நாம் உதவி செய்வது நமக்கே உலகிற்கு அல்ல!


நாம் உதவி செய்வது நமக்கே உலகிற்கு அல்ல!
கடமைகளைச் சரிவரச் செய்வது ஆன்மீக முன்னேற்றத்திற்கு எப்படி உதவுகிறது என்பதைக் காண்பதற்கு முன், கர்மம் என்பதற்கு இந்தியாவில் வழங்கப்படும் மற்றொரு கருத்தையும் சுருக்கமாக நான் உங்கள்முன் வைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு மதத்திலும் தத்துவம், புராணம், சடங்கு என்று மூன்று பகுதிகள் உள்ளன. எந்த மதத்திற்கும் தத்துவமே சாரமாக அமைந்துள்ளது. இந்தத் தத்துவத்தை ஏறக்குறைய கற்பனைப் பாத்திரங்களான மாமனிதர்களின் வாழ்க்கை, கதைகள், உவமைகள் போன்ற அற்புதமான விஷயங்கள் மூலம் விளக்கி விவரிப்பது புராணம், சடங்கு என்பது தத்துவக் கருத்துக்களுக்கு, எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் தெளிவான வடிவம் கொடுப்பது, உண்மையில் தத்துவத்தின் உருத்தோற்றமே சடங்கு.

இந்தச் சடங்குதான் கர்மம். இவை ஒவ்வொரு மதத்திற்கும் இன்றியமையாதவை. ஏனென்றால் ஆன்மீகத்தில் மிகவும் முன்னேறாமல் நுட்பமான ஆன்மீக உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியாது. எதையும் புரிந்துகொள்ள முடியும் என்று நினைப்பது சுலபம். ஆனால் நடைமுறை அனுபவத்திலோ நுட்பமான கருத்துக்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதுதான் உண்மை. எனவே சின்னங்கள் சிறந்த உதவியாக அமைந்துள்ளன. அவற்றின் மூலம் எதையும் தெளிவுப்படுத்துகின்ற முறையை நாம் ஒதுக்கிவிட முடியாது. மிகப் பழங்காலத்திலிருந்தே எல்லாவித மதங்களும் சின்னங்களைப் பயன்படுத்தி வருகின்றன.

ஒருவகையில் சின்னங்களில் மூலம்தான் நாம் சிந்திக்கவே முடியும். சொற்கள் என்பவை சிந்தனையில் சின்னங்ளே தவிர வேறல்ல. இன்னொரு வகையில், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு சின்னமாக நாம் கொள்ளலாம். இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே ஒரு சின்னம். இதன் பின்னாலுள்ள சாரம் இறைவன். இத்தகைய சின்னங்களின் உருவாக்கம் மனிதனின் வெறும் கண்டுபிடிப்பல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சிலர் ஒன்றாக அமர்ந்து தங்கள் மனத்துள் சிந்தித்து வெளிக்கொண்டு வந்தவையல்ல இவை. மதச் சின்னங்கள் இயல்பாகத் தோன்றி வளர்ந்தவை. இல்லையென்றால் ஏறக்குறைய எல்லோரின் மனத்திலும், குறிப்பிட்ட கருத்துக்கள் குறிப்பிட்ட சின்னங்களோடு மட்டுமே தொடர்புடையவையாக எப்படி இருக்கும்? சில சின்னங்கள் உலகம் முழுவதிலுமே வழக்கத்தில் இருக்கின்றன.

கிறிஸ்தவ மதத்துடனான தொடர்பிற்குப் பின்னர் தான் சிலுவை ஒரு சின்னமாக முதலில் கொள்ளப் பட்டது என்று உங்களுள் பலரும் நினைக்காமல். ஆனால் உண்மையில் கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்னால் மோசஸ் தோன்றுவதற்கு முன்னால், வேதங்களும் தோன்றவதற்கு முன்னால் வரலாற்றுக் குறிப்புகள் தொடங்குவதற்கு முன்னால் சிலுவைச் சின்னம் இருந்தது. அஸ்டெக் மற்றும் பினீசியர்களிடையே இந்தச் சின்னத்தை நாம் காணமுடியும். ஒவ்வோர் இனத்தினரும் சிலுவைச் சின்னம் வைத்திருந்ததாகவே தோன்றுகிறது. சிலுவையில் அறையப்பட்ட ரட்சகர்,. அதாவது, சிலுவையில் அறையப்பட்ட ஒரு மனிதர், இந்தச் சின்னமும் எல்லா நாடுகளிலும் அறியப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.

இதுபோலவே வட்டம் உலகம் முழுவதிலுமே ஒரு மகத்தான சின்னமாக இருந்து வருகிறது. எல்லாவற்றையும்விட உலகம் முழுவதும் அறியப்பட்ட மற்றொரு சின்னம் ஸ்வஸ்திகம். பவுத்தர்களே இதை உலகம் முழுவதும் தங்களுடன் கொண்டு சென்று பரப்பினார்கள் என்று கருத்து ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் புத்த மதத்திற்கு முன்பே பல நாடுகளில் இதனைப் பயன்படுத்தியிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. பழங்கால பாபிலோனிலும் எகிப்திலும் இந்தச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்தச் சின்னங்கள் மனிதனின் கற்பனையில் ஒரு குறிப்பிட்ட நிச்சயமாக ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும். அந்தச் சின்னங்களுக்கும் மனித மனத்திற்கும் ஏதோ இயல்பான தொடர்பு இருந்திருக்க வேண்டும்.

மொழிகூட மனிதனின் கற்பனையில் ஒரு குறிப்பிட்ட முறையில் தோன்றியதல்ல. சில வார்த்தைகள் மூலம் சில எண்ணங்களை உணர்த்த வேண்டும் என்று சிலர் கலந்து தீர்மானித்ததன் விளைவாகவும் தோன்றியதல்ல. எந்த எண்ணமும் அது குறிக்கின்ற சொல் இல்லாமலோ, எந்தச் சொல்லும் அது உணர்த்துகின்ற எண்ணம் இல்லாமலோ இருந்ததில்லை. எண்ணமும் சொல்லும் இயல்பாகவே பிரிக்க முடியாதவை, கருத்துக்களைக் குறிக்கின்றவை ஒலிச் சின்னங்களாகவோ நிறச் சின்னங்களாகவோ இருக்கலாம். செவிடனும் ஊமையும் ஒலிச் சின்னங்களைத் தவிர மற்றொன்றின் மூலமே சிந்தித்தாக வேண்டும்.

மனத்தில் எழும் ஒவ்வோர் எண்ணத்திற்கும் அதற்கேயான ஓர் உருவம் உண்டு. இது சம்ஸ்கிருதத் தத்துவங்களில் நாம-ரூபம் அதாவது பெயர் உருவம் என்று கூறப்படுகிறது. கற்பனையால் ஒரு மொழியை உண்டாக்க முடியாது. அதுபோலவே சின்னங்களின் முறையையும் உருவாக்க முடியாது. உலக மதங்களில் சடங்கிற்காக அமைந்த சின்னங்கள் அனைத்திலும் மனித சமுதாயத்தின் சிந்தனை வெளிப்பாட்டை நாம் காண்கிறோம். சடங்குகள், கோயில்கள் மற்றும் அதுபோன்ற சம்பிரதாயங்கள் எதுவும் தேவயில்லை என்று சொல்லிவிடுவது எளிது. இன்றைய சிறுபிள்ளை கூட இதைச் சொல்கிறது. ஆனால் கோயிலுக்குச் சென்று வழிபடுபவர்கள் மற்றவர்களிலிருந்து பல வகையிலும் வேறுபட்டிருப்பதை எல்லோரும் எளிதாக அறிந்துகொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோயில்கள், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் போன்ற தூல வடிவங்களுடன் அந்தக் குறிப்பிட்ட மதத்தினர் தொடர்பு கொள்ளும்போது, அவை எதைக் குறிந்து நிற்கின்றனவோ அந்தக் கருத்துக்களை, எண்ணங்களை அவர்களின் மனத்தில் கொண்டுவருகின்ற தன்மை படைத்தவையாக இருக்கின்றன. எனவே சடங்குகளையும் சின்னங்களையும் தவிர்ப்பது அறிவுடைமை ஆகாது. அவற்றைத் தெரிந்து கொள்வதும் பின்பற்றுவதும் இயல்பாகவே கர்மயோகத்தின் ஒரு பகுதியாகிறது.

இந்தச் செயல்விஞ்ஞானத்தின் அதாவது இடையோகத்தின் அம்சங்கள் இன்னும் பல உள்ளன. அவற்றுள் ஒன்று, எண்ணத்திற்கும் வாக்கிற்கும் இடையிலுள்ள தொடர்பையும், வாக்கின் சக்தியால் நாம் சாதிக்கக்கூடியது என்ன என்பதையும் அறிந்து கொள்வதாகும். வாக்கின் சக்தியை ஒவ்வொரு மதமும் அங்கீகரித்துள்ளது. சில மதங்கள் படைப்பே வாக்கிலிருந்துதான் தோன்றியதாகக் கூறுமளவிற்கு அதனை ஏற்றுக் கொண்டுள்ளன. இறைவனுடைய சிந்தனையின் புற அம்சம்தான் வாக்கு. படைப்பிற்குமுன் கடவுள் சிந்தித்தார். சங்கல்பித்தார். எனவே படைப்பு வாக்கிலிருந்து தோன்றியது.

மன அழுத்தமும் பரபரப்பும் நிறைந்த இன்றைய நமது உலகாயத வாழ்வால் நமது நரம்புகள் மென்மையை உணரும் தன்மையை இழந்து கடினமாகிவிட்டது. வயதானவர்களாக ஆகுந்தோறும், உலகால் பந்தாடப்படுந்தோறும் கடினமானர்களாகி விடுகிறோம். அதன் காரணமாக நம்மைச்சுற்றி தெள்ளத் தெளிவாக, நிரந்தரமாக நடைபெறுபவற்றைக் கவனிக்காமல் போகின்ற நிலைக்கு நாம் வந்துவிடுகிறோம். எனினும் சிலவேளைகளில் மனிதத்துவம் தன் இயல்பை நிலைநாட்டுகிறது. அப்போது இந்த அன்றாட நிகழ்ச்சிகளுள் சிலவற்றைப் பற்றிச் சிந்திக்கவும் வியந்து நிற்கவும் செய்கிறோம். இவ்வாறு வியந்து நிற்பதுதான் ஆன்மீக ஒளி பெறுவதற்கான முதற்படியாகும்.

வாக்கின் தத்துவரீதியான, மத சம்பந்தமான உயர்ந்த மதிப்பைத் தவிர ஒலிச் சின்னங்கள் மனித வாழ்க்கை நாடகத்தில் முக்கிய இடம் வகிப்பதை நாம் காணலாம். நான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களை நான் தொடவில்லை. நான் பேசுவதால் காற்றில் ஏற்படுகின்ற அதிர்வுகள் உங்கள் காதுகளில் நுழைந்து, நரம்புகளைத் தொட்டு உங்கள் மனத்தில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உங்களால் இதைத் தடுக்க முடியாது. இதைவிட வியப்பிற்குரியது என்ன இருக்க முடியும்? ஒருவன் மற்றவனை முட்டாள் என்று அழைக்கிறான். விளைவு? இவன் எழுந்து முஷ்டியை மடக்கிக்கொண்டு, அவன் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிடுங்கள். வாக்கின் சக்தியைப் பாருங்கள்! ஒருத்தி துனபத்தால் அழுது கொண்டிருக்கிறாள். இன்னொருத்தி அங்கு வருகிறாள். அவளிடம் மென்மையான சில வார்த்தைகள் பேசுகிறாள். உடனே இவளது வளைந்திருந்த உடம்பு நிமிர்ந்து நேராகிறது. முகத்தில் புன்னகை அரும்ப ஆரம்பிக்கிறது. வாக்கின் ஆற்றலை எண்ணிப் பாருங்கள்! உயர்ந்த தத்துவங்களிலும் அதுபோலவே அன்றாட வாழ்விலும் அவை ஒரு மாபெரும் சக்தியாக விளங்குகின்றன. நாம் சிந்தித்துப் பார்க்காமல், ஆராய்ந்து பார்க்காமல் இரவும் பகலும் இந்த ஆற்றலைக் கையாண்டு கொண்டிருக்கிறோம். இந்தச் சக்தியின் இயல்பைத் தெரிந்துகொள்வதும், அதைச் சிறப்பாகப் பயன்படுத்துவதும்கூட கர்மயோகத்தின் ஒரு பகுதியாகும்.

மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்பதன் பொருள், பிறருக்கு நாம் உதவ வேண்டும், உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே. நாம் எதற்காக உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்தால் உலகத்திற்கு உதவுவதற்காக, ஆனால் உண்மையில் நமக்கே உதவுவதற்காக, நாம் எப்போதும் உலகத்திற்கு உதவ முயன்றுகொண்டே இருக்க வேண்டும். அது ஒன்றே நமது மிகவுயர்ந்த குறிக்கோளாக இருக்கவேண்டும். நாம் சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால், உலகிற்கு நம் உதவி சிறிதுகூடத் தேவையில்லை என்பதைக் காணலாம். நீங்களோ நானோ வந்து உதவி செய்வோம் என்பதற்காக இந்த உலகம் படைக்கப்படவில்லை அழகிய இந்த உலகம் மிகவும் நல்லது. ஏனெனில் நாம் பிறருக்கு உதவி செய்வதற்கான நேரத்தையும் வாய்ப்பையும் இது தருகிறது. என்று ஒரு சொற்பொழிவில் படித்தேன். கேட்கும்போது உணர்ச்சிகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் உலகத்திற்கு நம் உதவி தேவைப்படுகிறது என்று சொல்வது தெய்வ நிந்தனை ஆகாதா? உலகில் துயரம் மிகுந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. நாம் சென்று பிறருக்கு உதவி செய்வதே செய்யத் தக்கவற்றுள் சிறந்தது. எனினும் பிறருக்கு உதவுவது என்பது நமக்கே நாம் உதவிக்கொள்வதுதான் என்பதை இறுதியில் உணர்ந்து கொள்வோம்.

நான் சிறுவனாக இருந்தபோது வெள்ளை எலிகளை வளர்த்து வந்தேன். அவற்றை ஒரு சிறிய கூண்டில் வைத்திருந்தேன். அந்தக் கூண்டினுள் ஒரே அச்சில் சுழல்கின்ற சிறுசிறு சக்கரங்கள் இருந்தன. எலிகள் அந்தச் சக்கரங்களைக் கடப்பதற்காக அதில் ஏறினால் உடனே அவை சுழலத் தொடங்கும். இதனால், எலிகள் நின்ற இடத்திலேயே நிற்குமே தவிர, அவை முன்னால் செல்ல முடியாது. உலகமும் நாம் அதற்கு உதவுவதும் இதே கதைதான். உலகிற்கு உதவுவதால் கிடைக்கின்ற ஒரே உதவி, நாம் பெறுகின்ற நன்னெறிப் பயிற்சிதான்.

இந்த உலகம் நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை. ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஓர் உலகை உருவாக்கிக் கொள்கிறான். பார்வையற்றவன் உலகத்தைப்பற்றிச் சிந்திப்பானானல், அது மென்மை அல்லது கடினமானதாகவோ குளிர்ச்சி அல்லது சூடானதாகவோ இருக்கும். நாமும் மகிழ்ச்சி அல்லது வேதனையின் சேர்க்கை மட்டுமே. இதை நாம் நம் வாழ்வில் நூற்றுக்கணக்கான முறை பார்த்திருக்கிறோம். பொதுவாக இளைஞர்கள் இன்பநோக்குடனும் முதியவர்கள் துன்பநோக்குடனும் உள்ளனர். இளைஞர்களுக்கு, வாழ்க்கை முன்னால் உள்ளது. வயதானவர்களோ தங்கள் காலம் கடந்து விட்டதென்று குறைபட்டுக் கொள்கிறார்கள். நிறைவேற்ற முடியாத நூற்றுக்கணக்கான ஆசைகள் அவர்களது மனத்தில் முட்டி மோதுகின்றன. ஆனால் இருசாராரும் முட்டாள்களே. மனத்தின் எத்தகைய நிலையோடு வாழ்க்கையைப் பார்க்கிறோமோ, அதற்கு ஏற்ப அது நல்லதாகவோ கெட்டதாகவோ தோன்றுகிறது. தன்னளவில் அது நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை. நெருப்பு தன்னளவில் நல்லதோ தீயதோ இல்லை. அது நமக்கு இதமான வெகுவெதுப்பு தரும்போது, ஆ எவ்வளவு அருமையான நெருப்பு! என்கிறோம்; விரலைச் சுட்டுவிட்டால் அதையே குறை கூறுகிறோம். எனினும் நெருப்பு தன்னளவில் நல்லதோ கெட்டதோ இல்லை. அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ற உணர்ச்சியை அது நம்முள் எழுப்புகிறது. உலகமும் அவ்வாறே. அது பூரணமானது. பூரணமானது என்றால், தன் குறிக்கோளைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கான அனைத்தையும் கொண்டது என்பதே. நாம் இல்லையென்றாலும் அது அழகாக இயங்கிக் கொண்டு தான் இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். அதற்கு உதவி செய்ய வேண்டுமே என்று நினைத்து, நாம் நம் தலையைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டியதில்லை.

என்றாலும் நாம் நல்லதையே செய்ய வேண்டும். பிறருக்கு உதவுவது என்பது ஒரு பேறு என்ற எண்ணம் நமக்கு எப்போதும் இருக்குமானால், நன்மை செய்வதற்கான ஆசை மிகவும் ஆற்றல் வாய்ந்த தூண்டுசக்தியாகி விடும். ஐந்து காசுகளைக் கையில் எடுத்துக்கொண்டு, உயரமான மேடையில் நின்று கொண்டு, பிச்சைக்காரா இதோ என்று கூறாதீர்கள். அவன் இருந்ததால்தானே அவனுக்கு தானம் செய்து அதன்மூலம் உங்களுக்கு நீங்களே உதவ முடிந்தது என்று அவனிடம் நன்றியுடன் இருங்கள். பெற்றுக் கொள்பவனல்ல, கொடுப்பவனே பேறுபெற்றவன். உங்கள் தானத்திறத்தையும் இரக்கத்தையும் இந்த உலகத்தில் செயல்படுத்தி, அதன்மூலம் நீங்கள் தூய்மையும் நிறைநிலையும் அடைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி உடையவர்களாக இருங்கள். எல்லா நற்செயல்களுமே நம்மைத் தூய்மையை நோக்கி, நிறைநிலையை நோக்கியே இட்டுச் செல்கின்றன.

மிஞ்சிப்போனால் அப்படி என்ன பெரிதாகச் சாதித்துவிட முடியும்? ஒரு மருத்துவமனையைக் கட்டுவீர்கள், சாலைகள் போடுவீர்கள், அற நிலையங்களை ஏற்படுத்துவீர்கள், அவ்வளவுதானே! ஒரு பெரிய அறக்கட்டளையை ஏற்படுத்தி இரண்டு மூன்று லட்ச ரூபாய் சேர்க்கலாம்; முதல் லட்சத்தில் மருத்துவமனை கட்டலாம், இரண்டாவது லட்சத்தைக் குடி, விருந்து என்று கேளிக்கைகளில் செலவிடலாம். மூன்றாவது லட்சத்தில் பாதியை இதை நடத்துபவர்கள் திருடிக்கொண்டு போகும்படியும் செய்வீர்கள்! இவற்றால் ஆவதென்ன? இப்படி நீங்கள் கட்டுகின்ற கட்டிடங்களைப் புயல் ஒன்று ஐந்து நிமிடத்தில் தரைமட்டமாக்கிவிடும். அதற்குப் பிறகு என்ன செய்வது? குமுறி எழுகின்ற ஓர் எரிமலை, நாம் அமைத்த எல்லா சாலைகளையும் மருத்துவமனைகளையும் நகரங்களையும் கட்டிடங்களையும் அடித்துச் சென்றுவிடும். எனவே உலகிற்கு நன்மை செய்வது என்றெல்லாம் முட்டாள்தனமாகப் பேசுவதை விட்டுவிடுவோம். உங்களுடையவோ என்னுடையவோ உதவிக்காக அது காத்துக்கொண்டிருக்கவில்லை. என்றாலும் நாம் வேலை செய்ய வேண்டும். எப்போதும் நல்லது செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் அது நமக்கு ஓர் ஆசீர்வாதம். நாம் நிறைநிலை அடைய இது ஒன்றே வழி.

நாம் இதுவரை உதவி செய்துள்ள எந்தப் பிச்சைக்காரனும் நம்மிடம் ஒரு சல்லிக்காசுக்கும் கடமைப்பட்டவனல்ல. எல்லா வழிகளிலும் நாம்தான் அவனிடம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஏனெனில் நமது தான சிந்தையைத் தன்மீது செயல்படுத்த அவன் நம்மை அனுமதித்திருக்கிறான். நாம் உலகத்திற்கு நன்மை செய்துவிட்டோம். அல்லது செய்ய முடியும் அல்லது இன்னாருக்கெல்லாம் நாம் உதவி செய்வோம் என்றெல்லாம் நினைப்பது முற்றிலும் தவறு. அது முட்டாள் தனமான எண்ணம். முட்டாள்தனமான எண்ணங்கள் துன்பத்தைத்தான் கொண்டுவரும். நாம் யாரோ ஒருவருக்கும் உதவி செய்ததாக எண்ணி, அவன் நமக்கு நன்றிபாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவன் அப்படிச் செய்யாவிட்டால் நமது மனம் வேதனைப்படுகிறது. நாம் செய்பவற்றிற்கு ஏன் பிரதிபலனை எதிர்பாக்க வேண்டும் நீ உதவி செய்தவனிடம் நன்றி கொள். அவனைக் கடவுளாக எண்ணிக் கொள். சகோதரர்களுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவனை வழிபட அனுமதிக்கப்பட்டது ஒரு பெரும்பேறு அல்லவா? நாம் உண்மையிலேயே பற்றற்றவர்களாக இருப்போமானால், இந்த வீண் எதிர்பார்ப்புக்களில் இருந்து வருகின்ற வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வோம். எப்போதும் உற்சாகத்துடன் நற்செயல்களைச் செய்தபடி இருப்போம். பற்றற்றுச் செய்யும் செயலினால் ஒருபோதும் துன்பமோ துயரமோ வருவதில்லை. இந்த உலகம் சுகதுக்கங்களின் சேர்க்கையாக என்றென்றும் இவ்வாறே போய்க் கொண்டிருக்கும்.

ஓர் ஏழை இருந்தான். அவனுக்குப் பண ஆசை வந்தது. எப்படியாவது ஒரு பூதத்தை வசமாக்கி விட்டால் பணத்தையும் தான் விரும்பும் எதையும் கொண்டுவருமாறு செய்யலாம் என்று அவன் கேள்விப்பட்டான், எனவே பூதத்தை வசமாக்கத் துடித்தான். பூதத்தைப் பிடித்துத் தருபவரைத் தேடி அலையலானான். கடைசியாக, சக்தி வாய்ந்த முனிவர் ஒருவரிடம் போய்ச் சேர்ந்து அவரது உதவியை நாடினான். பூதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார் அந்த முனிவர் அதற்கு அவன், முனிவரே எனக்காக வேலை செய்வதற்குத்தான் பூதம் வேண்டும். தயவுசெய்து அதைப் பிடிப்பது எப்படி என்று எனக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று மிகவும் வேண்டினான். அதற்கு அந்த முனிவர், வீணாகக் குழம்பாமல் வீட்டிற்குப் போ என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

ஆனால் மறுநாள் அவன் மீண்டும் அந்த முனிவரிடம் சென்று எனக்கு ஒரு பூதத்தைக் கொடுங்கள்! எனக்குக் கண்டிப்பாகப் பூதம் வேண்டும் என்று கேட்டபடியே இருந்தான். வெறுப்புற்ற முனிவர் இதோ இந்த மந்திரத்தைப் பெற்றுக்கொள். இதனை நீ சொன்னால் பூதம் வரும். நீ சொல்லும் வேலைகளையெல்லாம் அது செய்யும். ஆனால் ஒரு விஷயத்தில் நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பூதங்கள் பயங்கரமானவை. அதற்கு நீ எப்போதும் வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். தவறினாயோ அது உன் உயிரை வாங்கிவிடும் என்றார். அது ஒன்றும் சிரமம் அல்ல, அதன் ஆயுட்காலம் முழுவதும் வேலை கொடுக்க என்னால் முடியும் என்று கூறிப் புறப்பட்டான் அவன்.

அங்கிருந்து நேராக ஒரு காட்டிற்குச் சென்ற அவன் அங்கு அமர்ந்து, முனிவர் கொடுத்த மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிக்க ஆரம்பித்தான். நெடுநேரத்திற்குப் பிறகு ஒரு பெரிய பூதம் அவன் முன் தோன்றி, நான் ஒரு பூதம். உன் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டுள்ளேன் ஆனால் நீ எப்போதும் எனக்கு வேலை தந்துகொண்டே இருக்க வேண்டும். அதில் தவறினால் அடுத்த கணமே உன்னைக் கொன்றுவிடுவேன் என்று கூறியது. உடனே அந்த மனிதன், எனக்கு ஓர் அரண்மனை கட்டு என்றான். தயார் அரண்மனை கட்டியாகிவிட்டது என்றது பூதம். பணம் கொண்டு வா என்றான். இதோ நீ விரும்பிய பணம் என்று பணத்தைக் கொடுத்தது பூதம். இந்தக் காட்டை அழித்து, இங்கே ஒரு நகரத்தை உருவாக்கு என்றான். அடுத்த கணமே தயார் என்றது பூதம். காடு அழிந்து நகரம் உருவாகியது. இனி என்ன? என்று கேட்டது பூதம். இனிமேல் இந்தப் பூதத்திற்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லையே, எதைக் கொடுத்தாலும் ஒரு கணத்தில் செய்துவிடுகிறதே என்று எண்ணிய அவனைப் பயம் பிடித்துக் கொண்டது. அதற்குள் அந்தப் பூதம், வேலை கொடுக்கிறாயா? இல்லை உண்னை விழுங்கட்டுமா? என்று உறுமியது. அந்த அப்பாவியால் அதற்கு எந்த வேலையும் கொடுக்க முடியவில்லை. அஞ்சி நடுங்கிய அவன் ஒரே ஓட்டமாக முனிவரிடம் ஓடினான்.

முனிவரிடம் சென்று, சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறினான். நடந்தது என்ன என்று அவர் கேட்டதும், அந்தப் பூதத்திற்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லை. நான் எதைச் சொன்னாலும் அது கண நேரத்தில் முடிந்துவிடுகிறது. வேலை கொடுக்காவிட்டால் என்னையே தின்றுவிடப் போவதாக இப்போது பயமுறுத்துகிறது என்று பதிலளித்தான். அதற்குள் பூதம் அங்கேயே வந்து உன்னைத் தின்னப் போகிறேன் என்று கூச்சல் போட்டவாறே அவனைப் பிடிக்க எத்தனித்தது. அந்த மனிதன் நடுநடுங்கி, தன்னைக் காப்பாற்றுமாறு முனிவரிடம் கெஞ்சினான். முனிவர் அவனிடம், பயப்படாதே. நீ தப்ப நாள் ஒரு வழி கூறுகிறேன். சுருண்ட வாலுடன் அதோ ஒரு நாய் நிற்கிறதே, பார்த்தாயா? வாளை உருவி அதன் வாலை வெட்டு, அதை அந்தப் பூதத்திடம் கொடுத்து நேராக்கும்படிச் சொல் என்றார். அவனும் அவ்வாறே வெட்டி பூதத்திடம் கொடுத்து, இதை நேராக்கு என்றான். பூதம் சுருண்ட நாய்வாலைக் கையில் பிடித்துக்கொண்டு, நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் நிமிர்த்தியது. ஆனால் விட்ட மறுகணமே அந்த வால் சுருண்டுகொண்டது. மறுபடியும் சிரமப்பட்டு நிமிர்த்தியது. விட்டதும் உடனே சுருண்டுகொண்டது. மறுபடியும் மிகுந்த சிரமத்துடன் நிதானமாக நிமிர்த்தியது. விட்டால் பழைய கதைதான். இப்படியே நாட்கணக்கில் முயன்ற பூதம் இறுதியில் களைத்துவிட்டது. அதன்பிறகு அது அந்த மனிதனைப் பார்த்து என் வாழ்நாளில் இப்படி ஒரு சங்கடத்தில் மாட்டியதில்லை. முதிர்ந்த திறமை வாய்ந்த ஒரு பூதம் நான். இதுவரை நான் இப்படி ஒரு துன்பத்திற்கு ஆளாகியதில்லை. நாம் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். நீ என்னை விட்டு விடு. நான் உனக்குக் கொடுத்த அனைத்தையும் அதற்குப் பதிலாக வைத்துக் கொள். நான் உனக்குத் துன்பமும் தர மாட்டேன் என்றது. அந்த மனிதன் மகிழ்ச்சியோடு பூதத்தின் உடன்பாட்டை ஏற்றுக் கொண்டான்.

இந்த உலகமும் நாயின் சுருண்ட வால்போல்தான் இருக்கிறது. அதை நிமிர்த்துவதற்காக மனிதர்கள் காலம்காலமாக முயன்று வருகிறார்கள், ஆனால் விட்டவுடனே அது சுரண்டுகொள்கிறது. சுருண்டுகொள்ளாமல் வேறென்ன செய்யும்? பற்றில்லாமல் செயல்புரிவது எப்படி என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதன் கொள்கைவெறியன் ஆக மாட்டான். இந்த உலகம் நாயின் சுருண்டவால்போன்றது. அது ஒருபோதும் நேராகாது என்று தெரிந்துகொண்டால், நாம் கொள்கைவெறியர்களாக மாற மாட்டோம். கொள்கைவெறி மட்டும் இல்லாதிருந்தால் உலகம் இப்போது இருப்பøதிதவிட எவ்வளவோ மேன்மை யுற்றிருக்கும். கொள்கைவெறி மனித இனத்தை முன்னேற்றும் என்று எண்ணுவது தவறு. உண்மையில் இந்தக் கொள்கைவெறி மக்களிடையே வெறுப்பையும் கோபத்தையும் தூண்டி, ஒருவரோடு ஒருவர் சண்டையிடச் செய்து, இரக்கமில்லாதவர்களாக மாற்றி, அவர்களை அவர்கள் இருந்த நிலையிலிருந்து தாழ்த்தவே செய்யும்.

நாம் என்ன செய்கிறோமோ, நம்மிடம் எது இருக்கிறதோ அதுதான் உலகிலேயே சிறந்தது. நாம் செய்யாதது, நம்மிடம் இல்லாதது, அது மதிப்பே இல்லாதது. இதுதான் நமது எண்ணம். எனவே உங்களிடம் கொள்கைவெறி தலைதூக்கும் போதெல்லாம் சுருண்ட நாய்வாலை நிமிர்த்தும் இந்த உதாரணத்தை எப்போதும் நினைவுகூருங்கள். உலகத்தை நினைத்து, இரவெல்லாம் தூக்கம் கெட்டு நீங்கள் அவதிப்படத் தேவையில்லை. நீங்கள் இல்லாமலே அது இயங்கிக் கொண்டுதானிருக்கும்.

கொள்கைவெறியைத் தவிர்த்தால் மட்டுமே உங்களால் திறமையுடன் செயல்பட முடியும். சமமான மனமும் அமைதியும் ஆராய்ந்து தெளியும் குணமும் குளிர்ந்த சிந்தனையும் மிகுந்த கருணையும் அன்பும் உடையவன்
தான் உலகிற்கு நன்மை செய்கிறான். அதன் மூலம் தனக்கும் நல்லது செய்து கொள்கிறான். கொள்கை வெறி பிடித்தவன் முட்டாள். அவனிடம் இரக்கம் இல்லை. அவனால் உலகத்தையும் செம்மைப்படுத்த முடியாது. தானும் தூய்மையோ நிறைநிலையோ அடைய முடியாது.

இன்றைய சொற்பொழிவின் முக்கியக் கருத்துக்களை இப்போது நினைவுகூர்வோம். முதல் கருத்து; நாம் எல்லோரும்தான் உலகிற்குக் கடன்பட்டிருக்கிறோமே தவிர, உலகம் எந்த வகையிலும் நமக்குக் கடன் பட்டிருக்கவில்லை. உலகத்திற்கு நாம் ஏதாவது நன்மை செய்யமுடிந்தால் அது பெரும்பேறு. உலகிற்கு உதவி செய்வதன்மூலம் உண்மையில் நமக்கு நாமே உதவி செய்துகொள்கிறோம்.

இரண்டாவது கருத்து; இந்த உலகில் கடவுள் ஒருவர் இருக்கிறார். இந்த உலகம் தட்டுத் தடுமாறிக்கொண்டு, உங்களிடமோ என்னிடமோ உதவி தேடி நிற்கிறது என்பது உண்மையல்ல. கடவுள் எப்போதும் இருக்கிறார். அவர் மரணமற்றவர். எந்த நேரமும் செயல் புரிபவர். விழித்துக் கொண்டிருப்பவர். அண்ட சராசரங்கள் அனைத்தும் உறங்கும்போதும் அவர் உறங்குவதில்லை. அவர் இடைவிடாமல் செயல்புரிந்துகொண்டே இருக்கிறார். உலகில் உண்டாகின்ற எல்லா மாற்றங்களும் எல்லா வெளிப்பாடுகளும் அவருடையதே.

மூன்றாவதாக, நாம் யாரையும் வெறுக்கக் கூடாது. இந்த உலகம் நன்மை மற்றும் தீமை இவைகளின் கலப்பாகவே தொடர்ந்து இருக்கும். பலவீனர்களிடம் இரக்கம் கொள்வதும், தவறு செய்பவர்களிடம் கூட அன்பு செலுத்துவதும் நமது கடமை. இந்த உலகம் ஒரு பரந்த நன்னெறிக் கூடம் மேலும்மேலும் ஆன்மீக வலிமை பெறுவதற்காக அதில் நாம் அனைவரும் பயிற்சி செய்ய வேண்டும்.

நான்காவதாக, எந்த வகையான கொள்கை வெறியர்களாகவும் நாம் இருக்கக் கூடாது. ஏனெனில் கொள்கைவெறக என்பது அன்பிற்கு முற்றிலும் எதிரானது கொள்கைவெறியர்கள். நாங்கள் பாவிகளை வெறுப்பதில்லை. பாவங்களையே வெறுக்கிறோம் என்று தேனொழுக வாய்ஜம்பம் அடிப்பதை நாம் கேட்கிறோம். ஆனால் பாவிகளையும் பாவங்களையும் உண்மையிலேயே பிரித்து வேறுபடுத்திக் காண்கின்ற ஒரு மனிதன் இருப்பானானால் அவனது முகத்தைக் காண உலகத்தின் எந்த மூலைக்கும் நான் போகத் தயாராக இருக்கிறேன். அப்படிப் பேசுவது எளிது. நம்மால் ஒரு பொருளையும் அதன் குணத்தையும் தனித்தனியாகப் பிரித்துக் காண முடியுமானால், நிறைமனிதர்களாகி விடுவோம். ஆனால் அது எளிதான காரியமல்ல.

மேலும், நாம் எந்த அளவிற்கு அமைதியானவர்களோ, நமது நரம்புகள் எந்த அளவிற்குப் பதற்றமின்றி இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு நாம் அதிகமாக அன்பு செலுத்துவோம். நமது வேலையும் சிறந்ததாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,