சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்-2

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்-2
---------------------------------

கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்தியாவில் சீர்திருத்தமன்றங்களும் க்காரர்களும் நீர்க்குமிழிகளைப் போலத் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தோ! அவர்களின் ஒவ்வொருவரும் தோல்வியே அடைந்திருக்கின்றனர். சீர்திருத்தத்தின் இரகசியம் எங்கே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.

அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நமது சமுதாயத்திலுள்ள எல்லாத் தீமைகளையும் மதத்தின் மேலேயே அவர்கள் சுமத்தி விட்டார்கள். தன் நண்பனின் நெற்றியிலே உட்கார்ந்த கொசுவைக் கொல்வ தற்காக ஒருவன் முயற்சி செய்தான். அவன் கொடுத்த பலமான அடிகள் மனிதனையும் கொசுவையும் சேர்த்தே கொன்று விட்ட கதையைப் போல இந்தச் சீர் திருத்த முறைகளும் அமைந்துவிட்டன. ஆனால் இந்த முயற்சியில் அதிர்ஷ்டவசமாக அசைக்க முடியாத ஒரு பெரிய பாறையின் மீதே மோதிக் கொண்டார்கள். மோதலினால் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியே அவர்களை நசுக்கி அழித்துவிட்டது சுயநலம் இல்லாத உயர்ந்த ஆனால் அதே சமயத்தில் தவறான வழியில் சென்ற அந்தச் சீர்திருத்தக்காரர்களின் புகழ் வாழட்டும். உறங்குகிற கும்பகர்ணனை எழுப்புவதற்கு அந்தப் பெரிய அதிர்ச்சிகளெல்லாம் தேவைப்பட்டன.

ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் அழிவு வேலைகளைச் சேர்ந்தவையே ஆகும்; ஆக்கப்பணிகள் ஆகிவிடா.இந்தக் காரணத்தால் தான் அந்த முயற்சிகள் எல்லாம் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. எனவே தான் அவை யாவும் அழிந்து போயிருக்கின்றன. நாம் அவர்களை வாழ்த்து வோமாக அவர்களின் அனுபவத்தின் மூலமாக நாம் பயனடைவோம். ..


.....சுவாமி விவேகானந்தர்



எப்போது பரந்த இதயம் படைத்த நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்க்கையின் ஆடம்பரங்களையும் எல்லா இன்பங்களையும் துறந்துவிட்டு ஆதரவற்ற நிலை அறியாமை ஆகிய நீர்ச்சுழலில் சிறிது சிறிதாக மிகக் கீழ் நிலைக்கு மூழ்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டு கோடானுகோடி மக்களின் நல்வாழ்விற்காக வருந்தித் தங்களின் முழு ஆற்றலையும் செலுத்தி உழைக்க முன்வருவார்களோ அப்போதுதான் இந்தியா விழித்தெழும்.


.....சுவாமி விவேகானந்தர்



மிருகபலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக அமைதி அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும் ..... புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள் இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன் அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.

.....சுவாமி விவேகானந்தர்



எனது அருமைக் குழந்தைகளே! முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியைப் பெற்றிருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை. போலித் தன்மை யினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்க வில்லை. ஆனால் உண்மையான மதத்தின் தலைசிறந்த சமய போதனையாகவும் மிகவும் உயர்ந்த ஆன்மிக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிருக்கிறது. ஆகையால் தான் பலவிதமான இன்ப துன்பங்களில் இருந்தும் இன்று வரையிலும் கடவுள் இந்தியாவைப் பாதுகாத்து வைத்திருக்கிறார், இப்போது அதற்கு உரிய சரியான நேரம் வந்து விட்டது.

எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்துநின்று வேலை செய்யுங்கள்.

.....சுவாமி விவேகானந்தர்



ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்.

.....சுவாமி விவேகானந்தர்



நமது நாட்டின் உயிர் வாழக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் சாம்பல் பூத்து இறந்து விட்டதைப் போலக் காணப்படுகிறது. ஆனால் அதன் அடியில் நெருப்பைப் போன்று அது இன்றும் கனன்று எரிந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டின் வாழ்க்கை மதத்தில்தான் அமைந்திருக்கிறது. அதன் மொழியும் மதம்தான் ; மதமே அதனுடைய கருத்துக்கள்; அதனுடைய அரசியல் சமுதாயம் நகராட்சி மன்ற அமைப்புக்கள் , பிளேக் தடுப்பு வேலைகள், பஞ்ச நிவாரணப்பணிகள் ஆகிய இவை எல்லாமே மதத்தின் மூலமாகத்தான் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. இனி மேலும் அப்படியே நடத்தப்பட வேண்டும். அவ்விதம் இந்தப் பணிகள் நடத்தப்படாவிட்டால் எனது நண்பரே உம்முடைய எல்லாக் கூச்சல்களும் புலம் பல்களும் ஒன்றுமே இல்லதாமல் பயனற்ற வையாக முடிந்து போகும்.

.....சுவாமி விவேகானந்தர்



மற்ற நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக் காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா? அவள் அறிவாற்றலில் குறைந்தவளா? அல்லது திறமையில் தான் குறைந்தவளா? அவளுடைய கலை கணித அறிவு தத்துவங்கள் ஆகிய இவற்றைப் பார். பிறகு அறிவாற்றலில் இந்திய அன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இந்த ஒன்றுதான். உலக நாடுகளின் முன்னணியில் தனக்கு உரிய உயர்ந்த இடத்தை அவள் திரும்பப் பெறுவதற்குத் தேவை யாகும்.... துறவும் தொண்டுமே இந்தியாவின் இலட்சியங்கள் இந்தப் பாதையிலே மேலும் மேலும் . அவளை ஈடுபடுத்துங்கள். மற்றவை தாமாக வந்து சேரும்.     

.....சுவாமி விவேகானந்தர்


எனது அருமைச் சகோதரா! ஒரு பழைய கைவிளக்கை எடுத்துக்கொண்டு இந்தப் பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள் பட்டி தொட்டிகள் காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின்தொடர்கிறேன். உன்னால் முடியுமானால் , (இந்தியாவில் வாழ்ந்தவர்கள் போல)இப்படிப்பட்ட தலை சிறந்த மகான்களை வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு பார்க்கலாம்.

----சுவாமி விவேகானந்தர்




இரசாயனமும் இயற்கை விஞ்ஞானமும் எப்படி இந்தப் பௌதிக உலகம் பற்றிய உண்மைகளைக் கையாள்கின்றனவோ, அதைப் போலவே மதம் அரிய தத்துவ உண்மைகளைக் கையாள்கிறது. ஒருவன் இரசாயனத்தைக் கற்க இயற்கை என்னும் புத்தகத்தைப் படிக்க வேண்டும். உன்னுடைய மனம், இதயம் ஆகியவைதாம் மதத்தைக் கற்பதற்கு நீ படிக்க வேண்டிய நூல்களாகும்.

ஞானி பெரும்பாலும் பௌதிக விஞ்ஞானம் பற்றித் தெரியாதவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் தமக்குள் இருக்கும் புத்தகத்தைப் படிக்ககிறார். அது பௌதிக விஞ்ஞானத்தைத் தெரிந்து கொள்வதற்குத் தவறான புத்தகமாகும்.

விஞ்ஞானியுங்கூடப் பெரும்பாலும் மதத்தைப் பற்றித் தெரியாதவராக இருக்கிறார். ஏனென்றால் அவருங்கூடத் தவறான புத்தகத்தையே படிக்கிறார்; அதாவது அவர் தமக்கு வெளியே உள்ள புத்தகத்தைப் படிக்கிறார்.

----சுவாமி விவேகானந்தர்




சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்தபோதும் அறவே சுயநலம் இல்லா தவனாக இருக்கலாம். அப்போது அவன் கடவுளிடமே இருக்கிறான். மற்றொருவன் குடிசையில் வாழ்ந்து கந்தைத் துணியை உடுத்துபவனாக இருக்கலாம் . அவனுக்கு உலகின் செல்வம் எதுவுமே இல்லாமலிருக்கலாம். அப்படி இருந்தும் அவன் சுயநலம் உடையவனாக இருந்தால் அவன் இலௌகிகத்தில் ஒரேடியாக மூழ்கியவனே ஆவான்.

----சுவாமி விவேகானந்தர்




உங்கள் விதி உங்கள் கைகளில் இருக்கிறது.

உங்களுடைய சொந்த வினை தான் உங்களுக்காக இந்த உடம்பை உற்பத்தி செய்திருக்கிறது. உங்களுக்காக இதை வேறு யாரும் செய்யவில்லை .

எங்கும் நிறைந்த கடவுள் அறியாமை காரணமாக மறைந்துள்ளார். பொறுப்பு உங்களிடமே; உங்கள் விருப்பம் இல்லாமல் இந்த உலகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, இந்த பயங்கரமான இடத்தில் நீங்கள் விடப்பட்டு இருப்பதாக எண்ணாதீர்கள். நீங்களே உங்கள் உடம்பை உருவாக்கினீர்கள்; இப்போது உருவாக்கிக் கொண்டிருப்பதைப் போலவே சிறிதுசிறிதாக உருவாக்கினீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்களே உண்கிறீர்கள், உங்களுக்காக வேறு யாரும் சாப்பிட முடியாது. உண்டதை நீங்களே செரிக்கிறீர்கள், வேறு யாரும் அதைச் செய்ய முடியாது. ரத்தம், தசை, உடம்பு முதலியவற்றை அந்த உணவிலிருந்து நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள், வேறு யாரும் அதை உங்களுக்காகச் செய்ய முடியாது. நீங்கள் தான் இவற்றை எப் போதும் செய்து வருகிறீர்கள்.

----சுவாமி விவேகானந்தர்



ஆன்மாவின் இயல்பை அறியும்போது சிறிதும் வலிமையற்றவர்களுக்கும் மிகவும் இழிவானவர்களுக்கும் , மிகவும் துன்பப்படும் பாவிகளுக்கும் கூட நம்பிக்கை வருகிறது. நம்பிக்கை இழக்காதீர்கள் என்றே நம் சாஸ்திரங்களும் முழங்குகின்றன. நீ என்ன செய்தாலும் நீதான் உன் இயல்பைக் மாற்ற உன்னால் முடியாது. இயற்கையே இயற்கையே அழிக்க முடியாது. உங்கள் இயல்பு தூய்மை. அது லட்சக்கணக்கானயுகங்களாக மறைக்கப்பட்டு இருக்கலாம்.ஆனால் இறுதியில் அது வென்று மேலே வந்தேதீரும்.

----சுவாமி விவேகானந்தர்




அச்சம் எதனால் உண்டாகிறது? நம் சொந்த இயல்பை அறியாததால்தான். நாம் ஒவ்வொருவரும் அரசர்களுக்கெல்லாம் பேரரசரின் வாரிசுகள். நாம் கடவுளின் அம்சமே, அல்ல அல்ல வேதாந்தத்தின் படி நாம் கடவுளே. சிறிய மனிதர்களாக நம்மை நினைத்து, அதனால் சொந்த இயல்பை மறந்திருந்தாலும் நாம் கடவுளே. அந்த இயல்பு நிலையிலிருந்து நாம் வழுவி விட்டோம். அதனால் நான் உன்னைவிடச் சிறிது மேலானவன் அல்லது நீ என்னை விட மேலானவன் என்றெல்லாம் வேற்றுமைகளைக் காண்கிறோம். இந்த ஒருமைக் கருத்துதான் இந்தியா உலகிற்குத் தர வேண்டிய மகத்தான பாடம் நன்றாக கவனியுங்கள் இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டால் பொருட்களின் தன்மையையே இது மாற்றிவிடும். ஏனெனில் அப்போது நீங்கள் உலகத்தை இதுவரை பார்த்துவந்த கண்ணோட்டத்தில் இருந்து வேறான கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள்.

----சுவாமி விவேகானந்தர்



        

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,