கல்வியும் சமுதாயமும்!

மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும்.

கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா?இல்லை. அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா?அதுவும் இல்லை.எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன்தரும் வகையில் அமைகிறதோ. அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்.

வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல, மனதை ஒருமுகப்படுத்துவது தான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான இலட்சியமாகும். 

மீண்டும் ஒரு முறை நான் கல்வி கற்பதாக இருந்தால், அந்த விஷயத்தில் சுதந்திரம் ஏதாவது எனக்கு இருக்குமானால், புள்ளி விவரங்களை நான படிக்க மாட்டேன். முதலில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும், பற்றில்லாமல் இருக்கும் திறந்த உள்ளத்தையும் வளர்த்துக் கொள்வேன். அதன் பிறகு, பண்படுத்தப்பட்ட அந்தக் கருவியைக் கொண்டு, நினைத்த நேரத்தில் உண்மைகளை நான் சேகரித்துக் கொள்வேன்.

பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப்போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி, அதைக் கல்வி என்று சொல்வது பொருத்தமா? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும் படி செய்கிறதோ, அது தான் உண்மையான கல்வியாகும்.

கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

வாழ்கையை உருவாக்கக் கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக்களைக் கிரகித்து அவற்றை நாம் நம்முடையவையாக்கிக் கொள்ள வேண்டும்.

நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களைக் கிரகித்துக் கொண்டு, அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் - ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.

நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டு பிடித்தார் என்று சொல்கிறோம். அது எங்காவது ஒரு மூலையில் அவர் வருவார் என்று உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்தா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டு பிடித்தார். 

காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கிற அறிவு முழுவதும் மனதிலிருந்துதான் வந்திருக்கிறது பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல்நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது. வெளி உலகம் வெறும் தூண்டுதலாக மட்டுமே அமைகிறது. அமைந்து உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. பண்டையக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்த நாளில் மறைந்து போனதுதான் இதற்குக் காரணம்.

முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரணாக இருக்க கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.

கல்வி, கல்வி, கல்வி ஒன்றே இப்போது நமக்குத் தேவை! ஐரேப்பாவின் பல நகரங்களுக்கு நான் பிரயாணம் செய்திருக்கிறேன், அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக்கூடக் கிடைத்திருக்கும் வாழ்கை வசதிகளையும் கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன்.அப்போதெல்லாம் நமது நாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்?கல்வி என்பதுதான் எனக்கு கிடைத்த விடை.

சிரத்தைதான் நமக்கு தேவை. துரதிர்ஷ்டவசமாக இந்தியாவிலிருந்து இது கிட்டத்தட்ட மறைந்தே போயிருக்கிறது.இப்போது நாம் இருக்கும் நிலைமைக்கே சிரத்தையை இழந்துவிட்டதுதான் காரணமாகும். மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்குக் காரணம், இந்தச் சிரத்தையிலுள்ள வேறுபாடே தவிர வேறொன்றுமில்லை. இந்தச் சிரத்தைதான் ஒரு மனிதனைப் பலவீனனாகவும் தாழ்ந்தவனாகவும் ஆக்கிவிடுகிறது. 

நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்துகொண்டிருக்கிறது. அதாவது, எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக்கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.

தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து, இழந்துவிட்ட தங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக்கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும்.... உயர்ந்த கருத்துக்களை அவர்களுக்குக் கொடுங்கள். அந்த ஒரே ஒரு உதவிதான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும். இரசாயனப் பொருள்களை ஒன்றுசேர்த்து வைப்பதுதான் நமது கடமை. பின்பு அவை இயற்கையின் விதியையொட்டித் தாமாகவே படிகங்களாக மாறிவிடும். இப்போது மலை முகமதுவிடம் செல்லாவிட்டால், முகமதுதான் மலையிடம் செல்ல வேண்டும்.ஏழைப் பையன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும். 

எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை. வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. 

தலைமுறை தலைமுறையாக நிலவிய, வெளியே ஓடும் மனதைத் தடுத்து நிறுத்திய கல்விமுறை இப்போது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. இதுவா கல்விமுறை?

இத்தகைய கல்விமுறையின் ஆதிக்கத்தின் விளைவாகப் பழங் கருத்துக்கள் கூட ஒவ்வொன்றாக மறைந்து கொண்டே வருகின்றன. புதிய கருத்துக்கள் பயன்படாமற்போனது பற்றியோ சொல்ல வேண்டியதே இல்லை.

மனிதனை மெல்ல மெல்ல இயந்திரமாக்கிக் கொண்டு வருவதும் ஒரு கல்வியா? அந்த இயந்திரமே எவ்வளவோ பாக்கியம் செய்தது. ஓர் இயந்திரத்தைப் போல நல்லவனாக இருப்பதைவிடவும், ஒருவன் தன்னுடைய சுதந்திர மனப்பான்மையாலும் அறிவாலும் உந்தப்பட்டுத் தவறு செய்வதே மேல் என்பது என்னுடைய கருத்து.

மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும் பிரம்மச்சரியமும், வாழ்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன. 

எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் சொல்கிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடங்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.

மதம் தான் எல்லாவற்றிற்கும் உயிர்நாடி. சமய வாழ்க்கை சோறு போன்றது. மற்றவை எல்லாமே கறி, கூட்டுப் போன்றவை. கறி கூட்டுவகைகளை மட்டும் உண்பதனால் அஜீர்ணம் ஏற்படுகிறது. அப்படியே சோற்றை மட்டுமே சாப்பிட்டாலும் அஜீர்ணம் ஏற்படும்.

பிரம்மசரியத்தை உறுதியாக அனுஷ்டிக்கிற ஒரே ஒரு காரணத்தாலேயே, எல்லாவிதமான கல்வியறிவையும் மிகக் குறுகிய காலத்தில் கற்றுத் தேர்ச்சி பெற்று விட முடியும். அத்தகையவன் ஒரே ஒரு முறை, தான் கேட்டதையும் அறிவதையும் மறவாமல் நினைவில் வைத்துக்கொள்கிறான். இப்படிப்பட்ட பிரம்மசரியம் நம் நாட்டில் இல்லாமற் போனதனால் தான் எல்லாமே இன்று அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றன.

குருகுல முறையில் ஆசிரியனோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு பயிற்சிபெறுவதுதான் சிறந்த கல்வி முறை என்பது எனது கருத்து. ஆசிரியரின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக அமையாமல் எந்தவிதக் கல்வியையும் பெற முடியாது.

உங்கள் பல்கலைக் கழக்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவை இருந்து என்ன சாதித்திருக்கின்றன ?(-ஆம் ஆண்டில் சென்னைச் சொற்பொழிவு ஒன்றில் விவேகானந்தர் குறிப்பிட்டது.) சுயமாகச் சிந்திக்கும் உண்மையான மனிதன் ஒருவனையும் அவை உண்டாக்கியதாகத் தெரியவில்லை. அவை வெறும் தேர்வுகளை நடத்தும் நிறுவனங்களாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. பொது நலத்திற்காக நம்மைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற கருத்து நமது நாட்டில் இன்னும் வளராமலேயே இருக்கிறது.

பழைய சமுதாயமானாலும் புதிய சமுதாயமானாலும் உண்மை எதற்கும் தலை வணங்காது. சமுதாயம்தான் உண்மைக்குத் தலைவணங்க வேண்டும் அல்லது அழியவேண்டும். உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் சமுதாயங்களை உருவாக்க வேண்டும். சமுதாயத்திற்கு ஏற்றாற்போல் உண்மை தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளக் கூடாது.

எங்கு உயர்ந்த உண்மைகள் நடைமுறையில் இருக்கின்றனவோ, அந்தச் சமுதாயம் தான் சிறந்தது. இதுவே என்னுடைய கருத்து.

சமுதாயம் உயர்ந்த உண்மைகளுக்குத் தகுதி உடையதாக இல்லாவிட்டால், அதைத் தகுதி உடையதாகச் செய். எவ்வளவு விரைவில் இதைச் செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு நன்மை ஏற்படும்.

மக்களின் தளைகளை நீக்கி உன்னால் இயன்ற அளவுக்கு அவர்களை விடுதலை பெறச் செய். இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுவாய். அப்போது நீ ஒரு முக்தன் ஆவாய்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்;-
நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை.
பொறாமையும் சந்தேகமும் இல்லாமலிருத்தல்.
நல்லவர்களாக இருக்கவும் நன்மையைச் செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.

உன்னுடைய இலட்சியம் ஜடப்பொருள் என்றால் ஜடப் பொருளாகவே நீ ஆகிவிடுவாய். கவனித்துப் பார்.ஆன்மாவை அடைவதுதான் நம்முடைய இலட்சியம். அது ஒன்றே ஒன்றுதான் எப்போதும் இருந்து வருகிறது. ஆன்மாவைத் தவிர வேறொன்றும் இல்லை. அதைப்போலவே நாமும் என்றென்றும் வாழ்ந்திருப்போம்.

இந்து மதத்தைச் சேர்ந்தவன் குடிப்பதும் மத வாழ்க்கையை ஒட்டித்தான்; நடப்பதும் மத வாழ்க்கையை ஒட்டித்தான்; திருமணம் செய்துகொள்வதும் மத வாழ்கையை ஒட்டித்தான்; கொள்ளையடிப்பதும் மத வாழ்க்கையை ஒட்டித்தான்.

ஒவ்வொரு நாடும் உலகிற்கு ஆற்ற வேண்டிய பணி ஒன்று உண்டு. அந்தப் பணிக்குத் தீங்கு நேராத வகையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அந்த நாடு நிலைத்து வாழும். ஆனால் அந்த பணிக்கு அழிவு வந்தவுடனே அந்த நாடு சிதைந்துவிடுகிறது.

கற்பு நிலையிலிருந்து வழுவதுதான் ஒரு நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறி என்பதை வரலாற்றில் நீ பார்க்கவில்லையா? கற்புத் தவறுதல் என்ற கேடு சமுதாயத்தில் நுழையும் பொழுது அந்த இனத்திற்கு முடிவுக்காலம் நெருங்குவது தெளிவாகிவிடுகிறது.

இப்போது நாம் விலங்குகளைவிட அதிக அளவில் ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயத்தின் கட்டுப்பாடு என்னும் சாட்டையடிகளால்தான் நாம் அழுத்தி அடக்கி வைக்கப் பட்டிருக்கிறோம். இன்று சமூகம் ,நீ திருடினால் நான் உன்னை தண்டிக்கப் போவதில்லை என்று சொல்லிவிடுமானால், உடனே நாம் விரைந்து ஒருவர் மற்றொருவருடைய சொத்துக்களைப் பறிப்பதற்காகப் பாய்ந்து ஓடுவோம். போலீஸ்காரர்கள்தாம் நம்மை நல்ல ஒழுக்கம் உடையவர்களாக வைத்திருக்கிறார்கள். சமுதாயத்தின் பொது அபிப்பிராயம்தான் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக வைத்திருக்கிறது. உண்மையில் மிருகங்களைவிட நாம் சிறிதும் உயர்ந்தவர்களாக இல்லை.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,