என் வீர இளைஞர்களுக்கு,

நியூயார்க்
19.11.1894

என் வீர இளைஞர்களுக்கு, 


அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் - வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருப்பதுதான் மரணம். என் இளைஞர்களே, அன்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்லர். என் குழந்தைகளே! மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் - மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும்; ஏழை எளியவர்கள், பாமரர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் - மிகவும் மனம் உருக வேண்டும். மற்றவர்களின் நன்மையின் பொருட்டு உங்கள் இதயமே நின்று, மூளைக் குழம்பி, உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்ற நிலை வரும் வரையில் மற்றவர்களுக்காக நீங்கள் மனம் உருகுங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் ஆன்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும். 
முயற்சி செய்யுங்கள்! முயற்சி செய்யுங்கள்! - கடந்த பத்து ஆண்டுகளாக இதுதான் என் இலட்சியமாக இருந்து வந்தது. முயற்சி செய்யுங்கள்! - இதையே இப்போதும் நான் சொல்கிறேன். 

என்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தபோதும், முயற்சி செய்யுங்கள்! என்று கூறினேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும், முயற்சி செய்யுங்கள்! என்று அதையே நான் சொல்கிறேன். என் குழந்தைகளே! பயப்படாதீர்கள்! பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை, புகழலால் பயனில்லை, கல்வியால் பயனில்லை - அன்பு ஒன்றுதான் பயன் தருகிறது; ஒழுக்கம் ஒன்றுதான் துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து நம்மை முன்னேறச் செய்கிறது. சுதந்திரம் இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடைய முடியாது. நமது முன்னோர்கள் ஆன்மிகச் சிந்தனைக்குச் சுதந்திரம் அளித்தார்கள். அதனால் அற்புதமான ஒரு மதம் நமக்குக் கிடைத்தது. ஆனால் அதே சமயம், அவர்கள் சமுதாயத்தின் கால்களில் கனத்த சங்கிலியைக் கட்டி வைத்தனர். அதனால் இப்போது நமது சமுதாயம் - ஒரு வார்த்தையில் சொல்வதானால் - மிகவும் பயங்கரமாகவும், காட்டுமிராண்டித்தனமானதாகவும் இருக்கிறது. இதற்கு மாறாக, மேற்கு நாடுகளில் சமுதாயத்தில் மக்களுக்கு எப்போதும் சுதந்திரம் இருந்து வந்திருக்கிறது; அவர்களுடைய சமுதாயத்தைப் பாருங்கள்! அதற்கு மாறாக அவர்களின் மதத்தையும் பாருங்கள்!

வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம் தேவைப்படுவதுபோல் உணவு, உடை, திருமணம் முதலிய ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுக்குத் தீமை செய்யாத அளவில் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு உணவு தர வேண்டும், கல்வியைப் பரப்ப வேண்டும், சமுதாயத்தில் கொடுமைகளை அகற்ற வேண்டும். சமுதாயத்தில் கொடுமைகள் வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் இன்னும் அதிகமாக உணவு வேண்டும், இன்னும் அதிகமான வாய்ப்புகள் தர வேண்டும்! மற்றவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கத் தயாராக இல்லாதவனுக்கு, சுதந்திரம் பெறுவதற்குத் தகுதி கிடையாது. எல்லா அதிகாரங்களையும் ஆங்கிலேயர்கள் உங்களுக்கே தந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதனால் என்ன ஆகும்? அந்த அதிகாரம், சாதாரண மக்கள் அதைப் பெறாமல் இருப்பதற்குத்தான் பயன்படும். அடிமைகள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காகவே அதிகாரம் கேட்கிறார்கள். இந்தியாவில் இந்தியாவின் ஆன்மிகத்தைக் கொண்ட ஓர் ஐரோப்பிய சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியும், முடிய வேண்டும் என்பதுதான் என் நம்பிக்கை. எல்லோருக்கும் முக்தி உண்டு, எல்லோரும் சமம் என்று போதித்த பண்டைய ஆச்சாரியர்களான சங்கரர், இராமானுஜர், சைதன்யர் போன்றவர்களின் வழியில் சமுதாயத்தைப் புதுப்பிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடம் ஊக்கம் என்ற நெருப்பு பற்றி எரிய வேண்டும். பிறகு அதை எல்லா இடங்களிலும் பரப்புங்கள். வேலை செய்யுங்கள், வேலை செய்யுங்கள். மற்றவர்களை வழி நடத்திச் செல்லும்போது, நீ ஒரு வேலைக்காரன் போலவே நடந்துகொள். சுயநலம் இல்லாதவனாக இரு. உன்னுடைய நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதே! எல்லையற்ற பொறுமையுடன் இரு. அவ்விதம் நீ செய்தால் உனக்கு வெற்றி நிச்சயம். மற்றவர்களின் நன்மைக்காக வேலை செய்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம். போலித்தனம் என்பது இருக்கக் கூடாது, பொய் கூடாது, போக்கிரித்தனம் கூடாது - இதைத்தான் நான் விரும்புகிறான். நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன்; பெயரும் புகழும் தேடிக்கொள்வதற்காகவோ, ஏன் பொதுநன்மைக்காகவோகூட, நான் போலியாக வாழ்ந்தேன் என்ற கறைபடிந்த மனசாட்சியுடன் இறந்துபோக நான் விரும்பவில்லை. ஒழுக்கக்கேடு என்ற மூச்சுக்காற்றுகூட வீசக் கூடாது; செயல்முறையில் குற்றத்தின் நிழல்கூடப் படியக் கூடாது.
சலனபுத்தி வேண்டாம், இரகசிய வித்தை என்ற அயோக்கியத்தனம் வேண்டாம், இருட்டில் செய்யும் எதுவும் வேண்டாம். என் வீரக் குழந்தைகளே, முன்னேறுங்கள். பணம் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி - உங்களுடன் மனிதர்கள் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி - முன்னேறிச் செல்லுங்கள்! 

உங்களிடம் அன்பு இருக்கிறதா, இல்லையா? உங்களிடம் இறைவன் இருக்கிறாரா, இல்லையா? முன்னேறிச் செல்லுங்கள்! தொடர்ந்து முன்னேறுங்கள்! எதுவும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது! கவனமாக இருங்கள். உண்மைக்குப் புறம்பான எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையைவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள், நாம் வெற்றி பெறுவோம்; அது மெதுவாக இருக்கலாம், ஆனால் வெற்றி நிச்சயம். இந்தியாவின் எதிர்காலம் உங்களையே நம்பியிருக்கிறது. வேலை செய்துகொண்டே போங்கள்! 

ஆசீர்வாதங்கள்.
அன்புள்ள,
விவேகானந்த

Comments

Popular posts from this blog