சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்-3

 சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்-3


மதம் உண்மை என்பதற்கு நிரூபணம் என்ன? மிகப் பழங்காலத்திலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. புலன்களால் அதை நிரூபிக்க முடியாது என்பதே பதில்.யாதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ - லட்சியத்தை அடையாமல் எங்கிருந்து சொற்களும் எண்ணமும் திரும்பி வருகிதோ, ந தத்ர சக்ஷீர்கச்சதி நவாக்கச்சதி நோ மன: அங்கே கண்கள் போக முடியாது, மனம் போக முடியாது, எந்தப் புலன்களும் போக முடியாது, இதுதான் காலங்காலமாகச் சொல்லப்ட்டு வந்த பதில்.


----சுவாமி விவேகானந்தர்



எந்த நாட்டில் வேண்டுமானாலும் தோன்றிய எந்த மகானையும் ஓர் இந்து வழிபட முடியும். கிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கும் முகமதியர்களின் மசூதிக்கும் சென்று நாம் வழிபடுகிறோம். இது நல்லது. ஏன் வழி படக் கூடாது ? நான் முன்பே சொல்லியது போல் நம் முடையது உலகம் தழுவிய மதம். எல்லா கருத்துக்களையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அது பரந்தது. தற்போது உலகில் காணப்படுகின்ற மத லட்சியங்கள் அனைத்தையும் அதில் உடனேயே சேர்த்துக் கொள்ளலாம்.அது மட்டுமின்றி, எதிர்காலத் தில் வரப்போகின்ற லட்சியங்களையும் சேர்த்து அணைத்துக்கொள்வதற்கு நம்மால் அமைதியாகக் காத்திருக்கவும் முடியும். ஏனெனில் வேதாந்த மதத்தின் கரங்கள் எண்ணற்றவை.

----சுவாமி விவேகானந்தர்




நீங்களோ நானோ கற்பனையில் உருவாக்க முடிகின்ற எந்தக் கருத்தையும்விட ஸ்ரீகிருஷ்ணர் மகத்தானவர். நீங்களோ நானோ சிந்தித்து உருவாக்க முடிகின்ற எந்த லட்சியத்தையும் விட புத்தர் உயர்ந்தவர்.
இதை நமது ரிஷிகள் அறிந்திருந்தார்கள். எனவே இந்த மாமனிதர்களையும் அவதார புருஷர்களையும் இந்தியர்கள் அனைவரும் வழிபட அவர்கள் அனுமதித்திருந்தார். அவதாரங்களுள் மிகச் சிறந்தவராகிய ஸ்ரீகிருஷ்ணர் இன்னும் ஒருபடி மேலேசெல்கிறார்; எந்த மனிதனிடமாவது அசாதாரணமான ஆன்மீக சக்தி வெளிப்படுமானால், நான் அங்கே இருக்கிறேன் என்பதை அறிந்துகொள். என்னிடமிருந்தே அந்தச் சக்தி வெளிப்படுகிறது; என்கிறார் அவர். உலகம் முழுவதிலும் உள்ள அவதார புருஷர்களையும் இந்துக்கள் வணங்குவதற்கான கதவை இந்தக் கருத்து திறந்துவிடுகிறது.

----சுவாமி விவேகானந்தர்



மக்களுள் மிகப் பெரும் பாலோருக்கு ஒரு லட்சிய மனிதன் தேவை என்பதை அன்றே நம் மகான்கள் உணர்ந்திருந்தனர். அவர்களுக்கு ஏதாவது ஓர் உருவக் கடவுள் கண்டிப்பாக வேண்டும். உருவமற்ற கடவுளை எதிர்த்து முழக்கம் செய்த அதே புத்தர் மறைந்து ஐம்பதுஆண்டுகளுக்குள், அவரது சீடர்கள் அவரையே ஒரு கடவுளாக ஆக்கிவிட்டார்கள், உருவக்கடவுள் அவசியம். ஆனால் உருவக் கடவுள்களை வழிபடுவதற்குப் பதிலாக, ஏன், அதைவிடச் சிறப்பான ஒன்று, இந்த உலகத்தில் அவ்வப்போது தோன்றி நம்மிடையே உலவுகின்ற நடமாடும் தெய்வங்களை வழிபடுவது. ஏனெனில் வீண் கற்பனைகளான இந்த உருவக் கடவுளருள் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பேரும் வழிபடத் தகுதியற்றவர்களே. ஆனால் எந்த கற்பனைக் கடவுளையும் விட, நமது கற்பனைப் படைப்புகளைவிட, அதாவது, நம்மால் கற்பனையில் உருவாக்க முடிந்த எந்தக் கருத்தையும்விட இந்த நடமாடும் தெய்வங்கள் வழிபடத் தகுந்தவர்கள். நீங்களோ நானோ கற்பனையில் உருவாக்க முடிகின்ற எந்தக் கருத்தையும்விட ஸ்ரீகிருஷ்ணர் மகத்தானவர். நீங்களோ நானோ சிந்தித்து உருவாக்க முடிகின்ற எந்த லட்சியத்தையும் விட புத்தர் என்பது மிகவுயர்ந்த, உயிர்த்துடிப்பு மிக்க, நிதரிசனமானதொரு கருத்து. எனவே கற்பனைக் கடவுள்களை விலக்கி வைத்து விட்டுக்கூட, மனித குலம் அவர்களைப் போற்றி வழிபடுகிறது.

----சுவாமி விவேகானந்தர்




முகமது ஆகட்டு, புத்தர் ஆகட்டு, ஏசு ஆகட்டும்- ஒரு மனிதரை உலகம் முழுவதற்கும் மாதிரி மனிதராக எப்படிஏற்றுக்கொள்ள? அந்த ஒருவரிடமிருந்து, ஒரு மனிதரிடமிருந்து மட்டும் வந்தால் தான் நல்லொழுக்க நியதி, நீதிநெறி, ஆன்மீகம், மதம் எல்லாம் உண்மையாக இருக்கஇயலும் என்று எப்படிக் கொள்ள முடியும்? வேதாந்த மதத்திற்கும் இத்தகைய தனிப்பட்ட மனிதர்களின் அத்தாட்சி தேவையில்லை; மனிதனின் அழியா இயல்பே அதன் அத்தாட்சி, அவனதுநிலையான ஆன்மீக ஒருமையை அடிப்படையாகக் கொண்டதே அதன் நீதிநெறி, அவை ஏற்கனவே இருப்பவை, ஏற்கனவே அடையப்பட்டவை.

----சுவாமி விவேகானந்தர்



நாம் உறுதியாகச் சொல்வதெல்லாம், வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதம் அது ஒன்றே என்பதுதான். ஏனெனில் அது தனி மனிதர்களை அல்ல, உண்மைகளையே போதிக்கிறது. தனி மனிதன் மீது எழுப்பப்பட்ட மதம் எதுவாக இருந்தாலும் அது மனிதகுலம் முழுமைக்குமான ஒரு மதமாக இருக்க முடியாது, நம் சொந்த நாட்டிலேயே எத்தனையோ மாமனிதர்களைக் காண்கிறோம். ஒரு சிறிய நகரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். பல்வேறு மக்கள் தங்கள் மன அமைப்பிற்கு ஏற்ப பலரைத் தலைவராகக் கொண்டாடுவதைக் காணலாம். அப்படியிருக்க முகமது ஆகட்டு, புத்தர் ஆகட்டு, ஏசு ஆகட்டும்- ஒரு மனிதரை உலகம் முழுவதற்கும் மாதிரி மனிதராக எப்படிஏற்றுக்கொள்ள? அந்த ஒருவரிடமிருந்து, ஒரு மனிதரிடமிருந்து மட்டும் வந்தால் தான் நல்லொழுக்க நியதி, நீதிநெறி, ஆன்மீகம், மதம் எல்லாம் உண்மையாக இருக்கஇயலும் என்று எப்படிக் கொள்ள முடியும்?

----சுவாமி விவேகானந்தர்



நமது முதல் கோட்பாடு, மனிதன் நிறைநிலையை அடைவதற்கும் முக்தி பெறுவதற்கும் தேவையான அனைத்தும் வேதங்களில் உள்ளன என்பதாகும். புதிதாக நீங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியாது. எல்லா அறிவுக்கும் லட்சியமானதொரு முழு ஒருமைக்கு அப்பால் உங்களால் போக முடியாது. வேதங்களில் அந்த ஒருமை ஏற்கனவே அடையப்பட்டுவிட்டது. அந்த ஒருமையைக் கடந்து செல்வது என்பது முடியாத காரியம். தத் த்வம் அஸி(நீ அதுவாக இருக்கிறாய்) என்பது எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதே மத அறிவு முழுமை பெற்று விட்டது, இது வேதங்களில் தான் உள்ளது.காலம், இடம் பல்வேறான சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மக்களுக்கு அவ்வப்போது வழிகாட்ட வேண்டியது மட்டுமே எஞ்சியிருந்தது. பழைய அதே புராதன வழியில் மக்களை வழிகாட்டிச் செல்ல வேண்டியிருந்தது. அதற்காகவே இந்த மகத்தான ஆச்சாரியர்களும் மாபெரும் ரிஷிகளும் வந்தார்கள், ஸ்ரீகிருஷ்ணரின் அந்தப் பிரபலமான சொற்கள் இதைத் தெளிவாக விளக்குகின்றன; எப்போதெல்லாம், தர்மத்தைக் காப்பதற்காக என்னை நானே படைத்துக் கொள்கிறேன், எல்லா ஒழுக்கக் கேடுகளையும் ஒழிப்பதற்காக அவ்வப்போது நான் வருகிறேன்

----சுவாமி விவேகானந்தர்




(பிற மதங்களில் மனிதர்களை நம்பி அவர்களது மதம் இருக்கிறது)

இத்தகையதொரு விதியிலிருந்து நாம் தப்பித்துக் கொண்டோம். ஏனெனில் நமது மதம் மனிதர்களை அல்லாமல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது,நாம் நமது மதத்திற்குக் கட்டுப்படுகிறோம் என்றால் அதன் காரணம், அது ஒரு மகானின் அதிகாரத்திலிருந்து வந்தது என்பதனால் அல்ல, ஏன் ஓர் அவதார புருஷரின் அதிகாரத்திலிருந்து வந்தது என்பதால்கூட அல்ல. ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களுக்கு அதிகாரி அல்ல வேதங்களே ஸ்ரீகிருஷ்ணருக்கு அதிகாரி. என்றென்றைக்கும் நிலைத்திருப்பவையான வேதங்களின் மகத்தான பிரச்சாரகர் என்பதே ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை. இதே நிலைதான் மற்ற அவதாரங்களுக்கும், மற்ற நமது ரிஷிகளுக்கும்.

----சுவாமி விவேகானந்தர்




நமது மதத்தைத் தவிர, உலகத்தின் பிற மதங்கள் ஒவ்வொன்றும் அதை உருவாக்கிய ஒருவரது அல்லது சிலரது வாழ்க்கையையே நம்பியிருக்கின்றன. கிறிஸ்தவ மதம் ஏசுவின் வாழ்க்கையின் மீது கட்டப்பட்டுள்ளது; இஸ்லாம் முகமதுவின் வாழ்விலும், புத்த மதம் புத்தரின் வாழ்வின்மீதும், சமண மதம் ஜீனர்களின் வாழ்க்கைமீதும் கட்டப்பட்டுள்ளது. இப்படியே எல்லா மதங்களும், இந்த மாமனிதர்களுக்கான வரலாற்று ஆதாரங்கள் என்று அவர்கள் கூறிக்கொள்கின்ற கூற்றுக்களை ஒட்டி, இந்த மதங்களுக்குள் வேண்டிய அளவு சண்டைசச்சரவுகள் நிலவவே செய்யும்; அது எதிர்பார்க்கக் கூடியதுதான். என்றாவது இந்த மனிதர்கள் வாழ்ந்தற்கான வரலாற்று ஆதாரங்கள்ஆட்டம் காணுமானால், அந்த மதங்களும் வீழ்ந்து தூள்தூளாகிவிடும்.

----சுவாமி விவேகானந்தர்



நமது மதம் அருவ -உருவக் கடவுளைப் போதிக்கிறது - இது நாம் புரிந்துகொள்ள வேண்டியதொரு வினோதமாகும். உருவமற்ற ஒன்றைப் பற்றிய எண்ணற்ற விதிகளையும் அதே வேளையில் எண்ணற்ற உருவங்களையும் பற்றியும் போதிக்கிறது, ஆனால் நம் மதத்தின் அடிப்படை ஊற்று சுருதிகளிலேயே, வேதங்களிலேயே உள்ளது. அவை முழுக்கமுழுக்க நிர்க்குண நிலையைக் கூறுகின்றன. மகத்தான அவதார புருஷர்கள், தேவ தூதர்கள் போன்ற அனைவரும் ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும்தான் வருகிறார்கள்.

----சுவாமி விவேகானந்தர்




சுருதிகளில் உள்ள உண்மைகளைக் குறித்து வைத்த ரிஷிகளுள் பெரும்பாலானோர் ஆண்கள், சில பெண்களும் இருக்கிறார்கள்; இது சுருதியியன் மற்றொரு சிறப்புத்தன்மை. அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்பன போன்ற விவரங்கள் மிகக் குறைவாகவே நமக்குத் தெரியும். ஆனால் அவர்களுடைய மிகச் சிறந்த சிந்தனைகள், மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் நம் நாட்டின் புனித இலக்கியமான வேதங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன, மாறாக, ஸ்மிருதிகளில் தனிப்பட்டவர்களின் பல விவரங்கள் உள்ளன. அவற்றைப்ற படிக்கும்போது பிரமிக்க வைக்கின்ற, மகோன்னதமான, மனத்தில் பதிகின்ற, உலகையே அசைக்கவல்ல மனிதர்கள் நம் கண்முன் அப்படியே நிற்பது போலுள்ளது. சில இடங்களில் அவர்களது உபதேசங்களை விட அவர்களே நம் மனத்தில் விசுவரூபம் எடுத்து நிற்க்கின்றனர்.

----சுவாமி விவேகானந்தர்



சாதாரண வழிகாட்டுதலுக்கு வேதங்களே போதுமானவை. ஆன்மீக வாழ்வைப் பொறுத்தவரையில் அதில் உள்ளதைவிட அதிகமாகச் சொல்லவும் முடியாது, அதிகமாக அறிந்து கொள்ளவும் முடியாது. அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் அங்கே சொல்லப்பட்டுள்ளன. ஆன்மா நிறைநிலையை அடைவதற்குத் தேவையான உபதேசங்கள் அனைத்தும் சுருதிகளில் முழுமையாக உள்ளன. அவற்றின் விளக்கங்களைக் காலத்திற்குக்காலம் ஸ்மிருதிகள் தருகின்றன.

----சுவாமி விவேகானந்தர்



நாம் நமது சாஸ்திரங்களைப் பற்றிச் சிறிது அறிந்துகொள்ள வேண்டும். நம்முடைய சாஸ்திரங்களில் உண்மையின் இரண்டு விதமான கோட்பாடுகள் உள்ளன; ஒன்று, நிரந்தரமானது; மற்றொன்று, அவ்வளவு அதிகாரபூர்வமானதல்ல,

நிரந்தரமான கோட்பாடுகள் என்பது ஆன்மாவின் இயல்பு கடவுளின் இயல்பு கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள உறவுகள் பற்றிக் கூறுகின்றன. இந்தக் கருத்துக்கள், நாம் சுருதிகள் என்று அழைக்கின்ற வேதங்களில் உள்ளன.

அடுத்ததான கோட்பாடுகள் ஸ்மிருதிகள் என்று அழைக்கப்படுகின்றன. மனு, யாஜ்ஞவல்கியர் மற்றும் பலர் எழுதிய நூல்களிலும் புராணங்கள் மற்றும் தந்திரங்களிலும் இவை உள்ளன.

இந்த ஸ்மிருதிகள் சுருதிகளுக்கு அடுத்த படியில் உள்ளவை. அவை சுருதிகளோடு ஏதாவது ஒருகருத்தில் மாறுபட்டால், சுருதிகளின் கருத்தைதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே நியதி. அதாவது மனிதனின்விதி, அவனது லட்சியம் போன்ற எல்லாமே வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றின் செயல்முறை விளக்கங்கள் ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும் உள்ளன.

----சுவாமி விவேகானந்தர்



உருவ வழிபாடு தவறானது என்று கூறுவதைக் கேட்டுக்கேட்டுப் புளித்து விட்டது. இன்று இதைக் கேள்விப்படுகின்ற எல்லோருமே அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமலே ஏற்றுக் கொள்கிறார்கள், நானும் ஒரு காலத்தில் அப்படிதான் நினைத்தேன் அதற்குத் தண்டனைபோல், எல்லாவற்றையும் உருவ வழிபாட்டின் மூலமே பெற்ற ஒருவரின் காலடியில் அமர்ந்து கற்க வேண்டிதாயிற்று. இங்கே நான் ராமகிருஷ்ண பரமஹம்சரைத்தான் குறிப்பிடுகிறேன். உருவ வழிபாட்டின் மூலம் இத்தகைய ராமகிருஷ்ண பரமஹம்சர்கள் உருவாகலாம் என்றால் உங்களுக்கு எது வேண்டும் ? சீர்திருத்தவாதியின் கொள்கையா அல்லது கணக்கற்ற உருவங்களா? பதில் சொல்லுங்கள். உருவ வழிபாட்டின் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர்களை உங்களால் உருவாக்க முடியுமானால் இன்னும் ஆயிரக்கணக்கான உருவங்களைவைத்துக் கொள்ளுங்கள். அதற்கான ஆற்றலை உங்களுக்கு இறைவன் அருள்வாராக! உங்களால் முடிந்த எந்த வழியிலேனும் அவரைப் போன்ற மேலோரை உருவாக்குங்கள்.

என்றாலும் உருவ வழிபாடு நிந்திக்கப்படுகிறது. ஏன்? யாருக்கும் தெரியாது. ஏனென்றால் சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஏதோ யூதர்கள் சிலர் அதை நிந்தித்தார்கள் என்பதாலா? தங்கள் சொந்த விக்கிரகங்களைத்தவிர மற்ற எல்லோருடைய திருவுருவங்களையும் கண்டனம் செய்வது அவர்களுக்கு வழக்கமான ஒன்று கடவுள் அழகியதோர் வடிவமாகவோ, அடையாள வடிவிலோ குறிக்கப்பட்டால் அது மிகவும் மோசமானது, அது பாவம் என்பான் யூதன்; அது பாவம் ஆனால் இரு புறமும் இரண்டு தேவதைகள் அமர்ந்திருக்க, மேலே மேகங்கள் பரவி நிற்க, கடவுளை ஒரு பெட்டியாக உருவகம் செய்தால் அது புனிதமானவை அனைத்திலும் புனிதமானது. கடவுள் ஒரு புறாவின் வடிவில் வந்தால் அது புனிதமானது; இதுதான் உலகின் போக்கு

----சுவாமி விவேகானந்தர்



புத்த மதத்தைப் பற்றியும் அதன் ஆஜ்ஞேய வாதத்தைப் பற்றியும் பேசுவது இப்போதல்லாம் குறிப்பாக தென்னிந்தியாவில் ஒரு நாகரீகமாக இருக்கிறது. இன்று நம் நாட்டில் நிலவுகின்ற இழிநிலை புத்த மதம் விட்டுச் சென்றதுதான் என்பதுபாவம், அவர்களுக்குச் சிறிதும் தெரியவில்லை. புத்த மதம் நமக்கு விட்டுச் சென்ற பாரம்பரியம் இதுதான். புத்த மதம் பரவியதற்குக் காரணம் அதன் அற்புதமான நல்லொழுக்கக் கோட்பாடும் கௌதம புத்தரின் அற்புதமான ஆளுமைத் தன்மையுமே என்று நீங்கள் நூல்களில் படிக்கலாம்.

இந்த நூல்கள் எழுதியவர்களோ புத்த மதத்தின் எழுச்சி வீழ்ச்சி இவைப்பற்றிச் சிறிதும் படித்தறியாதவர்கள். பகவான் புத்தரிடம் எனக்கு அளவற்ற மதிப்புண்டு, பக்தியும் உண்டு. ஆனால் நான் சொல்வதைக் குறித்துக் கொள்ளுங்கள்: புத்த மதம் பரவியதன் காரணம் அதன் கொள்கைகளைவிட புத்தரின் ஆளுமையைவிட, கட்டப்பட்ட கோயில்களும், நிறுவப்பட்ட சிலைகளும், நாட்டு மக்களுக்கு முன் வைக்கப்பட்ட ஆடம்பரமான சடங்குகளும், விழாக்களுமே ஆகும். இவ்வாறுதான் புத்த மதம் வளர்ந்தது.

மக்கள் தங்கள் வீடுகளில் ஆஹுதி அளித்து வந்த சிறிய ஹோம குண்டங்கள் புத்த மதத்தின் ஆடம்பரமான கோயில்கள் மற்றும் சடங்குகளின் முன் நிற்க முடியவில்லை. ஆனால் பின்னாளில் எல்லாமே இழிநிலையை அடைந்தன, கேடுகளின் மொத்த உருவமாயின. அதைப் பற்றி இங்கு என்னால் பேச முடியாது. அவைகளைப் பற்றி அறிய விரும்புவர்கள் தென்னிந்தியாவின்(ஒரிசா போன்ற இடங்களில்)சிற்பங்கள் நிறைந்த அந்தப் பிரம்மாண்டமான கோயில்களில் ஏதோ சிறிது காணலாம். இதுதான் பௌத்தர்களிடமிருந்து நாம் பெற்ற பாரம்பரியம்.

----சுவாமி விவேகானந்தர்




நாம் சிந்திக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் உள்ளது. இந்தியாவில் நாம் எப்போதும் அரசர்களாலேயே ஆளப்பட்டு வருகிறோம். அவர்களே நமது சட்டங்கள் அனைத்தையும் இயற்றினார்கள். இப்போது அரசர்கள் இல்லை, அரசாங்கத்திற்குப் பின்னர் அதைச் செய்வதற்கு யாரும் இல்லை. அரசாங்கத்திற்கு அந்தக் துணிவு இல்லை. ஏனெனில் பொதுமக்களின் கருத்து வளர்ச்சிக்கு ஏற்பவே அது தன் பாதைகளை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன் பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளத்தக்க ஆரோக்கியமான, ஆற்றல் மிக்கதான பொதுமக்கள் கருத்தை உருவாக்க நீண்ட மிக நீண்ட காலமாகும். அதுவரையில் நாம் காத்திருக்கத்தான்வேண்டும்.

----சுவாமி விவேகானந்தர்




நான் இந்தச் சீர்திருத்த இயக்கங்களிலிருந்து முற்றிலுமாக வேறுபாடுகிறேன். ஒரு நூறு ஆண்டுகளாக அவர்கள் இங்கே இருக்கிறார்கள். மிக மோசமாக வசைமாரி பொழிகின்ற, மிகக் கேவலமாக நிந்தனை செய்கின்ற நூல்களைத் தோற்றுவிப்பதைத் தவிர இவர்களால் வேறு எந்த நன்மை செய்ய முடிந்தது? இறையருளால் இவை இல்லாமலிருந்தால் எவ்வளவோ நல்லதாயிருக்கும் ! இவர்கள் வைதீகர்களைக் கேலி செய்தார்கள், வெறுத்தார்கள், தூற்றினார்கள். வைதீகர்கள் இவர்களது போக்கைப் புரிந்து கொண்டதும் பதிலுக்குப் பதில் அதே பாணியில் திருப்பிக் கொடுத்தார்கள். விளைவு? நமது இனத்திற்கே வெட்கக்கேடான, நமது நாட்டிற்கே மானக்கேடான இலக்கியங்கள் நமது நாட்டின் ஒவ்வொரு மொழிகளிலும் உருவாயின. இதுவா சீர்திருத்தம்? இதுவா நாட்டைப் பெருமையின் பாதையில் அழைத்துச் செல்வது?

----சுவாமி விவேகானந்தர்




தீமைக்கு எதிரான வேலையைப் பற்றிய முதல் கருத்து இதுதான்- அது நம்மை மேலும்மேலும் அமைதியானவர்களாக ஆக்க வேண்டும், கொள்கை வெறியை நம் ரத்தத்திலிருந்து அகற்ற வேண்டும். கொள்கை வெறியுடன் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்கள் எல்லாம் தங்கள் தோல்வியைத் தாமாகவே தேடித் கொண்டன என்பதை உலகின் வரலாறு நமக்குக் காட்டுகிறது.

----சுவாமி விவேகானந்தர்



தீமையும் நன்மையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல் எப்போதும் சேர்ந்தே உள்ளன என்று நம் தத்துவம் போதிக்கிறது. ஒன்று வேண்டுமென்றால் மற்றதை ஏற்றாக வேண்டும். கடலில் ஓரிடத்தில் அலை எழுந்தால் மற்றோர் இடத்தில் பள்ளம் உண்டாகியிருக்கிறது. ஏன், வாழ்க்கையே தீமைதான் உயிரைக் கொல்லாமல் மூச்சுக்கூட விட முடியாது.

----சுவாமி விவேகானந்தர்



எனக்கென்று ஒரு சுயேச்சை உள்ளது, எனக்கென்று சிறிது அனுபவமும் இருக்கிறது, உலகிற்குத் தர என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது, அதை அச்சமின்றியும் எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப் படாமலும் நான் கொடுக்கவே செய்வேன். அவர்களை விடப் பெரிய சீர்திருத்தவாதி நான் என்பதையும் இந்தச் சீர்திருத்தவாதிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அவர்கள் விரும்புவது அங்கொன்றும் இங்கொன்றுமான சீர்திருத்தத்தை; நானோ அடிமுதல் முடிவரையிலான மொத்தச் சீர்த்திருத்தத்தை விரும்புகிறேன். அந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வழியில் தான் இருவரும் வேறுபடுகிறோம். அவர்களுடையது அழிவுப்பாதை; என்னுடையது ஆக்கப் பாதை. நான் மறுமலர்ச்சியை நம்பவில்லை, வளர்ச்சியையே நம்புகிறேன்.

என்னைக் கடவுள்நிலையில் வைத்துக்கொண்டு, இந்த வழியில் தான் நீங்கள் போக வேண்டும், இந்த வழியில் போகக் கூடாது என்று சமுதாயத்திற்குக் கட்டளையிட நான் துணிய மாட்டேன்.

----சுவாமி விவேகானந்தர்



                   


Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,