மக்களின் தொண்டே மகேசன் தொண்டு

ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு, அந்தக் காரியத்தைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும்.இது என்னுடைய வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும்...... இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில், வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான். நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்தால் உலகிற்கு நன்மை செய்வதாகத் தோன்றும். ஆனால் உலகிற்கு நன்மை செய்வதனால் உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்து கொள்கிறோம்.

உயர்ந்தபீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக்கொண்டு ஏ பிச்சைக்காரா! இதை வங்கிக்கொள் என்று நீ சொல்லாதே. மாறாக அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்து கொள்ள முடிந்ததை நினைத்து, அந்த ஏழை அங்கு இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு கொடுப்பவன் தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் உன்னை வந்தடையும்.

சமநிலையிலிருந்து பிறழாதவன், சாந்தமானவன், நன்மையை ஆராய்ந்து ஏற்பவன், அமைதி படைத்தவன், இரக்கமும், அன்பும் பெரிதும் உள்ளவன் - இத்தகையவன் நல்ல பணிகளில் ஈடுபடுகிறான். அதன் மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக்கொள்கிறான்.

ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடிப்பதற்கு நீண்ட கால இடையறாத முயற்சி பெரிதும் தேவைப்படுகிறது. இத்தகைய முயற்சியில் ஒரு சிலர் தோல்வியுற்றாலும் அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இவ்விதம் பலர் வீழ்ச்சியுறுவதும், துன்பங்கள் நேருவதும் பெருமளவில் கஷ்டங்கள் உண்டாவதும் இயல்பே ஆகும். மனிதன் தனது சுயநலத்தையும் மற்றுமுள்ள எல்லாப் பேய்களையும் ஆன்மிக ஞானம் என்ற நெருப்பைக் கொண்டு தன்னிடமிருந்து விரட்ட முயற்சி செய்யும் போது அவை அந்த முயற்சியை எதிர்த்துப் போராடுகின்றன.

தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்துகொள்கிறோம்.

கர்மயோகத்தின் விதியின்படி, ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரிய பலனை விளைவித்து முடிக்கும் 
வரையிலும் அழிக்க முடியாது. கருமம் தனக்கு உரிய பலனை விளைவிப்பதை இயற்கையிலுள்ள எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது , நான் ஒரு தீய செயலைச்செய்தால், அதற்கு உரிய துன்பத்தை நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்கு உரிய துன்பத்தை நான் அனுபவித்தே ஆக வேண்டும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத்தடுக்கவும் முடியாது. நிறுத்தி வைக்கவும் முடியாது. அதே போல நான் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் அது தனக்கு உரிய நல்ல பலனை விளைவிப்பதைப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.

நான் அல்லேன் நீயே என்னும் இந்த மனப்பான்மைதான் எல்லா நன்மைகளுக்கும் எல்லாச் சிறந்த ஒழுக்கங்களுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. இருப்பது சொர்க்கமா நரகமா என்று யார் இங்கே கவலைப்படுகிறார்கள்? மாறாத ஒன்று இருக்கிறதா இல்லையா என்று யார் கவலப்படுகிறார்கள் ? இதோ இங்குள்ள உலகில் துன்பம் நிறைந்திருக்கிறது. புத்தர்பெருமான் செய்ததைப் போல, இந்தத் துன்பத்தைக் குறைப்பதற்கு முயற்சிசெய். அல்லது அந்த முயற்சியிலேயே உயிரை விட்டு விடு.

நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி; அல்லது நாத்திகளனாக இருந்தாலும், ஆக்ஞேயவாதியாக இருந்தாலும் அல்லது வேதாந்தியாக இருந்தாலும் சரி கிறிஸ்தவனாக இருந்தாலும் சரி, இஸ்லாமியனாக இருந்தாலும் சரி, உன்னுடைய சுக துக்கங்களை மறந்து நீ வேலை செய். இதுதான் நீ இப்போது கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடமாகும்.

கடவுளைக் குறித்து உங்களுடைய பலவிதமான கருத்துக்களைப் பொருட்படுத்த நான் தயாராக இல்லை. ஆத்மாவைக் குறித்த நுட்பமான பல விதச் சித்தாந்தங்களை எல்லாம் விவாதித்துக் கொண்டிருப்பதனால் என்ன நன்மை ஏற்படப்போகிறது? நன்மையைச் செய்யுங்கள் ; அதோடு நல்லவராகவும் இருங்கள். இது உங்களை முக்திக்கு அழைத்து செல்லும் என்று தீர்க்க தரிசிகளிலேயே புத்தர் ஒருவர் மட்டும் தான் கூறினார். 

எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல் பணம் புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன்தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும்போது அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான். உலகத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வகையில் வேலை செய்யும் சக்தி அத்தகையவனிடமிருந்து வெளிப்படுகிறது.

நம்மைப் பற்றியே முதலில் நினைத்துக் கொள்ளும் சுயநலம்தான் மிகப் பெரிய பாவமாகும். நான்தான் முதலில் சாப்பிடுவேன் நான்தான் மற்றவர்களைவிட அதிகச் செல்வம் பெற்றவனாக இருப்போன், எல்லாவற்றையும் நானே வைத்திருக்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு முன்பு நான்தான் சொர்க்கம் போவேன், மற்றவர்களுக்குக் கிடைப்பதற்கு முன்பு நான் முக்தியை அடைவேன் என்றும் நினைப்பவன்தான் சுயநலவாதி ஆவான். 

நான்தான் கடைசி ஆளாக இருப்போன் சொர்க்கத்திற்குப் போவதை பற்றியும் நான் பொருட்படுத்தவில்லை. நரகத்திற்குச் செல்வதன் மூலமாக என்னுடைய சகோதரர்களுக்கு என்னால் உதவி செய்ய முடியுமானால், நரகத்திற்குச் செல்லவும் நான் தயாராக இருக்கிறேன் என்று சுயநலம் இல்லாதவன் சொல்கிறான். 

இத்தகைய தன்னலமற்ற மனப்பான்மைதான் ஆன்மிக வாழ்க்கை இருப்பதற்கு இல்லாதிருப்பதற்கும் உரிய சோதனையாகும். இவ்விதச் சுயநலமற்ற தன்மையைப் பெருமளவில் பெற்றிருப்பவன் பெருமளவிற்கு ஆன்மிக வாழ்க்கையைப் பெற்றவனாகிறான். அவனே மற்றவர்களைக் காட்டிலும் சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். 

உனன்னால் ஒருவனுக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவைதான் செய்ய முடியும். கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டுசெய். உனக்கு அப்படித் தொண்டுசெய்யும் பாக்கியம் இருந்தால், அவர்களுக்கு தொண்டு செய்வதன் மூலம் ஆன்டவவுனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய்.

தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய். ஆனால் அது காரணமாக உன்னைப்பற்றி நீ மிகவும் பெமை யாக நினைத்துக் கொள்ளாதே. மற்றவர்களுக்குக் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு உனக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் நீ பாக்கியசாலி ஆகிறாய். எனவே நீ செய்யும் இந்தச் சேவையைக் கடவுள் வழிபாடாகவே செய்.

ஆன்டவனுக்கு உதவுவதற்காக என்று இல்லாமல் அவருக்காகப் பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் ஆவோம். உதவி என்ற சொல்லை உனது உள்ளத்திலிருந்தே விலக்கிவிடு. நீ உதவி செய்ய முடியாது. அப்படி நீ நினைப்பதுதான் தெய்வ நிந்தனையாகும். அவருடைய விருப்பத்தினால் தான் நீ இங்கு இருக்கிறாய். நீ அவருக்கு உதவி செய்வதாகவா சொல்கிறாய்? இல்லை உன்னால் அவரை வழிபடத்தான் முடியும். நீ ஒரு நாய்க்கு ஒரு பிடி சோறு கொடுக்கும்போது, அந்த நாயைக் கடவுளாகவே பாவித்து வழிபடு. அந்த நாயினுள்ளே கடவுள் இருக்கிறார்;அவரே எல்லாமுமாய் இருக்கிறார்; எல்லாவற்றிலும் இருக்கிறார். 

கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை - இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்துகொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.

உலகமாகிய இந்த நரகத்தில் ஒருவனால் ஒரே ஒரு நாளைக்காகிலும் ஒரே ஒருவனுடைய இதயத்திற்குச் சிறிது இன்பமும் மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால்,அந்த ஒன்றே ஒன்று மட்டும்தான் உண்மையாகும். இந்த உண்மையை வாழ்நாளெல்லாம் பட்ட கஷ்டங்களுக்குப் பிறகு நான் உணர்ந்து கொண்டேன். மற்றவை எல்லாம் பொருளற்ற வெறும் பகற்கனவுகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

துன்பம் விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்தக் கருத்தைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல நான் தெளிவாகப் பார்க்கிறேன். உலகிற்கு யார் ஒளிதரப் போகிறார்கள்? பண்டைக் காலத்தில் தியாகம்தான் வாழ்க்கைக்கு உரிய விதியாக இருந்தது. இனி வரப்போகும் பல கோடி நூற்றாண்டுகளுக்கும் இந்த விதி அப்படியேதான் இருக்கப்போகிறது. பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும் என்றென்றும் நிலைத்த மாறாத அன்பும் கருணையும் பொருந்திய பல நூறு புத்தபிரான்கள் இப்போது தேவைப்படுகிறார்கள்.

தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதில் நமது சக்தியைச் சிதறவிடாமல் அமைதியுடனும் ஆண்மையுடனும் ஆக்கபூர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தக் சக்தியாலும் முடியாது. இந்தக்கருத்தை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். கடந்த காலம் மிகவும் பெருமைக்கு உரியதாக இருந்தது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையப்போகிறது என்பதை நான் முழுமனதுடன் நம்புகிறேன். 

மோகமாகிய முதலையின் வாயில் மக்கள் எப்படிச் பரிதாபமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார் அந்தோ! இதயத்தைப் பிளக்கக் கூடிய அவர்களின் சோகக் குரலைக் கேளுங்கள்.முன்னேறிச் செல்லுங்கள் ! கட்டுண்டு கிடக்கும் மக்களைப் பந்த பாசங்களிலிருந்து விடுவிப்பதற்காகவும் எளியவர்களின் துன்பச் சுமையைக் குறைப்பதற்காகவும், அறியாமையில் மூழ்கியிருக்கும் இருண்டகிணறுகள் போன்ற உள்ளங்களை ஒளிப்பெறச் செய்வதற்காகவும், ஏ வீரர்களே முன்னேறிச் செல்லுங்கள் ! அஞ்சாதே! அஞ்சாதே! என்று வேதாந்த முரசு முழங்கிக் கொண்டிருப்பதைக் கேளுங்கள்.

நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, மற்றவர்கள் தங்கள் தெய்விக இயல்பை வெளிப்படுத்தும்படி செய்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவி செய்வதுதான்.

இயல்பாகவே இயற்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்குமானால், அப்போதுங்கூட அனைவருக்கும் சமமான வாய்ப்பு வசதிகள் இருக்கத்தான் வேண்டும் அல்லது ஒரு சிலருக்கு அதிகமாகவும், மற்றும் சிலருக்கு அதிகமாகவும் மற்றும் சிலருக்குக் குறைவாகவும்தான் வாய்ப்பு வசதிகள் அமைந்திருக்கும் என்றால், வலிமையுள்ளவர்களுக்குக்குத் தருவதைவிட, பலவீனமானவர்களுக்குத் தான் அதிக அளவில் வாய்புக்கள் தரப்பட வேண்டும். இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால்,சண்டாளன் ஒருவனுக்குத் தேவையான அளவிற்குப் பிராம்மணன் ஒருவனுக்குக் கல்வி தேவையில்லை. பிரம்மணனுடைய மகனுக்கு ஓர் ஆசிரியர் தேவைப்பட்டால், சண்டாளனுடைய மகனுக்குப் பத்து ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்.யார் ஒருவனுக்குப் பிறவியிலேயே இயற்கை கூரிய அறிவாற்றலைத் தரவில்லையோ அத்தகையவனுக்குத்தான் பெருமளவிற்கு உதவிகள் கொடுக்கப்பட வேண்டும். திறமையுள்ளவனுக்கே மீண்டும் உதவி செய்பவன், கொல்லன் வீதியில் ஊசியை விற்கும் பைத்தியக்காரனைப் போன்றவன். ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே
உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவ பெருமானைக் வழிபடுகிறான் சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. 


கடவுளிடம் நம்பிக்கையில்லாதவன், தத்துவ தர்சனங்கள் இல்லாதவன் மதப் பிரிவு எதிலும் சேராதவன் எந்த ஒரு கிறிஸ்தவக் கோயிலுக்கும் இந்து கோயிலுக்கும் செல்லாதவன், இலௌகிகப் பற்றிலேயே தோய்ந்து போனவன் என்று இப்படியெல்லாம் ஒருவன் இருந்தாலுங்கூட, அவனும் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதைப் புத்தர் பெருமானுடைய வரலாறு காட்டுகிறது. ஒரு யாகத்தில் விலங்குகளைப் பலியிடுவதைத் தடுக்க நிறுத்துவதற்காகத் தமது உயிரை வழங்கவும் அவர் ஒருவர் தாம் எப்போதும் தயாராக இருந்தார். நீ சொர்க்கம் போவதற்கு ஓர் ஆட்டுக் குட்டியைப் பலியிடுவது உதவி செய்யுமென்றால் ஒரு மனிதனைப் பலியிடுவது அதைவிடவும் அதிகமாக உனக்கு உதவி செய்யும், எனவே என்னை நீ பலியிடு என்று ஒரு முறை ஓர் அரசனிடம் அவர் கூறினார். அதைக்கேட்ட அந்த அரசன் வியப்படைந்து போனான்.

நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள். மற்றவர்களுடைய நன்மைக்காக அறிஞன் தன்னைத் தானே தியாகம் செய்துவிட வேண்டும் உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாகத்தான் என்னுடைய நன்மையை நான் பெற முடியும். இதைத் தவிர வேறு ஒரு வழியுமில்லை.

கிராமம் கிராமமாகச் சென்று மனிதகுலத்திற்கும் பரந்த இந்த உலகத்திற்கும் நன்மை செய். மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கும் செல்ல வேண்டும் மரணம் வருவது இவ்வளவு உறுதியாக இருக்கும்போது நல்ல ஒரு காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.

பெரியவர்கள் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள் அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்து விட விரும்பினால் அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதில்லை. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்துவிட விரும்புகிறாயா? அப்படி நீ செய்தால் கடவுளாகவே நீ ஆகிவிடுவாய். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்.

இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து நீ தப்பி ஓட முயற்சி செய்யாதே. வெற்றியா தோல்வியா என்று நீ கவனித்துக் கொண்டிருக்காதே. பரிபூரணமான தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு. வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ள மனம், உறுதியுடன் தானாகவே இணைந்து, விடாமுயற்சி செய்கிறது என்பதை உணர்ந்துகொள் வாழ்க்கை என்னும் போர்க்களத்தின் நடுவில் வாழ்ந்து வா. ஒரு குகையில் இருக்கும் போதும் சரி, அல்லது தூங்கும் போது சரி, யார் வேண்டுமானாலும் அமைதியாக இருக்க முடியும். மும்முரமான வேலை என்னும் சுழலில் நின்றபடி உனது குறிக்கோளாகிய ஆத்மனை நீ அடைய வேண்டும். ஆத்மனை நீ கண்டுபிடித்து விட்டால் எதுவுமே உன்னை அசைக்க முடியாது.

புனிதமான வாழ்க்கையின் விளைவாக எழும் உற்சாகத்தினால் எழுச்சி அடைந்தவர்கள்; கடவுளிடம் அழியாத நம்பிக்கை என்பதை அரணாகப் பெற்றவர்கள்; ஏழை எளியவர்களிடமும் தாழ்ந்தவர்களிடமும் ஒடுக்கப் பட்டவர்களிடமும் கொண்ட இரக்கம் காரணமாகச் சிங்கத்தைப் போன்ற தைரியம் அடைந்தவர்கள் - இத்தகைய ஆண்களும் பெண்களும் நூறாயிரம் பேர் வேண்டும். இவர்கள் மோட்சம், பரோபகாரம் தாழ்ந்தவர்களின் முன்னேற்றம், சமூக சமத்துவம் ஆகிய இந்த உயர்ந்த கொள்கைகளைப் பிராசாரம் செய்தபடி இந்த நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைவரை செல்வார்கள்.

என் மகனே! உனக்கு எனது சொற்களின் பேரில் ஏதாவது மரியாதை இருக்குமானால், முதலாவதாக உன்னுடைய அறையின் எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து விடு. இதுவே நான் உனக்குத் தரும் முதல் அறிவுரையாகும். கீழ்நோக்கிச் சென்றபடியும் துன்பத்தில் மூழ்கியபடியும் ஏராளமான ஏழை மக்கள் நீ வாழும் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.நீ அவர்களை அணுகிச் சென்று உன்னுடைய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் செலுத்தி அவர்களுக்கு தொண்டு செய். நோய்வாய்பட்டவர்களுக்குத் தேவையான மருந்து வகைகளை வழங்க ஏற்பாடு செய். உன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்தி அந்த நோயளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்குக் கல்வியறிவைப் புகட்டு. என் மகனே ! நான் உனக்குச் சொல்கிறேன் - இந்த முறையில் உன்னுடைய சகோதரர்களாகிய மக்களுக்கு நீ தொண்டு செய்ய ஆரம்பிப்பாயானால், நிச்சயமாக உனக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும். 

அந்தநாளில் நிலவிய தொண்டு மனப்பான்மை, கீழ்படிதல், தன்னடக்கம் ஆகிய வீரனுக்கு உரிய பண்புகள் இன்று எங்கே போய்விட்டன? போருக்குச் செல்லும் வீரன் தன்னைத் தியாகம் செய்து கொள்கிறானேயன்றி, தனது நலத்தைக் கருதுவதில்லை. ஒருவன் மற்றவர்களுடைய இதயங்களின் மீதும் வாழ்க்கையின் மீதும் ஆணை செலுத்த வேண்டுமானால், முதலில் கட்டளைக்கு உட்பட்டு முன்னேறிச் சென்று தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும்.

அச்சமே மரணம். அச்சத்திற்கப்பால் நீ போக வேண்டும். இன்று முதல் அச்சம் அற்றவனாக இரு. நீ மோட்சம் பெறும்பொருட்டும் பிறருடைய நலத்துக்காகவும் உயிரைக் கொடுக்கச் சித்தமாக இரு எலும்பும் சதையும் பொருந்திய இந்தச் சுமையைச் சமந்துகொண்டு திரிவதனால் என்ன பயன்?

பணம் படைத்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டாம். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைவிட செத்துப்போனவர்கவே அவர்கள் இருக்கிறார்கள். பணிவும் தாழ்மையும் கொண்டு, அதே சமயத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய உங்களிடம்தான் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 

கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால் ஆகப்போவதும் ஒன்றுமில்லை. துன்பத்தால் வாடுகிறவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். பிறகு உதவிக்காகக் கடவுளை நோக்குங்கள். உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயமாக வந்தேதீரும்.

.......குளிராலோ பசியாலோ இந்த நாட்டிலேயே(அமெரிக்காவில்) நான் அழிந்து போக நேரலாம். ஆனால் இளைஞர்களே! ஏழைகள் , அறியாமைமிக்கவர்கள் நசுக்கப்பட்டவர்கள் ஆகியோருடைய நலனுக்காகப் போராடும் என்னுடைய இரக்கம், முயற்சி ஆகியவற்றை உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன். நாள்தோறும் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்த முப்பது கோடி மக்களின் நல்வாழ்வை மீட்டுத் தருவதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதாகச் சபதம் மேற்கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கையே வடிவெடுத்த நிறைந்த தூய்மையே வடிவெடுத்த ஆறு மனிதர்கள் ஆற்றிய பணிதான் இந்த உலகத்தின் வரலாறாகத் திகற்கிறது. இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைககள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை. வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக் கொள். முதலில் உலக மக்களின் துன்பங்களைக் குறித்து நீ வருந்து.... வெறுப்பு உணர்ச்சியாலோ, பொறாமையாலோ, உன்னுடைய மனம் அலைக்கழிக்கப்படாமல் இருக்கிறதா என்று உன்னையே நீ கேட்டுக் கொள்.உலகின் மீது வெறுப்புணர்ச்சி, கோபம் ஆகியவை அடுக்கடுக்காகச் சுமத்தப்பட்டுவுருகின்றன. அது காரணமாக நல்ல காரியங்கள் தொடர்ந்து பலகாலமாக நிறைவேற்றப்படாமற் போயிருக்கின்றன. மாறாத தீமையே விளைவிக்கப்பட்டிருக்கிறது. நீ தூய்மை உள்ளவனாக இருந்தால், வலிமை உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்.

மற்றவர்களுடைய நன்மைக்காக என்னுடைய இந்த வாழ்க்கை அழிந்து போகிற அந்த நாளும் வருமா? இந்த உலகம் வெறும் குழந்தை விளையாட்டு அல்ல. மற்றவர்களின் நன்மைக்காகத் தங்களுடைய இதயத்தின் இரத்தத்தைச் சிந்தி பாதை அமைப்பவர்கள்தாம் பெரியோர்கள் ஆவார்கள். ஒருவர் தமது உடலைத் தந்து பாலம் ஒன்றை அமைக்கிறார். அந்த பாலத்தின் உதவியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த ஆற்றைக் கடந்துவிடுகிறார்கள். இப்படி நீண்ட நெடுங்காலமாக நடந்து கொண்டு வந்திருக்கிறது. இந்த முறை அப்படியே இருக்கட்டும் அப்படியே இன்றைக்கும் இருக்கட்டும்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,