டிக்கெட் பரிசோதகர்


ஒரு முறை விவேகானந்தரும் மற்றோர் அன்பரும் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் வெள்ளைக்காரர். அவர் அன்பரிடம், நீங்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்ய முடியாது! என்று முரட்டுத்தனமாகக் கூறி, அன்பரை அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார். மேலும் அந்த வெள்ளைக்காரர், தமக்குச் சாதகமாக ஏதோ ஒரு ரயில்வே சட்டத்தையும் கூறினார். அன்பரும் ரயில்வேயில் பணி புரியும் ஒருவர்தாம். அன்பர் டிக்கெட் பரிசோதகரிடம், நீங்கள் கூறுவதுபோல் ரயில்வேயில் அப்படி ஒரு சட்டம் இல்லை என்று கூறி, அந்த ரயில் பெட்டியிலிருந்து வெளியேற மறுத்தார். இவ்விதம் தம்மை ஓர் இந்தியன் எதிர்ப்பதைப் பார்த்து, அந்த வெள்ளைக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது. கடைசியில் இந்தப் பிரச்னையில் விவேகானந்தர் தலையிட்டார். அதுவும் வெள்ளைக்காரரின் கோபத்தைத் தணிக்கவில்லை. அவர் கோபத்துடன் கடுமையான குரலில் விவேகானந்தரிடம் இந்தியில் பேசினார்.

வெள்ளைக்காரர்: நீ ஏன் இதில் தலையிடுகிறாய்? விவேகானந்தர்:முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவரை நீ என்று நீங்கள் மரியாதை இல்லாமல் அழைக்கிறீர்களே! முதலில் நீங்கள் மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.

வெள்ளைக்காரர்:தவறுதான், பொறுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தி சரியாகத் தெரியாது. இவன் (This man) ...

விவேகானந்தர் (குறுக்கிட்டு): உங்களுக்கு இந்தி சரியாகத் தெரியாது என்று சொல்கிறீர்கள்! ஆனால் இப்போது உங்களுக்கு உங்கள் தாய்மொழியான ஆங்கிலமும் சரியாகத் தெரியாது என்று தெரிகிறது. இவன் (This man) என்று அல்ல, இவர் (This gentleman) என்று சொல்ல வேண்டும். தமது தவற்றை உணர்ந்த பரிசோதகர், பெட்டியைவிட்டு வெளியேறினார். பின்னர் ஒரு சமயம் விவேகானந்தர், கேத்ரி மன்னரின் தனிச்செயலாளர் ஜக்மோகனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மேற்கூறிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு கூறினார்: வெள்ளைக்காரர்களுடன் பழகும்போது நாம் நமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது. உரியவருக்கு உரிய மரியாதை கொடுத்துப் பழகாததால்தான் வெள்ளைக்காரர்கள் நம்மை அவமதிக்கிறார்கள். நமக்கு சுயமரியாதை வேண்டும், பிறருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,