத்தும் இல்லை அவர்களுடைய உயிருக்கு மதிப்பே இல்லை. ஏதேதோ சாக்குப்போக்குகளைக் காரணம் காட்டி அவர்கள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள். அவர்களைச் சுட்டுக் கொல்கின்ற கொலைகாரர்களைத் தண்டிக்க எந்தச் சட்டமும் இல்லை . ஏனென்றால் அவர்கள் நீக்ரோக்கள் அவர்கள் மனிதர்கள் அல்ல, ஏன் அவர்கள் மிருகங்கள் கூடஅல்ல. சட்டத்தின் மூலமோ செய்வதற்க்காகவேயானாலும் கொள்கை வெறியுடன் செயல்பட்ட ஒவ்வொர் இயக்கத்தையும் வரலாறு நமக்கு இவ்வாறுதான் இனம் காட்டுகிறது. என் அனுபவமும் அதுவே. எனவே கண்டனக் குரல் எழுப்புகின்ற எந்த இயக்கத்திலும் என்னால் சேரமுடியாது.

ஒவ்வொரு சமுதாயத்திலும் தீமைகள் உள்ளன. எல்லோருக்கும் இது தெரியும். இன்றைய குழந்தைகள் ஒவ்வொன்றும் இதை அறியும். அதுகூட மேடையேறி இந்து சமுதாயத்தில் நிலவுகின்ற பயங்கரத் தீமைகளைப்பற்றி ஒரு பெரிய சொற்பொழிவு நிகழ்த்த முடியும். இந்தியாவிற்கு வருகின்ற, கல்வியறிவற்ற மேலைநாட்டு யாத்தரிகன் ஒவ்வொருவனும் ஒரு ரயில் பயணத்திலேயே ஏதோ இந்தியாவையே எடை போட்டவன் ஆகிவிடுகிறான், பின்னர் இந்தியாவிலுள்ள பயங்கரத் தீமைகளைப்பற்றிப் பிரமாதமான சொற்பொழிவுகளையும் பொழிந்து விடுகிறான். தீமைகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தீமையை இனம்காட்டவும் எல்லோராலும் முடியும். ஆனால் பிரச்சனையிலிருந்து விடுபட வழி காண்பவன் அல்லவா மனித குலத்தின் நண்பன்! நீரில் முழ்கிக் கொண்டிருக்கின்ற சிறுவனும் தத்துவ அறிஞரும் போல் தத்துவ அறிஞர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். தண்ணீரில் தத்தளித்த சிறுவனோ, முதலில் என்னைத் தண்ணீரிலிருந்து கரையேற்றுங்கள் என்று கதறினான். அப்படிதான் நமது மக்களும், நாங்கள் வேண்டிய அளவு சங்கங்களையும் பத்தரிகைகளையும் பார்த்துவிட்டோம். எங்களைக் கரையேற்றுவதற்குக் கைகொடுக்கும் மனிதன் எங்கே இருக்கிறான்? எங்களை உண்மையாகவே நேசிக்கும் மனிதன் எங்கு இருக்கிறான்? எங்களிடம் கருணை காட்டும் மனிதன் எங்கு இருக்கிறான் ? என்று கதறுகிறார்கள். அந்த மனிதன் தான் தேவைப்படுகிறான்.

இந்த இடத்தில்தான் நான் இந்தச் சீர்திருத்த இயக்கங்களிலிருந்து முற்றிலுமாக வேறுபாடுகிறேன். ஒரு நூறு ஆண்டுகளாக அவர்கள் இங்கே இருக்கிறார்கள். மிக மோசமாக வசைமாரி பொழிகின்ற, மிகக் கேவலமாக நிந்தனை செய்கின்ற நூல்களைத் தோற்றுவிப்பதைத் தவிர இவர்களால் வேறு எந்த நன்மை செய்ய முடிந்தது? இறையருளால் இவை இல்லாமலிருந்தால் எவ்வளவோ நல்லதாயிருக்கும் ! இவர்கள் வைதீகர்களைக் கேலி செய்தார்கள், வெறுத்தார்கள், தூற்றினார்கள். வைதீகர்கள் இவர்களது போக்கைப் புரிந்து கொண்டதும் பதிலுக்குப் பதில் அதே பாணியில் திருப்பிக் கொடுத்தார்கள். விளைவு? நமது இனத்திற்கே வெட்கக்கேடான, நமது நாட்டிற்கே மானக்கேடான இலக்கியங்கள் நமது நாட்டின் ஒவ்வொரு மொழிகளிலும் உருவாயின. இதுவா சீர்திருத்தம்? இதுவா நாட்டைப் பெருமையின் பாதையில் அழைத்துச் செல்வது? யாருடைய தவறு இது?

நாம் சிந்திக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் உள்ளது. இந்தியாவில் நாம் எப்போதும் அரசர்களாலேயே ஆளப்பட்டு வருகிறோம். அவர்களே நமது சட்டங்கள் அனைத்தையும் இயற்றினார்கள். இப்போது அரசர்கள் இல்லை, அரசாங்கத்திற்குப் பின்னர் அதைச் செய்வதற்கு யாரும் இல்லை. அரசாங்கத்திற்கு அந்தக் துணிவு இல்லை. ஏனெனில் பொதுமக்களின் கருத்து வளர்ச்சிக்கு ஏற்பவே அது தன் பாதைகளை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன் பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளத்தக்க ஆரோக்கியமான, ஆற்றல் மிக்கதான பொதுமக்கள் கருத்தை உருவாக்க நீண்ட மிக நீண்ட காலமாகும். அதுவரையில் நாம் காத்திருக்கத்தான்வேண்டும். எனவே சமூகச் சீர்திருத்தம் என்ற பிரச்சினையை அணுகிப் பார்த்தோமானால் அது, சீர்த்திருத்தம் தேவைப்படுபவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வியில்தான் முடியும். அவர்களை முதலில் உருவாக்குங்கள். அவர்கள்எங்கே இருக்கிறார்கள்? சிறுபான்மையினரின் அடக்கு முறையே உலகம் கண்டவற்றுள் மிகவும் கொடியது. ஏதோ சிலவற்றைத் தீமை என்று நினைக்கின்ற ஒரு சிலரால் நாட்டை முன்னேற்ற முடியாது. அந்த நாடு ஏன் முன்னேறக் கூடாது? முதலில் நாட்டு மக்களுக்குக் கல்வியை அளியுங்கள். பிறகு உங்கள் சட்டசபையை உருவாக்குங்கள். அதன்பிறகே உங்கள் சட்டம் தயாராக வேண்டும் முதலில் அதிகாரத்தை உருவாக்குங்கள் . அதிலிருந்து சட்டத்திற்கான ஆதரவு தானாகவே கிடைக்கும். மன்னர்கள் போய்விட்டார்கள். மக்கள்சக்தி என்ற அந்தப் புதிய ஆற்றல் எங்கே? புதிய அதிகாரம் எங்கே? அதைக் கொண்டுவாருங்கள். ஆகையால் சமுதாயச் சீர்த்திருத்தத்திற்குக் கூட முதலில் செய்ய வேண்டிய கடமை மக்களுக்குக் கல்வி அளிப்பதுதான். அந்தக் காலம் வரும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

கடந்த நூற்றாண்டில் ஆர்ப்பரித்த சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் ஆரவாரம் மட்டுமே. இந்த ஒவ்வொரு சீர்த்திருத்தமும் முதல் இரண்டு ஜாதிகளை மட்டுமே தொடுகிறது, மற்றவைகளைத் தொடுவதில்லை. விதவைத் திருமணப் பிரச்சினை இந்தியப் பெண்களுள் எழுபது சதவீதத்தினரைத் தொடுவதே இல்லை.இத்தகைய பிரச்சினைகள் எல்லாம் பாமர மக்களின் பணத்தால் கல்வியறிவு பெற்ற, உயர்ஜாதிப் பெண்களுக்காகவே பேசப்படுகிறது. இதைக் கவனத்தில் வையுங்கள். ஒவ்வொரு முயற்சியும் அவர்களின் சொந்த நன்மைக்காகவே செய்யப்படுகிறது. இது சீர்திருத்தம் ஆகாது. பிரச்சினையின் அடிமட்டத்திற்கு,அதன் வேருக்கே நீங்கள் செல்ல வேண்டும். இதையே நான் முற்றிலுமான, நுனி வரையிலான சீர்த்திருத்தம் என்று சொல்கிறேன் நெருப்பை அடியில் மூட்டுங்கள், அது மேல்நோக்கி எரியட்டும். அதிலிருந்து காண்பது அவ்வளவு சுலபமல்ல, ஏனெனில் அது பெரிது, பரந்தது. அவசரப்படாதீர்கள். பல நூறுஆண்டுகளாக இந்தப் பிரச்சனைகள் இருந்தே வருகின்றன.

புத்த மதத்தைப் பற்றியும் அதன் ஆஜ்ஞேய வாதத்தைப் பற்றியும் பேசுவது இப்போதல்லாம் குறிப்பாக தென்னிந்தியாவில் ஒரு நாகரீகமாக இருக்கிறது. இன்று நம் நாட்டில் நிலவுகின்ற இழிநிலை புத்த மதம் விட்டுச் சென்றதுதான் என்பதுபாவம், அவர்களுக்குச் சிறிதும் தெரியவில்லை. புத்த மதம் நமக்கு விட்டுச் சென்ற பாரம்பரியம் இதுதான். புத்த மதம் பரவியதற்குக் காரணம் அதன் அற்புதமான நல்லொழுக்கக் கோட்பாடும் கௌதம புத்தரின் அற்புதமான ஆளுமைத் தன்மையுமே என்று நீங்கள் நூல்களில் படிக்கலாம். இந்த நூல்கள் எழுதியவர்களோ புத்த மதத்தின் எழுச்சி வீழ்ச்சி இவைப்பற்றிச் சிறிதும் படித்தறியாதவர்கள். பகவான் புத்தரிடம் எனக்கு அளவற்ற மதிப்புண்டு, பக்தியும் உண்டு. ஆனால் நான் சொல்வதைக் குறித்துக் கொள்ளுங்கள்: புத்த மதம் பரவியதன் காரணம் அதன் கொள்கைகளைவிட புத்தரின் ஆளுமையைவிட, கட்டப்பட்ட கோயில்களும், நிறுவப்பட்ட சிலைகளும், நாட்டு மக்களுக்கு முன் வைக்கப்பட்ட ஆடம்பரமான சடங்குகளும், விழாக்களுமே ஆகும். இவ்வாறுதான் புத்த மதம் வளர்ந்தது. மக்கள் தங்கள் வீடுகளில் ஆஹுதி அளித்து வந்த சிறிய ஹோம குண்டங்கள் புத்த மதத்தின் ஆடம்பரமான கோயில்கள் மற்றும் சடங்குகளின் முன் நிற்க முடியவில்லை. ஆனால் பின்னாளில் எல்லாமே இழிநிலையை அடைந்தன, கோடுகளின் மொத்த உருவமாயின. அதைப் பற்றி இங்கு என்னால் பேச முடியாது. அவைகளைப் பற்றி அறிய விரும்புவர்கள் தென்னிந்தியாவின் சிற்பங்கள் நிறைந்த அந்தப் பிரம்மாண்டமான கோயில்களில் ஏதோ சிறிது காணலாம். இதுதான் பௌத்தர்களிடமிருந்து நாம் பெற்ற பாரம்பரியம்.

அதன்பிறகு மகத்தான சீர்திருத்தவாதியாகிய சங்கராச்சாரியாரும் அவரது சீடர்களும் தோன்றினர். அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவின் பாமர ஜனங்கள் வேதாந்த மதத்திற்கு, அது ஆரம்பத்திலிருந்த புனித நிலைக்கு மெள்ளமெள்ளத் திரும்பி அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சமூகத்திலிருந்த எல்லா தீமைகளையும் இந்தச் சீர்திருத்தவாதிகள் முழுமையாக நன்றாக அறிவார்கள், என்றாலும் அவர்கள் எதையும் நிந்திக்கவில்லை: உங்களிடம் இருப்பவை அனைத்தும் தவறானவை. அவைகளை வீசி எறிந்தே தீர வேண்டும் என்று சொல்லவில்லை. ஒருபோதும் அப்படி நடக்கவும்முடியாது.

இன்னும் முன்னூறு ஆண்டுகளுள் கிறிஸ்தவ மதம் ரோமானிய மற்றும் கிரேக்க மதங்களின் தாக்கத்தை விலக்கிவிடும் என்று என் நண்பரான டாக்டர் பரோஸ் கூறியிருப்பதைப் படித்தேன். ஐரோப்பாவையும் கிரீசையும் ரோமையும் பார்த்த ஒரு மனிதனின் பேச்சு அல்ல அவை. ரோமானிய , கிரேக்க சமயங்களின் செல்வாக்கு இருக்கவே செய்கிறது; ப்ராஸ்டென்ட் நாடுகளில்கூட அப்படியே உள்ளது; பெயர்கள் மாற்றப்படுகின்றன பழைய தெய்வங்களுக்குப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டுப் புதிய முறையில் வழிபடப்படுகின்றன, அவ்வளவுதான் அவர்கள் பெயரை மாற்றி இருக்கிறார்கள், பெண் தெய்வங்கள் புனிதர்களாக ஆகியுள்ளனர், சடங்குகள் புதியதாக மாறியுள்ளன. பழைய பட்டமாகிய போன்டிபக்ஸ் மேக்ஸிமஸ் கூட இன்னும் இருக்கிறது.

எனவே திடீரென்று எந்த மாற்றமும் நிகழ முடியாது. சங்கராச்சாரியார் இதை அறிந்திருந்தார், ராமானுஜருக்கும் இது தெரியும்.அவர்களுக்கு இருந்த ஒரே வழி இருக்கின்ற மதத்தை மெள்ளமெள்ள உயர்நிலைக்குக் கொண்டுவருவது ஒன்றே. இதைத் தவிர வேறு ஏதாவது முறையைப் பின்பற்றியிருந்தால் அவர்கள் ஏமாற்றுக் காரர்களாகி இருப்பார்கள். ஏனெனில் அவர்களது நெறியின் அடிப்படைக் கொள்கையே பரிணாமம்தான், அதாவது இத்தகைய பல்வேறு படிகள் மற்றும் நிலைகளின் வழியாக ஆன்மா உயர் லட்சியத்தை நோக்கிச் செல்கிறது என்பதுதான்.எனவே இந்தப் பல்வேறு படிகள் எல்லாம் தேவையானவை, உதவிகரமானவை. அவற்றைநிந்திக்க யாருக்குத் தைரியம் இருக்கிறது?

உருவ வழிபாடு தவறானது என்று கூறுவதைக் கேட்டுக்கேட்டுப் புளித்து விட்டது. இன்று இதைக் கேள்விப்படுகின்ற எல்லோருமே அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமலே ஏற்றுக் கொள்கிறார்கள், நானும் ஒரு காலத்தில் அப்படிதான் நினைத்தேன் அதற்குத் தண்டனைபோல், எல்லாவற்றையும் உருவ வழிபாட்டின் மூலமே பெற்ற ஒருவரின் காலடியில் அமர்ந்து கற்க வேண்டிதாயிற்று. இங்கே நான் ராமகிருஷ்ண பரமஹம்சரைத்தான் குறிப்பிடுகிறேன். உருவ வழிபாட்டின் மூலம் இத்தகைய ராமகிருஷ்ண பரமஹம்சர்கள் உருவாகலாம் என்றால் உங்களுக்கு எது வேண்டும் ? சீர்திருத்தவாதியின் கொள்கையா அல்லது கணக்கற்ற உருவங்களா? பதில் சொல்லுங்கள். உருவ வழிபாட்டின் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர்களை உங்களால் உருவாக்க முடியுமானால் இன்னும் ஆயிரக்கணக்கான உருவங்களைவைத்துக் கொள்ளுங்கள். அதற்கான ஆற்றலை உங்களுக்கு இறைவன் அருள்வாராக! உங்களால் முடிந்த எந்த வழியிலேனும் அவரைப் போன்ற மேலோரை உருவாக்குங்கள்.

என்றாலும் உருவ வழிபாடு நிந்திக்கப்படுகிறது. ஏன்? யாருக்கும் தெரியாது. ஏனென்றால் சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஏதோ யூதர்கள் சிலர் அதை நிந்தித்தார்கள் என்பதாலா? தங்கள் சொந்த விக்கிரகங்களைத்தவிர மற்ற எல்லோருடைய திருவுருவங்களையும் கண்டனம் செய்வது அவர்களுக்கு வழக்கமான ஒன்று கடவுள் அழகியதோர் வடிவமாகவோ, அடையாள வடிவிலோ குறிக்கப்பட்டால் அது மிகவும் மோசமானது, அது பாவம் என்பான் யூதன்; அது பாவம் ஆனால் இரு புறமும் இரண்டு தேவதைகள் அமர்ந்திருக்க, மேலே மேகங்கள் பரவி நிற்க, கடவுளை ஒரு பெட்டியாக உருவகம் செய்தால் அது புனிதமானவை அனைத்திலும் புனிதமானது. கடவுள் ஒரு புறாவின் வடிவில் வந்தால் அது புனிதமானது; ஆனால் அவரே பசுவின் வடிவில் வந்தால் அது முட்டாள்களின் மூட நம்பிக்கை, அதைக் கண்டிக்க வேண்டும்! இதுதான் உலகின் போக்கு. அதனால்தான் ஒரு கவிஞர் மனிதர்களாகிய நாம் எவ்வளவு முட்டாள்கள்! என்றார் அடுத்தவனின் கண்ணோட்டத்தில் உலகைப் பார்ப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! அப்படிப் பார்க்க முடியாததுதான் மனித குலத்தின் சாபக்கேடாக உள்ளது. வெறுப்பு, பொறாமை, சண்டை, சச்சரவு அனைத்திற்கும் அதுதான் மூலக்காரணம்.

சிறுவர்களே, மீசை முளைத்த குழந்தைகளே, சென்னையைத் தாண்டிச் செல்லாத நீங்கள் எழுந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்தையுடைய முப்பது கோடி மக்களின் பின்னால் நின்றுக்கொண்டு அவர்களுக்குக் கட்டளையிட விரும்புகிறீர்கள்! வெட்கமாக இல்லை ?அத்தகைய அதர்மச் செயலிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் படிக்க வேண்டியவற்றை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்! மரியாதையற்ற சிறுவர்களே வெறுமனே தாளில் சில வரிகளைக் கிறுக்கி, சில முட்டாள்களின்மூலம் அவற்றைப் பிரசுரித்துவிட்டால் நீங்கள் சொல்வதுதான் இந்தியப் பொதுமக்களின் கருத்து என்றா நினைக்கிறீர்கள்! இதுவா உங்கள் எண்ணம்?

சென்னையின் சீர்திருத்தவாதிகளுக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். நான் அவர்களிடம் பெருமதிப்பும் அன்பும் கொண்டிருக்கிறேன். அவர்களது பரந்த உள்ளத்திற்காகவும், தங்கள் நாட்டிடமும் ஏழைகளிடமும் தாழ்த்தப்பட்டவர்களிடமும் அவர்கள் கொண்டுள்ள அன்பிற்காகவும் நான் அவர்களை நேசிக்கிறேன். சகோதர பாசத்துடன் நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம் அவர்களுடைய வழி தவறு என்பதுதான். நூறு ஆண்டுகளுடைய வழி தவறு என்பதுதான். நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு, தோல்வி கண்ட வழி அது. நாம் ஏதாவது புதிய வழியை முயற்சி செய்வோமே!

இந்தியாவில் எப்போதாவது சீர்திருத்தவாதிகளுக்குக் குறைவு இருந்ததுண்டா? இந்தியாவின் வரலாற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ராமானுஜர் யார்? சங்கரர் யார்? நானக் யார்? சைதன்யர் யார்? கபீர் யார்?தாதுயார்? ஒளி மிகுந்த நட்சத்திரக் கூட்டங்களின் வரிசைகள்போல், ஒருவர் பின்னால் ஒருவராக வந்த இந்த முதல்தர ஆச்சாரியர்கள் எல்லாம் யார்? தாழ்ந்த குலத்தினரை எண்ணி ராமானுஜர் உருகவில்லையா? மிகவும் தாழ்ந்த குலத்தினரைத் கூடத் தமது நெறியில் அனுமதிப்பதற்கு அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபடவில்லையா? முகமதியர்களையும் தமது நெறியில் சேர்த்துக்கொள்ள அவர் முயலவில்லையா? இந்துக்களுடனும் முகமதியர்களுடனும் உறவாடி ஒரு புதிய நிலையைக் கொண்டுவர நானக் முயல வில்லையா? அவர்கள் எல்லோரும் முயன்றார்கள், அவர்களுடைய பணி இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது. வித்தியாசம் இதுதான்: அவர்கள் இன்றைய சீர்திருத்தவாதிகளைப்போல் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை ; இன்றைய சீர்திருத்தவாதிகளைப் போல் யாரையும் சபிக்கவில்லை. வாழ்த்துக்களை மட்டுமே அவர்களுடைய உதடுகள் மொழிந்தன. அவர்கள் ஒருபோதும் நிந்திக்கவில்லை. நம் இனம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் மக்களிடம் கூறினார்கள். அவர்கள் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தார்கள்; பின்னர் மக்களைக் நோக்கி, இந்துக்களே, இதுவரை நீங்கள் செய்தவை எல்லாம் நல்லதே. ஆனால் என் சகோதரர்களே, அதைவிட இன்னும் நல்லவற்றைச் செய்வோம் என்றே கூறினார். நீங்கள் தீயவர்களாக இருந்தீர்கள், இப்போது நல்லவர்களாவோம் என்று அவர்கள் சொல்லவில்லை. நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள். இப்போது மேலும் நல்லவர்கள் ஆவோம் என்றே கூறினார்கள். எவ்வளவு பெரிய வித்தியாசம்!

நம் இயல்பிற்கு ஏற்பவே நாம் வளர வேண்டும். வெளிநாட்டுச் சங்கங்கள் நம்மீது திணித்துள்ள செயல் முறைகளைப் பின்பற்ற முயல்வது வீண், அவ்வாறு நடக்கவும் முடியாது. அப்படி முடியாதத்தற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். வளைந்து நீட்டி, கொடுமைப்படுத்துவதன் மூலம் நம்மை மற்ற நாடுகளின் அமைப்பில் உருவாக்க முடியாது. மற்ற இனங்களின் சமூக அமைப்புகளை நான் நிந்திக்கவில்லை; அவை அவர்களுக்கு நல்லது, நமக்கு அல்ல . அவர்களுக்கு இறைச்சியாக இருப்பது நமக்கு விஷமாகலாம். கற்க வேண்டிய முதல் பாடம் இது. தங்கள் பல்வேறு அறிவியல், மற்ற அமைப்புக்கள் மற்ற மரபுகளின் பின்னணியில் தற்போதைய அமைப்பு முறையை அவர்கள் பெற்று இருக்கிறார்கள், நமது பாரம்பரியத்திற்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் செயல்களின் பின்னணியில் அமைந்த, நமக்குச் சொந்தமான முறையில்தான் நாம் இயல்பாகச் செல்ல முடியும். நமது சொந்தப் பாதையில்தான் சுலபமாகச் செல்ல முடியும். அதை நாம் செய்தாக வேண்டும்.

எனது திட்டம்தான் என்ன? பழங்காலத்தின் மகத்தான ஆச்சாரியர்களுடைய கருத்துக்களைப் பின்பற்றுவதே. நான் அவர்களது செயல்களைப் படித்தேன். அவர்கள் மேற்கொண்ட பணிகளின் போக்கை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. அவர்கள் சமூகத்தின் மகத்தான ஆரம்பகர்த்தாக்கள். அவர்கள் மாபெரும் வலிமையும் தூய்மையும் வாழ்வும் தந்தவர்கள். அவர்கள் மிக அற்புதமான செயல்களை செய்தார்கள். நாமும் அற்புதமான வேலைகளைச் செய்தாக வேண்டும். சூழ்நிலைகள் கொஞ்சம் மாறியுள்ளன. எனவே நமது செயல்முறையும் சிறிது மாற வேண்டும் அவ்வளவுதான்.

வாழ்வில் ஒரு தனி மனிதன் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு நாடும் ஒரு தனிப் பண்பைப் பெற்றிருப்பதைக் காண்கிறேன். அதுவே அதன் மையம், அதுதான் ஆதார சுருதி, அதைச் சுற்றியே பல்வேறு இசையும் இயைபுடன் கலந்து இனிய பண் ஆகிறது. இங்கிலாந்தைப் போன்ற நாட்டில் அரசியல் அதிகாரம் ஆதாரமாக உள்ளது. மற்றொரு நாட்டில் கலை வாழ்க்கை முக்கியமாக உள்ளது. இப்படியே ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது. இந்தியாவில் மத வாழ்வே மையமாக, தேசிய வாழ்வு என்னும் பண்ணின் ஆதார சுருதியாக அமைந்துள்ளது. பரம்பரைபரம்பரையாக நூற்றாண்டுகளைக் கடந்து வந்த அந்தக் சொந்தத் தேசிய ஆதாரத்தை எந்த நாடாவது உதறிவிட முயலுமானால், அதன் போக்கிலிருந்து விலக முயலுமானால் அந்த முயற்சியில் வெற்றி காணுமானால் அந்த நாடு அழிந்துவிடும். எனவே மதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அரசியலையோ சமுதாயத்தையோ மற்ற எதையோ உங்கள் மையமாக உங்கள் தேசிய வாழ்வின் ஆதாரமாகக் கொண்டீர்களானால், நீங்கள் மறைந்துபோய் விடுவதுதான் அதன் விளைவாக இருக்கும். இதைத் தடுக்க வேண்டுமானால் உங்கள் எல்லா வேலைகளையும் மதம் என்ற அடிப்படையின் மூலமாகச் செய்யுங்கள். மதம் என்ற முதுகெழும்பின் வழியாக உங்கள் அனைத்து நரம்புகளும் அதிரட்டும்.

சமுதாய வாழ்வில் அதன் செயல்முறை விளைவைக் காட்டாமல் அமெரிக்கர்களிடம் மதத்தைப் போதிக்க முடியாது என்பதை நான் கண்டேன்.வேதாந்தம் கொண்டுவரக்கூடிய அற்புதமான அரசியல் மாற்றங்களைக் காட்டாமல் என்னால் இங்கிலாந்தில் மதத்தைப் பிராச்சாரம் செய்ய முடியவில்லை. அது போலவே இந்தியாவில் சமூகச் சீர்திருத்தம்கூட அது ஒருவரது வாழ்வைக் எவ்வாறு மேலும் ஆன்மீகமயமாக்கும் என்பதை விளக்கித்தான் போதிக்கப்பட வேண்டும்; அரசியலைப் போதிக்க வேண்டுமானால், தேசம் வேண்டுகின்ற ஒரே விஷயமான ஆன்மீகத்தை அது எவ்வளவு தூரம் வளப்படுத்தும் என்பதை விளக்கிக் காட்டுவதன் மூலமே செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டியதை, தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அதைப் போலவே ஒவ்வொரு நாடும். பல காலத்திற்கு முன்பே நாம் நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்துவிட்டோம், அதை நாம் பின்பற்றியாக வேண்டும். அதோடு, நாம் தேர்ந்தெடுத்தது ஒன்றும் மோசமானது அல்ல. ஜடப் பொருள் அல்லாமல் ஆன்மாவை, மனிதன் அல்லாமல் இறைவனைச் சிந்திக்க விரும்பியது அத்தனை மோசமான ஒன்றா? மறுவுலகத்தில் திடநம்பிக்கை, இந்த உலகத்தில் தீவிர வெறுப்பு, துறவின் அபரிமித ஆற்றல் கடவுளிடம் அசையா நம்பிக்கை.. அழியா ஆன்மாவில் மாறா நம்பிககை. - எல்லாம் உங்களிடம் உள்ளது. உங்களுள் யாராலாவது அதை மறுத்து விலக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன், உங்களால் முடியாது. சில மாதங்கள் உலகாயதம்பற்றிப் பேசுவதன் மூலம் நீங்கள் ஓர் உலகாயதவாதியாக மாறிவிட்டதாக என்னை நம்பவைக்க முயலலாம். ஆனால் உண்மையில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் உங்கள் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றால், சிறந்த ஆத்திகர்களாக என்னைத் தொடர்ந்து வருவீர்கள். உங்கள் சொந்த இயல்பை நீங்கள் எப்படி மாற்ற முடியும்?

இந்தியாவில் ஒவ்வொரு முன்னேற்றமும் மத எழுச்சியைத் தொடர்ந்தே வர முடியும். சமுதாயக் கருத்துக்களாலோ, அரசியல் கருத்துக்களாலோ மூழ்கடிக்குமுன் இந்தியாவை ஆன்மீகக் கருத்துக்களால் நிரப்புங்கள். நமது உபநிடதங்களிலும், நமது சாஸ்திரங்களிலும், நமது புராணங்களிலும் புதைந்து கிடைக்கின்ற அற்புதமான உண்மைகளை அந்த நூல்களிலிருந்து கொண்டுவர வேண்டும், ஆசிரமங்களிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும், காடுகளிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும், குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்திலிருந்து கொண்டு வர வேண்டும். அந்த உண்மைகள் வடக்கிலிருந்து தெற்குவரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை, இமயம் முதல் குமரிவரை, சிந்து முதல் பிரம்ம புத்திராவரை நெருப்பைப்போல் பரவுமாறு நாடு முழுவதும் அவற்றைப் பறைசாற்ற வேண்டும். இதுவே நாம் கவனம் செலுத்த வேண்டிய முதல் வேலை. ஒவ்வொருவரும் அதை அறியவேண்டும். ஏனெனில் இது முதலில் கேட்கப்பட வேண்டும் , பிறகு சிந்திக்கப்பட வேண்டும், பிறகு தியானிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் முதலில் கேட்கட்டும், தங்கள் சொந்த சாஸ்திரங்களிலேயே உள்ள மகத்தான உண்மைகளை மக்கள் கேட்பதற்கு உதவுபவர்களுக்கு அதை விடச் சிறந்த புண்ணியச் செயல் இன்று வேறில்லை.

இந்தக் கலியுகத்தில் செய்வதற்கு ஒரு செயல்தான் உள்ளது. யாகங்களாலும் கடின தவங்களாலும் இன்று எந்தப் பலனும் இல்லை. எஞ்சியுள்ள ஒரு செயல் தானம்தான் என்கிறார் வியாசர். ஆன்மீகத்தையும் ஆன்மீக ஞானத்தையும் அளிப்பது தானங்களுள் மிகவுயர்ந்தது, அடுத்தது உலக அறிவை அளிப்பது, அடுத்தது உயிரைக் காப்பது. நான்காவதாக வருவது உணவைத் தருவது. தானசீலம் மிக்க இந்த அற்புதமான இனத்தைப் பாருங்கள். ஏழையான மிக ஏழையான இந்த நாட்டில் செய்யப்படுகின்ற வகைவகையான தானங்களைப் பாருங்கள். வடக்கிலிருந்து தெற்கிற்குப் பயணம் செய்கின்ற ஒருவன் பெறும் உபசாரத்தைப் பாருங்கள். நாட்டின் மிக நல்லது அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அவனை ஒவ்வொருவரும் முற்றிலும் நண்பனைப் போலவே நடத்துகிறார்கள். எங்காவது ஒருபிடி உணவு இருக்கும்வரை ஒரு பிச்சைக்காரன்கூடப் பட்டினியால்சாக மாட்டான்.

தானசீலம் மிக்க இந்த நாட்டின் முதல் தானமான ஆன்மீக ஞானத்தை அளிப்பதை முதலில் மேற்கொள்ள வேண்டும். அந்தத் தானம் இந்தியாவின் எல்லைக்குள் மட்டுமே அடங்கிவிடக் கூடாது. அது உலகம் முழுவதும் பரவ வேண்டும். இதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்தியச் சிந்தனைகள் இந்தியாவைத் தாண்டி ஒருபோதம் சென்றதில்லை என்று சொல்பவர்களும் சரி, வெளிநாடுகளுக்குப் பிராச்சாரம் செய்வதற்காக சென்ற முதல் சன்னியாசி நான்காம் என்று கூறுபவர்களும் சரி, தங்கள் சொந்த இனத்தின் வரலாற்றை அறியாதவர்கள்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,