பிற மதங்களுக்குப் போய்விட்ட நம் மக்களைக் குறித்து நாம் இப்போது அழுகிறோம்

இப்பொழுது நான் சில கடினமான வார்த்தைக்களைச் சொல்லியாக வேண்டியுள்ளது. நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.ஐரோப்பியர்களின் உலகியல் நம்மை ஏறக்குறைய முழ்கடித்துவிட்டது என்று சற்றுமுன் குற்றம் சாட்டினார்கள்.தவறு ஐரோப்பியர்களுடையது மட்டுமல்ல பெரும் பங்கு நம்முடையதே. வேதாந்திகள் என்ற நிலையில் நாம் எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், அதன் உள்நோக்கத்தை, அடிப்படைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். வேதாந்திகள் என்ற நிலையில் நம்மை நாமே காயப்படுத்திக் கொண்டாலன்றி, பிரபஞ்சத்தில் உள்ள எந்தச் சக்தியும் நம்மைக் காயப்படுத்த முடியாது என்பது உறுதியாக நமக்குத் தெரியும். இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினார் முகமதியர்களாகி விட்டனர். அது போலவே அதற்க்கு முன்னால் மூன்றில் இரண்டு பங்கினர் பௌத்தர்களாகியுள்ளனர். இப்பொழுது ஐந்தில் ஒரு பங்கினர் முகமதியர்கள், ஒரு லட்சத்திற்கு மேல் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

இது யாருடைய தவறால் விளைந்தது? நம்முடைய வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர் மறக்க முடியாத மொழியில் கேட்கிறார்; நிரந்தர வாழ்க்கையாகிய நீரூற்று, அருகிலேயே பொங்கிப் பெருகிச் செல்லும்போது, இந்த ஏழை அப்பாவி பசியாலும் தாகத்தாலும் ஏன் செத்து மடிய வேண்டும் ? சொந்த மதத்தையே உதறிச் செல்பவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என்பதுதான் கேள்வி. அவர்கள் ஏன் முகமதியர்கள் ஆனார்கள்?


பிற மதங்களுக்குப் போய்விட்ட நம் மக்களைக் குறித்து நாம் இப்போது அழுகிறோம். ஆனால் அவர்கள் மதம் மாறுவதற்கு முன் அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்? நாம் ஒவ்வொருவரும் நம்மையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். நாம் என்ன கற்றுக்கொண்டோம்? சத்திய ஜோதியை நாம் ஏந்தியுள்ளோமா? ஏந்தியுள்ளோம் என்றால், எவ்வளவு தொலைவு அதை எடுத்துச் சென்றோம்? இந்தக் கேள்வியை நாம் நம்மிடம் கேட்டே தீர வேண்டும். நாம் அப்போது அவர்களுக்கு உதவவில்லை. இது நாம் செய்த தவறு நாம் செய்த வினை. எனவே இதற்காக யார்மீதும் பழி போட வேண்டாம். நம் சொந்த வினையையே குறை கூறிக் கொள்வோம் ! நீங்கள் அனுமதிக்காமல் உலகாயதமோ, முகமதியமோ, கிறிஸ்தவமோ அல்லது வேறு எதுவுமோ உங்களை வெல்ல முடியாது.

நமது வழிமுறைகளை மாற்றிக்கொள்வதற்க்கு இன்னும் அவகாசம் உள்ளது. முட்டாள்தனமான அந்தப் பழைய விவாதங்களையும், பொருளற்றவற்றைப் பற்றிய பழைய சண்டைகளையும் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். கடந்த அறுநூறு எழுநூறு ஆண்டுகளாக நாம் எவ்வளவு இழிநிலையை அடைந்துள்ளளோம் என்பதை எண்ணிப் பாருங்கள்.


நாம் வேதாந்திகள் அல்ல, நம்மில் பெரும்பாலோர் பௌராணிகர்களும் அல்ல தாந்திரிகர்களும் அல்ல; நாம் எல்லாம் வெறும் தீண்டாதே, தீண்டாதே என்ற மதத்தைச் சார்ந்தவர்கள். நமது மதம் சமையலறையில் இருக்கிறது. பானைதான் நமது கடவுள். என்னைத் தொடாதே, நான் புனிதமானவன் என்பதே நமது மதம். இது இன்னும் ஒரு நூறாண்டு காலம் இப்படியே சென்றால் நம்மில் பெரும்பாலோர் பைத்தியக்கார விடுதியில்தான் இருப்போம். நமது மூளை பலவீனமாகிவிட்டது என்பதற்க்கு அடையாளம் இது. நமது மனத்தால் வாழ்வின் உயர் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை; மனம் எல்லா வலிமையையும் செயல் திறனையும் இழந்து, எதிரில்பட்ட சின்னஞ் சிறு பிரச்சினையைத் திரும்பத்திரும்பச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதே இதன் பொருள்.


இத்தகைய நிலைமையைத் தலைகீழாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் உறுதியோடு எழுந்து நிற்க வேண்டும்; செயல்திறனும் வலிமையும் மிக்கவர்களாக வேண்டும். அதன்பிறகுதான் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றாதும், இன்று உலகம் முழுவதற்குமே தேவைப்படுவதுமான கருவூலத்தை அளவற்ற புதையலாகிய நம் பாரம்பரியத்தை நாம் அறிந்து கொள்வோம். இந்தச் செல்வம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றால் உலகமே அழிந்து போகும். அதனை வெளியே கொண்டு வாருங்கள். எல்லோருக்கும் கொடுங்கள். உலகம் முழுவதற்கும் அதைப்பற்றிக் கூறுங்கள்.


---சுவாமி விவேகானந்தர்

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,