மாயையும் கடவுள் தத்துவத்தின் வளர்ச்சியும்!

மாயையும் கடவுள் தத்துவத்தின் வளர்ச்சியும்!
மாயை பற்றிய கொள்கையை அத்வைத வேதாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று எனலாம். இந்தக் கொள்கையின் வித்து எவ்வாறு சம்ஹிதையில் காணப்படுகிறது என்பதை ஏற்கனவே கண்டோம். உண்மையில், உபநிடதங்களில் விரிவாகக் காணப்படும் எல்லா கருத்துக்களுமே சம்ஹிதைகளில் ஏதோ ஒருவிதத்தில் இருக்கவே செய்கின்றன. இப்போது உங்களில் பலரும் மாயைபற்றி அறிந்து விட்டீர்கள்.

மாயை என்பது பொய்த் தோற்றம் என்று சிலவேளைகளில் விளக்கப்படுகிறது. இது தவறு. பிரபஞ்சம்தான் மாயை என்னும்போது, இந்த விளக்கத்தின்படி பிரபஞ்சமே பொய்த் தோற்றம் என்று பொருள் கொள்ள வேண்டியிருக்கும். மாயையின் இந்த விளக்கம் சிறந்ததல்ல. சரியானது அல்ல, மாயை என்பது ஒரு கொள்கையல்ல. உலகம் உள்ளபடியே எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய நிஜங்களின் ஒரு சித்திரமே மாயை. மாயையைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு, சம்ஹிதைகளுக்கே நாம் போக வேண்டும், அந்தக் கருத்தின் வித்துநிலையிலிருந்தே தொடங்க வேண்டும்.

தேவர்களைப் பற்றிய கருத்து மக்களிடையே எப்படி வந்தது என்பதை நாம் பார்த்தோம். ஆரம்பத்தில் இந்தத் தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த உயிர்களாக மட்டுமே கருதப்பட்டார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

கிரேக்கர்கள், ஹீப்ரூக்கள், பாரசீகர்கள் முதலிய எல்லோருடைய புராணங்களிலும், அவரவர்களுடைய தெய்வங்கள் செய்திருப்பதாகச் சொல்லப்படும் செயல்கள் நமக்கு மிகவும் அருவருப்பையும் திகிலையும் தருவனவாக இருக்கின்றன. ஆனால் இந்தக் கதைகளைப் படிக்கும்போது, நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதையும், இந்தத் தெய்வங்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்டவர்கள் என்பதையும் நாம் மறந்துவிடுகிறோம்.

இன்னொரு விஷயத்தையும் நாம் மறந்துவிடுகிறோம். அதாவது இந்தத் தெய்வங்களை வழிபட்ட மக்கள் அந்தத் தெய்வங்களின் செயலிலோ இயல்பிலோ எந்த முரண்பாட்டையும் பயமளிக்கும் தன்மையையும் காணவில்லை. இதற்குக் காரணம், தங்களைப் போலவே அவர்கள் அந்தத் தெய்வங்களை உருவகித்ததுதான். நாம் நம் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இது என்பதை நான் இங்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. நம்மை உதாரணமாக வைத்தே நாம் மற்றவர்களை எடைபோடுகிறோம். அது சரியல்ல. ஒவ்வொருவரையும் அவர்களுடைய குறிக்கோளை வைத்தே எடைபோட வேண்டும். ஒருவருடைய குறிக்கோளை வைத்து மற்றொருவரை எடைபோடக் கூடாது. பிறரிடம் பழகும்போது, நாம் எப்போதும் இந்தத் தவறையே செய்து வருகிறோம்.

பிறருடைய தெய்வங்களை நமது தெய்வங்களை வைத்தும், பிறருடைய லட்சியங்களை நமது லட்சியங்களை வைத்தும், பிறருடைய நோக்கங்களை நமது நோக்கங்களை வைத்தும் எடைபோடுவதுதான். நம்மிடையே நிலவுகின்ற பெருமளவு சண்டைகளுக்கும் காரணம் என்றே நான் எண்ணுகிறேன். சில சூழ்நிலைகளில் நான் ஒரு காரியத்தைச் செய்யலாம். வேறு ஒருவர் அதே காரியத்தைச் செய்யும்போது, அவரைத் தூண்டிய நோக்கம், என்னைத் தூண்டிய நோக்கம் போன்றதே என்று நான் நினைத்துவிடுகிறேன். ஒரே காரியத்திற்குப் பல காரணங்கள் இருக்கலாம். மற்றொருவரைத் தூண்டிய நோக்கம், என்னைத் தூண்டிய நோக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம். ஆகவே பழைய மதங்களை மதிப்பிடும் விஷயத்தில், இப்பொழுது நாம் கொண்டிருக்கும் கருத்துக்களைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக, பழங்காலத்தினரின் நிலையிலும், அவர்களின் சிந்தனைகளிலும் வாழ்க்கையிலும் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும்.

பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள கொடூரமான, இரக்கமில்லாத ஜெஹோவா என்ற கடவுளைப் பற்றிய கருத்து பலருக்குப் பயத்தைக் கொடுக்கிறது. ஏன் அப்படி? கடவுளைப் பற்றிய இந்தக் காலத்துக் கருத்தோடு, பழங்கால யூதர்களின் தெய்வமான ஜெஹோவாவை ஒப்பிடுவதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாம் எப்படி நம்முடைய முன்னோர்களின் மதம் மற்றும் தெய்வக் கருத்துக்களைப் பார்த்துச் சிரிக்கிறோமோ, அதேபோல் நம் சந்ததியினரும், நமது மதம் மற்றும் தெய்வக் கருத்துக்களைக் கேலி செய்து சிரிப்பார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.

இவ்வளவு வேறுபட்ட கருத்துக்களுக்கு இடையேயும் அந்த ஒருமை என்ற தங்க நூலிழை ஓடிக்கொண்டிருக்கிறது. வேதாந்தத்தின் குறிக்கோள், இந்த நூலிழையைக் கண்டுபிடிப்பதுதான், இந்தப் பலவிதக் கருத்துக்களாகிய முத்துக்களைக் கோர்த்து நிற்கின்ற நூலிழையாக நான் இருக்கிறேன் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். இன்றைய கருத்துக்களுடன் ஒப்பிடும்போது, பண்டைய கருத்துக்கள் எவ்வளவுதான் பொருத்தம் அற்றவையாக, அருவருப்பு ஊட்டுபவையாக இருந்தாலும் இவற்றையெல்லாம் இணைக்கின்ற நூலிழையைக் கண்டுபிடிப்பது வேதாந்தத்தின் கடமை. பண்டைய கருத்துக்களைப் பண்டைய சூழ்நிலையுடன் இணைத்துப் பார்க்கும்போது அவை பொருத்தமாக, இயைபாகவே இருந்தன. இன்றைய கருத்துக்களைவிட பயங்கரமானவையாக இருக்கவில்லை என்பது தெரிய வரும். அவற்றை அவற்றின் சூழ்நிலையிலிருந்து அகற்றி, தற்காலச் சூழ்நிலைக்குப் பயன்படுத்தும்போது தான் அவற்றின் பயங்கரம் வெளிப்பட்டுத் தெரிகிறது. ஏனெனில் பண்டைய சூழ்நிலைகள் இன்று இல்லை.

பழைய யூதர்கள் புதிய, நாகரீகம் வாய்ந்த, அறிவுமிக்க யூதர்களாகவும், பழைய ஆரியர்கள் அறிவுக்கூர்மை மிக்க இந்துக்களாகவும் பரிணமித்துள்ளனர். அது போலவே ஜெஹோவாவும் தேவர்களும் பரிணமித்துள்ளனர். வழிபாடு செய்பவர்களின் வளர்ச்சியை ஏற்றுக் கொள்வதுபோல் வழிபடு கடவுளரின் வளர்ச்சியை நாம் கருத்தில் கொள்வதில்லை. இது மிகப் பெரிய தவறாகும். வழிபடுபவர்கள் முன்னேறியிருப்பது போல் தெய்வம் பற்றிய கருத்தும் முன்னேறியிருப்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. அதாவது நாம் கருத்துரீதியாக வளர்ந்திருக்கிறோம். அதுபோலவே தெய்வங்களும் கருத்துரீதியாக வளர்ந்திருக்கின்றன.

கடவுள் வளர்ச்சியடைகிறார் என்றால் உங்களுக்கெல்லாம் வேடிக்கையாக இருக்கும். அவர் வளர முடியாது. அவர் மாற்றமில்லாதவர். அதேநோக்கில் உண்மையான மனிதனும் ஒருபோதும் வளர்வதில்லை. ஆனால் மனிதர்கள் கடவுளைப்பற்றிக் கொண்டிருக்கும் கருத்துக்கள், தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றன, விரிவடைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுள்ளும் உள்ள உண்மையான மனிதன் அசைவற்றவன்; மாற்றமற்றவன். தூயவன்; எப்போதும் பரிபூரணன். இதனைப் பின்னால் நாம் பார்க்கலாம்,. அதுபோலவே கடவுளைப்பற்றிய நமது கருத்து நமது அறிவின் ஒரு வெளிப்பாடு மட்டுமே, நமது படைப்பு மட்டுமே. இதற்குப் பின்னால்தான் ஒருபோதும் மாறாத, எப்போதும் தூய்மையான, அசைவற்ற கடவுள் இருக்கிறார். வெளிப்பாடுகள் தங்கள் பின்னால் உள்ள மாறாத உண்மையை மேலும் மேலும் வெளிப்படுத்தியவாறே தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த உண்மையை அதிகமாக வெளிப்படுத்தும்போது, முன்னேற்றம் என்றும், அதிகமாக மறைக்கும்போது பின்னோக்கிச் செல்வதாகவும் கூறுகிறோம். ஆகவே தெய்வங்களின் வளர்ச்சி நம் வளர்ச்சியோடு தொடர்புடையதாகவே இருக்கிறது. பரிணாம வளர்ச்சியின்மூலம் நம்மை நாம் வெளிப்படுத்திக் கொள்வதுபோல் தெய்வங்களும் பரிணாம வளர்ச்சியின் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதாகத்தான், சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்குத் தெரிகிறது.

இப்போது மாயைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம்.

பிரபஞ்சத்தில் ஏன் இந்த முரண்பாடுகளும் தீமைகளும் நிறைந்திருக்கின்றன என்ற பிரச்சினையைப் பற்றி விவாதிக்கவே உலகத்திலுள்ள எல்லா மதங்களும் முயல்கின்றன. ஆரம்பக்கால மனிதனின் மதக் கருத்துக்களில் இந்தப் பிரச்சினை இல்லை. ஏனெனில் அவனுக்கு இந்த உலகம் முரண்பாடு உடையதாகத் தெரியவில்லை. சூழ்நிலைகளில் முரண்பாட்டை அவன் காணவில்லை; கருத்து வேற்றுமைகள் இல்லை, நன்மை, தீமைகளுக்கு இடையில் போராட்டமில்லை. இதைச் செய், இதைச் செய்யாதே என்று கட்டளையிட்டுக் கொண்டிருந்த ஏதோவொரு உணர்ச்சி மட்டுமே அவனிடம் இருந்தது. ஆரம்பக்கால மனிதன் அகத் தூண்டுதலால் மட்டுமே இயங்கி வந்தான். அவனுக்குத் தோன்றியதை அவன் செய்தான். தோன்றிய எண்ணங்களை உடலின்மூலம் செயலாக்க முனைந்தான். நன்மை, தீமைகளை ஆராய்ந்து நடக்கவோ, அகத் தூண்டுதலை அடக்கவோ அவன் முயலவில்லை.

ஆரம்பக்கால மக்களுடைய தெய்வங்களும் இவ்வாறு இயல்புணர்ச்சியின்படி நடப்பவர்களாகவே இருந்தார்கள். இந்திரன் வருகிறான். அசுரப்படைகளை அழிக்கிறான். ஜெஹோவாவுக்கு ஒருவரைப் பிடிக்கிறது. ஒருவரைப் பிடிப்பதில்லை. அது ஏன் என்பது யாருக்கும் தெரியாது, யாரும் அதைக் கேட்பதில்லை. ஆராய்ச்சி என்ற ஒன்று அப்போது தோன்றாததால் ஜெஹோவா செய்ததெல்லாம் சரியென்றே அவர்களுக்குப் பட்டது. நன்மை தீமைகளைப் பற்றிய கருத்தே அப்போது இல்லை.

நம்முடைய நோக்குப்படி பார்த்தால், தேவர்கள் பல அக்கிரமங்களைச் செய்திருக்கிறார்கள். இந்திரனும் தேவர்களும் அடிக்கடி பல அக்கிரமங்களைச் செய்திருந்தாலும், இந்திரனை வழிபட்டவர்களுக்கு அவை தீமைகளாக, அக்கிரமங்களாகத் தோன்றவில்லை. ஆகவே அவர்கள் அதைப்பற்றிச் சர்ச்சை செய்யவில்லை.

நீதிநெறிக் கருத்துக்களின் முன்னேற்றத்திற்குப் பிறகுதான் சண்டையே தொடங்கியது. பல்வேறு நாடுகளில், பல்வேறு மொழிகளில், பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட ஓர் உணர்ச்சி மனிதனுள் தோன்றியது. அந்த உணர்ச்சியைக் கடவுளின் குரல், சம்ஸ்காரத்தின் விளைவு என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அந்த உணர்ச்சிக்கு, மனிதனின் இயற்கையான அகத் தூண்டுதல்களை அடக்கும் சக்தி இருந்தது.

நம் மனத்தில் இருக்கும் ஓர் உணர்ச்சி செய் என்கிறது. அதற்குப் பின்னால் மற்றொரு குரல் எழுந்து, செய்யாதே என்கிறது. புலன்களின் மூலமாக வெளியே செல்வதற்காக எப்போதும் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு கருத்துக் குவியல் நம் மனத்தில் இருக்கிறது. அதற்குப் பின்னால் ஒருவேளை மிக மெல்லியதான, பலவீனமான, மிகமிகச் சன்னமான ஒரு குரல் இருந்துகொண்டு, வெளியே செல்லாதே என்கிறது. இந்த நிகழ்ச்சிகளைக் குறிக்க, சம்ஸ்கிருதத்தில் இரண்டு அழகான வார்த்தைகள் இருக்கின்றன. பிரவிருத்தி, நிவிருத்தி, அதாவது புறத்தை நோக்கிய சுழற்சி, அகத்தை நோக்கிய சுழற்சி.

சாதாரணமாக, புறத்தை நோக்கிய சுழற்சிதான் நம்முடைய செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கிறது. அகத்தை நோக்கிய சுழற்சியுடன்தான் மத உணர்வு ஆரம்பிக்கிறது. செய்யதே என்ற இதனுடன்தான் மதவுணர்வு தொடங்குகிறது. செய்யாதே என்பதுடன் தான் ஆன்மீகம் ஆரம்பிக்கிறது. இந்த செய்யாதே என்பது தோன்றாவிட்டால் மத உணர்வு தோன்றுவதில்லை. மனிதர்கள் அதுவரை வழிபட்டு வந்த போரிடும் தெய்வங்களைப் பற்றிய கருத்தையும் மீறி செய்யாதே என்ற இந்த உணர்வு வந்தது. அதனால்தான் அவர்களது கருத்துக்கள் வளர்ந்தன.

மனிதர்களுடைய இதயத்தில் துளி அளவு அன்பு துளிர்க்க ஆரம்பித்தது. அது சிறு அளவுதான் இருந்தது; இப்பொழுதும் அதிக அளவு வளர்ந்துவிடவில்லை. முதலில் அன்பு என்பது ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கிடையில் மட்டுமே பரவியிருந்தது. ஒவ்வொர் இனத்தையும் காப்பாற்ற ஒவ்வொரு தெய்வம் இருந்தார். இந்தத் தெய்வங்கள் தங்கள் இனத்திடம் மட்டுமே அன்பு செலுத்தினர். பல நாடுகளிலுள்ள பல இன மக்கள், தாங்கள், தங்கள் இனத்தைத் தோற்றுவித்தவரின் சந்ததிகள் என்று நம்புவதைப்போல், குறிப்பிட்ட இனங்களைச் சேர்ந்த மக்கள், தாங்கள், தங்கள் தெய்வங்களின் சந்ததிகள் என்று நம்பினார்கள். பழங்காலத்தில் ஏன், தற்காலத்திலும் கூட, சிலர் தங்களைத் தங்கள் இனத் தெய்வத்தின் சந்ததிகள் என்பதுடன் சூரிய சந்திரர்களின் சந்ததிகளும் கூட என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். பண்டைய சம்ஸ்கிருத நூல்களில் சூரிய சந்திர வம்சங்களில் வந்த வீரம் மிக்க சக்கரவர்த்திகளைப்பற்றிப் படிக்கிறோம். அவர்கள் முதலில் சூரிய சந்திரர்களை வழிபடுபவர்களாக இருந்தார்கள். நாளடைவில் தாங்கள் சூரிய சந்திரர்களின் சந்ததிகள் என்று நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இந்த இனக் கருத்துக்கள் வளரத் தொடங்கியவுடனே சிறிதளவு அன்பும் பிறந்தது. மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்ற உணர்வு தோன்றியது. ஒருவாறான சமூக அமைப்பு உருவாகியது. பிறகு இயற்கையாகவே பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாமல் நாம் எப்படி ஒன்றுசேர்ந்து வாழ்வது என்ற கருத்துத் தோன்றியது. அகத் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல், மனம் போன படி காரியங்களைச் செய்யாமல் இருக்காதவரை எப்படி ஒருவரோடொருவர் சேர்ந்து வாழ முடியும்? அது முடியாது. கட்டுப்பாடு என்ற கருத்து இப்படித்தான் வந்தது. கட்டுப்பாடு என்ற இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் சமுதாய அமைப்பே நிலைத்து நிற்கிறது. பொறுமை, சகிப்புத்தன்மை என்ற பாடங்களைக் கற்றுக் கொள்ளாதவர்கள் ஆணானாலும் பெண்ணானாலும், அவர்கள் துன்பம் நிறைந்த வாழ்க்கையையே நடத்த வேண்டியிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

மதத்தைப் பற்றிய இந்தக் கருத்துக்கள் தோன்றியதும் அவற்றைத் தொடர்ந்து, அவற்றைவிட உயர்ந்த, அவற்றைவிட ஒழுங்குமுறை மிக்க ஏதோ ஒரு கருத்து மக்களின் மனத்தில் தோன்றியது. முன்னோர் வழிபட்ட பழைய தெய்வங்கள் மூர்க்கத்தனமானவர்களாக இருந்தனர். தங்களுக்குள் சண்டையிட்டனர். குடித்துக் கும்மாளமிட்டனர். மாட்டிறைச்சி உணர்டனர்,. எரிகின்ற மாமிசத்தின் வாசனையிலும் மதுபானங்களிலும் இன்பம் கண்டனர். இவர்கள் பொருந்தாதவர்களாக மனித மனத்திற்குப் பட்டது. இந்திரன் சிலவேளைகளில் நன்றாகக் குடித்துவிட்டுத் தரையில் விழுந்து புரண்டு கண்டபடி உளறிக் கொண்டிருந்தான். அந்தத் தெய்வங்களை அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மை போய்விட்டது. செயல்களின் உள்நோக்கங்களை ஆராயும் மனப்பான்மை தோன்றியது.

ஆகவே தெய்வங்களும் ஆராய்ச்சிக்கு உட்பட்டாக வேண்டியிருந்தது. தெய்வங்களின் செயல்களுக்குக் காரணம் கேட்டான் மனிதன். சரியான காரணங்கள் கிடைக்கவில்லை. எனவே தெய்வங்களை விட்டுவிட்டான். தெளிவாகச் சொல்வதானால், தெய்வங்களைப் பற்றிய இன்னும் உயர்ந்த கருத்துக்களை வளர்த்துக் கொண்டான். தெய்வங்களின் செயல்களையும் தன்மைகளையும் ஆராய்ந்து ஒரு புள்ளிவிவரக் கணக்கெடுத்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவற்றுள் ஒருங்கிணைக்க முடியாதவற்றை விலக்கினான். புரிந்த தன்மைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை ஒன்றுசேர்த்து தேவதேவன், தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் என்று அழைத்தான். இந்தத் தெய்வம் ஆற்றலின் ஓர் எளிய சின்னமாக மட்டுமல்லாமல் அதைவிட உயர்ந்தவராக இருந்தார். தார்மீக புருஷர் ஆனார். அவர் மனிதகுலத்தை நேசித்தார், மனித குலத்திற்கு நன்மை செய்தார்.

ஆனால் கடவுள்கருத்து இன்னும் பூர்த்தியாக வில்லை. தெய்வத்தின் தார்மீக முக்கியத்துவத்தை அதிகரித்தனர். ஆற்றலை உயர்த்தினர். தெய்வம் பிரபஞ்சத்திலேயே மிகவுயர்ந்த தர்மவானாக, ஏறக்குறைய எல்லாம் வல்லவராக ஆனார். ஆனால் இந்த ஒட்டு வேலைகளெல்லாம் பெரிய பயன் தரவில்லை. விளக்கங்கள் விரிவடைந்த அதே விகிதத்தில், அந்த விளக்கங்களுக்குத் தீர்வு காண்பதில் கஷ்டங்களும் அதிகரித்தன. தெய்வங்களின் தன்மைகள் கூட்டல் விகிதத்தில் அதிகரித்தால் கஷ்டங்களும் சந்தேகங்களும் பெருக்கல் விகிதத்தில் அதிகரித்தன.

ஜெஹோவாவை விளக்குவதில் இருந்த கஷ்டத்தை விட, பிரபஞ்சத் தலைவனான கடவுளை விளக்குவதில் இருந்த கஷ்டங்களே அதிகமாக இருந்தன. இன்றும் இந்தப் பிரச்சினை நீடிக்கிறது. எல்லாம் வல்ல, எல்லாரையும் நேசிக்கின்ற கடவுளின் ஆட்சியில் ஏன் காட்டுமிராண்டித் தனம் நிறைந்திருக்க வேண்டும்? இன்பத்தைவிடத் துன்பமே அதிகமாக இருப்பது ஏன்? நன்மையைவிடத் தீமையே ஏன் மிக அதிகமாக இருக்கிறது?

இந்த விஷயங்களையெல்லாம் பார்க்காமல் நாம் கண்களை மூடிக் கொள்ளலாம். ஆனால் உலகம் பயங்கரமானது என்ற உண்மை அப்படியேதான் இருக்கும். மிஞ்சிப்போனால், டன்டாலஸின் நரகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். நமக்கோ தீவிரமான உள்ளுந்தல்களும் புலனின்ப அனுபவத்திற்கான உணர்ச்சிகளும் இருக்கின்றன. ஆனால் நம்மால் அவற்றைத் திருப்தி செய்ய முடிவதில்லை. நம்முடைய சங்கல்பத்தையும் மீறி உணர்ச்சி அலை எழுந்து நம்மை முன்னே தள்ளுகிறது. ஓர் அடி எடுத்து வைத்தால் உடனேயே அடி விழுகிறது. டன்டாலஸின் நரகத்தில் வாழ்பவர்களைப் போல்தான் இங்கே வாழ வேண்டும் என்று நாம் விதிக்கப்பட்டு விட்டோம். புலன்களின் எல்லைகளைக் கடந்த எவ்வளவோ உயர்ந்த குறிக்கோள்கள் நம் மனத்தில் தோன்றுகின்றன. ஆனால் நாம் அவற்றை நோக்கிச் செல்ல முயன்றால், அது முடியாமல் போகிறது; அதற்குப் பதிலாகச் சுற்றுச் சூழ்நிலை அப்படியே நம்மை நசுக்குகிறது. அதற்காகக் குறிக்கோளை விட்டுவிட்டு, இந்த உலகத்தில் வாழ்வதற்காகப் போராடுவோமானால், அது நம்மையே தாழ்த்திக் கொண்டு, கேவலம் ஒரு மிருகத்தைப் போலாவதுதான், எந்த வழியுமே இன்பம் அளிப்பதாக இல்லை.

இந்த உலகத்தில் குறிக்கோள்களே இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்பவர்களின் விதி துன்பமே. அதேவேளையில் வெறும் மிருக வாழ்க்கை வாழாமல், உண்மைக்காகவும் உயர்ந்த குறிக்கோள்களுக்காகவும் வாழத் துணிந்தவர்களின் வாழ்க்கையோ பல்லாயிரம் மடங்கு துன்பம் மிகுந்ததாக இருக்கிறது. இவை உண்மைகள். ஏன் இப்படி என்பதற்கு விளக்கம் இல்லை; இருக்கவும் முடியாது. இதிலிருந்து விடுபட வேதாந்தம் வழி காட்டுகிறது. ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நான் சொல்வது சிவவேளைகளில் உங்களுக்குப் பயத்தை உண்டாக்கலாம். ஆனால் அதை நீங்கள் நினைவில்கொண்டு, சிந்தித்து, ஜீரணித்தால், அது உங்களுடையதாகும்; உங்களை உயர்த்தி உண்மையைப் புரிந்து கொண்டு, உண்மையில் வாழச் செய்யும்.

இந்த உலகம் டன்டாலஸின் நரகம் என்பது ஒரு நிஜமான சித்திரம். இந்தப் பிரபஞ்சத்தைப்பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் எதுவுமே தெரியாது என்றும் ஒரேயடியாகச் சொல்லிவிடவும் முடியாது. எனக்குத் தெரியாது என்று நான் நினைக்கும் பட்சத்தில் இங்கே ஒரு சங்கிலி இருக்கிறது என்று நான் சொல்ல முடியாது. இந்தச் சங்கிலி முற்றிலுமாக என் மன மயக்கமாக இருக்கலாம். நான் எப்போதும் கனவுலகிலேயே இருக்கலாம் நான் உங்களிடம் பேசுவதாகவும் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் நான் கனவு கண்டு கொண்டிருக்கலாம். இது கனவல்ல என்று யாராலும் நிரூபிக்க முடியாது. யாரும் தங்கள் மூளையைத் தாங்களே பார்த்தது கிடையாது. ஆகவே மூளை இருக்கிறது என்று சொல்வதே ஒரு கனவாக இருக்கலாம். இவையெல்லாம் உண்மை என்றே நாம் இயல்பாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றைப் பற்றியும் இப்படித்தான் நாம் எண்ணுகிறோம். எனக்கு உடம்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். அது எனக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. இவ்வாறு அறிவு, அறியாமை இரண்டும் சந்திக்கும் இடத்தில் நாம் நிற்கிறோம்,. உண்மை, பொய் இரண்டும் சந்திக்கும் இடத்தில், அவை எங்கே சந்திக்கின்றன என்று அறிய முடியாத ஒரு மர்மமான சந்தியில் நாம் நிற்கிறோம், பாதி தூக்கமும் பாதி விழிப்புமான ஒரு கனவில் நாம் மிதந்து கொண்டிருக்கிறோம். தெளிவற்ற ஒரு கனவில்தான் நம் வாழ்க்கை செல்கிறது. நம் ஒவ்வொருவரின் விதியும் இதுதான். எல்லா புலனறிவின் விதியும் இதுவே. தத்துவம், தற்பெருமை அடித்துக்கொள்ளும் விஞ்ஞானம், மனித அறிவு எல்லாவற்றின் விதியும் இதுவே. இதுதான் பிரபஞ்சம்.

ஜடப்பொருள், உணர்வு, மனம் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், விஷயம் இதுதான் இவை உள்ளன என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது, பல என்றும் சொல்ல முடியாது, பிரித்துப் பார்க்க முடியாத, தனித்தனியாகப் பொருள் காண முடியாமல் சேர்ந்திருக்கின்ற, ஒளியும் இருளும் கலந்த இந்த முடிவற்ற நாடகம் நடந்துகொண்டே இருக்கிறது. இது உண்மை, அதே வேளையில் உண்மை இல்லை. இது விழிப்பு நிலை, அதேவேளையில் தூக்க நிலை. இது நிஜங்களின் ஒரு சித்திரம். இதுதான் மாயை. நாம் இந்த மாயையிலேயே பிறந்துள்ளோம். அதிலேயே வாழ்கிறோம், அதிலேயே சிந்திக்கிறோம். அதிலேயே கனவு காண்கிறோம் இந்த மாயையில் நாமே தத்துவ மேதைகள், நாமே ஆத்ம ஞானிகள், இல்லை இல்லை, இந்த மாயையில் நாமே பேய்கள், நாமே தெய்வங்கள்.

உங்கள் கருத்துக்களை முடிந்தவரை நீட்டுங்கள், உயரஉயரக் கொண்டு செல்லுங்கள். அவற்றை எல்லையற்றவை என்றோ, நீங்கள் விரும்புகின்ற வேறு ஏதாவது பெயராலோ அழையுங்கள். ஆனால் இந்தக் கருத்துக்கள் அனைத்தும் மாயையில் அடங்கியவையே. இது வேறுவிதமாக இருக்கவும் முடியாது. மனித அறிவு முழுவதுமே இந்த மாயையைப் பொதுமைப்படுத்துவதுதான். இந்த மாயையை உள்ளது உள்ளபடி அறிவதற்கான ஒரு முயற்சிதான். இது நாமரூபத்தின் ஒரு செயல்பாடே. உருவம் உள்ள எதுவும், நம் மனத்தில் ஒரு கருத்தை ஏற்படுத்துகின்ற எதுவும் மாயைக்குக் கட்டுப்பட்டது தான். ஏனெனில், காலம், இடம் மற்றும் காரணகாரியங்களுக்குக் கட்டுப்பட்ட எதுவும் மாயைக்கும் கட்டுப்பட்டதே.

கடவுளைப் பற்றிய பழைய கருத்துக்களுக்கே திரும்பவும் சென்று, அவை எப்படி மாறியுள்ளன என்பதைக் காண்போம்.

நம்மீது எப்போதும் அன்பு செலுத்துகின்ற, சிறிதும் சுயநலம் இல்லாத, சர்வ வல்லமையுள்ள, பிரபஞ்சத்தை ஆள்கின்ற ஒரு கடவுள்கருத்து எடுத்தஎடுப்பிலேயே நமக்குத் திருப்தி அளிக்கவில்லை. நியாயமான, கருணையுள்ள கடவுள் எங்கிருக்கிறார் என்று தத்துவவாதி கேட்கிறார். மிருகங்களும் மனிதர்களுமான அவரது பல கோடிக் குழந்தைகள் அழிந்து கொண்டிருப்பதை அவர் பார்க்கவில்லையா? பிறரை அழிவுக்கு உள்ளாக்காமல் ஒருவர் ஒரு கணமேனும் வாழ முடியுமா? பல்லாயிரம் உயிர்களை அழிக்காமல் நாம் ஒருமுறையாவது மூச்சை உள்ளே இழுக்க முடியுமா? கோடிக்கணக்கான உயிர்கள் அழிவதால்தான் நாம் வாழ்கிறோம். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும், நாம் விடும் ஒவ்வொரு மூச்சும், பல்லாயிரம் உயிர்களின் அழிவிற்குக் காரணமாக இருக்கிறது. நமது ஒவ்வோர் அசைவும் பல கோடி உயிர்களின் அழிவிற்குக் காரணமாக இருக்கிறது. நாம் உண்ணும் ஒவ்வொரு கவளமும் பலகோடி உயிர்களின் அழிவிற்குக் காரணமாக இருக்கிறது. இந்த உயிர்கள் ஏன் அழிய வேண்டும்? அவை கீழ்நிலைப் பிறவிகள் என்று சாதுரியமாக இந்தப் பழைய பதிலைச் சொல்லலாம். அப்படியே வைத்துக் கொள்வோம். ஆனால் எறும்பைவிட மனிதன் உயர்ந்தவனா, மனிதனைவிட எறும்பு உயர்ந்ததா என்பது யாருக்குத் தெரியும்? இப்படியோ அப்படியோ யார் நிரூபிப்பது? எனவே இந்தக் கருத்து ஏற்கத் தக்கதல்ல.

இந்தக் கேள்வியை விட்டுவிட்டு, அவை கீழ்நிலை உயிர்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவை எதற்காக அழிய வேண்டும்? அவை கீழ்நிலை உயிரினங்களானால், வாழ்வதற்கு அவற்றிற்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. ஏன் அவை வாழக் கூடாது? அவை புலன்களையே அதிகமாகச் சார்ந்து வாழ்வதால், இன்ப துன்ப அனுபவங்கள், நம்மைவிடப் பல்லாயிரம் மடங்கு அவற்றிற்கு அதிகம். ஒரு நாயோ ஓநாயோ உண்பது போன்ற அவ்வளவு ரசனையோடு நம்முள் யார் உண்கிறோம்? யாருமில்லை. இதற்குக் காரணம், நம் சக்திகள் புலன்களில் இல்லை; அவை அறிவிலும் உணர்விலும் இருக்கின்றன. ஆனால் மிருகங்களைப் பொறுத்தவரையில், அவற்றின் உயிரே புலன்களின்தான் உள்ளது. நம்மால் கனவுகூடக் காண முடியாத அளவுக்கு அவை புலன்களில் இன்பம் காண்கின்றன. ஆனால் இன்பத்தின் அதே விகிதத்தில் துன்பத்தையும் அனுபவிக்கின்றன. இன்ப துன்பங்களைச் சமமாகத்தான் அனுபவிக்க முடியும். ஆகவே மனிதனைவிட மிருகங்களுக்கு இன்ப அனுபவம் அதிகம் என்றால், துன்ப அனுபவமும் அதிகமாகத்தான் இருக்க வேண்டும்; அதிகமாக இருக்காது என்று வேண்டுமானால் சொல்லலாம். மனிதர்கள் இறக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைவிடப் பல்லாயிரம் மடங்கு துன்பத்தை, மிருகங்கள் இறக்கும்போது அனுபவிக்கின்றன. ஆனாலும் அவற்றின் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் அவற்றை நாம் கொல்கிறோம். இதுதான் மாயை.

எல்லாவற்றையும் படைத்த, மனிதனைப் போன்ற சகுணக் கடவுள் ஒருவர் உண்டு என்று வைத்துக் கொண்டோமானால், தீமையிலிருந்து நன்மை பிறக்கிறது என்று நிரூபிக்க முயலும் கொள்கைகளும் விளக்கங்களும் போதாமல் போய்விடும். பல்லாயிரம் நன்மைகள் வரட்டும். அவை ஏன் தீமையிலிருந்து வர வேண்டும்? அந்த நோக்கில் பார்த்தால், என்னுடைய ஐம்புலன்களுக்கும் முழுமையான இன்ப அனுபவம் வேண்டும் என்பதற்காக, நான் மற்றவர்களுடைய தலைகளை வெட்டலாம், எனவே அது ஒரு காரணமாக முடியாது. தீமையிலிருந்து ஏன் நன்மை பிறக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு இன்னும் யாரும் பதில் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. இந்தியத் தத்துவம் இந்தக் கருத்தை ஒப்புக் கொண்டேயாக வேண்டியிருந்தது.

வேதாந்தம் ஒன்றுதான் உலக மதங்களுள் துணிச்சல் மிகுந்த ஒன்றாக இருந்தது; இருக்கிறது. அது எதற்கும் தயங்கவே இல்லை. மேலும், அதற்கு ஒரு வசதி இருந்தது. அதாவது, உண்மையைச் சொல்ல முயலும் ஒவ்வொருவரையும் அடக்கி வைக்கும் புரோகிதக் கூட்டங்களுக்கு வேதாந்தத்தில் இடம் இல்லை. மத உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பூரண சுதந்திரம் அதில் இருந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை மூடநம்பிக்கை, சமூக விஷயங்களில் மட்டுமே இருக்கிறது. மேலைநாடுகளில் சமூகத்திற்கு நிறையச் சுதந்திரம் இருக்கிறது. இந்தியாவில் சமூகக் கட்டுப்பாடு மிகவும் அதிகம். ஆனால் மதக் கருத்துக்களுக்குப் பரிபூரண சுதந்திரம் உள்ளது. இங்கிலாந்தில் யாரும் எப்படி வேண்டுமானாலும் உடுக்கலாம். உண்ணலாம். அதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஆனால் யாராவது சர்ச்சுக்குப் போகாவிட்டால், சமுதாயமே அவனைச் சாடுகிறது. சமுதாயம் மதத்தைப்பற்றி என்ன சொல்கிறதோ, அதை அவன் முதலில் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குப் பிறகு வேண்டுமானால் உண்மை என்ன என்பதைப்பற்றி யோசிக்கலாம்.

இந்தியாவிலோ ஒரு ஜாதிக்காரன், இன்னொரு ஜாதிக்காரனோடு சாப்பிட்டால் போதும், உடனே சமுதாயம் முழுவதுமே அவனுக்கு எதிராக எழுந்து அவனை அங்கேயே நசுக்கி எறிந்துவிடும். யுகங்களுக்கு முன்னால் தன் முன்னோர்கள் உடுத்த மாதிரியே ஒருவன் உடுக்காவிட்டால் அவன் தொலைந்தான்! இந்தியாவில் முதன்முறையாக ரயில் விடப்பட்ட போது , அதைப் பார்ப்பதற்காகப் பல மைல் தூரம் நடந்து சென்ற ஒருவனைச் சமுதாயத்திலிருந்தே விலக்கி வைத்த சம்பவத்தைப் பற்றி நான் வேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையாக இருக்க முடியாது என்று நாம் நினைத்துக் கொள்வோம்!

ஆனால் மதத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவில் நாத்திகர்கள், உலோகாயதர்கள், பவுத்தர்கள் மற்றும் பலவிதப் பிரிவுகள், பல விதக் கருத்துக்கள், பல வகையான ஊகங்கள், மிகக் கொடூரமான சில நெறிகள் இவையெல்லாம் சண்டையின்றி ஒன்றாக வாழ்ந்து வருகின்றன. பல பிரிவுகளின் ஆச்சாரியர்களும் தங்கள் கருத்துக்களைப் போதித்து தங்களுக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். உலோகாயதர்கள் தங்கள் கருத்துக்களைத் தெய்வ சன்னிதானத்திலேயே எடுத்துச் சொல்வதற்கு அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதற்கான பெருமை அந்தணர்களையே சாரும்.

புத்தர் மிகவும் வயதான பின்னரே இறந்தார். எனது நண்பரான ஒரு பிரபல அமெரிக்க விஞ்ஞானி, புத்தரின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் படிப்பதில் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார். புத்தர் சாதாரணமாக இறந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் அவர் சிலுவையில் அறைப்படவில்லையாம். என்ன தவறான எண்ணம்! ஒருவன் மகத்தானவனாக இருக்க வேண்டுமானால் அவன் கொல்லப்பட்டிருக்க வேண்டுமாம்! இந்தியாவில் இதுபோன்ற கருத்துக்கள் ஒருபோதுமே நிலவிய தில்லை. மகானாகிய இந்த புத்தர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இந்தியர்களின் தெய்வங்களை, ஏன், பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாகச் சொல்லப்படும் கடவுளைக்கூட மறுத்துப் பேசினார். ஆனாலும் அவர் பல ஆண்டுகள், எண்பது வருடங்கள் உயிர் வாழ்ந்தார். நாட்டில் பாதிப் பேரைப் பவுத்தர்களாக மாற்றினார்.

பிறகு சார்வாகர்கள் வந்தார்கள். பயங்கரமானவற்றை உலோகாயதத்தை மிக மோசமாகவும் வெளிப்படையாகவும் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அதைப் போன்ற லவுகீகக் கருத்துக்களை இன்று பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்கூடப் பிரச்சாரம் செய்யப் பயப்படுகிறார்கள். மதம் என்பது அர்த்தமற்றது. அது புரோகிதர்களின் சதி. முட்டாள்களும் அயோக்கியர்களும் பிசாசுகளும் எழுதியவையே வேதங்கள். கடவுள் என்பவரோ, அழிவில்லாத ஆன்மா என்பதோ இல்லவே இல்லை என்றெல்லாம் கோயில்கள்தோறும், நகரங்கள் தோறும் பிரச்சாரம் செய்ய இந்தச் சார்வாகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆன்மா என்ற ஒன்று இருந்தால், மனிதன் இறந்த பின்னால், மனைவி, குழந்தைகள் ஆகியோரின் அன்புக்குக் கட்டுப்பட்டு அது ஏன் திரும்பி வருவதில்லை? ஆன்மா என்று ஒன்று இருந்தால், உடல் இறந்த பிறகும், அது வாழ வேண்டும். அது அன்புடையதாக இருக்க வேண்டும்; நல்ல உணவுக்கும் உடைக்கும் அது ஆசைப்பட வேண்டும் என்பது சார்வாகர்களின் கருத்தாக இருந்தது. இந்தச் சார்வாகர்களையும் இந்தியாவில் யாரும் துன்புறுத்தவில்லை.

இவ்வாறு, இந்தியாவில் மத விஷயங்களில் பரிபூரண சுதந்திரம் இருந்து வருகிறது. சுதந்திரம்தான் வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுதந்திரம் இல்லாதது, வளர்ச்சி அடையாது.

நாம் மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்ய முடியும்; அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வழி நடத்திச் செல்ல முடியும். நான் எப்போதுமே குருவாக இருப்பேன் என்ற கருத்து முட்டாள்தனமானது. ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொய் இது. பல கோடி மனிதர்களின் வளர்ச்சியைத் தடை செய்தது இந்தக் கருத்து தான். மக்களிடையே சுதந்திர ஒளி வீசட்டும். அது ஒன்றுதான் வளர்ச்சிக்கு உரிய ஒரே வழி.

இந்தியாவில் ஆன்மீக விஷயங்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. அதனால் மதச் சிந்தனைகளில் அளவற்ற ஆன்மீகச் சக்தியை இன்றும் அங்கே காண்கிறோம். இதைப் போன்ற சுதந்திரத்தை நீங்கள் உங்கள் சமூக விஷயங்களுக்கு அளித்திருக்கிறீர்கள். ஆகவே உங்கள் சமூக அமைப்பு மிகவும் சிறப்புடையதாக இருக்கிறது. நாங்கள் சமூக வளர்ச்சிக்கு எந்தவிதமான சுதந்திரமும் கொடுக்காததால், எங்கள் சமூகம் குறுகியதாக இருக்கிறது. மத விஷயங்களில் நீங்கள் எந்த விதச் சுதந்திரத்தையும் கொடுக்கவில்லை. நெருப்பாலும் வாளாலும் உங்கள் நம்பிக்கைகளைத் திணித்தீர்கள். அதன் பலனாகத்தான் ஐரோப்பிய மக்களிடையே மத வளர்ச்சி மிகவும் சீர்குலைந்து, குன்றிப்போய் இருக்கிறது.

இந்தியாவில் சமுதாயத் தளைகளை நீக்க வேண்டும். ஐரோப்பாவில் மதத் தளைகளை நீக்க வேண்டும். அப்போது மனிதகுலம் அற்புதமாக முன்னேறும், வளர்ச்சி காணும். ஆன்மீக, தார்மீக, சமூக வளர்ச்சிகளுக்கு ஊடே ஓர் ஒருமை இழையோடிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்டுபிடிக்கும் போதுதான், இவையெல்லாம் ஒரே பொருளின் பல்வேறு விளக்கங்களே என்பதை அறியும்போதுதான் உண்மையான மதம் நம் சமூக வாழ்க்கையிலும் தினசரி வாழ்க்கையிலும் நன்கு புக முடியும். வேதாந்தரீதியாகப் பார்த்தால், எல்லா விஞ்ஞானங்களும் என்றல்ல, இந்த உலகில் எல்லாமே மதத்தின் வெளிப்பாடுகள் தாம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

சுதந்திரத்தின் மூலமாகத்தான் விஞ்ஞானங்கள் வளர்ந்தன என்பதை நாம் காண்கிறோம். விஞ்ஞானத்துறையில் இரண்டு வகையான கருத்துக்கள் இருக்கின்றன. ஒன்று, ஜடவாதமும் ஆன்மீக மறுப்பும் கொண்டது. மற்றொன்று, ஆக்கபூர்வமான நோக்கமும் உறுதியான கொள்கையும் கொண்டது.

ஒவ்வொரு சமுதாயத்திலும் இந்த வினோத உண்மையை நாம் காண்கிறோம். ஒரு சமுதாயத்தில் ஏதோ ஒரு தீமை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை மறுத்து, எதிர்ப்பதற்கென்று ஒரு கூட்டம் தோன்றுகிறது. சில நேரங்களில் இந்த எதிர்ப்பு ஒரு வெறியாகவே மாறிவிடுகிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் இந்த மாதிரி வெறியர்கள் இருக்கிறார்கள். பலவேளைகளில் பெண்களும் இந்தக் கூட்டங்களில் சேர்ந்து விடுகிறார்கள். அதற்குக் காரணம், அவர்கள் இயற்கையாகவே உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பதுதான். எதையாவது மறுக்கும் வெறியர்களால் தங்களை ஆதரிக்கும் ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொள்ள முடிகிறது. எதையாவது உடைப்பது மிகவும் சுலபம். ஒரு பைத்தியக்காரனால் எதை வேண்டுமானாலும் அழிக்க முடியும்; அவனால் எதையும் ஆக்க முடியாது. இந்த வெறியர்கள் அவர்களது நோக்கில் சில நன்மைகளைச் செய்யலாம். ஆனால் அவர்களின் செயலால் தீமையே அதிகம் விளைகிறது. சமுதாய அமைப்புகள் ஒருநாளில் தோன்றியவையல்ல, அவற்றை மாற்றி அமைப்பது என்றால், அவற்றின் அடிப்படைக் காரதணத்தையே மாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு தீமை இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை மறுப்பதால் மட்டுமே அந்தத் தீமையை அழித்துவிட முடியாது. அதன் ஆணிவேரையே பிடுங்கி எறிய வேண்டும். முதலில் அதன் காரணத்தையே கண்டுபிடித்து அழித்துவிட்டால் காரியமும் அழிந்துவிடும். கூச்சல் போடுவதால் மட்டும் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அதனால் தீமைகள் தாம் அதிகமாகும்.

மனத்தில் உண்மையான இரக்கம் உள்ள சிலர், தீமைகளின் காரணத்தை அடியாழம்வரை சென்று ஆராய வேண்டும் என்ற கருத்தைப் புரிந்து கொண்டிருந்தார்கள். இவர்கள்தாம் மகான்கள், உலகத்தின் சிறந்த ஆச்சாரியர்கள் அனைவருமே தாங்கள் எதையும் அழிக்க வரவில்லை என்றும், நிறைவு செய்யவே வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்,. பல நேரங்களில் இதனை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுடைய பொறுமையைக் கண்ட மக்கள், அவர்கள் வழக்கத்திலுள்ள பிரபலமான கருத்துக்களோடு தகுதியற்ற விதத்தில் ஒத்துப்போகின்றனர் என்றே நினைத்தனர். மேலான இந்த ஆச்சாரியர்கள், கோழைகளாகவும் தைரியமாக எடுத்துச் சொல்லும் உறுதியற்றவர்களாகவும் இருந்தார்கள் என்று இன்றும் சிலர் சொல்வது நம் காதில் விழுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. இந்த உலக மக்களைத் தங்கள் குழந்தைகளாகவே நினைத்த அந்த உயர்ந்த ரிஷிகளுடைய எல்லையற்ற அன்பின் சக்தியை மதவெறியர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பொறுமையும் எல்லோரிடமும் இரக்கமும் நிறைந்த உண்மையான தந்தையாகவும் உண்மையான தெய்வமாகவும் அவர்கள் இருந்தார்கள். பொறுத்துக் கொள்ளவும் மன்னிக்கவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். மனித சமூகம் எப்படி வளர வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே பொறுமையுடனும் நிதானத்துடனும் உறுதியுடனும் அவர்கள் தங்கள் பரிகார முறைகளைச் சமுதாயத்தில் பரப்பினார்கள். மக்களைப் பயமுறுத்தவோ, மற்றவர்களின் கொள்கைகளை மறுத்துப் பேசவோ செய்யாமல், மிகவும் அன்புடனும் மென்மையாகவும் படிப்படியாக மக்களை உயர்த்துவதன் மூலமே அவர்கள் இதனைச் செய்தார்கள்.

உபநிடதங்களை எழுதியவர்கள் இப்படிப் பட்டவர்கள்தாம். கடவுளைப் பற்றிய பழைய கருத்துக்கள், புதிய, முன்னேற்றமடைந்த தார்மீகக் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. நாத்திகர்களின் பிரச்சாரங்களில் பெருமளவு உண்மை நிறைந்திருக்கிறது. ஏன், உண்மை ஒளிவீசவே செய்கிறது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதே வேளையில் மணிகளைக் கோர்த்து நிற்கும் நூலை அறுத்தெறிந்துவிட்டு, ஆகாயத்தில் ஒரு புதிய சமுதாயத்தை அமைத்து விடலாம் என்று நினைப்பவர்கள் தோல்வி அடைவார்கள் என்பதையும் அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருந்தார்கள்.

நாம் எதையும் புதிதாகத் தோற்றுவிப்பதில்லை. இருப்பதை இடம் மாற்றுகிறோம். அவ்வளவுதான். புதிய பொருட்கள் எதையும் உண்டாக்க முடியாது. இருக்கும் பொருட்களின் நிலையை மாற்றலாம். அவ்வளவுதான். விதை, பொறுமையாக, மெதுவாக மரமாக வளர்கிறது. ஏற்கனவே இருக்கும் உண்மையை நிறைவு செய்வதற்கே நமது சக்திகளை நாம் செலுத்த வேண்டும் புதிய உண்மைகளை உண்டாக்குவதற்கு அல்ல.

இவ்வாறு, கடவுளைப் பற்றிய பழைய கருத்துக்கள் தற்காலத்திற்குப் பொருத்தாதவை என்று மறுத்துப் பேசாமல், அவற்றிலுள்ள உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கே பழங்கால ரிஷிகள் முயன்றார்கள். இதன் பலன்தான் வேதாந்தத் தத்துவம், பழைய, பல்வேறு தெய்வங்கள், பிரபஞ்சத்தை ஆளும் ஒரே தெய்வம் போன்ற கருத்திலிருந்து, நிர்க்குண பிரம்மம் என்ற மிக உயர்ந்த கருத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பிரபஞ்சம் முழுவதிலும் ஒருமை நிறைந்திருப்பதைக் கண்டு பிடித்தார்கள்.

வேறுபாடுகள் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், எல்லாவற்றுள்ளும் ஊடுருவி நிற்கும் ஒன்றைக் காண்பவன் யாரோ, மரணம் நிறைந்த இந்த உலகத்தில் முடிவற்ற வாழ்க்கையான ஒன்றைக் காண்பவன் யாரோ, அறியாமை நிறைந்த இந்த ஜடவுலகில் ஒளியாகவும் ஞானமாகவும் உள்ள ஒன்றை உணர்பவன் யாரோ அவனுக்கே அழியாத அமைதி கிட்டுகிறது. வேறு யாருக்கும் கிட்டாது; கிட்டவே கிட்டாது.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,