இந்து சமயம் பகுதி-2


இந்து சமயம் பகுதி-2
இந்த விதிகள், அவை விதிகளாதலால் , முடி வில்லாமல் இருக்கலாம் ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம் படைப்பு தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கிகின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறது என்ற விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொ ல்லப்படுகிறது. பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில் இருந்து என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள் சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது கடவுள் மாறக் கூடியவர் மாறக்கூடிய பொருள் கூட்டுப்பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருட்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீர வேண்டும் எனவே கடவுள் இறந்துவிடுவார் என்றாகிறது. இது அபத்தம் ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒருபோதும் இருந்ததில்லை.

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும் படைப்பவனும், ஆரம்பமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள்.கடவுள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து பல உலகங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்ற பின்னர் அழிந்துவிடுகின்றன இதையே பிராமணச் சிறுவன் தினமும் ஓதுகிறான் : பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார் இது தற்கால விஞ்ஞானத்திற்குப் பொருந்தியாக உள்ளது.

இங்கு தான் நிற்கிறேன் கண்களை மூடிக்கொண்டு நான், நான், நான் என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது ? உடலைப்பற்றிய எண்ணம்தான். அப்படியானால் ஜடப்பொருட்களின் மொத்த உருவம்தானா நான் ? இல்லை என்கின்றன வேதங்கள் நான் உடலில் உறைகின்ற ஆன்மா .நான் உடல் அல்ல உடல் அழிந்துவிடும் ஆனால் நான் அழியமாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன் இது வீழ்ந்துவிடும் ஆனால் நான் வாழ்ந்துகொண்டே இருப்பேன் நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன் ஆன்மா படைக்கப்பட்டதல்ல. படைக்கப்பட்டதானால் அது பல பொருட்களின் சேர்க்கையாகும் அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போகும் எனவே ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.

சிலர்பிறக்கும் போதே இன்பத்தில் பிறக்கிறார்கள்; உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும் தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர்முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயே கடத்துகிறார்கள்.

இவர்கள் அனைவரும் படைக்கப்பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள் ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் இத்தனை வேறுபாடு காட்ட வேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவது பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?

ஆகவே படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவுபடுத்தவில்லை; மாறாக எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால் ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள் அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள்.

ஒருவனுடைய உடல் உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா? வாழ்க்கையில் இரண்டு இணைகோடுகள் உள்ளன - ஒன்று மனத்தைப் பற்றியது, இன்னொன்று ஜடப் பொருளைப்பற்றியது. ஜடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கிவிடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம்இல்லை ஆனால் ஜடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது தத்துவப்படி ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்று தான் இருக்க வேண்டும் என்று ஆகிறது. இது ஜடப்பொருள் ஒன்றே ஒன்று தான் இருக்க வேண்டும் என்பதைப்போல் பகுத்தறிவுக்குப் பொருந்தியதே; ஜடப்பொருள் மட்டுமே உள்ளது என்று சொல்வதைவிட உயர்வானதும் ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.

பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி ஆன்மாவிற்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா குண ஒற்றுமை விதிகளுக்கு இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ அந்த உடலில் பிறக்கிறது . இது விஞ்ஞானத்திற்கு ஏற்புடையது.ஏனெனில் விஞ்ஞானம் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால்தான் உண்டாகிறது.ஆகவே புதிதாகப் பிறந்த ஓர்ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச்செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்ல ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்,

இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம் ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை?இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன் இது என் தாய்மொழி அல்ல. உண்மையில் என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத்தளத்தில் இப்போது இல்லை ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும் அவை விரைந்து வந்துவிடும் மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி மனத்தின் ஆழத்தில்தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதை இது காட்டுகிறது . முயலுங்கள் போராடங்கள் அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள் அறிய முடியும்.

இது நேரானது நிரூபிக்கப்படக் கூடியது.நிரூபிக்கப்படுவதுதான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடக்கூடிய ரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் முயலுங்கள் முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவி நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!

தான் ஒர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான் ஆன்மாவை வாள் வெட்ட முடியாது நெருப்பு எரிக்க முடியாது நீர் கரைக்க முடியாது , காற்று உலர்த்த முடியாது, ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம் இந்த மையம் ஓர்உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான் ஜடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல அது இயல்பாகவே சுதந்திரமானது தளைகள் அற்றது வரம்பற்றது, புனிதமானது தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது தான் ஜடத்துடன் கட்டுப்பட்டதாகத் தன்னைக் காண்கிறது எனவே தன்னை ஜடமாகக் கருதுகிறது.

சுதந்திரமான , நிறைவான தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்க முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக்கழிப்பதாகச் சொல்லப்படுகிறது சில சிந்தனையாளர்கள் முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற ஆனால் முழுமை பெறாத பல தேவதை களைக் கூறி பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன்மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள் ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமைநிலையிலிருந்து எப்படிக் கீழேவர முடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ள முடியம்?

இந்து நேர்மையானவன் அவன் குதர்க்க வாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர்கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான் எனக்குத் தெரியாது முழுமையான ஆன்மா தான் முழுமையற்றது என்றும், ஜடத்துடன் இணைக்கப்பட்டு அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப்பற்றி நினைக்க ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று இந்து கூறுகிறானே, அதற்குமேல் எதுவும் சொல்ல முடியாது.

ஆகவே மனித ஆன்மா நிலையானது, அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது மரணம் என்பது ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது பிறப்புக்குப்பின் பிறப்பு இறப்புக்குப் பின் இறப்பு என்று ஆன்மா மேல்நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்,

இங்கு மற்றொரரு கேள்வி எழுகிறது சூறாவளியில் சிக்கி ஒரு கணம் அலையின் நுரைநிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு அடுத்த கணமே ஆ வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு நல்வினை தீவினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன் கடுஞ்சீற்றமும் படுவேகமும் சற்றும் வீட்டுக் கொடுக்காத காரணகாரியம் என்னும்நீரோட்டத்தில் அகப்பட்டு அழிந்து போகின்ற சக்தியற்ற உதவியற்ற பொருளா மனிதன் ? அல்லது விதவையின் கண்ணீரைக்கண்டும் அனாதையின் அழுகுரலைக் கேட்டும் சற்றும் நிற்காமல் தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்?

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,