அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே!
அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே!
பிரகிருதி அல்லது இயற்கை மூன்று சக்திகளால் ஆக்கப்பட்டிருப்பதாக சாங்கியத் தத்துவம் கூறுகிறது. இவை சம்ஸ்கிருதத்தில் சத்வம், ரஜஸ், தமஸ் என்று அழைக்கப்படுகின்றன. தூல உலகில் இவை முறையே சமநிலை, செயல்நிலை, மந்தநிலை என்ற நிலைகளில் வெளிப்படுவதாக நாம் கொள்ளலாம். இருள் அல்லது செயலற்றிருப்பது தமஸின் அடையாளம். ஈர்ப்பு மற்றும் விலக்கு சக்திகளாக வெளிப்பட்டுச் செயல்புரிவது ரஜஸ். இந்த இரண்டின் சமநிலையே சத்வம்.
ஒவ்வொரு மனிதனிடமும் இந்த மூன்று சக்திகளும் உள்ளன. சிலவேளைகளில் தமஸ் தலைதூக்கி நிற்கும் அப்போது நாம் சோம்பேறிகளாக இருப்போம், நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. ஏதோ சில கருத்துக்களைப் பிடித்துக் கொண்டோ, வெறும் சோம்பேறித்தனம் காரணமாகவோ கட்டுண்டிருப்போம். மற்ற நேரங்களில் செயல்நிலை ஓங்குகிறது, சிலவேளைகளில் இரண்டையும் சமன்படுத்துகின்ற அமைதி நிலவுகிறது. வெவ்வேறு மனிதர்களில் பொதுவாக இந்த மூன்று சக்திகளுள் ஏதாவது ஒன்று மேலிட்டு நிற்கும். ஒருவன் செயலற்று, மந்தமாக சோம்பேறியாக இருக்கிறான். இன்னொருவனிடம் செயல், ஆற்றல், சக்தி வெளிப்பாடு இவை மிகுந்திருக்கிறது. இன்னும் சிலரோ செயல், செயலின்மை என்ற இரண்டுமே சமன்படுவதால் விளைகின்ற இனிமையும் அமைதியும் மென்மையும் நிறைந்தவர்களாகக் காணப்படுவார்கள். மிருகங்கள், மரங்கள், மனிதர்கள் என்று படைப்பு முழுவதிலுமே இந்த வெவ்வேறு சக்திகளின் அதிகமான அல்லது குறைந்த வெளிப்பாட்டை நாம் காணலாம். கர்மயோகத்தில் இந்த மூன்று குணங்களையும் சிறப்பாக விளக்க வேண்டியுள்ளது. அவை என்ன. அவற்றை எப்படி உபயோகிப்பது என்பதைக் கற்பித்து, நாம் இன்னும் சிறப்பாகச் செயல்புரிவதற்குக் கர்மயோகம் உதவுகிறது.
மனித சமுதாயம் என்பது பல படிகளுடன் கூடிய ஓர் அமைப்பாக உள்ளது. நன்னெறியைப்பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். கடமை என்றால் என்ன என்பதும் நாம் அறிந்ததே. அதேவேளையில் நன்னெறி என்பதன் பொருள் நாட்டிற்குநாடு பெரிதும் மாறுபட்டிருப்பதையும் நாம் காண்கிறோம். ஒரு நாட்டில் நன்னெறியாகப் போற்றப்படுவது இன்னொரு நாட்டில் மிகவும் இழிந்த செயலாகத் தூற்றப்படுகிறது. உதாரணமாக, சில நாடுகளில் சகோதரர்களின் பிள்ளைகள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வார்கள். மற்றொரு நாட்டிலோ இது முற்றிலும் முறைகேடாகக் கருதப்படுகிறது. சில நாடுகளில் சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளலாம். இன்னொரு நாட்டில் இது தவறென்று கருதப்படும். ஒரு நாட்டில் மக்கள் ஒருமுறைதான் திருமணம் செய்து கொள்ளலாம். இன்னொரு நாட்டில் பலமுறை திருமணம் கூறப்படுபவை அனைத்திலுமே அளவுகோல் பெரிதும் தழுவியதான அளவுகோல் ஒன்று இருந்தேயாக வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம்.
கடமையின் விஷயமும் இதுதான். அது பற்றிய கருத்தும் நாட்டிற்கு நாடு வெகுவாக வேறுபடுகிறது. ஒரு நாட்டில் ஒருவன் சில காரியங்களைச் செய்ய விலையென்றால் கடமை தவறியவனாகக் குறைகூறப் படுவான். அதே செயல்களை அவன் வேறொரு நாட்டில் செய்தாலோ அவன் தவறாக நடந்து கொண்டதாகக் குறைகூறப்படுகிறான். எனினும் கடமை பற்றிய உலகம் தழுவிய ஏதாவது கருத்து இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். இதுபோலவே சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் சிலவற்றைத் தங்கள் கடமையாகக் கருதுகிறார்கள். அதே நேரத்தில் மற்றொரு பிரிவினர் அது முழுக்கமுழுக்கத் தவறு என்று கருதுகிறார்கள்.
அத்தகைய செயல்களைச் செய்ய நேருமானால் துடித்துவிடுகிறார்கள்.
இரு வழிகள். நமக்குத் தென்படுகின்றன ஒன்று அறிவிலிகளின் வழி. உண்மையை அடைய ஒரே வழிதான் உள்ளது. மற்றவை அனைத்தும் தவறு என்று அது கூறுகிறது. மற்றொன்று சான்றோரின் வழி; நமது மன அமைப்பிற்கும் நான் வாழ்கின்ற நிலைக்கும் ஏற்ப கடமையும் ஒழுக்கமும் மாறலாம் என்று அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். நாம் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கடமை என்பதிலும் ஒழுக்கம் என்பதிலும் படிகள் இருக்கின்றன. வாழ்க்கையின் ஒரு நிலையில், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கடமையாக இருப்பது மற்றொன்றில் அவ்வாறு இருக்காது. இருக்கவும் முடியாது என்பதுதான்.
இதற்கு ஓர் உதாரணம் கூறுவோம். எல்லா ஆச்சாரியர்களுமே தீமையை எதிர்க்காதீர்கள். அஹிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று உபதேசித்து இருக்கிறார்கள் இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகிவிடும். அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் வாழ்க்கையையும் பறித்துக்கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அஹிம்சை சமுதாயத்தில் ஒரெயொரு நாள் கடைப்பிடிக்கப் பட்டாலும்கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும். ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள் என்ற அந்த உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிகவுயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது என்றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும். அது மட்டுமல்ல, தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்தவண்ணமே இருக்கும். அது அவர்களைப் பலவீனப்படுத்துகிறது. உண்டாக்கும் தீமையைவிட அதிகத் தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கி விட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதற்கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான் ஏனெனில் நாம் முன்னேற வேண்டும் பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒருபோதும் நம்பிக்கை வைக்க முடியாது.
எனவே நமக்கு எஞ்சியுள்ள வழி, இந்த ஒழுக்கம், கடமை பற்றிய கருத்துக்கள் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்பதை ஏற்றுக் கொள்வதுதான். தீமையை எதிர்ப்பது என்பது எல்லா வேளைகளிலும தவறாகிவிட முடியாது, அது தன்னளவில் தவறானதல்ல. அது மட்டுமல்ல, சில சூழ்நிலைகளில் தீமையை எதிர்க்க வேண்டியது ஒருவனது கடமையாகவும் அமையக்கூடும். பகவத்கீதையைப் படிக்கும்போது, மேலைநாட்டினராகிய உங்களுள் பலருக்கு அதன் இரண்டாம் அத்தியாயம் திகைப்பை அளிக்கலாம். எதிரணியில் நண்பர்களையும் உறவினர்களையும் காண்கின்ற அர்ஜுனன் போரிட மறுக்கிறான், எதிர்க்க மறுத்துவிடுகிறான். அஹிம்சையே அன்பின் மிகவுயர்ந்த லட்சியம் என்று அதற்கு அவன் காரணம் காட்டுகிறான். அவனை ஸ்ரீகிருஷ்ணர் கபடதாரி என்றும் கோழை என்றும் அழைக்கிறார். எந்த விஷயத்திலும் இரண்டு கோடிகளும், அதாவது இரண்டு எல்லைகளும் ஒன்றுபோலவே தோன்றும் என்பது நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு பெரிய பாடமாகும். இருக்கின்ற எல்லையும் இல்லாத எல்லையும் எப்போதும் ஒன்றுபோலவே உள்ளது. அதிர்வுகள் மிகக் குறைவாக இருந்தாலும் நம்மால் ஒளியைக் காண முடியாது. மிக விரைவாக, அதிகமாக இருந்தாலும் நம்மால் அதைக் காண முடியாது. அதுபோல்தான் ஒலியும் மிகமித் தாழ்வான சுவரத்தில் இருந்தால் நம்மால் ஒலியைக் கேட்க முடியாது, மிக அதிகமாக இருந்தாலும் கேட்க முடியாது.
எதிர்ப்பதற்கும் எதிர்க்காத்திருப்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசமும் இதுபோன்றதே, ஒருவன் தனது பலவீனத்தால், சோம்பலால் இயலாமையால் எதிர்க்காது இருக்கிறான்; எதிர்க்கக் கூடாது என்பதற்காக அல்ல. இன்னொருவன், தான் நினைத்தால் யாரும் தடுக்க முடியாத அளவிற்குத் தன்னால் எதிர்க்க முடியும் என்பது தெரிந்தவன். இருந்தாலும் அவன் பகைவர்களை அடிக்கவில்லை; மாறாக, வாழ்த்துகிறான். பலவீனம் காரணமாக எதிர்க்காமல் இருந்தவன் பாவம் செய்தவனாகிறான். அதனால் அஹிம்சை அல்லது எதிர்க்காமலிருத்தலின் விளைவாக வருகின்ற எந்தப் பலனையும் அவன் அடைய முடியாது. மற்றவனின் விஷயத்திலோ அவன் எதிர்த்திருப்பானானால் அவனும் பாவம் செய்தவனாகிறான். புத்தர் தமது சிம்மாசனத்தைத் துறந்தார். தமது பதவியைத் துறந்தார். அது உண்மையான துறவு! ஆனால் துறப்பதற்கு எதுவும் இல்லாத பிச்சைக்காரன் ஒருவனிடம் துறவு என்ற பேச்சே எழ முடியாது.
அஹிம்சை, லட்சியம் அன்பு முதலியவற்றைப் பற்றிப் பேசும்போது உண்மையில் நாம் எதைக் குறிப்பிடுகிறோம். என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எதிர்ப்பதற்கான வலிமை நம்மிடம் இருக்கிறதா இல்லையா என்பதை மதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆற்றல் இருந்தும் அதைப் பயன்படுத்தவதில்லை என்ற உறுதியுடன் எதிர்க்காதிருந்தோமானால் அது மகத்தான அன்பின் விளைவாக எழுந்த செயல். நம்மால் எதிர்க்கவே முடியாத நிலையில் இருந்து கொண்டு, மேலான அன்பின் காரணமாகத்தான் அப்படி எதிர்க்காமல் இருக்கிறோம் என்று எண்ணி நம்மை நாமே ஏமாற்றி கொள்வது அஹிம்சைக்கு முற்றிலும் எதிரான ஒன்று. தனக்கு எதிராகப் பெரிய படையைப் பார்த்த அர்ஜுனன் கோழையாகிவிட்டான். அந்த அன்பு காரணமாக நாட்டிற்கும் அரசனுக்கும் தான் ஆற்ற வேண்டிய கடமையை மறந்தான். அதனால்தான் ஸ்ரீகிருஷ்ணர் அவனைக் கபடன் என்று கூறினார் நீ புத்திசாலி போல் பேசுகிறாய். உன் நடத்தையோ உன் கோழைத்தனத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. எனவே எழுந்து நில். போரிடு.
இதுதான் கர்மயோகத்தின் மையக்கருத்து, அஹிம்சையே மிகவுயர்ந்த லட்சியம். அதேவேளையில் அப்படி எதிர்க்காதிருத்தல் என்பது நடைமுறை வாழ்வில் மாபெரும் சக்தியின் வெளிப்பாடு. அது மட்டுமல்ல, தீமையை எதிர்ப்பது என்பது அஹிம்சை என்னும் ஒரு மாபெரும் சக்தி வெளிப்பாட்டை அடைவதற்கான பாதையில் ஒரு படி என்ற உண்மையை அறிபவனே கர்மயோகி இந்த உயர்ந்த லட்சியத்தை அடையும் வரையில் தீமையை எதிர்ப்பதே ஒருவனின் கடமை. அவன் செயலில் ஈடுபடட்டும், அவன் போராடட்டும், முடிந்த அளவு ஆற்றலுடன் எதிர்க்கட்டடும். அப்போது மட்டுமே, எதிர்க்கின்ற ஆற்றலைப் பெற்ற பிறகு மட்டுமே அஹிம்சை ஒரு நற்பண்பாக அமைய முடியும்.
நான் ஒருமுறை என் நாட்டில் ஒருவனைச் சந்தித்தேன். அவனை ஏற்கனவே எனக்குத் தெரியும். அவன் ஒரு முட்டாள். மந்தபுத்திக் காரனும்கூட, அவனுக்கு எதுவுமே தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவனிடம் கிடையாது. ஒரு மிருகம்போல் வாழ்ந்து வந்தான். அவன் என்னிடம் வந்து கடவுளை அறிவது எப்படி? முக்தி பெறுவது எப்படி? என்று கேட்டான். நான் அவனிடம் உனக்குப் பொய் சொல்லித் தெரியுமா? என்று கேட்டேன், தெரியாது என்றான் அவன். உடனே நான் அப்படியானால் அதைத் தெரிந்து கொள், ஒரு மிருகம்போல் கட்டைபோல் இருப்பதைவிடப் பொய் சொல்வது எவ்வளவோ சிறந்தது. உறைந்து போனதுபோல் இருக்கிறாய். நீ எல்லா செயல்களுக்கும் அப்பாற்பட்ட அமைதியான சமநிலையை நீ இதுவரை அடையவில்லை. ஒரு கெட்டதைக்கூடச் செய்ய முடியாத அளவிற்கு நீ மந்தபுத்தி உடையவனாக இருக்கிறாய்! என்றேன். அவனுடையது சற்று அதிகபடியான உதாரணம். கேலியாகத்தான் நான் அவனிடம் இதைச் சொன்னேன். நான் சொன்னதன் பொருள் என்னவென்றால் செயல்நிலையைக் கடந்து பூரண அமைதியை அடைய வேண்டுமானால் ஒருவன் ஆர்வத்துடன் செயலில் ஈடுபட வேண்டும்.
செயலற்றிருப்பதை எல்லா வகையிலும் தவிர்க்க வேண்டும். செயல்திறன் என்றாலே எதிர்த்தல் என்பது தான் எப்போதும் பொருள். மனம் மற்றும் உடல் சம்பந்தமான எல்லா தீமைகளையும் எதிர்த்துப் போரிடு. எதிர்ப்பதில் வெற்றி பெற்ற பின்னரே அமைதி வரும். யாரையும் வெறுக்காதே, தீமையை எதிர்க்காதே என்றெல்லாம் சொல்வது மிகவும் எளிது ஆனால் பொதுவாக அதைப் பின்பற்றினால் எப்படியிருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. சமுதாயத்தின் கண்கள் நம்மீது இருக்கும்போது நாம் பெரிய அஹிம்சாவாதி போல் நடிக்கலாம். ஆனால் அந்த நேரம் முழுவதும் நமது இதயம் அரித்துக் கொண்டிருக்கும். அஹிம்சையின் விளைவாக வருகின்ற அமைதியை ஒருசிறிதுகூட நாம் அனுபவிக்கவில்லை. இதைவிட எதிர்ப்பது நல்லதென நமக்குத் தோன்றுகிறது. நீ பணம் சேர்க்க ஆசைப்படுகிறாய். அதேவேளையில் பணத்தைக் குறிக்கோளாக உடையவனை உலகம் முழுவதும் கொடியவன் என்று நினைக்கிறது என்பதை அறிந்தால் பணத்தைச் சேர்ப்பதற்கான போராட்டத்திலும் மனமோ பணம் பணம் என்றே இரவும் பகலும் அலைந்து கொண்டிருக்கும். அது கபடத்தனம்! இதனால் எந்தப் பலனும் இல்லை. உலகத்தில் குதித்துப் போராடு, படவேண்டிய வேதனைகளையெல்லாம் படு! இன்பங்களையெல்லாம் அனுபவி! அதன் பிறகே துறவு வரும், அதன்பிறகே அமைதி வரும். எனவே பதவி, ஆசை, அதுஇது என்று எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்! அவை எல்லாம் மிகமிகச் சாதாரணமானவை என்பதை நீ புரிந்துகொள்ளும் காலம் அதன்பின்னர் வரும். இப்படி இந்த ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளாதவரையில் செயல்புரியும் நிலையைக் கடக்காதவரையில் அமைதி நிலையை, சாந்த நிலையை, சரணாகதிநிலையை அடைய முடியாது.
அமைதி, துறவு போன்ற கருத்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உபதேசிக்கப்பட்டு வந்துள்ளன. குழந்தைப் பருவத்திலிருந்தே எல்லோரும் அதைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த நிலையை அடைந்துள்ளவர்கள் மிகச் சிலரே நான் உலகில் நிலையை அடைந்துள்ளவர்கள் மிகச் சிலரே, நான் உலகில் பாதிக்குமேல் பயணம் செய்திருக்கிறேன். இத்தகைய அமைதியையும் எதிர்க்காத நிலையையும் அடைந்துள்ள இருபது பேரையாவது பார்த்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.
ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய சொந்த லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதை அடையப் பாடுபட வேண்டும். அடைய முடியும் என்ற நம்பிக்கையே இல்லாத, பிறருடைய லட்சியங்களை எடுத்துக் கொள்வதைவிட இது முன்னேற்றத்திற்கு நிச்சயமான வழியாகும். உதாரணமாக , ஒரு குழந்தையிடம் இருபது மைல் நடந்து போகச் சொல்வதாக வைத்துக்கொள்வோம். ஒன்று, அந்தக் குழந்தை பிணமாகும். ஏதோ ஆயிரத்தில் ஒன்று தவழ்ந்து, ஊர்ந்து, களைத்துப்போய், அரைப் பிணமாகச் சென்று சேரும். உலகத்தில் பொதுவாக நாம் செய்ய முயல்வதும் இது போன்றதுதான்.
எந்தச் சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலுள்ள ஆண் பெண் அனைவரும் ஒரேபோன்ற மனமும், திறமையும், செயல்புரியும் ஆற்றலும் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள் அவர்களுக்கு வெவ்வேறு லட்சியங்கள் வேண்டும். எந்த லட்சியத்தையும் கேலி செய்ய நமக்கு உரிமை கிடையாது. தன் லட்சியத்தை அடைய ஒவ்வொருவரும் இயன்றவரையில் முயல வேண்டும். உனது அளவுகோலால் என்னை முடிவு செய்வதும், என் அளவுகோலால் உன்னைப் பற்றித் தீர்மானிப்பதும் சரியானதல்ல. சவுக்கு மரத்தை ஆப்பிள் மரத்தின் தகுதியை வைத்து மதிப்பிடக் கூடாது. அதுபோலவே ஆப்பிள் மரத்தையும் சவுக்கு மரத்தின் தகுதியை வைத்து மதிப்பிடக் கூடாது. ஆப்பிள் மரத்தை மதிப்பிட வேண்டுமானால் ஆப்பிள் மரத்திற்குள்ள தகுதியை வைத்தும் சவுக்கு மரத்தை அதன் தகுதியின் பேரிலும்தான் மதிப்பிட வேண்டும்.
வேறுபாடுகளுக்கிடையே ஒருமை என்பதுதான் படைப்பின் திட்டம். மனிதர்களுக்கிடையே எவ்வளவு தான் வேறபாடுகள் இருந்தாலும், அனைவருக்கும் பின்னால் ஒருமை உள்ளது. பலதரப்பட்ட மனிதர்களும் பல்வேறு இனங்களும் படைப்பில் இயல்பாக அமைகின்ற வேறுபாடுகளே, எனவே எல்லோரையும் ஒரே அளவுகோலால் அளக்கவோ எல்லோருக்கும் ஒரே லட்சியத்தை வைக்கவோ கூடாது. அப்படிச் செய்வது இயல்பிற்கு மாறுபட்ட வாழ்க்கைப் போராட்டத்தை உருவாக்குவதாகும். அதன்விளைவாக மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்குகிறான்,. அறநெறியிலும் நற்செயல் புரிவதிலிருந்தும் தடுக்கப்படுகிறான். ஒவ்வொருவரும் உன்னதமான தங்கள் சொந்த லட்சியத்தை அடைவதற்காக நடத்தும் போராட்டத்தில் அவர்களை ஊக்கப்படுத்துவதும், அதேவேளையில் முடிந்தவரையில் அந்த லட்சியம் சத்தியத்தை ஒட்டியிருக்கும்படி அமைத்துத் தருவதுமே நமது கடமை. மிகப்பழங்காலத்திலிருந்தே இந்த உண்மையை இந்து மத நீதிநெறிக் கோட்பாடு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துமத சாஸ்திரங்களும் நீதிநூல்களும் இல்லறத்தார் துறவியர், பிரம்மசாரிகர் என்று வெவ்வேறு நிலையில் இருப்பவர்களுக்கு வெவ்வேறு நியதிகளைக் கூறுகின்றன.
மனிதகுலம் முழுவதற்கும் பொதுவான கடமைகளைத் தவிர ஒவ்வொரு மனிதனுக்கும் சில தனிக் கடமைகளும் இருப்பதாக இந்துமத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்து, தன் வாழ்க்கையை ஒரு மாணவனாகத் தொடங்குகிறான், பின்னர் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தானாகிறான். வயதான காலத்தில் குடும்பக் கடமைகளிலிருந்து விடுபடுகிறான். இறுதியில் குடும்ப வாழ்வைத் துறந்து துறவியாகிறான். வாழ்வின் இந்த ஒவ்வொரு நிலைக்கும் தனிக்கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த வாழ்க்கை நிலைகள் எதுவும் தன்னளவில் உயர்ந்தவையும் அல்ல, தாழ்ந்தவையும் அல்ல. திருமணம் செய்து கொண்டவனின் வாழ்க்கை. திருமணம் செய்துகொள்ளாமல் மதப் பணிகளில் ஈடுபட்டுள்ள பிரம்மச்சாரியின் வாழ்வைப்போல் மிகச் சிறந்தது தான். தெருவில் செல்லும் தோட்டியம் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற அரசனைப் போன்றே உயர்ந்தவனும் உன்னதமானவனும்தான் சிம்மாசனத்திலிருந்து மன்னனை அகற்றி, தோட்டியின் வேலையைச் செய்யச் சொல்லிப் பாருங்கள். அதுபோலவே தோட்டியைச் சிம்மாசனத்தில் அமர்த்தி ஆளச் சொல்லுங்கள். எனவே சம்சார வாழ்வில் இருப்பனைவிட அதைத் துறந்து வாழ்பவன் உயர்ந்தவன் என்று கூறுவது முட்டாள்தனம். வாழ்க்கையில் இருந்துகொண்டே இறைவனை வழிபடுவது, உலகத்தைத் துறந்து, அதன் துன்பங்களிலிருந்து விடுபட்டு வாழ்கின்ற சுலபமான வாழ்க்கையைவிட மிகவும் கடினமானது.
வாழ்க்கையின் நான்கு நிலைகள், பிற்காலத்தில் இல்லறத்தான், துறவி என்று இரண்டாகக் குறைக்கப்பட்டன. இல்லறத்தான் திருமணம் செய்து கொள்கிறான். நாட்டின் குடிமகனாக இருந்தபடியே கடமைகளைச் செய்கிறான். துறவி தன் ஆற்றல் முழுவதையும் பிரச்சாரம் வழிபாடு என்று மத வாழ்க்கையில் செலவிடுகிறான். இதனைப்பற்றிக் கூறுகின்ற மஹா நிர்வாண தந்திரம் என்ற நூலிலிருந்து நான் சில பகுதிகளை இப்போது படிக்கிறேன். குடும்பத்தில் வாழ்ந்துகொண்டு எல்லா கடமைகளையும் சிறப்பாகச் செய்வது எவ்வளவு கடினமானது என்பதை இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
இல்லறத்தான் இறைபக்தி கொண்டவனாக இருக்க வேண்டும் இறை ஞானமே அவனது லட்சியமாக இருக்க வேண்டும். அதேவேளையில் அவன் இடையீடின்றிச் செயல்புரிய வேண்டும். செயல்கள் அனைத்தின் பலனையும் அவன் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
வேலை செய்துவிட்டு, அதன் பலனைப் பொருட்படுத்தாதிருப்பது; ஒருவனுக்கு உதவி செய்தபின் அவன் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று எண்ணாமல் இருப்பது; ஒரு வேலையைச் செய்துவிட்டு அதனால் பெயரோ புகழோ வருமா, எதுவுமே கிடைக்காமல் போகுமா என்பதுபற்றிச் சிறிதும் சிந்திக்காமல் இருப்பது இவை மிகவும் கடினமான காரியங்கள், உலகமே புகழும் என்றால், வடிகட்டின கோழைகூட வீரனாக மாறிவிடுவான். சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமானால், அது தன் மீது புகழ்க் கொடியை ஏற்றுகிறது என்றால் கடைந்தெடுத்த முட்டாள்கூட வீரதீரச் செயல்களைச் செய்துவிடுவான். ஆனால் பிறர் ஆமோதிப்பதை எதிர்ப்பார்க்காமல் தொடர்ந்து நன்மை செய்வது என்பது தான் உண்மையிலேயே ஒருவன் செய்ய முடிந்த தியாகங்களுள் தலைசிறந்தது.
இல்லறத்தானின் முதற்கடமை வாழ்க்கைக்கான பொருள் ஈட்டுவது ஆனால் பொய் சொல்லியோ ஏமாற்றியோ கொள்ளையடித்தோ அவன் அதைச் செய்யாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும் தன் வாழ்க்கை இறைவனுக்கும், ஏழை எளியவர்களுக்கும் சேவை செய்வதற்காக அமைந்துள்ளது என்பதை அவன் மறக்கக் கூடாது
தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வங்கள் என்பதை உணர்ந்து இல்லறத்தார் எப்போதும் எல்லா வழிகளிலும் அவர்களை மகிழ்ச்சியுறச்ö செய்ய வேண்டும். தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால் இறைவனும் மகிழ்ச்சி அடைகிறார். பெற்றோரிடம் கடின வார்த்தைகள் பேசாத பிள்ளை உண்மையிலேயே சிறந்தவன்
பெற்றோரின் முன்னர் ஒருவன் கேலியோ கிண்டலோ செய்யக் கூடாது. படபடப்பாக நடந்து கொள்ளக் கூடாது. கோபத்தையோ ஆத்திரத்தையோ காட்டக் கூடாது. தாய் தந்தையரின் முன் பணிந்து வணங்க வேண்டும். அவர்களின் முன்னால் எழுந்து நிற்க வேண்டும். அவர்கள் கூறும்வரை உட்காரக் கூடாது.
தாய், தந்தை, குழந்தைகள், மனைவி மற்றும் ஏழைகளுக்கு உணவும் உடையும் வழங்காமல் இல்லறத்தான் தான் மட்டும் ஏற்றுக் கொள்வானானால் அவன் பாவம் செய்தவனாவான். இந்த உடல் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் தாயும் தந்தையும் அவர்களுக்கு நன்மை செய்வதற்காக ஓராயிரம் துன்பங்களையும் ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்
இதுபோலவே ஒருவன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன.
மனைவியைத் திட்டக் கூடாது. அவளைத் தன் தாயைப் போன்றே போற்றிக் காக்க வேண்டும். கடுமையான துன்பங்களிலும் பிரச்சினைகளிலும்கூட அவன் மனைவியிடம் கோபம் காட்டக் கூடாது.
மனைவியைத் தவிர வேறு பெண்ணை ஒருவன் நினைப்பானேயானால், மனத்தாலேனும் அவளைத் தீண்டுவானேயானால், அவன் இருள் சூழ்ந்த கொடிய நரகத்தை அடைவான்.
பெண்களுக்கு முன்னால் ஒருவன் முறையற்ற பேச்சுகளைப் பேசக் கூடாது தன்னைப்பற்றிப் பெருமையடித்துக் கொள்ளக் கூடாது. நான் இதைச் செய்தேன்,. அதைச் செய்தேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது
இல்லறத்தான் தன் மனைவியைப் பணம் ஆடைகள், அன்பு நம்பிக்கை இனிய மொழிகள் இவற்றால் எப்போதும் மகிழ்விக்க வேண்டும். அவளைத் தொந்தரவு செய்கின்ற எதையும் செய்யக் கூடாது. கற்பு நிறைந்த மனைவியின் அன்பைப் பெறுவதில் வெற்றி பெற்றவன் தன் கடமையில் வெற்றி பெற்றுவிட்டான், அவனுக்கு எல்லாவித நற்குணங்களும் வந்து சேர்கின்றன.
கீழ்க்கண்டவை ஒருவன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளாகும்
நான்காவது வயதுவரை ஒருவன் தன் மகனை அன்போடு போற்றி வளர்க்க வேண்டும். இருபது வயதில் அவனை எங்காவது ஒரு வேலையில் அமர்த்த வேண்டும். அதன்பிறகு அவனைத் தனக்குச் சமமாகவும் அன்போடும் நடத்த வேண்டும். மகளையும் இதுபோலவே அன்போடு வளர்க்க வேண்டும். மிகுந்த கவனத்துடன் அவளைக் கல்வி கற்கச் செய்ய வேண்டும். அவளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அவளுக்கு நகைகளும் சொத்துக்களும் தர வேண்டும்
பிறகு சகோதர சகோதரிகளே, அவர்கள் ஏழையாக இருந்தால் அவர்களுடைய பிள்ளைகள், பிற உறவினர், நண்பர், வேலைக்காரர் என்று இவர்களிடமும் அவனுக்குக் கடமைகள் உள்ளன. அதன்பிறகு அவன் வாழும் கிராமத்தில் உள்ள மக்கள் ஏழைகள் மற்றும் அவனிடம் உதவிக்கென்று வருபவர்கள் இவர்களுக்கு அவன் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. வசதி இருந்தும் ஒருவன் உறவினருக்கும் ஏழைகளுக்கும் ஒன்றும் கொடுக்காமல் போனால், அவன் மனிதன் அல்ல, மிருகம் என்றே கொள்ள வேண்டும்
உணவு, உடை உடம்பைப் பராமரிப்பது முடியை அலங்கரிப்பது இவற்றில் அளவுக்கு அதிகமான பற்றைத் தவிர்க்க வேண்டும் இல்லறத்தான் இதயத்தில் தூயவனாகவும் உடம்பைச் சுத்தமாக வைத்திருப்பவனாகவும் சுறுசுறுப்பு நிறைந்தவனாகவும், செயல்புரிய எந்த நேரத்திலும் தயாரானவனாகவும் இருக்க வேண்டும்.
இல்லறத்தான் பகைவர்களுக்கு அச்சம் தருபவனாக இருக்க வேண்டும்.
அவர்களை எதிர்க்க வேண்டும். அது இல்லறத்தானின் கடமை, ஒரு மூலையில் அமர்ந்து மூக்கைச் சிந்தியபடி அஹிம்சை என்று முட்டாள்தனமாகப் பேசிக் காட்டவில்லையென்றால், அவன் கடமை தவறியவனாகிறான். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அவன் ஆட்டுக்குட்டிபோல் அடங்கி நடக்க வேண்டும்.
இல்லறத்தான் தீயவர்களுக்கு மரியாதை தரக்கூடாது. அது அவனது கடமை
ஏனென்றால் தீயவர்களுக்கு மரியாதை செய்தால்
அதுபோலவே போற்றுதலுக்கு உரியவர்களையும் நல்லவர்களையும் மதிக்காதிருப்பதும் பெரிய குற்றமாகும்.
நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவன் அவசரப் படக் கூடாது. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக முறைதவறி எல்லா இடங்கிலும் செல்லக் கூடாது நண்பராக்கிக் கொள்ள விரும்புபவர்களின் செயல்களையும், அவர்கள் பிறருடன் பழகும் விதத்தையும் கவனிக்க வேண்டும். அதை ஆராய வேண்டும் அதன் பிறகே நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.
மூன்று விஷயங்களை அவன் பேசக் கூடாது. தன் புகழைப் பொது இடத்தில் பேசக் கூடாது. தன் பெயரையோ திறமையையோ தானே பரப்பக் கூடாது. செல்வத்தைப் பற்றியோ, தன்னிடம் தனிமையில் பிறர் சொன்னதையோ சொல்லக்கூடாது
தான் ஏழை என்றோ பணக்காரன் என்றோ எதுவும் அவன் பேசுவது நல்லதல்ல. அவன் தன் செல்வத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளக் கூடாது. இந்த விஷயங்களைத் தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும். இது உலக வழக்கு மட்டுமல்ல. அவனது கடமையும் ஆகும். இவற்றையெல்லாம் அவன் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன் நன்னெறியில் செல்லாதவன் என்று கருதப்பட வேண்டும்.
இல்லறத்தான் சமுதாயம் முழுவதன் ஆதாரமாகவும் தாங்கும் தூணாகவும் இருக்கிறான்,. சமுதாயத்தில் முக்கியமாகச் சம்பாதிப்பவன் அவனே. ஏழைகள், பலவீனர்கள், குழந்தைகள், வேலை செய்யாத பெண்கள் ஆகிய எல்லோருமே அவனைச் சார்ந்தே வாழ்கிறார்கள். எனவே அவன் செய்தேயாக வேண்டிய கடமைகள் உள்ளன. இந்தக் கடமைகள் அவற்றைத் திறம்படச் செய்கின்ற வலிமையை அவனுக்குத் தருபவையாக அமைய வேண்டும். தனது லட்சியத்திற்குப் பொருந்தாத, கீழான செயல்களைச் செய்கிறோம் என்ற உணர்வை அவனுக்குத் தருபவையாக அவை அமையக் கூடாது.
பலவீனம் காரணமாக அவன் எதையாவது செய்து விட்டாலோ, ஏதேனும் குற்றம் செய்துவிட்டாளோ அதை எல்லோரிடமும் சொல்லக் கூடாது. அவன் ஈடுபட்டிருக்கின்ற ஒரு முயற்சி தோல்வியையே தழுவும் என்று கண்டால் அதையும் பிறரிடம் அவன் சொல்லக் கூடாது. இப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது தேவையில்லாதது மட்டுமல்ல. அது அவனது உறதியைப் பாதித்து, அவனது சொந்தக் கடமைகளையும் ஆற்ற முடியாமல் செய்துவிடும். அதேவேளையில் இவற்றை அடைய அவன் கடினமாகப் பாடுபட வேண்டும் முதலில் அறிவு இரண்டாவது செல்வம்
இது அவனது கடமை. கடமையைச் செய்யாதவன் மனிதனே அல்ல. செல்வம் சேர்ப்பதற்காகப் பாடுபட்டு உழைக்காத இல்லறத்தான் நன்னெறியைப் பின்பற்றாதவன். அவன் உத்வேகம் இல்லாதவனாகவும் சோம்பல் வாழ்க்கையில் திருப்தி அடைபவனாகவும் இருப்பவன். நன்னெறியில் செல்லாதவன், ஏனென்றால் அவனை நம்பி நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். அவன் செல்வந்தன் ஆனால் நூற்றுக்கணக்கானோர் உதவி பெறுவார்கள்.
செல்வம் சேர்க்க வேண்டும் என்ற துடிப்போடு ஒரு நூறு பேராவது இந்த நகரத்தில் இல்லையென்றால், அவர்கள் பணம் சேர்க்கவில்லையென்றால், இந்த நாகரீகமும், இந்த அன்ன சத்திரங்களும் மாளிகைகளும் இங்கே இருந்திருக்குமா? எனவே பணம் சேர்ப்பது தவறல்ல. ஏனென்றால் அந்த பணம் பகிர்ந்தளிக்கவே பயன்படுகிறது. வாழ்க்கை மற்றும் சமுதாயத்தின் மையமாக இல்லறத்தான் இருக்கிறான். எனவே நல்வழியில் செல்வம் சேர்ப்பதும் செலவிடுவதும் அவனுக்கு ஒரு வழிபாடாகிறது. நல்ல காரியங்களுக்காக நல்ல வழிகளில் பணம் சம்பாதிப்பதற்காக உழைக்கின்ற இல்லறத்தான் செய்வதும், குகைகயில் அமர்ந்து முக்திக்காகப் பிரார்த்தனை செய்கின்ற தபஸ்விகள் செய்வதும் விஷயத்தில் ஒன்றதான். இறைவனிடமும் அவனது படைப்பின் மீதும் உண்டாகின்ற, பக்தியால் உந்தப்பட்ட ஒரே நற்பண்பின் இரண்டு பக்கங்களான சரணாகதி தியாகம் என்பவற்றையே நாம் காண்கிறோம்.
நற்பெயர் பெற அவன் எல்லா வழிகளிலும் பாடுபட வேண்டும். சூதாடுவதையும் தீயோர் சேர்க்கையையும் விட வேண்டும். பொய் பேசக் கூடாது பிறருடைய துன்பத்திற்கு எந்த விதத்திலும் காரணமாகக் கூடாது. பல நேரங்களில் மனிதர்கள் தங்களால் இயலாத ஒன்றில் ஈடுபட்டு விடுகிறார்கள். எனவே அதைச் செய்து முடிப்பதற்காக மற்றவர்களை ஏமாற்ற நேர்கிறது. அத்துடன் எல்லா விஷயங்களிலும் காலத்திவ் பங்கைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் தோல்வியாக இருந்தது மற்றொரு வேளையில் பெரிய வெற்றியாக மாறிவிடக்கூடும்.
இல்லறத்தான் உண்மையிலேயே பேச வேண்டும் அதையும் மென்மையாகவும், பிறர் விரும்புகின்ற வகையிலும், அவர்களுக்கு நன்மை செய்கின்ற விதத்திலும் பேச வேண்டும். பிறருடைய விஷயங்களைப் பற்றி அவன் பேசக் கூடாது. குளங்கள் வெட்டுதல், சாலைஓரங்களில் மரங்கள் நடுதல், மக்களுக்கும் விலங்குகளுக்கும் அமைத்தல் போன்ற பணிகளைச் செய்யும் இல்லறத்தான், பரம யோகிகள் செல்லும் குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்கிறான். இல்லறத்தார்களின் இந்தக் கடமைகள் கர்ம யோகக் கோட்பாட்டின் ஒரு பகுதியாகும், அந்த நூலின் பிற்பகுதியில், சொந்த நாட்டிற்காகவோ, மதத்திற்காகவோ, போரிட்டு மரணம் அடைபவன் தியானத்தின் மூலம் ஒரு யோகி செல்கின்ற அதே இடத்திற்குச் செல்கிறான்.
(8.67) என்று கூறப்பட்டுள்ளது. ஒருவனுக்குக் கடமையாக அமைவது மற்றொருவனுக்கு அவ்வாறே அமைய வேண்டும் என்பதில்லை என்பது இதன் மூலம் காட்டப்படுகிறது. அதே வேளையில் ஒரு கடமை மனிதனைத் தாழ்ச் செய்கிறது என்றோ மற்றொன்று உயர்வைத் தரும் என்றோ அந்த நூல் கூறவில்லை. ஒவ்வொரு கடமைக்கும் தனக்கென்று ஓர் இடம் உள்ளது. எந்தச் சூழ்நிலையில் நாம் வைக்கப்பட்டிருக்கிறோமோ, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்துள்ள கடமைகளை நாம் செய்ய வேண்டும்.
இவற்றிலிருந்து ஒரு கருத்து தெளிவாகிறது அது எல்லா பலவீனங்களையும் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்பதாகும் எங்களுடைய தத்துவம் மதம் செயல் என்று எல்லாவற்றின் உபதேசங்களிலும் நான் விரும்புகின்ற ஒரு சிறந்த கருத்து இது . நீங்கள் வேதங்களைப் படித்தீர்களானால் பயமில்மை என்னும் வார்த்தை திரும்பத்திரும்பக் கூறப்படுவதைக் காணலாம் எதற்கும் பயப்படாதீர்கள் பயம் பலவீனத்தின் அடையாளம் உலகத்தின் கேலியையோ அவமதிப்பையோ பொருட்படுத்தாமல் ஒருவன் தன் கடமைகளைச் செய்து கொண்டே போக வேண்டும்.
இறைவனை வழிபடுவதற்காக உலகத்தைத் துறந்து செல்கின்ற ஒருவன் உலகத்தில் வாழ்ந்து உலகின் நன்மைக்காகச் செயல் புரிந்துகொண்டிருப்போர் எல்லாம் இறைவனை வழிபடாதவர்கள் என்று நினைக்கக் கூடாது. அதுபோலவே குடும்பத்தில் மனைவி மக்களோடு வாழும் இல்லறத்தான் உலகைத் துறந்து வாழும் துறவியரைப் பயனற்ற நாடோடிகள் என்று கருதக்கூடாது. அவரவர் இடத்தில் ஒவ்வொருவரும் பெரியவரே இந்தக் கருத்தை ஒரு கதை மூலம் விளக்குகிறேன்.
ஓர் அரசன் தன் நாட்டிற்கு வரும் துறவிகளை எல்லாம் உயர்ந்தவன் யார்? உலகைத் துறந்து துறவியானவனா? உலகில் வாழ்ந்து தன் கடமைகளைச் செய்து வாழும் இல்லறத்தானா? என்று கேட்பது வழக்கம் அறிவாளிகள் பலர் அந்தச் பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வந்தார்கள் சிலர் துறவிகளே சிறந்தவர்கள் என்றனர். அரசன் அவர்களின் கூற்றை நிரூபிக்கச் சொன்னான் அவர்களால் முடியாமல் போகவே அவர்களைத் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபடுமாறு கட்டளையிட்டான் வேறு சிலர் வந்து தன் கடமைகளைச் செய்து வாழும் இல்லறத்தானே சிறந்தவன் என்று கூறினர். அதையும் அரசன் நிரூபிக்கச் சொன்னான் அவர்கள் நிரூபிக்காதபோது அவர்களையும் இல்லறத்தார்களாக வாழும்படிக் கட்டளையிட்டான்.
கடைசியாக ஒருநாள் இளம்துறவி ஒருவர் அரசனிடம் வந்தார். அவரிடமும் அரசன் தன் கேள்வியைக் கேட்டான் அதற்கு அந்தத் துறவி மன்னா அவரவர் நிலையில் இருக்கும்போது இருசாராரும் சம அளவில் உயர்ந்தவர்களே என்றார் அரசன் அதை நிரூபியுங்கள் என்றான் அதற்கு அந்த இளம் துறவி நான் அதைநிரூபிக்கிறேன் ஆனால் நீங்கள் என்னுடன் வந்துநான் வாழ்வதுபோல் சில நாட்கள் வாழ வேண்டும் அப்போது நான் கூறியதை நிரூபிக்க வசதியாக இரு க்கும் என்றார் அரசன் அதனை ஏற்றுக்கொண்டு துறவியுடன் புறப்பட்டான் இருவரும் அந்த நாட்டைக் கடந்து மேலும் பலநாடுகளைக் கடந்து ஒரு பெரிய நாட்டை அடைந்தார்கள் அப்போது அந்த நாட்டின் தலைநகரில் ஒரு பெரிய விழா நடந்து கொண்டிருந்தது எங்கு பார்த்தாலும் வாத்திய இசையும் பாட்டும் ஆரவாரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. தண்டோரா போடுபவனின் குரலும் இடையில் கேட்டது மக்கள் கண்ணைப் பறிக்கும் ஆடைகளோடு கூடியிருந்தனர். அவர்கள் முன்னால் அவன் உரத்த குரலில் அறிவித்துக் கொண்டிருந்தான் அது என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மன்னனும் துறவியும் அங்கே சென்றனர் அந்த நாட்டு மன்னனின் மகளுடைய சுயம்வரம் நடைபெறப் போகிறது என்பதையே அவன் அங்கே அறிவித்துக் கொண்டிருந்தான்.
சுயம்வரத்தில் அரசகுமாரிகள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுப்பது இந்தியாவில் பண்டைய வழக்கமாக இருந்தது. தனக்குக் கணவனாக வரப்போகின்றவன் இப்படியிருக்க வேண்டும் என்று ஒவ்வோர் அரச குமாரியும் சில எண்ணங்களைக் கொண்டிருந்தாள் சிலருக்கு ஈடற்ற அழகன் வேண்டும் சிலருக்கு அறிவில் சிறந்தவன் வேண்டும் சிலருக்குப் பெரிய செல்வந்தன் வேண்டும் அண்டை அயல்நாடுகளின் ராஜகுமாரர்கள் எல்லாம் நன்றாக அலங்கரித்துக் கொண்டு சுயம்வரத்திற்கு வருவார்கள் சிலவேளைகளில் அவர்கள் தங்களுடன் ஓர் அறிவிப்பாளனையும் அழைத்து வருவார்கள் அவன் அந்த ராஜகுமாரனின் பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி அந்த இளவரசி அவனை மணந்து கொண்டால் என்னென்ன நன்மை உண்டாகும் என்பதை அறிவிப்பான் ராஜகுமாரி அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் அமர்ந்தபடி ஒவ்வொரு ராஜகுமாரனிடமும் வந்து அவனைப் பற்றி விவரங்களை எல்லாம் கேட்பாள் திருப்தி அடையாவிட்டால் முன்னே செல்லுங்கள் என்று பல்லக்கு சுமப்பவர்களிடம் கூறுவாள் நிராகரிக்கப்பட்ட ராஜகுமாரர்களைப் பின்னர் பார்ப்பதே இல்லை தனக்குப் பிடித்தவனைக் கண்டுகொண்டால் உடனே அவன் கழுத்தில் ஒரு மலர் மாலையை அணிவிப்பாள் அவன் அவளை மணப்பான்.
நமது துறவியும் மன்னனும் சென்ற அந்த நாட்டின் இளவரசிக்கும் இந்தச் சுயம்வர விழாதான் நடந்து கொண்டிருந்தது. அவள் உலகிலேயே பேரழகு வாய்ந்தவளாக இருந்தாள் அவளை மணந்து கொள்பவன் அவளுடைய தந்தைக்குப் பிறகு அந்த நாட்டின் அரசன் ஆவான் அவள் பேரழகன் ஒருவனை மணக்க விரும்பினாள் இதற்கு முன்பும் எத்தனையோ சுயம்வரங்கள் நடந்தன அவளுக்கு யாரையும் பிடிக்க வில்லை அவளால் யாரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை இந்தச் சுயம்வரம் முன் நடந்த எல்லாவற்றையும் விட மிகச் சிறந்ததாக இருந்தது. முன்பைவிட அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர் ராஜகுமாரி பல்லக்கில் அமர்ந்து ஒவ்வொருவராகப் பார்த்தாள் ஆனால் எல்லோரையுமே ஒதுக்கிவிட்டாள் இந்த முறையும் சுயம்வரம் தோல்வி தானோ என்று எல்லோரும் கவலைப்பட்டனர்.
அப்போது அந்த மண்டபத்திற்குள் இளம்துறவி ஒருவர் நுழைந்தார். கம்பீரமும் அழகும் நிறைந்த அவர் அங்கே வந்தது சூரியனே வானத்தை விட்டுப் பூமியில் வந்ததுபோல் இருந்தது. அந்த மண்டபத்தின் ஒரு மூலையில் நின்றுகொண்டு அங்கே என்ன நடக்கிறது என்று அவர் கவனித்துக் கொண்டிருந்தார் அங்கே வந்த இளவரசி அவரது அழகில் தன்னைப் பறிகொடுத்து கையிலிருந்த மாலையை அவர் கழுத்தில் சூட்டினாள் இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தத் துளவி அதிர்ச்சியுற்றவராக என்ன முட்டாள்தனம் இது ? நான் ஒரு துறவி எனக்னென்ன திருமணம் என்று கூறிமாலையைக் கழற்றிக் கீழே எறிந்தார். இதைக் கண்ட அந்த நாட்டு அரசர் இந்தத் துறவி ஏழையாக இருப்பதால் இளவரசியை மணந்துகொள்ள பயப்படுகிறான் என்று நினைத்து என் மகளை மணந்து கொண்டதும் இந்த நாட்டில் பாதி உனக்குச் சொந்தமாகும் நான் இறந்த பிறகு முழு நாடும் உனக்கே என்று கூறி அந்த மாலையை எடுத்து மறுபடியும் அந்தத் துறவியின் கழுத்தில் போட்டான் துறவியோ மீண்டும் மாலையைக் கழற்றிக் கீழே வீசியெறிந்து மடத்தனம் திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சட்டென்று அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினார் இதற்குள் இளவரசி அந்தத் துறவியிடம் அளவற்ற காதல் கொண்டுவிட்டாள் ஒன்று நான் அவரை மணந்து கொள்ள வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும் என்று கூறியபடியே அவரைத் திரும்ப அழைத்து வருவதற்காக அவர் பின்னாலேயே சென்றாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நம் துறவி தான் அழைத்து வந்த அரசனைப் பார்த்து மன்னா! நாம் அந்த இருவரையும் தொடர்ந்து செல்வோம் என்று கூறினார். பின்னர் இருவரும் இளவரசி தங்களைப் பார்த்து விடாதபடி அவர்களைத் தொடர்ந்து சென்றனர்.
இளவரசியை மணக்க மறுத்த இளந்துறவி நகரத்தை விட்டுப் பல மைல் தொலைவு நடந்துபோய் விட்டார். ஒரு காட்டின் அருகே வந்ததும் அதற்குள் நுழைந்தார் தொடர்ந்து வந்த இளவரசியும் காட்டிற்குள் நுழைந்தாள். நமது துறவியும் அரசனும் பின்தொடர்ந்தனர். அந்த இளந்துறவிக்குக் காடும் குறுகிய பாதைகளும் அத்துபடியாக இருந்தது சட்டென்று அவற்றுள் ஏதோ ஒருவழியில் நுழைந்து மறைந்துவிட்டார் இளவரசியால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை காடு முழுவதும் அலைந்து திரிந்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் வெளியேறவும் வழியறியாமல் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள் அப்போது நமது துறவியும் அரசனும் அவளிடம் சென்று அழாதே நீ வெளியே செல்ல நாங்கள் வழி காட்டுகிறோம் இப்போது மிகவும் இருட்டிவிட்டதால் வழி காண்பது சிரமம் இதோ பெரிய மரம் ஒன்று உள்ளது இதனடியில் இன்றிரவு தங்கலாம் காலையில் உனக்கு வழி காட்டுகிறோம் என்றனர்.
அந்த மரத்தில் ஒரு குருவியும் அதன் மனைவியும் மூன்று குஞ்சுகளும் ஒரு கூட்டில் வாழ்ந்து வந்தன அந்தச் சின்னஞ்சிறு குருவி மரத்திற்குக் கீழே வந்து தங்கியுள்ள மூவரையும் பார்த்துத் தன் மனைவியிடம் என் அன்பே இப்போது என்ன செய்வது நம்வீட்டில் சில விருந்தினர் வந்துள்ளனர் இது குளிர்காலம் வேறு நெருப்புக்கூட இல்லையே என்று கவலையுடன் கூறியது பின்னர் எங்கோ பறந்து சென்று எரிந்து கொண்டிருக்கும் ஒரு சுள்ளியைக் கொண்டுவந்து அந்த மூன்று பேருக்கும் முன்னால் போட்டது அவர்கள் மேலும் சில சுள்ளிகளைச் சேர்த்துத் தீயை வளர்த்துக் குளிர்காய்ந்தார்கள்.
அப்போது குருவிக்கு மனநிறைவு ஏற்பட வில்லை மீண்டும் அது தன் மனைவியைப் பார்த்து அன்பே இப்போது என்ன செய்வது? அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மால் எதுவும் கொடுக்க முடியவில்லையே நாமோ இல்லறத்தினர் வீடு தேடி வருபவர்களின் பசியைத் தீர்ப்பது நமது கடமை அதற்காக என்னால் முடிந்ததை நான் செய்தாக வேண்டும் என் உடம்பை அவர்களுக்கு உணவாகத் தருகிறேன் என்று கூறியபடி அவர்கள் வளர்த்திருந்த நெருப்பில் பாய்ந்து மாண்டது மரத்தடியிலிருந்த மூவரும் அந்த குருவி நெருப்பில் வீழ்வதைப் பார்ததார்கள் தடுக்கவும் முயன்றார்கள் ஆனால் குருவி மிக வேகமாக நெருப்பில் வீழந்துவிட்டது.
அந்தக் குருவியின் மனைவி தன் கணவனின் செயலைப் பார்த்தது. பின்னர் இங்கோ மூன்று பேர் இருக்கிறார்கள் ஒரு சிறிய பறவையின் உடல் எப்படி அவர்களது பசியைத் தீர்க்கும் அது போதாது என் கணவரின் முயற்சி வீணாகாமல் காப்பது மனைவியான என் கடமை அவர்களுக்கு என் உடலும் கிடைக்கட்டும் என்று கூறித் தானும் தீயில் வீழ்ந்தது.
நடந்தவை அனைத்தையும் மூன்று குஞ்சுகளும் கண்டன . தங்கள் விருந்தினர்களுக்குப் போதுமான உணவு இல்லாததைக் கண்ட அவை நம் பெற்றோர் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள் அப்படியும் உணவு போதவில்லை பெற்றோரின் பணியைத் தொடர்வது நம் கடமை நமது உடலும் போகட்டும் என்று பேசிபடியே மூன்றும் அந்த நெருப்பிற்குள் வேகமாக வீழந்து இறந்தன.
நடந்ததைக் கண்டு திகைத்த அந்த மூவருக்கும் அந்தக் குருவிகளின் உடலைத் தீண்டவும் மனம் வரவில்லை உணவு எதுவும் இன்றியே அவர்கள் இரவைக் கழித்தனர். பொழுது விடிந்ததும் துறவியும் அரசனும் இளவரசி வெளியேற வழிகாட்டினர் அவள் தன் தந்தையிடம் திரும்பினாள்.
பின்னர் நமது துறவி அரசனிடம் மன்னா தான் இருக்கும் இடத்தில் ஒவ்வொருவரும் உயர்ந்தவர்கள் என்பதைக் கண்டு கொண்டாய் அல்லவா? நீ இல்லறத் தானாக வாழ விரும்பினால் இந்தப் பறவைகளைப் போல் எந்த வினாடியும் பிறருக்காக உன்னைத் தியானம் செய்வதற்குத் தயாராக வாழ வேண்டும் உலகைத் துறந்து வாழ விரும்பினால் மிக அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறிச் சென்ற அந்த இளந்துறவியைப்போல் இரு இல்லறத்தானாக விரும்பினால் உன் வாழ்வை மற்றவர்களின் நன்மைக்காக ஒரு பலியாக அர்ப்பித்து விடு துறவு வாழ்வைத் தேர்ந்தெடுத்தால் அழகையோ பணத்தையோ பதவியையோ ஏறெடுத்தும் பார்க்காதே அவரவர் நிலையில்அவரவர் பெரியவரே ஆனால் ஒருவரின் கடமை மற்றவரின் கடமை ஆகாது என்றார்

Comments
Post a Comment