இந்திய ரிஷிகள்


இந்திய ரிஷிகள் (11 பிப்ரவரி 1897 அன்று விக்டோரியா ஹாலில் நிகழ்த்திய சொற்பொழிவு)
இந்திய ரிஷிகளைப்பற்றிப் பேச நினைக்கும் போது, என் மனம் வரலாறுகளில் எழுதப்படாத மரபுகள் அதன் ரகசியங்களை அறிய முயன்று முடியாமல் போய்விட்ட அந்த அடர்ந்த கடந்தகாலத்தைநோக்கிச் செல்கிறது . இந்தியாவின் ரிஷிகள் கணக்கற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ரிஷிகளைத் தோற்றுவிப்பதைக் தவிர இந்த நாடு வேறு எதைத்தான் செய்து கொண்டிருக்கிறது? எனவே நான் அவர்களுள், சகாப்தத்தை உருவாக்கிய மகத்தான சிலருடைய வாழ்க்கை வரலாற்றை உங்களிடம் கூற விரும்புகிறேன், சரியாகச் சொல்வதென்றால், நான் அறிந்தவற்றை உங்கள்முன் வைக்கிறேன்.

அதற்கு முதற்படியாக நாம் நமது சாஸ்திரங்களைப் பற்றிச் சிறிது அறிந்துகொள்ள வேண்டும். நம்முடைய சாஸ்திரங்களில் உண்மையின் இரண்டு விதமான கோட்பாடுகள் உள்ளன; ஒன்று, நிரந்தரமானது; மற்றொன்று, அவ்வளவு அதிகாரபூர்வமானதல்ல, என்றாலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகள், காலங்கள் மற்றும் இடங்களில் நம்மைக் கட்டுபாடுகள் ஆன்மாவின் இயல்பு கடவுளின் இயல்பு கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள உறவுகள் பற்றிக் கூறுகின்றன. இந்தக் கருத்துக்கள், நாம் சுருதிகள் என்று அழைக்கின்ற வேதங்களில் உள்ளன. அடுத்ததான கோட்பாடுகள் ஸ்மிருதிகள் என்று அழைக்கப்படுகின்றன. மனு, யாஜ்ஞவல்கியர் மற்றும் பலர் எழுதிய நூல்களிலும் புராணங்கள் மற்றும் தந்திரங்களிலும் இவை உள்ளன. இந்த ஸ்மிருதிகள் சுருதிகளுக்கு அடுத்த படியில் உள்ளவை. அவை சுருதிகளோடு ஏதாவது ஒருகருத்தில் மாறுபட்டால், சுருதிகளின் கருத்தைதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே நியதி. அதாவது மனிதனின்விதி, அவனது லட்சியம் போன்ற எல்லாமே வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றின் செயல்முறை விளக்கங்கள் ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும் உள்ளன.

சாதாரண வழிகாட்டுதலுக்கு வேதங்களே போதுமானவை. ஆன்மீக வாழ்வைப் பொறுத்தவரையில் அதில் உள்ளதைவிட அதிகமாகச் சொல்லவும் முடியாது, அதிகமாக அறிந்து கொள்ளவும் முடியாது. அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் அங்கே சொல்லப்பட்டுள்ளன. ஆன்மா நிறைநிலையை அடைவதற்குத் தேவையான உபதேசங்கள் அனைத்தும் சுருதிகளில் முழுமையாக உள்ளன. அவற்றின் விளக்கங்களைக் காலத்திற்குக்காலம் ஸ்மிருதிகள் தருகின்றன.

சுருதிகளில் உள்ள உண்மைகளைக் குறித்து வைத்த ரிஷிகளுள் பெரும்பாலானோர் ஆண்கள், சில பெண்களும் இருக்கிறார்கள்; இது சுருதியியன் மற்றொரு சிறப்புத்தன்மை. அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்பன போன்ற விவரங்கள் மிகக் குறைவாகவே நமக்குத் தெரியும். ஆனால் அவர்களுடைய மிகச் சிறந்த சிந்தனைகள், மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் நம் நாட்டின் புனித இலக்கியமான வேதங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன, மாறாக, ஸ்மிருதிகளில் தனிப்பட்டவர்களின் பல விவரங்கள் உள்ளன. அவற்றைப்ற படிக்கும்போது பிரமிக்க வைக்கின்ற, மகோன்னதமான, மனத்தில் பதிகின்ற, உலகையே அசைக்கவல்ல மணிதர்கள் நம் கண்முன் அப்படியே நிற்பது போலுள்ளது. சில இடங்களில் அவர்களது உபதேசங்களை விட அவர்களே நம் மனத்தில் விசுவரூபம் எடுத்து நிற்க்கின்றனர்.

நமது மதம் அருவ -உருவக் கடவுளைப் போதிக்கிறது - இது நாம் புரிந்துகொள்ள வேண்டியதொரு வினோதமாகும். உருவமற்ற ஒன்றைப் பற்றிய எண்ணற்ற விதிகளையும் அதே வேளையில் எண்ணற்ற உருவங்களையும் பற்றியும் போதிக்கிறது, ஆனால் நம் மதத்தின் அடிப்படை ஊற்று சுருதிகளிலேயே, வேதங்களிலேயே உள்ளது. அவை முழுக்கமுழுக்க நிர்க்குண நிலையைக் கூறுகின்றன. மகத்தான அவதார புருஷர்கள், தேவ தூதர்கள் போன்ற அனைவரும் ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும்தான் வருகிறார்கள்.

நமது மதத்தைத் தவிர, உலகத்தின் பிற மதங்கள் ஒவ்வொன்றும் அதை உருவாக்கிய ஒருவரது அல்லது சிலரது வாழ்க்கையையே நம்பியிருக்கின்றன. கிறிஸ்தவ மதம் ஏசுவின் வாழ்க்கையின் மீது கட்டப்பட்டுள்ளது; இஸ்லாம் முகமதுவின் வாழ்விலும், புத்த மதம் புத்தரின் வாழ்வின்மீதும், சமண மதம் ஜீனர்களின் வாழ்க்கைமீதும் கட்டப்பட்டுள்ளது. இப்படியே எல்லா மதங்களும், இந்த மாமனிதர்களுக்கான வரலாற்று ஆதாரங்கள் என்று அவர்கள் கூறிக்கொள்கின்ற கூற்றுக்களை ஒட்டி, இந்த மதங்களுக்குள் வேண்டிய அளவு சண்டைசச்சரவுகள் நிலவவே செய்யும்; அது எதிர்பார்க்கக் கூடியதுதான். என்றாவது இந்த மனிதர்கள் வாழ்ந்தற்கான வரலாற்று ஆதாரங்கள்ஆட்டம் காணுமானால், அந்த மதங்களும் வீழ்ந்து தூள்தூளாகிவிடும்.

இத்தகையதொரு விதியிலிருந்து நாம் தப்பித்துக் கொண்டோம். ஏனெனில் நமது மதம் மனிதர்களை அல்லாமல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது,நாம் நமது மதத்திற்குக் கட்டுப்படுகிறோம் என்றால் அதன் காரணம், அது ஒரு மகானின் அதிகாரத்திலிருந்து வந்தது என்பதனால் அல்ல, ஏன் ஓர் அவதார புருஷரின் அதிகாரத்திலிருந்து வந்தது என்பதால்கூட அல்ல. ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களுக்கு அதிகாரி அல்ல வேதங்களே ஸ்ரீகிருஷ்ணருக்கு அதிகாரி. என்றென்றைக்கும் நிலைத்திருப்பவையான வேதங்களின் மகத்தான பிரச்சாரகர் என்பதே ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை. இதே நிலைதான் மற்ற அவதாரங்களுக்கும், மற்ற நமது ரிஷிகளுக்கும்.

நமது முதல் கோட்பாடு, மனிதன் நிறைநிலையை அடைவதற்கும் முக்தி பெறுவதற்கும் தேவையான அனைத்தும் வேதங்களில் உள்ளன என்பதாகும். புதிதாக நீங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியாது. எல்லா அறிவுக்கும் லட்சியமானதொரு முழு ஒருமைக்கு அப்பால் உங்களால் போக முடியாது. வேதங்களில் அந்த ஒருமை ஏற்கனவே அடையப்பட்டுவிட்டது. அந்த ஒருமையைக் கடந்து செல்வது என்பது முடியாத காரியம். தத் த்வம் அஸி(நீ அதுவாக இருக்கிறாய்) என்பது எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதே மத அறிவு முழுமை பெற்று விட்டது, இது வேதங்களில் தான் உள்ளது.காலம், இடம் பல்வேறான சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மக்களுக்கு அவ்வப்போது வழிகாட்ட வேண்டியது மட்டுமே எஞ்சியிருந்தது. பழைய அதே புராதன வழியில் மக்களை வழிகாட்டிச் செல்ல வேண்டியிருந்தது. அதற்காகவே இந்த மகத்தான ஆச்சாரியர்களும் மாபெரும் ரிஷிகளும் வந்தார்கள், ஸ்ரீகிருஷ்ணரின் அந்தப் பிரபலமான சொற்கள் இதைத் தெளிவாக விளக்குகின்றன; எப்போதெல்லாம், தர்மத்தைக் காப்பதற்காக என்னை நானே படைத்துக் கொள்கிறேன், எல்லா ஒழுக்கக் கேடுகளையும் ஒழிப்பதற்காக அவ்வப்போது நான் வருகிறேன். இதுதான் இந்தியக் கருத்து.

தொடர்வது என்ன? ஒருபுறம், எந்தக் காரணத்தையும் சாராமல், அதைவிடக் குறைவாக, எவ்வளவுதான் மகத்தானவர்களாக இருந்தாலும் எந்த ரிஷிகளையோ, எவ்வளவு அறிவுத்திறம் மிக்கவர்களாக இருந்தாலும் எந்த அவதார புருஷர்களையோகூட அதிகாரத்திற்காக நம்பி இருக்காமல், தன் சொந்த அடித்தளத்தின் மீது நிலைத்து நிற்கின்ற நிரந்தர உண்மைகள் உள்ளன. இது இந்தியாவில் ஒரு தனிப்பெரும் நிலை என்று நாம் துணிந்து கூற முடியும். நாம் உறுதியாகச் சொல்வதெல்லாம், வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதம் அது ஒன்றே என்பதுதான். ஏனெனில் அது தனி மனிதர்களை அல்ல, உண்மைகளையே போதிக்கிறது. தனி மனிதன் மீது எழுப்பப்பட்ட மதம் எதுவாக இருந்தாலும் அது மனிதகுலம் முழுமைக்குமான ஒரு மதமாக இருக்க முடியாது, நம் சொந்த நாட்டிலேயே எத்தனையோ மாமனிதர்களைக் காண்கிறோம். ஒரு சிறிய நகரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். பல்வேறு மக்கள் தங்கள் மன அமைப்பிற்கு ஏற்ப பலரைத் தலைவராகக் கொண்டாடுவதைக் காணலாம். அப்படியிருக்க முகமது ஆகட்டு, புத்தர் ஆகட்டு, ஏசு ஆகட்டும்- ஒரு மனிதரை உலகம் முழுவதற்கும் மாதிரி மனிதராக எப்படிஏற்றுக்கொள்ள? அந்த ஒருவரிடமிருந்து, ஒரு மனிதரிடமிருந்து மட்டும் வந்தால் தான் நல்லொழுக்க நியதி, நீதிநெறி, ஆன்மீகம், மதம் எல்லாம் உண்மையாக இருக்கஇயலும் என்று எப்படிக் கொள்ள முடியும்? வேதாந்த மதத்திற்கும் இத்தகைய தனிப்பட்ட மனிதர்களின் அத்தாட்சி தேவையில்லை; மனிதனின் அழியா இயல்பே அதன் அத்தாட்சி, அவனதுநிலையான ஆன்மீக ஒருமையை அடிப்படையாகக் கொண்டதே அதன் நீதிநெறி, அவை ஏற்கனவே இருப்பவை, ஏற்கனவே அடையப்பட்டவை.

இனிமறுபுறம், மக்களுள் மிகப் பெரும் பாலோருக்கு ஒரு லட்சிய மனிதன் தேவை என்பதை அன்றே நம் மகான்கள் உணர்ந்திருந்தனர். அவர்களுக்கு ஏதாவது ஓர் உருவக் கடவுள் கண்டிப்பாக வேண்டும். உருவமற்ற கடவுளை எதிர்த்து முழக்கம் செய்த அதே புத்தர் மறைந்து ஐம்பதுஆண்டுகளுக்குள், அவரது சீடர்கள் அவரையே ஒரு கடவுளாக ஆக்கிவிட்டார்கள், உருவக்கடவுள் அவசியம். ஆனால் உருவக் கடவுள்களை வழிபடுவதற்குப் பதிலாக, ஏன், அதைவிடச் சிறப்பான ஒன்று, இந்த உலகத்தில் அவ்வப்போது தோன்றி நம்மிடையே உலவுகின்ற நடமாடும் தெய்வங்களை வழிபடுவது. ஏனெனில் வீண் கற்பனைகளான இந்த உருவக் கடவுளருள் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பேரும் வழிபடத் தகுதியற்றவர்களே. ஆனால் எந்த கற்பனைக் கடவுளையும் விட, நமது கற்பனைப் படைப்புகளைவிட, அதாவது, நம்மால் கற்பனையில் உருவாக்க முடிந்த எந்தக் கருத்தையும்விட இந்த நடமாடும் தெய்வங்கள் வழிபடத் தகுந்தவர்கள். நீங்களோ நானோ கற்பனையில் உருவாக்க முடிகின்ற எந்தக் கருத்தையும்விட ஸ்ரீகிருஷ்ணர் மகத்தானவர். நீங்களோ நானோ சிந்தித்து உருவாக்க முடிகின்ற எந்த லட்சியத்தையும் விட புத்தர் என்பது மிகவுயர்ந்த, உயிர்த்துடிப்பு மிக்க, நிதரிசனமானதொரு கருத்து. எனவே கற்பனைக் கடவுள்களை விலக்கி வைத்து விட்டுக்கூட, மனித குலம் அவர்களைப் போற்றி வழிபடுகிறது.

இதை நமது ரிஷிகள் அறிந்திருந்தார்கள். எனவே இந்த மாமனிதர்களையும் அவதார புருஷர்களையும் இந்தியர்கள் அனைவரும் வழிபட அவர்கள் அனுமதித்திருந்தார். அவதாரங்களுள் மிகச் சிறந்தவராகிய ஸ்ரீகிருஷ்ணர் இன்னும் ஒருபடி மேலேசெல்கிறார்; எந்த மனிதனிடமாவது அசாதாரணமான ஆன்மீக சக்தி வெளிப்படுமானால், நான் அங்கே இருக்கிறேன் என்பதை அறிந்துகொள். என்னிடமிருந்தே அந்தச் சக்தி வெளிப்படுகிறது; என்கிறார் அவர். உலகம் முழுவதிலும் உள்ள அவதார புருஷர்களையும் இந்துக்கள் வணங்குவதற்கான கதவை இந்தக் கருத்து திறந்துவிடுகிறது. 

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,