எனது சிந்தனைகள் (பகுதி-3)


எனது சிந்தனைகள் (பகுதி-3)-சுவாமி விவேகானந்தர்

பிரச்சாரகர்: இதுபோன்ற பஞ்சங்களிலும் துன்பங்களிலும் நாங்கள் உதவுவதில்லை. இந்தச் சங்கம் பசு மாதாவைக் காப்பதற்கு மட்டும் தான் அமைக்கப்பட்டுள்ளது.

சுவாமி ஜி: பஞ்சத்தில் உங்கள் சகோதர சகோதரிகளாகிய ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவின் கொடிய பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். வசதி இருந்தும் அவர்களுக்கு உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை ன்று நீங்கள் நினைக்க வில்லையா?

பிரச்சாரகர்: அதை நாங்கள் செய்ய வேண்டியதில்லை. இந்தப் பஞ்சம் அவர்களுடைய கர்மத்தின் விளைவாக, பாவங்களின் விளைவாக வந்திருக்கிறது. கர்மம் எப்படியோ அப்படியோதான் பலனும்.

இதைக் கேட்டதுதான் தாமதம்! சுவாமிஜியின் கண்கள் கோபத்தால் நெருப்புத் துண்டங்கள் போல் ஜொலித்தன. அவரது முகம் உணர்ச்சியால் சிவந்தது. ஆனால் அவர் உணர்ச்சிகளை அடக்கிகொண்டு சொன்னார்: மனிதர்கள், சொந்தச் சகோதரர்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர்கள் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத்தராமல், அவர்களிடம் சிறிதும் இரக்கம் கொள்ளாமல், விலங்குகளையும் பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரிவாரித் தரும் சங்கங்களிடம் எனக்குச் சிறிதுகூட அனுதாபம் கிடையாது. அத்தகைய சங்கங்களின் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று நான் நம்பவில்லை. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கர்மங்கள் காரணம் என்று கர்ம நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால், இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான் . அந்தக் கொள்கையின் படிப் பார்த்தால் பசு மாதாவும் அதன் கர்மத்தால் தான் கசாப்புக் கடைக்காரரிடம் மாட்டிக்கொண்டு சாகிறது. நாம் அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியமே இல்லை.

இதைக்கேட்ட பிரச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார், பிறகு சமாளித்துக் கொண்டு, நீங்கள் சொல்வது உண்மைதான் . ஆனால் பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே! என்றார்.

சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி, ஆமாம், பசு நம்தாய்தான். எனக்குப் புரிகிறது. வேறு யார்தான் நம்மைப் போன்ற இவ்வளவு புத்திசாலிகளான பிள்ளைகளைப் பெற முடியும்? என்றார்.

பிரச்சாரகர் பிறகு பசு மாதாவைக் காப்பாற்றுவது பற்றி ஒன்றுமே பேசவில்லை. சுவாமிஜியின் கிண்டலின் முழுப் பொருளையும் அவர் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றியது. பசு மாதாவைக் காப்பாற்றும் தங்கள் சங்கத்திற்கு ஏதேனும் கொடுக்கும்படி அவர் மீண்டும் சுவாமிஜியிடம் வேண்டினார்.

சுவாமிஜி: நான் ஒரு துறவி, பக்கிரி. உங்களுக்கு உதவுகின்ற அளவுக்கு எனக்குப் பணம் எங்கிருந்து கிடைக்கும் ? அப்படி எனக்கு எங்கிருந்தாவது பணம் கிடைத்தாலும் அதை நான் மனதர்களின் சேவைக்காகத் தான் முதலில் பயன்படுத்துவேன். முதலில் மனிதன்தான் காப்பாற்றப்பட வேண்டும். அவனுக்கு உணவும் கல்வியும் ஆன்மீக ஞானமும் கொடுக்கப்பட வேண்டும்.இவை எல்லாம் செய்த பிறகு ஏதாவது பணம் எஞ்சினால் உங்கள் சங்கத்திற்குக்கொடுக்கலாம்.

இதைக் கேட்டதும் பிரச்சாரகர் சுவாமிஜியை வணங்கிவிட்டு எழுந்து வெளியே சென்றார். சுவாமிஜி எங்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்:

என்ன பேச்சு! கேவலம்! மனிதர்கள் கர்மபலனால் சாகிறார்கள், அவர்களுக்கு இரக்கம் காட்டுவதில் என்ன பலன்? என்று அவன் கேட்கிறான். இந்த நாடு அடியோடு நாசமாகி விட்டது என்பதற்கு இதுவே சாட்சி. உங்கள் இந்து மதத்தில் கர்மநியதிக் கொள்கை எவ்வளவு கேவலமாகப் பயன்படுத்தப் படுகிறது பார்த்தீர்களா? மற்ற மனிதர்களுக்காகச் சிறிதும் இரக்கம் காட்டாத இவர்களை மனிதர் என்று நினைக்கலாமா? இவ்வாறு பேசும்போது சுவாமிஜியின் திருமேனி வேதனையாலும் துயரத்தாலும் நடுங்கியதுபோல் தோன்றியது. பிறகு சுவாமிஜி புகை பிடித்தவாறே சீடரிடம், நல்லது. மறுபடியும் என்னை வந்து பார் என்று கூறினார்.

சீடர்: சுவாமிஜி , நீங்கள் எங்கே தங்குவீர்கள்? ஒரு வேளை யாராவது பணக்காரர்களின் வீட்டில் தங்கினால் என்னை உள்ளே விடுவார்களா?

சுவாமிஜி : ஆலம்பஜார் மடத்திலோ, காசிப்பூரில் கோபால் லால்சீலின் தோட்ட வீட்டிலோதான் இப்போ தெல்லாம் தங்குகிறேன் . இங்கு ஏதாவது ஓர் இடத்திற்கு நீ வரலாம்.

சீடர்: சுவாமிஜி நான் உங்களோடு தனித்துப் பேச மிகவும் விரும்புகிறேன்.

சுவாமிஜி: மிகவும் நல்லது. ஒருநாள் இரவு வா வேதாந்தத்தைப்பற்றி நிறைய பேசலாம்.

சீடர்: சுவாமிஜி சில அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும் தங்களோடு வந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் என் உடையை பார்த்தோ அல்லது நான் பேசுவதைக் கேட்டோ தவறாக ஏதாவது நினைக்க மாட்டார்களா? 

சுவாமிஜி: ஏன்? அவர்களும் மனிதர்கள் தானே? அதோடு வேதாந்த மதத்தில் அவர்களுக்கும் மிகுந்த ஈடுபாடு இருக்கிறது. உன்னோடு பேசுவதில் அவர்கள் மகிழ்ச்சியே அடைவார்கள்.

சீடர்: சுமவாமிஜி வேதாந்தம், அதைக் கற்பவர்களுக்குச் சிலகுறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. உங்கள் மேலை நாட்டு சீடர்களிடம் இவை எப்படி இருக்க முடியும்? வேதங்களையும் வேதாந்தத்தையும் படித்த பாவங்களிலிருந்து விடுபட்ட, சாஸ்திரங்களில் சொல்லியுள்ளபடி அன்றாட சடங்குகளையும் விசேஷச் சடங்குகளையும் செய்துள்ள, உணவிலும் மற்றும் பொதுவான நடத்தைகளிலும் கட்டுப்பாடு மிகுந்த முக்கியமாக அடிப்படையான நான்கு சாதனைகளில் வெற்றி பெற்ற ஒருவேளை வேதாந்தத்தைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று அல்லவா சாஸ்திரங்கள் கூறுகின்றன. உங்களுடைய மேலை நாட்டுச் சீடர்கள் முதலில் பிராமணர்களே இல்லை. பிறகு உணவிலும் உடையிலும். அவர்களிடம் கண்டிப்பு எதுவுமில்லை. அப்படி இருக்கும்போது வேதாந்தத்தை அவர்களால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

சுவாமிஜி: நீ அவர்களோடு பேசும்போது அவர்கள் வேதாந்தத்தைப் புரிந்துகொண்டார்களா இல்லையா என்பதைக் தெரிந்துகொள்வாய்.

சீடர் வைதீக இந்து மதத்தின் புற ஆசாரத்தை எவ்வளவு அழுத்தமாகப் பின்பற்றுபவர் என்பதை சுவாமிஜி இப்போது பார்க்க முடிந்திருக்கும்.

பிறகு சுவாமிஜி ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்கள் சிலருடன் பாக்பஜாரில் உள்ள பலராம் போசின் வீட்டிற் குச் சென்றார். சீடர்பட்டிலாவில் விவேக சூடாமணி புத்தகத்தை வாங்கிக்கொண்டு தர்ஜிபாராவில் உள்ள தம் வீட்டிற்குச் சென்றார்.

இன்று பிற்பகல் சுவாமிஜி கிரீஷ் சந்திரகோஷின் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். சீடர் அங்குச் சென்றதும் சுவாமிஜியை வணங்கினார். அப்போது சுவாமிஜி அங்கிருந்து கோபால்லால் சீலின் தோட்ட வீட்டிற்குச் செல்லத் தயாராக இருந்தார். வெளியே வண்டி தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. சுவாமி ஜி சீடரிடம், நீயும் உடன் வா என்று கூறினார். சீடரும் வண்டியில் ஏறிக்கொண்டார். வண்டி சித்பூர் சாலையில் சென்றபோது எதிரே கங்கை தெரிந்தது. கங்கையைப் பார்த்ததும் சுவாமிஜி தம்முள் மூழ்கியவராக, கங்கா தரங்க ரமணீய ஜடா கலாபம் என்று தொடங்கும் தோத்திரத்தை இனிமையாகப் பாடினார். அவரிடமிருந்து பரவிய இனிமையான இசையில் மூழ்கி ஆச்சரிய வசப்பட்டு அமைதியாக இருந்தார் சீடர். சித்பூர் ஹைடிராலிக் பாலத்தை நோக்கிச் செல்லும் தண்டவாளத்தில் ஒரு ரயில் எஞ்சின் வேகமாகச் செல்வதைக்கண்ட சுவாமிஜி சீடரிடம், அதைப் பார் சிங்கம் போல் எப்படி கம்பீரமாகச் செல்கிறது என்றார். இதைக் கேட்ட சீடர் , அது உயிரற்ற ஜடப்பொருள், அதற்குப் பின்னால் அறிவுள்ள மனிதன் இயக்குகிறான் . அதனால் அது ஓடுகிறது. இதில் அந்த எஞ்ஜினுக்கு என்ன பெருமை இருக்கிறது ? என்றார்.

சுவமாஜி:அப்படியா? உணர்வின் அடையாளம் என்ன?

சீடர்:ஏன் கேட்கிறீர்கள்? அறிவின் மூலமாக எது செயல்படுகிறதோ அதுதான் உணர்வு.

சுவாமிஜி: இயற்கையை எதிர்க்கும் ஒவ்வொன்றும் உணர்வுடன் இருப்பவைதான். அங்கேதான் உணர்வு வெளிப்படுகிறது. ஒரு சிறிய எறும்பைக் கொல்வதற்கு முயன்று பார். அதுகூடத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும், எங்கே போராட்டம் இருக்கிறதோ எங்கே எதிர்ப்பு இருக்கிறதோ அங்கே உயிரின் அடையாளம் இருக்கிறது. அங்கே உணர்வு வெளிப்படுகிறது.

சீடர்; அந்தச் சோதனை மனிதர்கள் விஷயத்திலும் நாடுகள் விஷயத்திலும் பொருந்துமா?

சுவாமிஜி: உலக வரலாற்றைப் படித்து இது பொருந்துகிறதா இல்லையா என்று பார். உங்கள் நாட்டைத் தவிர இது மற்ற எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். உலகத்திலேயே நீங்கள் மட்டும் தான் உயிரற்ற ஜடப்பொருளைப்போல் வீழ்ந்து கிடக்கிறீர்கள் மனவசியத்தில் ஆழ்ந்துள்ளீர்கள். நீங்கள் பலவீனமானவர்கள் என்றும் உங்களுக்குச் சக்தியே கிடையாது. என்றும்தான் மிகப் பழங்காலத்திலிருந்தே மற்றவர்கள் சொல்லி வருகிறார்கள். நீங்களும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு சுமார் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் மோசமானவர்கள் ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். (தமது உடலைச் சுட்டிக்காட்டி) இந்த உடம்பு கூட உங்கள் நாட்டு மண்ணில்தான் பிறந்தது. ஆனால் நான் ஒரு போதும் அப்படி நினைத்தே இல்லை அதனால் நான் ஒரு போதும் அப்படி நினைத்ததே இல்லை. அதனால்தான் நம்மை எப்போதும் பலவீனமானவர்கள் என்றும் கீழானவர்கள் என்றும்கூட இறைவனின் திருவருளால் எனக்குத் தெய்வ மரியாதைசெய்தார்கள்; இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். உனக்குள் அளவற்ற ஆற்றலும் அளவற்ற அறிவும், வெல்ல முடியாத சக்தியும் இருக்கிறது என்று நீயும் நினைப்பாயானால் அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டுவர முடியுமானால் நீயும் என்னைப்போல் ஆக முடியும்.

சீடர் : சுவாமி ஜி அவ்வாறு நினைப்பதற்கான ஆற்றல் எங்களிடம் எங்கே இருக்கிறது? குழந்தைப் பருவத்திலிருந்து எங்களிடம் இப்படிப் பேசி எங்களை இந்த வகையில் உருவாக்கும் ஆசிரியர்களோ குருமார்களோ எங்கே இருக்கிறார்கள்? நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம், நாங்கள் கற்றுக்கொண்டதெல்லாம் படிப்பின் லட்சியம் ஒரு நல்ல வேலையைப் பெற வேண்டும் என்பதே.

சுவமாஜி; அதனால் அதற்கு மாறான மற்றொரு உபதேசத்தோடும் உதாரணத்தோடும் நாங்கள் வந்திருக்கிறோம். எங்களிடமிருந்து அந்த உண்மையைச் கற்றுக் கொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள், அதை அனுபவத்தில் காணுங்கள். பிறகு அந்தக் கருத்துக்களைப் பட்டணங்களில் நகரங்களில் கிராமங்களில் பரப்புங்கள். எழுந்திருங்கள், விழித்திருங்கள். இனியும் உறங்காதீர்கள் எல்லா தேவைகளையும் துன்பங்களையும் தீர்க்கும் ஆற்றல் உங்கள் ஒவ்வொரு வரிடமும் இருக்கிறது இதை நம்புங்கள் அந்த ஆற்றல் வெளிப்படும் என்று எல்லோரிடமும் சென்று பிரச்சாரம் செய்யுள்கள் அதோடு பாமர மக்களிடையே விஞ்ஞானம் தத்துவம் வரலாறு புவியியல் இவற்றின் மையக் கருத்துக்களை எளிய மொழியில் பரப்புங்கள். திருமணமாகாத இளைஞர்களைக் கொண்டு ஓர் இயக்கத்தைத் தொடங்க நான் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். முதலில் அவர்களுக்குப் போதனை செய்வேன் பிறகு அவர்களின் மூலம் பணி செய்வேன்.

சீடர்: ஆனால் அதற்கு நிறைய பணம் தேவைப் படுமே? பணம் உங்கருக்கு எங்கிருந்து கிடைக்கும்.?

சுவாமிஜி: நீ என்ன பேசுகிறாய் மனிதன் அல்லவா பணத்தை உருவாக்குகிறான்! பணம் மனிதனை உருவாக்கியது என்று எங்கே நீ கேள்விப்பட்டாய்? உன் எண்ணத்தையும் பேச்சையும் நீ முழுமையாக ஒன்றுபடுத்தி விட்டால் உன் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்குமானால் பணம் தண்ணீரைப்போல் தானாக உன் காலடியில் வந்து கொட்டும்.

சீடர்: சரி நீங்கள் சொல்வதுபோல் தேவை யான பணம் கிடைத்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். அதை வைத்துக்கொண்டு நற்பணியை ஆரம்பிக்கிறீர்கள். அதனால் பெரிதாக என்ன நடந்து விடும்! இதற்கு முன்னால் மாமனிதர்கள் பலர் பல்வேறு நற்செயல்களைச் செய்யவே செய்தார்கள். அவையெல்லாம் இப்போது எங்கே ? நீங்கள் செய்யப்போகும் பணிகளுக்கும் கட்டாயம் அதே கதிதான் ஏற்படும். அப்படியென்றால் அத்தகைய முயற்சியால் என்ன பயன்?

சுவாமிஜி: எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பவனால் எந்தக் காரியமும்செய்ய முடியாது. உண்மையானது, நல்லது என்று நீ எதனைப் புரிந்துகொண்டாயோ அதனை உடனே நிறைவேற்று எதிர்காலத்தில் இது வருமா இது வராமல் போகுமா என்று கணக்குப் பார்ப்பதில் என்ன பயன் ? வாழ்க்கை மிகவும் குறுகியது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ன பலன் விளையும் என்றெல்லாம் கணக்கிட்டுக் கொண்டிருந்தால் எதையாவது சாதிக்க முடியுமா? கடவுள் ஒருவர் தான் பலன்களைத் தருபவர் அதை அவரிடம் விட்டுவிட்டு எல்லா வேலைகளையும் செய். பலன்களைக் கணக்கிடுவதில் நீ என்ன பெறப் போகிறாய்? அந்த வழியைப்பின்பற்றாதே. எப்போதும் வேலை செய்துகொண்டே இரு.

இவ்வாறு பேசிக்கொண்டு வந்தபோது வண்டி தோட்ட வீட்டை அடைந்தது. சுவாமிஜியைப் பார்ப்பதற்காகக் கல்கத்தாவிலிருந்து பலர் அங்கு வந்திருந்தார்கள். சுவாமிஜி வண்டியிலிருந்து இறங்கி அறைக்குள் சென்று இருக்கையில் அமர்ந்தார் எல்லோரிடமும் பேச ஆரம்பித்தார். அவருடைய மேலை நாட்டுச் சீடரான குட்வின் அவரது பக்கத்தில் சேவையே வடிவானார் போல் நின்றிருந்தார். சீடர் முன்பே அவரிடம் பழகி இருந்தார். எனவே அவரிடம் சென்றார். இருவரும் சுவாமிஜியைப் பற்றிய பல்வேறு கருத்துக்களைப் பேசத்தொடங்கினார்.

மாலையில் சுவாமிஜி சீடரை அழைத்து, நீ கடோப நிடதத்தை மனப்பாடம் செய்திருக்கிறாயா? என்று கேட்டார்.

சீடர்: இல்லை சுவாமிஜி, சங்கரரின் விளக்கவுரையுடன் படித்துருக்கிறேன்.

சுவாமிஜி: உபநிடதங்களில் அதைப்போல் அவ்வளவு அழகியது வேறு எதுவும் இல்லை. நீங்கள் எல்லோரும் அதை மனப்பாடம் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வெறுமனே படிப்பதால் என்ன பயன் அதில் வரும் நசிகேதனின் நம்பிக்கை, தைரியம் விவேகம் துறவு முதலியவற்றை வாழ்வில் கடைப்பிடிக்க முயற்சி செய்.

சீடர்: அதை அடைய அருள்கூர்ந்து என்னை ஆசீர்வதியுங்கள்.

சுவாமிஜி; நீ ஸ்ரீராமகிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறாய் அல்லவா! கருணைக் காற்று ஏற்கனவே வீசிக் கொண்டுதான் இருக்கிறது. நீ பாயை விரி என்பார் அவர். அனுபூதியை யாராவது யாரிடமாவது திணிக்க முடியுமா, மகனே! ஒருவனின் விதி அவனது கையில் தான் இருக்கிறது குரு இதைப் புரிந்து கொள்ளும்படிச் செய்கிறார், அவ்வளவுதான். விதையின் சக்திதான் மரமாக வளர்கிறது. காற்றும் தண்ணீரும் அதற்கு வெறும் உதவி மட்டுமே செய்ய முடியும்.

சீடர்: இருந்தாலும் புற உதவி ஒன்று தேவையாகத் தான் இருக்கிறது.

சுவாமிஜி: ஆம் அது உண்மைதான். ஆனால் உன்னுள் சாரம் எதுவும் இல்லையென்றால் எவ்வளவு புறஉதவிகளும் எந்தப் பலனையும் தராது என்பதைப் புரிந்து கொள் இருந்தாலும் ஒவ்வொருவரும் ஆன்ம அனுபூதி பெறும் ஒரு காலம் வரவே செய்கிறது. ஏனெனில் ஒவ்வொருவரும் பிரம்மம். உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாடுகள் எல்லாம் அதன் வெளிப்பாட்டின் அளவிலுள்ள வேற்றுமையே. காலம் வரும்போது ஒவ்வொருவரிடமும் அது பூரணமாக வெளிப்படுகிறது. அதனால் தான் சாஸ்திரங்கள் காலேனாத்மனி விந்ததி - உரிய காலத்தில் அதுதனது ஆன்மாவில் உணரப்படுகிறது என்று கூறுகின்றன.

சீடர்: அந்த நாள் என்று வரும்? சுவாமிஜி, எத்தனையே பிறவிகள் அறியாமை இருளில் உழல வேண்டும் என்றல்லவா சாஸ்திரங்கள் கூறுகின்றன!

சுவாமிஜி: ஏன் அந்தப் பயம் நீ இங்கே வந்து விட்டதால் இந்தப் பிறவியிலேயே லட்சியத்தை அடைவாய். முக்தி ஆகட்டும், சமாதி ஆகட்டும், இவையெல்லாம் பிரம்மம் வெளிப்படுவதற்குத் தடையாக உள்ளவற்றை நீக்குவதுதான். ஆன்மா சூரியனைப்போல் எப்போதும் பிரகாசித்துக்கொண்டுதான் இருக்கிறது. அறியாமை என்னும் மேகம் அதை மறைத்துக் கொண்டிருக்கிறது,அவ்வளவுதான். மேகத்தை விலக்குங்கள். சூரியன் வெளிப்படும். அதன் பிறகு நீ பித்யதே ஹ்ருதய க்ரந்தி: - இதய முடிச்சுக்கள் அவிழ்ந்தன என்னும் நிலையை அடையலாம். வழியில் உள்ள தடைகளை அகற்றுமாறுதான் நீ காண்கின்ற பல்வேறான பாதைகளும் கூறுகின்றன. தான் எந்த வழியில் ஆன்மாவை உணர்கிறானோ, அந்த வழியையே ஒருவன் எல்லோருக்கும் சொல்கிறான். ஆனால் எல்லா வழிகளின் முடிவும் இந்த ஆன்ம ஞானம் தான், ஆன்ம அனுபூதிதான். அதைப் பெறுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் சம உரிமை இருக்கிறது. இந்தக் கருத்தை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

சீடர்:சுவாமிஜி , சாஸ்திரங்களின் இத்தகைய கருத்துக்களைப் படிக்கும் போது கேட்கும் போது இன்னும் ஆன்மாவை உணரவில்லையே என்ற எண்ணம் எழுந்து மனத்தை வாட்டுகிறது.

சுவாமிஜி : இதுதான் ஏக்கம் என்று சொல்லப்படுவது. இது வளரும் அளவிற்குத் தடைகள் விலக்கப்படுகின்றன: திடநம்பிக்கை உருவாகிறது: படிப்படியாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் ஆன்மா உணரப்படுகிறது. இந்த அனுபூதிதான் மதத்தின் சாரம். சில விதிகளையும் சடங்குகளையும் எல்லோரும் பின்பற்றலாம்: விதிக்கப்பட்டவற்றை நிறைவேற்றவும் ஒதுக்கப்பட்டவற்றை விலக்கவும் செய்யலாம். ஆனால் அனுபூதிக்கான இந்த ஏக்கம் மிகச் சிலரிடமே காணப்படுகிறது. இறையனுபூதிக்காக ஆன்ம அனுபூதிக்காகப் பித்துப் பிடிக்கின்ற இந்தத் தீவிர ஏக்கம்தான் உண்மையான ஆன்மீகம் கண்ணனுக்காக கோபியர் மனத்தில் எழுந்த கட்டற்ற அந்த வெறி ஆம் ஆன்மாவை உணர்வதற்கு அத்தகைய தீவிர ஏக்கமே வேண்டும். கோபியர் மனத்திலும்கூட ஆண் பெண் என்ற வித்தியாசம் சிறிதளவு இருக்கவே செய்தது. உண்மையான ஆன்ம ஞானத்தில் பால்வேற்றுமை சிறிதும் இல்லை.

இவ்வாறு பேசிக்கொண்டே(ஜயதேவரின்) கீத கோவிந்தம் பேசத்தொடங்கினார் சுவாமிஜி.

ஜயதேவரின் பாடல்களில் உணர்ச்சி வேகத்தைவிட ஓசைநயம் அதிகமாக இருந்தாலும் சம்ஸ்கிருத மொழியின் மிகச் சிறந்த கடைசிக் கவிஞர் அவர் காதல் , ஏக்கம் இவற்றின் உச்ச நிலையை பததி பதத்ரே என்ற பாடலில் எப்படி விளக்குகிறார், பார் ஆன்ம அனுபூதிக்கு அத்தகைய காதல் தேவை. இதயம் ஏங்கித் துடிக்க வேண்டும்.

இப்போது கண்ணனின் விளையாட்டு மயமான பிருந்தாவன வாழ்விலிருந்து குரு÷க்ஷத்திர வாழ்விற்கு வருவோம். அதுவும் கூட எவ்வளவு தூரம் மனத்தைக்கவர்வதாக உள்ளது. பேரின்பம் அமளிதுமளி எத்தனை பயங்கர மான காட்சி அந்தப் பெரும் கூச்சல் களுக்கிடையே அவர் எப்படி அமைதியாக சமமான மனநிலையில் இருக்கிறார்.அந்தப் பயங்கரப் போர்க்களத்தில் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்து க்ஷத்திரிய தர்மப்படிஅவனைப் போர் புரியத் தூண்டுகிறார். இந்தப் பயங்கரப்போரை நிகழ்த்துகின்ற ஒருவராக இருந்தும் அதில் பற்றற்று இருக்கிறார் - அவர் ஆயுதங்களைத் தொடவே இல்லை. நீ எந்த நிலையிலிருந்து பார்த்தாலும் ஸ்ரீகிருஷ்ணரின் குணங்கள் நிறைநிலையில் இருப்பதைக் காண்பாய். ஞானம், கர்மம் பக்தி, யோகம் என்று எல்லாவற்றின் வடிவமாக அவர் திகழ்கிறார். இந்தக் காலத்தில் அவரது இந்த நிலையை ஆழ்ந்து படிக்க வேண்டும். கையில் குழலை ஏந்தியுள்ள பிருந்தாவனக் கண்ணனைத் தியானம் செய்வது இந்தக் காலத்திற்குப் போதாது: அது மனிதனுக்கு நற்கதியைக் கொண்டு வராது. இப்போது தேவையானது சிங்ககர்ஜனையான கீதையை முழங்கி நிற்கின்ற குரு÷க்ஷத்திரக்கண்ணனையும், வில்லையும் அம்பையும் கையில் தாங்கியிருக்கின்ற ராமனையும் அனுமனையும் காளியையும் வழிபடுவதே. அப்போதுதான் மக்கள் மன உறுதியோடும் பேராற்றலுடனும் காரியங்களைச் செய்வார்கள். நான் ஆராய்ந்ததில் இப்போது இந்த நாட்டில் மதம் மதம் என்று முழங்குபவர்களுள் பெரும்பாலானோர் பலவீனத்தால் இறுகிப் போனவர்களாக மூளை குழம்பியவர்களாக அல்லது கொள்கைவெறியர்களாக இருப்பதையே காண்கிறேன். மிக அதிக அளவில் ரஜோ குணத்தை வளர்ச்சி யடையச் செய்யாமல் இந்த உலகத்திலோ மறு உலகத்திலோ உங்களுக்கு எதுவும் கிடைக்காது. இந்தநாடு முழுவதுமே ஆழ்ந்த தமோ குணத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த வாழ்வில் அடிமைத்தனமும் அடுத்த உலகில் நரகமும் தான் அதன் இயற்கையான விளைவு.

சீடர்: மேலை நாட்டினரிடம் ரஜோகுணம் அதிகமாக இருப்பதால் அவர்கள் படிப்படியாக சாத்வீக நிலையை அடைவார்கள் என்று நினைக்கிறீர்களா?

சுவமாஜி : நிச்சயமாக மிக அதிகமான ரஜோ குணத்தைப் பெற்றதால் அவர்கள் போகத்தின், இன்பம் அனுபவிப்பதன் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டார்கள். அவர்கள் அல்லாமல் ஒரு சாண் வயிற்றிற்காக அல்லாடிக்கொண்டிருக்கின்ற நீங்களா யோகத்தை அடையப் போவதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? மிகமிக நேர்த்தியான அவர்களது இன்ப அனுபவத்தைக் காணும்போது, வித்யுத்வந்தம் லலித வஸனா என்ற மேகதூதப் பாடல்தான் என் நினைவிற்கு வருகிறது. உங்கள் இன்பமோ, சிறை போன்ற அறைகளில் கந்தைப் பாயில் படுத்துக் கொண்டு ஆண்டுதோறும் இனவிருத்தி செய்து கொண்டு பசியால் துடிக்கும் பிச்சைக்காரர்களையும் அடிமைகளையும் உற்பத்தி செய்வதில் தான் இருக்கிறது! அதனால் தான் ரஜோகுணத்தின் தூண்டுதலால் மக்கள் ஆற்றலோடும் சுறுசுறுப்பாகவும் செயலில் ஈடுபட வேண்டும் என்று நான் கூறுகிறேன். வேலை , வேலை, வேலை; நான்ய: பந்தா வித்யதேறயனாய - இதைத் தவிர முக்திக்கு வேறு வழியே இல்லை.

சீடர்; சுவாமிஜி ,நம் முன்னோர்கள் இத்தகைய ரஜோ குணத்தைப் பெற்றிருந்தார்களா?

சுவமாஜி; ஏன் அவர்கள் பெறவில்லை? அவர்கள் பல நாடுகளில் நமது குடியேற்றங்களை அமைத்ததையும் திபெத், சீனா, சுமத்திரா, ஏன் , தொலைவில் உள்ள ஜப்பானுக்குக்கூட பிரச்சாரகர்களை அனுப்பியதையும் வரலாறு கூறவில்லையா? முன்னேற்றம் அடைய, ரஜோகுணத்தின் மூலமாக அல்லாமல் வேறு ஏதாவது வழி இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? 

பேச்சு இப்படி நடந்துகொண்டே இருந்தபோது இரவு கவியலாயிற்று. அப்போது மிஸ். முல்லர் அங்கு வந்தார். ஆங்கிலேயப் பெண்ணான அவர் சுவாமி ஜியிடம் அளவற்ற பக்தி கொண்டவர். சுவாமிஜி சீடரை அவருக்கு அறிமுகம் செய்தார். சிறிது நேரப் பேச்சிற்குப் பிறகு மிஸ் முல்லர் மாடிக்குச் சென்றார்.

சுவாமிஜி: அவர்கள் எத்தகைய வீரம் மிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள், பார். அவளது வீடு எவ்வளவு தொலைவில் இருக்கிறது. அவள் ஒரு பெரிய செல்வந்தரின் மகள். ஆன்மீக லட்சியத்தை அடைவதற்காக, அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு எவ்வளவு தொலைவு வந்திருக்கிறாள்! பார்!

சீடர்: ஆமாம் உங்கள் வேலைகள் விசித்திரமாக இருக்கின்றன. எத்தனையோ மேலை நாட்டு ஆண்களும் பெண்களும் உங்களுக்குச் சேவை செய்ய எவ்வளவு ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். இந்த காலத்தில் உண்மையில் இது மிகவும் அதியம் தான்

சுவமாஜி (தமது உடலைக் காட்டி): இந்த உடம்பு நீண்டகாலம் வாழுமானால் நீ மேலும் பல அதிசயங்களைப் பார்ப்பாய். பரந்த இதயமும் ஆற்றலும் நிறைந்த சில இளைஞர்கள் எனக்குக் கிடைப்பார்களானால் நான் இந்த நாடு முழுவதையுமே ஒரு கலக்கு கலக்கி விடுவேன். அத்தகைய சிலர் சென்னையில் இருக்கிறார்கள். ஆனால் வங்களாத்தில் நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். இத்தகைய தெளிந்த அறிவு பெற்றவர்களை எந்த நாட்டிலும் காண்பது அரிது. ஆனால் அவர்களுடைய உடம்பில் தெம்பு இல்லை. அறிவும் உடம்பும் சமச்சீராக வளர வேண்டும் . இரும்பைப் போன்ற நரம்புகளும் சற்றே கூர்த்த அறிவும் இருந்தால் உலகமே உன் காலடியில் இருக்கும்.

சுவமாஜியின் இரவு உணவு தயாராகிவிட்டது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. சுவாமி ஜி சீடரிடம், வா வந்து நான் என்ன சாப்பிடுகிறேன் என்று பார் என்று கூறினார்! பின்னர் சாப்பிட்டுக்கொண்டே சீடரிடம், எண்ணெய் மற்றும் காரப் பொருட்களைச் சாப்பிடுவது நல்லதல்ல. லூச்சியை (பூரி) விடச் சப்பாத்தி நல்லது. லூச்சி, நோயாளிகளின் உணவு.மீன், இறைச்சி, புதிய காய்கறிகளைச் சாப்பிடு. இனிப்பைக் குறைத்துக் கொள் என்று கூறினார். இப்படிப் பேசியவாறே இருந்த அவர், என்னப்பா நான் எத்தனை சப்பாத்தி சாப்பிட்டேன்! இன்னும் சாப்பிட வேண்டுமா? என்று கேட்டார். எத்தனை சப்பாத்தி சாப்பிட்டோம் என்ற உணர்வுகூட இல்லை. பேசும் போது உடலுணர்வு அவ்வளவு தூரம் அவரை விட்டுப் போய்விட்டது.

மேலும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு சுவாமிஜி உணவை முடித்துக் கொண்டார். சீடரும் விடைபெற்றுக் கல்கத்தா திரும்பினார். வண்டி எதுவும் கிடைக்காததால் அவர் நடக்க வேண்டியதாயிற்று நாளை சுவாமி ஜியைப் பார்க்க எவ்வளவு சீக்கிரமாக வர முடியும் என்று நினைத்தபடியே நடந்து சென்றார் அவர்.

மேலை நாட்டிலிருந்து திரும்பிய சுவாமிஜி சில நாட்கள் காசிப்பூரிலுள்ள கோபால்லால் சீலின் தோட்டத்தில் தங்கியிருந்தார். கல்கத்தாவிலுள்ள படாபஜாரில் வாழும் சில பிரபலமான பண்டிதர்கள் சுவாமிஜியிடம் வாதம் புரிவதற்காக ஒரு நாள் வந்திருந்தனர். அன்று சீடரும் அங்கிருந்தார்.

அந்தப் பண்டிதர்கள் சம்ஸ்கிருதத்தில் சரளமாகப் பேச வல்லவர்கள். அவர்கள் வந்து சுமாமிஜியை வணங்கி விட்டு வட்டமாக அவரைச் சுற்றி அமர்ந்தனர். சம்ஸ்கிருதத்தில் உரையாடல் தொடங்கியது. அன்று விவாதம் நிகழ்ந்த பொருள் என்ன என்பதைச் சீடர் மறந்துவிட்டார். ஆனால் அந்தப் பண்டிதர்கள் உரத்தக் குரலெழுப்பி, கேட்டு தத்துவப் பகுதியிலிருந்து சில நுட்பமான கேள்விகளைக் கேட்டு சுவாமிஜி யைத் திணறிடிக்க முயன்றனர். சுவாமிஜி அவற்றிற்கெல்லாம் அமைதியாக பதிலளித்தது மட்டும் சீடரின் நினைவில் உள்ளது. 

இந்த வாதத்தில் சுவாமிஜி முடிவுகளை நிலைநிறுத்துவதாகிய சித்தாந்த பட்சத்தையும், பண்டிதர்கள் கேள்விகளைக் கேட்பதாகிய பூர்வபட்சத்தையும் சார்ந்திருந்தனர் வாதம் நடந்து கொண்டிருக்கும் போது சுவாமிஜி ஓரிடத்தில் ச்வஸ்தி என்பதற்குப் பதிலாக அஸ்தி என்னும் சொல்லைக் கூறி விட்டார். பண்டிதர்கள் உரக்கச் சிரித்தனர். உடனே சுவாமிஜி பணிவோடு பண்டிதானாம் தாஸோஹம் க்ஷந்தவ்யமேதத் ஸ்கலனம் - நான் பண்டிதர்களின் அடிமை இந்தப் பிழையைப் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார் பண்டிதர்கள் சுவாமிஜியின் பணிவைக் கண்டு வியந்தனர். நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு அவர்கள் சுவாமிஜியின் கருத்துக்களே சரி என்பதை ஒத்துக்கொண்டு வணங்கி விடைபெற்றனர்

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,