இளைஞர்கள் வைத்த சோதனை!

ஒரு முறை அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர், இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை என்பது பற்றிச் சொற்பொழிவு செய்தார். அந்தச் சொற்பொழிவில் அவர், இறைவனைப் பற்றிய உயர்ந்த அனுபவத்தை நேரடியாகப் பெற்ற ஒருவர், எந்தச் சூழ்நிலையிலும் கலங்குவதில்லை - பதற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இளைஞர்கள் சிலரும் இருந்தார்கள். இவர்கள் உயர்கல்வி கற்றவர்கள். ஆனால் இந்த இளைஞர்கள் மனம் போனபடி வாழ்ந்தனர். அவர்கள், விவேகானந்தர் கூறியதை நாம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்! என்று முடிவு செய்தார்கள்.

எனவே அவர்கள் விவேகானந்தரை, ஒரு சொற்பொழிவுக்காக அழைத்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விவேகானந்தர், சொற்பொழிவு செய்ய வேண்டிய இடத்திற்குச் சென்றார். ஆரம்பத்திலிருந்தே அந்த இளைஞர்கள், விவேகானந்தரைச் சோதிப்பது போலவே நடந்துகொண்டார்கள். ஒரு மரத்தொட்டியைக் கவிழ்த்துப் போட்டு, இதுதான் சொற்பொழிவு மேடை - இதில் நின்றுதான் நீங்கள் பேச வேண்டும் என்று கூறினார்கள். 
விவேகானந்தர் எந்த மறுப்பும் கூறாமல் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டார். அவர் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் சொல்லிக்கொண்டிருந்த கருத்தில் மனம் ஒன்றிய நிலையில், சூழ்நிலையை மறந்து பேசினார். திடீரென்று அவரைச் சுற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன! காதைப் பிளக்கும் துப்பாக்கிக் குண்டுகளின் ஓசை அங்கு பலமாக எழுந்தது! சில குண்டுகள் விவேகானந்தரின் காதின் அருகிலும் பாய்ந்து சென்றன! ஆதலால் சுற்றிலும் பதற்றமும் கூக்குரலும் எழுந்தன.

ஆனால் இவ்விதம் சூழ்நிலை மாறியது காரணமாக, விவேகானந்தரிடம் எந்தச் சலனமும் இல்லை. அவர் சூழ்நிலையால் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். இப்போது, விவேகானந்தரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்! என்று நினைத்த இளைஞர்கள் தோற்றார்கள். எதுவுமே அங்கு நடக்காததுபோல், விவேகானந்தர் உரிய நேரத்தில் தன் சொற்பொழிவை முடித்தார்.அந்த இளைஞர்கள் விவேகானந்தரிடம், உண்மைதான் சுவாமிஜி, நீங்கள் அப்பழுக்கற்றவர். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன போதிக்கிறீர்களோ, அப்படியே வாழ்கிறீர்கள் என்று கூறி, அழாத குறையாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,