சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள்-2

* மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுமானால் நரகத்திற்குக் கூட செல்வதற்குத் தயாராய் இருங்கள். மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது ஒரு நல்ல காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.
* உலகில் நல்லவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் முழுவதும் அனுபவிக்கிறது.
* உலகவாழ்வில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்டாம். வெற்றியோ தோல்வியோ போராடுங்கள்.
* பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயரவேண்டும். இதுவே ஆன்மிகத்தின் பயன்.
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறும் மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை மிருகங்களாக்கி கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.
* சுயநலம், சுயநலமின்மை இந்த இரண்டையும் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் வேறுஎந்தவிதமான வேறுபாடும் கிடையாது.
- விவேகானந்தர்

* பிறருக்காகச் செய்கின்ற சேவையால், நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.
* சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான். உண்மையில், தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.
* நம்மை நாமே பெரிதாக எண்ணிக் கொண்டு அகந்தை கொள்வது கூடாது. சாதாரணமானவர்களாக நம்மை கருதும் போது தான், நம்மிடம் கருணையும், பணிவும், நல்ல சிந்தனையும் வெளிப்படத் தொடங்கும்.
* விவசாயி மடையைத் திறந்து விட்டால் புவியீர்ப்பு விசையால் நீர் தானாக பள்ளத்தைநோக்கிப் பாய்வது போல எல்லா ஆற்றல்களும் மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கின்றன. ஆன்மிகத்தின் உதவியால் தடைகளைப் போக்கி நாம் நிறை நிலையை அடைய வேண்டும்.
* ஆன்மிகத்தின் உதவியால் தீயவர்கள் கூட மகானாக முடியும். வாழ்வில் தடைகளைப் போக்கினால் போதும். நம் இயல்பான குணமாகிய நிறை நிலையின் வாசல்கள் தானாகவே திறந்து விடும்.
- விவேகானந்தர்

* இந்த உலகம் இறைவனுக்குச் சொந்தமானது. உலகப்பொருட்களில் எல்லாம் அவரே இருக்கிறார். இந்த கோணத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டால் நம் மனம் உயர்வு பெறும்.
* ஒரு லட்சியத்தை ஏற்றுக் கொண்டபின் அதைவிடப் புதுமையான ஒன்றைக் கண்டதும் பழையதைப் புறக்கணிப்பது அல்லது விட்டுவிடுவது உங்கள் ஆற்றலை சிதறடித்து விடும்.
* இங்கொன்றும் அங்கொன்றுமாக நுனிப்புல் மேய்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. கணநேரம் இன்பமாக ஏதோ கிடைக்கலாம். ஆனால், அத்துடன் எல்லாம் முடிந்து விடும்.
* ஆன்மிகத்தைப் புறக்கணித்து விட்டு, மேலைநாட்டு நாகரிகத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினால், மூன்றே தலைமுறைகளில் நம் பண்பாடு அழிந்து விடும்.
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றியே கனவு காணுங்கள். அதைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.
- விவேகானந்தர்

* ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இது தான் வழி.
* உலகிற்கு நன்மை செய்தால், நமக்கு நாமே தான் நன்மை செய்து கொள்கிறோம்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடி கொண்டிருக்கிறார் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.
* "நான் அல்ல.. நீயே' என்ற மனப்பான்மையே, எல்லா நன்மைக்கும் அடிப்படை. சுயநலத்தை உதறி விட்டு பொதுநலனுக்காக வாழ்வை அர்ப்பணியுங்கள்.
* தேவையற்ற விஷயங்களிலும், வீண்வதந்திகளிலும் மனதை அலட்டிக் கொள்வதால் நம் ஆற்றல் சிதறி வீணாகிறது. எப்போதும் ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள்.
* ஏழைகளிடம், சிவனைக் காண்பவனே உண்மையில் சிவனை வழிபடுகிறான். மற்றவர்கள் வழிபாட்டின் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார்கள்.
- விவேகானந்தர்

* நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நல்ல எண்ணங்களின் கருவிகளாக செயல்பட்டால் தூய்மை பெறுவோம்.
* நாம் இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதை நம்மாலேயே உருவாக்கிக் கொள்ள முடியும்.
* புது மலர்களே இறைவனின் பாதங்களில் இடுவதற்கு தகுதி பெற்றவை. அதுபோல வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள்.
* ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு வழங்குவதாக கல்வி அமைய வேண்டும்.
* மேலை நாட்டு அறிவியல் நுட்பத்தோடு வேதாந்த கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் முழுமை பெற முடியும்.
* லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறி சென்று கொண்டிருப்பான். எனவே, குறிக்கோளை ஏற்று வாழ்வு நடத்துங்கள்.
- விவேகானந்தர்

* உங்களிடம் உள்ளதை எல்லாம் பிறருக்கு கொடுத்துவிட்டு பிரதிபலன் எதிர்பாராமல் வாழுங்கள்.
* நாம் உண்பதும், உடுப்பதும், உறங்குவதும் கடவுளுக்காகவே. அனைத்திலும் எப்போதும் கடவுளையே காணுங்கள்.
* ஒரு எஜமானனைப் போல கடமையைச் செய்யுங்கள். அடிமையைப் போல இருக்காதீர்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள்.
* சாகின்ற நிலையிலும் கூட நாம், ஒருவர் யார் எப்படிப்பட்டவர் என்று கேள்வி கேட்காமல் உதவி செய்வது தான் கர்மயோகம்.
* சுதந்திர உணர்வு இல்லாத வரையில் மனதில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.
* ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால் வேலைகளுக்குள் கட்டுப்பட்டு விடாதீர்கள்.
* வாழ்வில் மனிதன் உயர வேண்டுமானால் கடுமையான சோதனைகளைக் கடந்து சென்றாக வேண்டும்.
- விவேகானந்தர்

* செல்வம் பெருகியுள்ள காலத்தில் தான் ஒருவனுக்கு பணிவு தேவை. அதே சமயம் வறுமையுற்ற காலத்தில் மனிதனுக்கு துணிவு அவசியம்.
* தன்னந்தனியாக இருப்பவன் பகையைத் தேடிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் பித்துப்பிடித்தவனைப் போல அலைய நேரிடும்.
* துன்பமற்ற இன்பமும், தீமையற்ற நன்மையும் அடைவது என்பது இயலாத ஒன்று. எந்தச் செயலிலும் இன்ப, துன்பம் இரண்டும் கலந்தே இருக்கிறது.
* நன்மை செய்பவன், ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து மகிழத் தயாராயிருக்கலாம்.
* பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. பணத்தை தவிர, நாம் பிறருக்குச் செய்யும் நன்மையும், தெய்வபக்தியும் நம் மனதில் ஆற்றலை பெருகச் செய்பவை தான்.
* மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நடப்பவன் சத்தியத்தைப் பின்பற்ற முடியாது.
* அரிய செயல்கள் பெரிய உழைப்பின்றி ஒருபோதும் முடிந்ததில்லை.
- விவேகானந்தர்

ஒவ்வொருவனும் தன்னுடைய வழிதான் சிறந்தது என்று நினைக்கிறான். மிகவும் நல்லது. ஆனால் உனக்கு வேண்டுமானால் அது நல்லதாக இருக்கலாம் என்பதை நீ நினைவில் வைக்க வேண்டும். ஒருவனால் சிறிது கூட ஜீரணிக்க முடியாத ஓர் உணவு, மற்றொருவனுக்கு எளிதல் ஜீரணமாகக் கூடியதாக இருக்கும். உனக்குப் பொருத்தமாக இருப்பதனாலேயே ஒவ்வொருவனுக்கும் அது தான் வழி, சங்கரனுக்குப் பொருத்தமான சட்டை சந்திரனுக்கும் சங்கரிக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்குத் தாவிவிடாதே. கல்வியறிவில்லாத, பண்பாடற்ற, சிந்தனையில்லாத ஆண் பெண் அனைவரும் இத்தகைய குறுகலான சட்டைக்குள் புகுத்தப்பட்டிருக்கிறார்கள்!

நீயாகவே சிந்தித்துப் பார். நாத்திகனாக இருந்து விட்டுப் போ! இந்த உலகமே பெரிது என்று நினைக்கும் இலெகிகனாக இருந்துவிட்டுப் போ! அது கூட எவ்வளவோ பராவாயில்லை - மனதைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த மனிதனுடைய வழி தவறானது என்று சொல்வதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது? உனக்கு வேண்டுமானால் அது தவறாக இருக்கலாம். அதாவது, நீ அந்த வழியைப் பின்பற்றினால் அதனால் உனக்குக் கேடு விளையக்கூடும். ஆனால் அதற்காக அந்த வழியால் அவன் கீழ்நிலையை அடைந்து விடுவான் என்பது அதன் பொருளல்ல.

எனவே, உன்னிடம் அறிவு இருந்து மற்றொருவன் பலவீனனாக இருப்பதை பார்த்தால், அதற்காக அவனை நீ கண்டிக்காதே. உனக்கு இயலுமானால் அவனுடைய நிலைக்கு இறங்கிச் சென்று அவனுக்கு நீ உதவி செய். தானாகவே அவன். வளர்ச்சி பெற வேண்டும். நான் அவனுடைய தலைக்குள் ஐந்து மணி நேரத்தில் ஐந்து கூடை அறிவைத் திணித்துவிடுவேன். ஆனால் அதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது ? அவன் முன்பு இருந்ததைவிட மேலும் சற்று அதிகம் மோசமானவனாகத்தான் இருப்பான்.

எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது. இதை நம்புங்கள். அப்போது அந்தப் பெரிய சக்தி உங்களிடமிருந்து வெளிப்படும் என்ற இந்த உண்மையை அனைவருக்கும் சென்று போதிப்பாயாக.... எல்லையற்ற வலிமையும், எல்லையற்ற ஞானமும், வெல்ல முடியாத ஆற்றலும் உனக்குள்ளேயே குடிகொண்டிருப்பதை நீ உணரமுடிந்தால், நீ அந்த ஆற்றலை வெளியே கொண்டுவர முடியுமானால், நீயும் என்னைப் போல் ஆக முடியும்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,