இந்து சமயம் : உலகம் தழுவிய சமயம்!


இந்து சமயம் : உலகம் தழுவிய சமயம்!
2
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற சமயங்கள் மூன்று, அவை இந்து சமயம், சொராஸ்டிரிய சமயம், யூத சமயம் ஆகும். இவை பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதன் வாயிலாகத் தங்கள் உள்வலிமையை நிரூபிக்கின்றன. யூத சமயம் கிறிஸ்தவ சமயத்தை தன்னுடன் இணைத்து கொள்ள தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும், தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ சமயத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி யடிக்கப்பட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய சமயத்தை நினைவுபடுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைச் சமயங்கள் உண்டாயின. அவை வேதநெறியின் அடித்தளத்தை உலுக்கி விடுமோ என்று தோன்றியது. ஆனால் பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டடால், எப்படிக்கடல் சிறிது பின்னோக்கி சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்து கொள்கிறதோ, அதுபோல், எல்லா கிளைச் சமயங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்ச் சமயத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.

அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகள் எந்த வேதாந்தத்தின் எதிரொலிகள் போல் உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மிகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக்கதைகள் கொண்ட மிகச்சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துக்கள், பவுத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திகவாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கின்ற இவை அனைத்தும் ஒன்று சேரும் பொது மையம் எங்கே இருக்கிறது. ஒன்று சேரவே முடியாததுபோல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது. இந்த கேள்விக்கு தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.

அருள்வெளிப்பாடான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் சமயத்தை பெற்றுள்ளனர். வேதங்களுக்கு துவக்கமும், முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்கு துவக்கமும், முடிவும் இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்கு தோன்றும், ஆனால் வேதம் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால் வெவ் வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள், புவிஈர்ப்பு விதி அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது. மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறு தான்ஆன்மிகஉலகின் விதிகளும், ஓர் ஆன்மாவிற்கும், இன்னோர் ஆன்மாவிற்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும், அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மிக, நீதிநெறி உறவுகள், அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன., நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும். இந்த விதிகளை கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று நாங்கள் அவர்களை போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதை கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,