மனதை அடக்கும் உபாயம்!

குரங்குகள் இயற்கையாகவே சஞ்சல மனம் படைத்தவை. அத்தகைய குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு நிறைய கள்ளைக் குடிக்கக் கொடுத்தான் ஒருவன். அதனால் அதன் பரபரப்பு அதிகமாகியது. அது போதாதென்று தேள் ஒன்று அதனைக் கொட்டியது. தேள் கொட்டினால் மனிதனே நாள் முழுதும் குதிப்பான். குரங்கின் நிலையைச் சொல்லவா வேண்டும்? அதன் போதாத காலத்தைப் பூரணமாக்க ஒரு பேயும் அதனைப் பிடித்துக் கொண்டது. இப்போது அந்தக் குரங்கின் அடக்க முடியாத சஞ்சலத்தையும், படபடப்பையும் விளக்க வார்த்தைகள் எங்கே உள்ளன?

இந்த உதாரணத்தை கூறி, மனித மனத்தின் பரிதாப நிலைப்பாட்டை விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்: 

மனித மனம் அந்தக் குரங்கின் நிலைக்கு நிகரானது. இயற்கையாகவே அது சஞ்சல இயல்பு படைத்தது. ஆசை என்னும் கள் குடித்ததனால் அதன் சஞ்சலமும் வெறியும் அதிகரிக்கின்றன. ஆசை குடிகொண்ட பிறகோ பிறர் வெற்றியைக் கொண்டு பொறாமை கொள்கிற குணமாகிய தேள் கொட்டியது. முடிவாக கர்வம் என்ற பேயும் மனத்தினுள் புகுந்து எல்லா பெருமையும் தனக்கே என்று நினைக்கச் செய்கிறது. இத்தகைய மனத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம்!...ஆனால் இது முடியக்கூடியதா? ஆம், கண்டிப்பாக முடியும். எனவே முதல் பாடமாக வருவது இது: சிறிது நேரம் அமர்ந்து மனத்தை அதன் போக்கிலேயே அலையவிடுங்கள். அது எப்போதும் குமுறிக் கிளம்பியவண்ணமே உள்ளது. குரங்கு குதித்துத் தாவுவதைப் போன்றது அது. எவ்வளவு வேண்டுமானாலும் அது குதிக்கட்டும். நீங்கள் பொறுமையாக அதைக் கவனிக்க மட்டும் செய்யுங்கள். அறிவே வலிமை என்பது பழமொழி. அது உண்மை. மன்ம் என்ன செய்கிறது என்பதை அறியாமல் அதைக் கட்டுப்படுத்த முடியாது. கடிவாளத்தை விட்டுப்பிடியுங்கள். தீய எண்ணங்கள் பல அதில் எழலாம். அத்தகைய எண்ணங்கள் உங்கள் மனத்தில் இருந்ததைப் பற்றி நீங்களே திகைப்படைவீர்கள். நாள் செல்லச் செல்ல மனத்தின் வெறித்தனமான போக்கு குறைவதையும், அது மெள்ள மெள்ள அமைதி பெறுவதையும் காண்பீர்கள். ஆரம்பத்தில் சில மாதங்கள் மனத்தில் பல எண்ணங்கள் எழுவதைக் காண்பீர்கள். பிறகு அவை குறையத் தொடங்கும். சில மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து குறைந்து கொண்டே போகும். கடைசியாக மனது பூரணக் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஆனால் தினமும் பொறுமையுடன் பயிற்சி செய்யவேண்டும்...இது ஒரு பெரிய வேலைதான், ஒருநாளில் செய்துமுடிக்கின்ற வேலையல்ல. பொறுமையாகத் தொடர்ந்து வருடக்கணக்காகப் பயிற்சி செய்தால் நாம் வெற்றி பெறுவோம்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,