எங்கும் இறைவன்!
எங்கும் இறைவன்!
நாம் எவ்வளவுதான் தடுத்தாலும் நமது வாழ்க்கையில் பெரும் பகுதி தீமை நிறைந்ததாகத்தான் இருக்கும். நடைமுறையில் இந்தத் தீமை ஏறக்குறைய எல்லையற்றதாக இருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். ஆதிகாலம் முதல் இதற்குப் பரிகாரம் காண்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது என்னவோ அப்படியேதான் இருக்கிறது. அதிகமாகப் பரிகாரங்களைக் கண்டுபிடிக்கின்ற அளவிற்கு மேன்மேலும் நுட்பமான தீமைகள் நம்மைச் சூழ்கின்றன.
இந்தத் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே ஒவ்வொரு மதமும் ஒரு கடவுளைப் படைத்துள்ளது. இதையும் நாம் ஏற்கனவே கண்டோம். உலகம் எப்படித் தென்படுகிறதோ, அப்படியே அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று லவுகீக மக்கள் கூறுவது போல் செய்தால், தீமையைத் தவிர வேறு எதுவுமே உலகத்தில் இருக்காது என்று எல்லா மதங்களும் கூறுகின்றன.
இந்த உலகத்திற்கு அப்பால், ஏதோ ஒன்று இருக்கிறது என்று எல்லா மதங்களும் வற்புறுத்துகின்றன. ஐந்து புலன்களில் அடங்கும் வாழ்க்கையிலேயே, ஜடவுலக வாழ்க்கையிலேயே எல்லாம் முடிந்துவிடவில்லை. இது ஒரு பகுதி மட்டுமே, மேலோட்டமானது மட்டுமே. இதற்குப் பின்னால் எல்லாவற்றிற்கும் அப்பால், தீமையே இல்லாத எல்லையற்றது இருக்கிறது. சிலர் அதைக் கடவுள் என்றும் சிலர் அல்லா என்றும், சிலர் ஜெஹோவா என்றும், சிலர் யோவான் என்றும் பலவிதமாக வழங்குகிறார்கள். வேதாந்தி அதைப் பிரம்மம் என்று சொல்கிறான்.
மதங்களின் போதனைகளைப் பார்க்கும்போது முதலில் நமக்குத் தோன்றுவது, நாம் வாழ்க்கைக்கு முடிவுகட்டுவதே மேல் என்பதுதான். வாழ்க்கையின் தீமைகளுக்கு எப்படிப் பரிகாரம் காண்பது என்ற கேள்விக்கு, வாழ்க்கையை முடித்துவிடலாம் என்பதுதான் உடனே தோன்றும் பதிலாக இருக்கிறது. இது எனக்கு ஒரு பழைய கதையை நினைவூட்டுகிறது. ஒரு மனிதனின் தலையில் ஒரு கொசு உட்கார்ந்தது. கொசுவைக் கொல்ல விரும்பிய அவனுடைய நண்பன் ஒரு பலத்த அடி கொடுத்தான். கொடுத்த அடியில் கொசு, மனிதன் இரண்டு பேருமே காலி! தீமைக்குப் பரிகாரமும் இது போன்றதாகத்தான் தோன்றுகிறது. வாழ்க்கை தீமை நிறைந்தது, உலகம் தீமை நிறைந்தது. உலகைப்பற்றி அறிந்த அனுபவசாலிகள் யாரும் இதை மறுக்க முடியாது.
மதங்கள் இதற்குச் சொல்லும் பரிகாரம் என்ன? இந்த உலகம் பயனற்றது என்பதுதான். இந்த உலகிற்கு அப்பால் உண்மையான ஏதோ ஒன்று இருக்கிறது. இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. மதங்கள் சொல்லும் பரிகாரம், எல்லாவற்றையும் அழிப்பதாகவே தோன்றுகிறது. அழிவு எப்படி ஒரு பரிகாரமாக இருக்க முடியும்? அப்படியானால் வேறு வழியே இல்லையா? மதங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறது வேதாந்தம். மதங்களின் கருத்து தெளிவாக இல்லாததால் மக்கள் அவற்றைத் தவறாகப் புரிந்துகொள்ள நேர்கிறது.
அறிவு மற்றும் இதயத்தின் சங்கமம்தான் நமக்கு வேண்டும். இதயம் மிகவும் உன்னதமானதுதான். அதன் வழியாக வாழ்க்கையின் சிறந்த அகத் தூண்டுதல்கள் பிறந்துள்ளன. கருணையே இல்லாமல் அறிவு மட்டுமே நிறைய இருப்பதைவிட, அறிவே சிறிதும் இல்லாமல் கருணை சிறிதேனும் இருப்பதையே நான் விரும்புகிறேன். நெஞ்சில் ஈரமுள்ளவனுக்குத்தான் வாழ்க்கையும் முன்னேற்றமும் எல்லாம் உரியவை. அறிவு மிகுந்த , ஆனால் நெஞ்சில் ஈரமே இல்லாதவனின் வாழ்வே வறண்டு போய் அவன் அழிகிறான். அதேவேளையில் இதயத்தின் போக்கிலேயே செல்பவன் பல கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதும், அடிக்கடிச் சறுக்கி விழ நேரலாம் என்பதும் நமக்குத் தெரிகிறது. இதயமும் அறிவும் இணைந்த ஒரு நிலையே நமக்குத் தேவை. அறிவையும் கருணையையும் ஒன்றுக்கொன்று பணயம் வைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. எல்லையற்றுப் பரந்த இதயமும் உணர்ச்சியும் அதே வேளையில் எல்லையற்ற அறிவும் நமக்கு இருக்க வேண்டும்.
ஆசைக்கு ஓர் எல்லையிருக்கிறதா என்ன? உலகம் எல்லையற்றது அல்லவா? எல்லையற்ற உணர்ச்சிப் பெருக்கிற்கு இங்கே இடம் இருக்கிறது. அதே அளவு பண்பாட்டிற்கும் அறிவிற்கும் இடம் இருக்கிறது. கருணையும் அறிவும் இணைந்து அளவில்லாமல் நம்மிடம் இருக்கட்டும். இரண்டும் இணையாகச் செயல்படட்டும்.
அனேகமாக எல்லா மதங்களும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை எல்லாமே ஒரே விதமான தவறு செய்கின்றன. அதாவது கருணைக்கும் உணர்ச்சிகளுக்கும்தான் அவை மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றன. உலகம் தீமை நிறைந்தது, எனவே உலகத்தைத் துறுந்துவிடுங்கள் என்பது மிகச் சிறந்த போதனை, ஒரே போதனை- சந்தேகமில்லை. உலகத்தைத் துறந்துவிடுங்கள். உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமானால், உண்மையற்றதை விடவேண்டும் என்பதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. நன்மை வேண்டுமானால் நாம் எல்லோருமே தீமையை விட வேண்டும் என்பதிலும் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. வாழ்க்கை வேண்டுமானால், மரணத்தை விட வேண்டும் என்பதிலும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது.
வாழ்க்கையை த் துறந்துவிடு என்ற கொள்கை இருக்கிறதே, அதன் பொருள் நமக்குத் தெரிந்த இந்தப் புலனின்ப வாழ்க்கையைத் துறந்துவிடுவது என்றால், நமக்கு என்ன மிஞ்சும்? இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? வாழ்க்கை என்பதற்கு வேறு எனன்தான் பொருள்? இதைத் துறுந்தால் வேறு என்ன இருக்கிறது? வேதாந்தத்தின் இன்னும் ஆழ்ந்த தத்துவப் பகுதிக்கு வரும்போது, நாம் இதைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். வேதாந்தத்தில் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு அறிவு பூர்வமான தீர்வு இருக்கிறது என்பதை மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்புகிறேன். வேதாந்தம் போதிக்க விரும்புவதை மட்டுமே நான் இங்கே உங்கள் முன் குறிப்பிட முடியும். அது என்னவென்றால் உலகத்தையே தெய்வீகமாக்கி விடுவதுதான்.
உண்மையில் வேதாந்தம் உலகத்தைத் தாழ்த்திப் பேசவில்லை. துறவு லட்சியம், வேதாந்தப் போதனைகளில் உள்ளதுபோல் வேறெங்கும் இவ்வளவு உயர்ந்த நிலையை அடையவில்லை. ஆனால் வேதாந்தம் வறட்டு அழிவு போதனையைச் செய்யவில்லை. அது துறவு என்று கூறுவதன் உண்மைப் பொருள், உலகை தெய்வீகமாக்குதல். அதை எப்படி நாம் உணர்கிறோமோ, அது எப்படி நமக்குத் தோற்றமளிக்கிறதோ அதை விட்டுவிட வேண்டும்; அது உண்மையில் எதுவோ அதை அறிய வேண்டும் என்பதுதான் அதன் பொருள். உலகைத் தெய்வீகமாக்குங்கள். அது கடவுளே. பிரபஞ்சத்திலுள்ள அனைத்துமே இறைவனால் சூழப்பட வேண்டும் என்று மிகவும் பழைய ஓர் உபநிடத்தின் ஆரம்பத்தில் காண்கிறோம்.
அனைத்தையும் இறைவனால் மூட வேண்டும்; ஒருவகை போலியான இன்ப நோக்காகவோ இல்லை, துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் பாசாங்காகவோ அல்ல. உண்மையிலேயே எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பதன்மூலம் இதைச் செய்ய வேண்டும். இவ்வாறு உலகத்தைத் துறக்க வேண்டும். உலகத்தைத் துறுந்த பிறகு எஞ்சுவது என்ன? கடவுள்தான். இதன் பொருள் என்ன? நீ உன் மனைவியோடு வாழலாம்; அவளைக் கைவிட வேண்டும் என்பதல்ல. ஆனால் அவளிடம் கடவுளைக் காண வேண்டும். குழந்தைகளைத் துறந்து விடுங்கள். இதன் பொருள் என்ன? எல்லாநாடுகளிலும் சில மனித மிருகங்கள் செய்வதைப் போல் குழந்தைகளை வீட்டைவிட்டுத் துரத்திவிடுவதா? இல்லவே இல்லை. அது கொடுமை; அரக்கத்தனம். அது ஆன்மிக உணர்வு அல்ல. ஆனால் உங்கள் குழந்தைகளில் இறைவனைக் காணுங்கள். எல்லாவற்றிலும் இப்படியே. வாழ்விலும் சாவிலும் இன்பத்திலும் துன்பத்திலும் எல்லாவற்றிலுமே இறைவன் சமமாக நிறைந்திருக்கிறார். உலகம் முழுவதும் இறைவன்தான் நிறைந்திருக்கிறார். கண்களைத் திறவுங்கள், அவரைப் பாருங்கள். வேதாந்தம் இதைத்தான் போதிக்கிறது.
நாம் நமது கற்பனையால், நமது அனுமானத்தால் உருவாக்கிக் கொண்டிருக்கும் உலகத்தைத் துறந்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த அனுமானம் முழுமையற்ற அனுபவத்தை, ஆழமற்ற அறிவை நமது சொந்த பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் துறந்துவிடுங்கள். நாம் இதுவரை நினைத்துவந்த, எல்லோரும் உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற உலகம் நம்முடைய கற்பனையில் தோன்றிய பொய்யான உலகம். அதை விட்டுவிடுங்கள். நன்றாகக் கண்களைத் திறந்து பாருங்கள். இப்படிப்பட்ட ஓர் உலகம் எப்போதுமே இருக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அது ஒரு கனவு, மாயை. இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவனில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே. நல்லவரில் இருப்பதும் அவரே, தீயவரில் இருப்பதும் அவரே, பாவத்தில் இருப்பதும் அவரே, பாவியாக இருப்பதும் அவரே. வாழ்விலும் அவரே இருக்கிறார். சாவிலும் அவரே இருக்கிறார்.
உண்மையிலேயே துணிச்சலான கருத்துதான். ஆனாலும் வேதாந்தம் இந்தக் கருத்தைத்தான் பிரச்சாரம் செய்ய, செயலில் காட்ட விரும்புகிறது, போதிக்க விரும்புகிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இவ்வாறு நாம் வாழ்க்கையின் அபாயங்களையும் தீமைகளையும் விலக்குகிறோம்.
எதற்கும் ஆசைப்படாதீர்கள். நம்மைத் துன்புறச் செய்வது எது? நமது துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் ஆசையே. நாம் ஒன்றை விரும்புகிறோம்; அதை அடைய முடியவில்லை. விளைவு? துன்பம். ஆசை இல்லாவிட்டால் துன்பமும் இல்லை. இங்கேயும் நான் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆகவே ஆசையைத் துறப்பது துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவது என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பதை இங்கே விளக்குவது அவசியம்.
சுவர்களுக்கு ஆசை கிடையாது, அவை துன்புறுவதும் இல்லை. உண்மைதான். ஆனால் அவை வளர்ச்சி அடைவதும் இல்லை. இந்த நாற்காலிக்கு ஆசைகள் இல்லை; அது துன்பம் அடைவதில்லை. ஆனால் அது ஒரு நாற்காலியாகத்தான் எப்போதும் இருக்கிறது. இன்பத்தில் ஒரு மகிமை இருக்கிறது; துன்பத்திலும் ஒரு மகிமை இருக்கிறது. ஏன், தீமையினால் பயன்கூட இருக்கிறது என்று நான் துணிந்து சொல்வேன். துன்பத்தால் நாம் பெறும் பாடம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே. நாம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா என்று பின்னால் நாம் வருத்தப்படும் பலநூறு காரியங்களைச் செய்து விடுகிறோம். ஆனால் அந்தக் காரியங்கள் நமக்கு எத்தனை உயர்ந்த பாடங்களைக் கற்பிக்கின்றன.
என்னைப் பொறுத்தவரையில், நான் சில நல்ல காரியங்களைச் செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன். பல தீய காரியங்களைச் செய்திருக்கிறேன் என்பதிலும் மகிழ்கிறேன். சில காரியங்களைச் சரியாகச் செய்ததற்காக மகிழ்கிறேன். அதே வேளையில் பல தவறுகள் செய்ததற்காகவும் மகிழ்கிறேன். ஏனென்றால், என் தவறு ஒவ்வொன்றும் ஓர் உயர்ந்த பாடத்தை எனக்குக் கற்பித்திருக்கிறது. நான் இதுவரை செய்த செயல்கள், எனது எண்ணங்கள் அனைத்தின் பலனே இப்போதைய நான். எனது ஒவ்வொரு செயலும் ஒவ்வோர் எண்ணமும் அவற்றின் பலனைத் தந்திருக்கின்றன. இந்தப் பலன்கள் அனைத்தின் ஒட்டுமொத்தமே என் முன்னேற்றமாக அமைந்தது.
ஆசைகள் தவறானவை என்பது நம் எல்லோருக்கும் புரிகிறது. ஆனால் ஆசைகளைத் துறப்பது என்றால் என்ன? ஆசையில்லாவிட்டால் வாழ்க்கை எப்படி நடைபெறும்? ஆசையை அழித்துவிடு-துன்பத்தைத் தீர்ப்பதற்கு இதுதான் வழி என்பது மனிதனையே கொன்று விடுவதற்குச் சமமாகும். தீர்வு இதுதான்: உங்களுக்குச் சொத்து கூடாது என்பதல்ல, உங்கள் தேவைக்குரியவற்றை வைத்துக்கொள்ளக் கூடாது என்பதல்ல. ஏன், ஆடம்பர மானவற்றைக்கூட அனுபவிக்கக் கூடாது என்பது அல்ல. வேண்டியதை வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு மேலேயும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் உண்மையை அறிந்து கொள்ளுங்கள், உணர்ந்து கொள்ளுங்கள். செல்வம் யாருக்கும் சொந்தமானது அல்ல. சொந்தக்காரர்கள், முதலாளிகள் என்ற கருத்தை கைவிட வேண்டும். நீங்களும் ஒன்றுமில்லை, நானும் ஒன்றுமில்லை, யாராயிருந்தாலும் வெறும் பூஜ்யமே. எல்லாம் இறைவனுக்கே சொந்தம். ஏனென்றால் முன்பு நாம் பார்த்த உபநிடதத்தின் ஆரம்ப மந்திரம் எல்லாவற்றிலும் இறைவனை வைக்கச் சொல்கிறது. நாம் அனுபவிக்கும் செல்வத்தில் இறைவன் இருக்கிறார். நம் மனத்தில் எழும் ஆசைகளில் அவர் இருக்கிறார். ஆசைகளைத் திருப்தி செய்வதற்காக நாம் வாங்கும் பொருட்களில் இருப்பதும் அவரே. நமது அழகான ஆடை அணிகளிலெல்லாம் இருப்பதும் அவரே. இப்படித்தான் நம் எண்ணம் இருக்க வேண்டும். இந்தக் கோணத்திலிருந்து உலகத்தைப் பார்க்க ஆரம்பித்தால், எல்லாமே வேறுவிதமாகத் தோன்றத் தொடங்கிவிடும். நமது ஒவ்வோர் அசைவிலும் ஒவ்வொரு பேச்சிலும் உருவத்திலும், ஏன், எல்லாவற்றிலுமே இறைவனை இணைத்துக் கொள்வோமானால் காட்சியே மாறிவிடும். உலகம் துன்பமும் துயரமும் நிறைந்த இடமாக இல்லாமல் சொர்க்கமாகத் தோன்ற ஆரம்பித்துவிடும்.
பரமண்டலம், உனக்குள்தான் இருக்கிறது என்று ஏசு கூறினார். அதையே வேதாந்தம் கூறுகிறது; ஒவ்வொரு மகான்களும் கூறியிருக்கிறார்கள். கண் இருப்பவர்கள் காணட்டும்; காது இருப்பவர்கள் கேட்கட்டும். நாம் காலங்காலமாகத் தேடிக் கொண்டிருக்கும் உண்மை எப்போதும் நமக்குள்தான் இருக்கிறது, எப்போதும் நம்முள்தான் இருந்தது என்பதை வேதாந்தம் நிரூபிக்கிறது. அறியாமை காரணமாக நாம் அதை இழந்துவிட்டதாக நினைத்து, அழுது, கதறி, உலகமெங்கும் அலைந்து திரிந்து, இந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தோம். ஆனால் அது எப்போதும் நம் இதயத்திலேயே இருந்திருக்கிறது. நம் இதயத்தில் மட்டுமே அந்த உண்மையை நாம் காண முடியும்.
உலகத்தைத் துறப்பது என்பதை, அதனுடைய பழைய வளர்ச்சியுறாத பொருளில் புரிந்துகொண்டால், அது இப்படித்தான் இருக்கும்: வேலை செய்யக் கூடாது; சோம்பேறிகளாக இருக்க வேண்டும்; எதையும் சிந்திக்காமல், எதையும் செய்யாமல், பிடித்துவைத்த களிமண் போல் இருக்க வேண்டும்; விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதன் கைதியாக இருக்க வேண்டும்; இயற்கையின் விதிகளால் இடத்திற்கு இடம் பந்தாடப்பட வேண்டும். இதுதான் பொருள்.
உலகத்தைத் துறப்பது என்பதற்கு அது பொருளல்ல. நாம் வேலை செய்ய வேண்டும். பொய்யான ஆசைகளால் அலைக்கழிக்கப்படுகின்ற சாதாரண மனித குலத்திற்கு செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? உணர்ச்சிகளாலும் புலன்களாலும் ஆட்டி வைக்கப்படுகின்ற மனிதனுக்குச் செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? சொந்த ஆசைகளால் தூண்டப்படாதன்தான், சுயநலம் துளியும் இல்லாதவன் தான் செயல்புரிய முடியும். தனக்கென்று சுய நோக்கம் எதுவும் இல்லாதவன் தான் வேலை செய்ய முடியும். லாபம் கருதாதவன்தான் வேலை செய்ய முடியும்.
ஓவியத்தை ரசிப்பது யார்? விற்பவனா, பார்க்க வந்தவனா? விற்பவன், அந்தப் படத்தை விற்பதால் தனக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று கணக்கு வழக்குகளில் மூழ்கிக் கிடக்கிறான்; அதை ஏலத்திற்கு விடலாமா, விலை எப்படி ஏறுகிறது, எந்த இடத்தில் மூன்றாம் தரம் கூறினால் லாபம் அதிகமாகும் என்பதில் கவனமாக இருக்கிறான். அவனது மனம் முழுவதிலும் அந்த எண்ணமே நிறைந்திருக்கிறது. அந்தப் படத்தை வாங்கும் எண்ணமோ விற்கும் எண்ணமோ இல்லாமல் அங்கே போயிருக்கும் ஒருவன் தான் அந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியும். அவனே அந்தப் படத்தை அனுபவிக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறான்.
இந்தப் பிரபஞ்சமே ஓர் ஓவியம். ஆசைகள் மறையும் போது மனிதன் உலகை அனுபவிக்கிறான். வாங்குவது, விற்பது, சொந்தம் கொண்டாடுவது போன்ற முட்டாள்தனமான கருத்துக்கள் எல்லாம் அப்போது மறைந்து விடுகின்றன. கடன் கொடுப்பவன், வாங்குபவன், விற்பவன் எல்லோரும் மறைந்து, உலகம் மட்டுமே ஒரு சித்திரமாக ஓர் அழகிய ஓவியமாக எஞ்சி நிற்கிறது.
கடவுள் ஒரு மகாகவிஞர்; புராதன கவிஞர். பிரபஞ்சம்தான் அவர் எழுதிய கவிதை; எதுகை மோனைகளுடன் எல்லையற்ற ஆனந்தத்தில் தோய்ந்து அவர் எழுதியிருக்கிறார். கடவுளைப்பற்றிய இதைவிட அழகிய கருத்தை நான் படித்ததில்லை.
ஆசைகளை ஒழித்தால்தான் இறைவனின் இந்த அழகிய பிரபஞ்சத்தை புரிந்துகொண்டு, அதில் நாம் ஆனந்தமாகத் திளைக்க முடியும். அப்போது எல்லாம் தெய்வீகமாகிவிடும். மூலைமுடுக்குகள் மற்றும் தீய, தூய்மையற்ற இடங்களும்கூட தெய்வீகமாகிவிடும். எல்லாமே அவற்றின் உண்மை இயல்பை வெளிப்படுத்தும். நமது அழுகையும் கதறலும் எல்லாமே குழந்தைத்தனமானவை. நாம் இவற்றிற்கெல்லாம் வெறும் சாட்சியாக மட்டுமே இருந்து வந்திருக்கிறோம் என்பதை அப்போது புரிந்துகொள்வோம், நம்மைப் பார்த்து நாமே சிரித்துக் கொள்வோம்.
ஆகவே உங்கள் வேலையைச் செய்யுங்கள் என்கிறது வேதாந்தம். எப்படி வேலை செய்வது என்பதை அது முதலில் போதிக்கிறது. எப்படி? துறப்பதன் மூலம், பொய்த் தோற்றமான இந்த உலகை விட்டுவிடுவதன்மூலம். இதன் பொருள் என்ன? எங்கும் இறைவனைக் காணல் என்பது தான். அப்படித்தான் நாம் செயல்புரிய வேண்டும். நூறுவருடங்களாக வாழ ஆசைப்படலாம். விரும்பினால் எல்லா உலக ஆசைகளுக்கும் நம் மனத்தில் இடம் கொடுக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் தெய்வீமாக்கி விடுங்கள், சொர்க்கமாக்கிவிடுங்கள், அவ்வளவுதான். பிறருக்கு உதவி செய்துகொண்டு ஆனந்தமான நீண்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்று நாம் ஆசைப்படலாம். இவ்வாறு செயல்புரிந்தபடிதான் முக்திக்கான வழியைத் தேட முடியும். இதைத் தவிர வேறு வழியே இல்லை.
உண்மையை அறிந்துகொள்ளாமல், ஒருவன் உலக போகங்களில் முட்டாள்தனமாக மூழ்கினால் அவ்ன வழிதவறிவிட்டான், அவனால் லட்சியத்தை அடைய முடியாது. இனி, உலகைச் சபித்துக்கொண்டு அதை விட்டு விட்டுக் காட்டிற்குப்போய், உடலை ஒடுக்கி, பட்டினியால் உடலை அணு அணுவாகக் கொன்று, நெஞ்சை ஈரமற்ற கல்லாக்கிக் கொண்டு, கடின சித்தமுள்ளவனாக ஆகின்றவனும் வழி தவறியவனே. இவை இரண்டும் இரண்டு துருவங்கள். இரண்டுமே தவறான நோக்குடையவை. இருவரும் வழி தவறியவர்களே. இருவரும் லட்சியத்தை அடைய முடியாது.
எனவே எல்லாவற்றிலும் இறைவனை இணைத்துச் செயல்புரியுங்கள் என்று வேதாந்தம் சொல்கிறது. வாழ்க்கையைத் தெய்வீகமாக்கி, தெய்வமாக ஆக்கி, இடைவிடாமல் வேலை செய்யுங்கள். நாம் செய்ய வேண்டியதும், கேட்டுப் பெற வேண்டியதும் இவ்வளவுதான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எங்கும் இறைவன் இருக்கிறார். அவரைத் தேடி நாம் எங்கே போவது? ஒவ்வொரு செயலிலும் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வோர் உணர்ச்சியிலும் அவர் ஏற்கனவே உள்ளார். இதை உணர்ந்து செயல்புரிய வேண்டும். அது ஒன்றுதான் வழி. வேறு வழியே இல்லை. அப்போதுதான் நமது கர்மபலன்கள் நம்மைக் கட்டுப்படுத்தாது.
போலி ஆசைகள் தான் நமது எல்லா தீமைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம் என்பதைப் பார்த்தோம். அந்த ஆசைகளையே இறைவனின்மூலம் தெய்வீகமாக்குங்குகள், தூய்மைப்படுத்துங்கள். அதன் பின் அவை துன்பத்தையோ தீமையையோ கொண்டு வராது. இந்த ரகசியத்தை அறியாதவர்களுக்கு, அதை அறிந்துகொள்ளும்வரை, உலக வாழ்க்கையே நரகமாகத்தான் இருக்கும். தங்களுக்கு உள்ளும், தங்களைச் சுற்றியும், எல்லா இடங்களிலும் எல்லையற்ற ஆனந்தச் சுரங்கம் இருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. அவர்கள் இன்னும் அதைக் கண்டு பிடிக்கவில்லை. நரக வாழ்க்கை என்பது என்ன? அறியாமைதான் நரகம் என்கிறது வேதாந்தம்.
பெரிய ஆற்றின் கரையில் உட்கார்ந்துகொண்டு தாகத்தால் நாம் இறந்து கொண்டிருக்கிறோம். உணவுக் குவியல்களுக்கு அருகே அமர்ந்துகொண்டு பசியால் செத்துக் கொண்டிருக்கிறோம். இதோ ஆனந்தமயமான பிரபஞ்சம் உள்ளது, ஆனால் நாம் அதைக் காணவில்லை. நாம் எப்போதும் அதற்குள்தான் இருக்கிறோம். ஆனால் எப்போதும் அதைத் தவறாகவே புரிந்து கொள்கிறோம். இந்த ஆனந்தமயமான பிரபஞ்சத்தை நமக்குக் காட்ட முயல்வதாகத்தான் எல்லா மதங்களும் கூறுகின்றன.
ஆனந்தமயமான இந்தப் பிரபஞ்சத்தைக் காண்பதற்கான ஏக்கம் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறது. எல்லா நாடுகளும் இதைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன. மதத்தின் ஒரே லட்சியம் இதுதான். இந்த லட்சியம் , வெவ்வேறு மதங்களில், வெவ்வேறு விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சொல்கின்ற விதத்தில் காணப்படும் வேறுபாடுதான் நாம் காண்கின்ற இந்த வேறுபாடுகளையெல்லாம் உண்டாக்கியுள்ளது. ஒரு கருத்தை ஒரு மதம் ஒருவிதமாக வெளிப்படுத்துகிறது. மற்றொன்று சற்று வித்தியாசமாகச் சொல்லலாம். ஆனால் ஒவ்வொன்றும், ஒருவேளை, ஒரே விஷயத்தையே வெவ்வேறு மொழிகளில் வெளிப்படுத்துகின்றன.
இது விஷயமாக மேலும் கேள்விகள் எழுகின்றன. பேசுவது சுலபம். எங்கும் எதிலும் இறைவனையே பார்க்க வேண்டும், அப்போதுதான் உலகை உண்மையாக அனுபவிக்க முடியும் என்று என் இளமைப் பருவத்திலிருந்தே கேள்விப்பட்டு வருகிறேன். ஆனால் உலகத்தில் புகுந்து, ஓரிரு அடிகள் பெற்றதும் இந்தக் கருத்து பறந்துவிடுகிறது. கடவுளே ஒவ்வொரு மனிதனிலும் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டே நான் தெருவில் நடந்துபோய்க் கொண்டிருக்கிறேன். வாட்டசாட்டமான ஒருவன் என்னை இடித்துக் கீழே தள்ளிவிடுகிறான். என் ரத்தம் தலைக்கேற, முஷ்டியைத் தயாராக வைத்துக்கொண்டு, எல்லாம் இறைவன் என்ற கருத்தையே மறந்துவிட்டு, அவனை அடிப்பதற்காகப் கோப வெறியோடு எழுந்திருக்கிறேன். எல்லாமே மறந்துபோய்விடுகிறது. கடவுளைப் பார்ப்பதற்குப் பதில் சாத்தானைத்தான் நான் அப்போது பார்க்கிறேன்.
நாம் பிறந்தது முதற்கொண்டே, எல்லாவற்றிலும் கடவுளைப் பார்க்கும்படிதான் நமக்குப் போதிக்கிறார்கள். எங்கும் எதிலும் கடவுளையே பார்க்குமாறுதான் ஒவ்வொரு மதமும் போதிக்கிறது. புதிய ஏற்பாட்டில் ஏசுவின் போதனை உங்களுக்கு நினைவில்லையா? நம் எல்லோருக்குமே அந்தப் போதனையைத் தான் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறை உலகிற்கு வரும் போதுதான் கஷ்டம் ஆரம்பிக்கிறது.
ஈசாப்பின் கதைகளில் ஒன்று உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏரியில் தன்னுடைய பிரதிபலிப்பைப் பார்த்துக் கொண்டது ஒரு கலைமான். அதைத் தன் குட்டியிடம் காட்டி, நான் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவன்! என்னுடைய அழகான தலையைப் பார். உரம்மிக்க வலுவான என் உடம்பைப் பார். அது மட்டுமா? என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியும் தெரியுமா? என்று பெருமையடித்துக் கொண்டிருந்தது. அப்போது சற்று தொலைவில் வேட்டை நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அவ்வளவுதான், எடுத்தது ஓட்டம். பல மைல் தூரம் ஓடிவிட்டு, மூச்சுத் திணறத் திரும்பி வந்தது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த குட்டி அதனிடம், நீ மிகவும் சக்தி வாய்ந்தவன் என்று இப்போதுதான் என்னிடம் சொன்னாய்! நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும் இப்படி ஓடிவிட்டாயே. அது எப்படி? என்று கேட்டது. நீ சொல்வதெல்லாம் சரி, மகனே; ஆனால் நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் என் தைரியமெல்லாம் பறந்துவிடுகிறது என்று பதிலளித்தது அந்தக் கலைமான். நம் நிலையும் அதுபோல்தான் இருக்கிறது.
நாம் மனித குலத்தைப்பற்றி உயர்வாக நினைக்கிறோம். நாம் மிகவும் பலமும் தைரியமும் வாய்ந்தவர்கள் என்று நினைக்கிறோம். பல அரிய தீர்மானங்களைச் செய்து கொள்கிறோம். ஆனால் துன்பம் மற்றும் ஆசைகளாகிய நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்கும்போது, கதையில் கண்ட மானைப் போலவே நடந்து கொள்கிறோம். நிலைமை இதுவானால், இந்தப் போதனைகளால் எல்லாம் என்ன பயன்? நிச்சயம் பெரும் பயன் இருக்கிறது. விடாமுயற்சி கடைசியில் வெற்றி தரும் என்பதே அது. ஒரே நாளில் எதையும் சாதிக்க முடியாது.
ஆன்மாவைப்பற்றி முதலில் கேள்விப்பட வேண்டும். பிறகு அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். பிறகு அதைத் தியானம் செய்ய வேண்டும்.
தரையில் ஊர்ந்து செல்லும் புழு முதற்கொண்டு எல்லோருடைய கண்ணிற்கும் நீலவானம் தெரிகிறது. ஆனால் அது எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது! நாம் அடைய வேண்டிய லட்சியமும் அப்படித்தான். அது வெகுதூரத்தில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அதை நாம் அடைந்தே தீரவேண்டும். ஏன், மிகவும் உயர்ந்த லட்சியத்தையே நாம் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலோர் எந்தவொரு லட்சியமும் இல்லாமல் இருட்டு வாழ்க்கையில்தான் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகளைச் செய்வானானால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்பது நிச்சயம். எனவே ஒரு லட்சியம் இருப்பது சிறந்தது. இந்த லட்சியம் நமது இதயத்தில் புகும்வரை, நமது மூளையில் புகும்வரை, நமது நாடி நரம்புகளில் புகும்வரை, நமது ரத்தத்தின் ஒவ்வொரு துளியுடனும் கலந்து துடிக்கும்வரை, நமது உடலின் அணுக்கள் தோறும் கலந்து ஊடுருவும்வரை நாம் அதைப்பற்றிக் கேட்க வேண்டும். அதையே சிந்திக்க வேண்டும். உள்ளம் நிறையும் போது வாய் பேசுகிறது. அது மட்டுமல்ல; உள்ளத்தின் நிறைவு தான் கைகளை வேலை செய்யத் தூண்டுகிறது.
எண்ணமே நம்மிலுள்ள தூண்டும் சக்தி. மனத்தை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள். நாட்கணக்காக அதைக் கேளுங்கள். மாதக்கணக்காகச் சிந்தியுங்கள். தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள். தோல்விகள் இயற்கையானவை. வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பவை அவை. தோல்விகள் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. அப்படிப்பட்ட வாழ்க்கையில் என்ன இனிமை இருக்கிறது! போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். ஒரு பசு பொய் சொல்வதை நான் கேட்டதில்லை, ஆனால் அது வெறும் பசுதான்; மனிதன் அல்ல! ஆகவே தோல்விகளை, சறுக்கல்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஆயிரம் தடவை லட்சியத்திலிருந்து வழுவ நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் தடவை தவறினாலும் இன்னொரு முறை முயலுங்கள்.
எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பதுதான் மனிதனின் லட்சியம். எல்லாவற்றிலும் பார்க்க முடியா விட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்கவேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆன்மாவின் முன்னால் எல்லையற்ற வாழ்க்கை உள்ளது. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் லட்சியத்தை அடைவது உறுதி.
ஒன்றேயான இறைவன் மனத்தைவிட வேகமாக இயங்குபவர், மனத்தைவிட அதிவிரைவாகச் செயல்படக் கூடியவர். தேவர்களாலும் அடையப்பட முடியாதவர். சிந்தனைக்கு எட்டாதவர். அவர் இயங்குவதாலேயே எல்லாம் இயங்குகின்றன. எல்லாமே அவருள்தான் இருக்கின்றன. அவர் இயங்குகிறார், இயக்கம் அற்றவராகவும் இருக்கிறார்; பக்கத்திலும் இருக்கிறார், தூரத்திலும் இருக்கிறார்; எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறார். எல்லாவற்றையும் ஊடுருவியபடி புறத்திலும் அவரே இருக்கிறார். எல்லாவற்றிலும் அதே ஆன்மாவையும் ஆன்மாவில் எல்லாவற்றையும் காண்பவன் ஆன்மாவிலிருந்து ஒருபோதும் விலகுவதில்லை. உயிர்கள் அனைத்தையும் பிரபஞ்சம் முழுவதையும் ஆன்மாவில் காணும்போது, காணும்போது மட்டுமே மனிதன் ரகசியத்தை அடைந்தவனாகிறான். அதன்பின் அவனுக்குப் பொய்த் தோற்றம் இல்லை. பிரபஞ்சம் முழுவதிலும் ஒன்றைக் காண்பவனுக்குத் துன்பம் ஏது?
வாழ்வின் ஒருமை, அனைத்தின் ஒருமை- இது வேதாந்தத்தின் மற்றுமோர் உயர்ந்த கருத்தாகும். அறியாமைதான் எல்லா துன்பங்களுக்கும் காரணம். என்பதை வேதாந்தம் எப்படி விளக்குகிறது என்பதைப் பார்ப்போம். பன்மைக் கருத்துதான் இந்த அறியாமை. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில், நாட்டிற்கும் நாட்டிற்கும் இடையில், சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில், சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் வேறுபாடு காண்பதுதான் இந்த அறியாமை. ஓர் அணுவிற்கும் மற்றோர் அணுவிற்கும் இடையில் வேறுபாட்டை ஏற்படுத்தும் இந்த உணர்ச்சிதான் எல்லா துன்பங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. இந்த வேறுபாடுகள் இல்லை, அவை உண்மையல்ல என்று வேதாந்தம் கூறுகிறது. பார்வைக்கு அப்படித் தெரிகிறது. அது வெறும் தோற்றமே. எல்லாவற்றின் அடிப்படையில் அந்த ஒருமை இருக்கவே செய்கிறது. மேல்மட்டத்திற்குக் கீழே சென்று பார்ப்போமானால் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில், இனங்களுக்கு இடையில், உயர்ந்தவனுக்கும் தாழ்ந்தவனுக்கும் இடையில், பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையில், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையில் அந்த ஒருமை நிலவுவதைக் காணலாம். இன்னும் ஆழமாகப் போனால், எல்லாமே ஒரே பரம்பொருளின் வேறுபாடுகளே என்பது தெரியும். எல்லாம் ஒன்றே என்ற இந்த ஞானம் பெற்றவனுக்கு மனமயக்கம் இல்லை. எது அவனை மதிமயங்கச் செய்ய முடியும்? அவன் எல்லாவற்றின் ரகசியத்தையும் அறிகிறான், அதன்பின் அவனுக்கு ஏது துன்பம்? அவனுக்கு ஏது ஆசை? எல்லாவற்றின் உண்மை, எல்லாவற்றின் மையம், எல்லாவற்றின் ஒருமை இறைவனே, நிலையான சச்சிதானந்தப் பரம்பொருளே என்பதை அவன் ஆராய்ந்து உணர்ந்துவிட்டான். அங்கே நோய் இல்லை. மரணம் இல்லை. துன்பமோ துயரமோ இல்லை, அதிருப்தி இல்லை. அங்கே முழுமையான இரண்டற்ற நிலையும், முழுமையான ஆனந்தமும்தான் இருக்கின்றன. அவன் யாருக்காக வருந்த வேண்டும்? அந்த உண்மைநிலையில் மரணம் இல்லை, துன்பம் இல்லை. கவலைப்படுவதற்கோ, கலங்குவதற்கோ அங்கே காரணம் இல்லை. தூயவனான, உருவமற்ற, உடலற்ற, மாசற்ற, எல்லாம் அறிந்த, மகோன்னதமான கவிஞனான, எதன் சார்புமில்லாமல் தானாகவே விளங்குகின்ற அந்த இறைவனே எல்லாவற்றையும் ஊடுருவியிருக்கிறார். யாருக்கு எந்தத் தகுதி உண்டோ அதை அவரே அவர்களுக்கு அளிக்கிறார்.
அஞ்ஞானத்திலிருந்து தோன்றிய இந்த அஞ்ஞான உலகை எல்லாமாக நினைத்துக்கொண்டு, அதிலேயே மூழ்கியிருப்பவர்கள் இருளில் தடுமாறுபவர்கள். இனி, இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு உயர்ந்த வாழ்க்கையைப்பற்றி நினைக்காதவர்ளோ அதைவிடக் காரிருளில் தட்டுத்தடுமாறி கொண்டிருக்கிறார்கள்.
இயற்கையின் ரகசியத்தை அறியும்போது, மனிதன் இயற்கையின் உதவியாலேயே இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்கிறான். அவன் மரணத்தை வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
ஓ சூரியதேவனே, உனது தங்கத் தகட்டால், நீ உண்மையை மறைத்துக் கொண்டிருக்கிறாய்; உன்னுள்ளிருக்கும் உண்மையை நான் காண்பதற்காக நீ அந்தத் தகட்டை விலக்குவாயாக! உன்னுளிருக்கும் உண்மையை இப்போது நான் உணர்ந்து கொண்டேன்; உனது கிரணங்களின் உண்மையான பொருளையும் மகிமையையும் உணர்ந்து கொண்டேன். உனக்குள் பிரகாசிப்பது எது என்பதையும் கண்டு கொண்டேன்; உன்னுள்ளிருக்கும் உண்மையை நான் காண்கிறேன்; உன்னுள் இருப்பதே என்னுள்ளம் இருக்கிறது; நானே அது.

Comments
Post a Comment