மாயையும் சுதந்திரமும்!
மாயையும் சுதந்திரமும்!
புகழ்மேகங்களின்மீது கோடு கிழித்தவாறுதான் நாம் தோன்றுகிறோம். என்று ஒரு கவிஞர் பாடினார். ஆனால் நாம் எல்லோரும் என்னவோ அப்படி புகழ்க்கோடுகள் மீதொன்றும் தோன்றிவிடவில்லை. பலர் கருமேகங்களின் மூடலுடன் தான் பிறக்கிறோம். இதில் சந்தேகம் இல்லை. போர்க்களத்தில் போரிடுவதற்கே போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் வந்துள்ளோம். இந்த உலகத்தில் போராடுவதற்காக நாம் அழுத கொண்டே பிறக்கிறோம். நம்மால் முடிந்தவரை போராடி, இந்த எல்லையற்ற வாழ்க்கைக் கடலில் நமக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொள்ள முயல்கிறோம். யுகயுகங்களாக நாம் முன்னே சென்று கொண்டிருக்கிறோம். கடக்க வேண்டிய தூரமோ எல்லையற்று விரிந்து பரந்து கிடக்கிறது. மரணம் நம்மை இந்தப் போர்க்களத்திலிருந்து நீக்கும்வரை இவ்வாறு சென்று கொண்டிருக்கிறோம். தோல்வியுடன் வெளியேறுவோமா, வெற்றியுடன் வெறியேறுவோமா என்பது நமக்குத் தெரியாது. இதுதான் மாயை.
குழந்தையின் உள்ளத்தில் நம்பிக்கை பிரகாசமாக ஒளி வீசுகிறது. அவன் கண்ணைத் திறக்கும்போது, அவனுக்கு இந்த உலகம் முழுவதும் தங்கமயமாக ஜொலிக்கிறது. தன்னால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்றே அவன் நினைக்கிறான். அவன் பெரியவனாகி முன்னேறிச் செல்லும்போது, ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும் இயற்கை ஒரு கடக்க முடியாத சுவர்போல் அவன் முன்னால் நின்று, அவனுடைய முன்னேற்றத்தைத் தடுக்கிறது. அந்தச் சுவரில் திரும்பத் திரும்ப எவ்வளவுதான் முட்டிக்கொண்டாலும், அதை உடைத்துக் கொண்டு முன்னே செல்ல அவனால் முடிவதில்லை. அவன் முன்னே செல்லச்செல்ல அவனது குறிக்கோளும் அவனை விட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. கடைசியில் மரணம் வந்து ஒருவேளை அவனை விடுதலை செய்யலாம். இதுதான் மாயை.
விஞ்ஞானி தோன்றுகிறான். அவனுக்கு அறிவுப்பசி அதிகமாக இருக்கிறது. எந்தத் தியாகமும் அவனுக்குப் பெரிதல்ல. எந்தப் போராட்டமும் அவன் நம்பிக்கையைத் தகர்ப்பதில்லை. அவன், இயற்கையின் ரகசியங்களை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துக் கொண்டே முன்னேறுகிறான். இயற்கையின் அடியாழத்திலுள்ள ரகசியங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்கிறான். ஏன்? இதெல்லாம் எதற்காக? அவனை நாம் ஏன் பெருமைப்படுத்த வேண்டும்? அவன் ஏன் புகழ் பெற வேண்டும்? எந்த மனிதனையும் விடப் பலமடங்கு அதிகமான விஷயங்களை இயற்கை செய்யவில்லையா? இயற்கை மந்தமானது; உணர்வற்றது என்பதும் ஒருபுறம் இருக்கிறது. அப்படி மந்தமான, உணர்வற்ற இயற்கையைப் போலவே செயல்படுவது, புகழுக்குரிய விஷயமா என்ன? எவ்வளவு சக்தி வாய்ந்த இடியையும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செலுத்த இயற்கையால் முடியும், இயற்கை செய்வதில் ஒரு துளி அளவு மனிதன் செய்தாலும், அவனை வானளாவப் புகழ்கிறோம். ஏன்? இயற்கையைக் காப்பியடிப்பதற்காக, மரணத்தைக் காப்பியடிப்பதற்காக, மந்தநிலையைக் காப்பியடிப்பதற்காக, உணர்வின்மையைக் காப்பியடிப்பதற்காக அவனை ஏன் புகழ வேண்டும்? ஈர்ப்புச் சக்தி, எவ்வளவு பெரிய பொருளையும் தூள்தூளாக்கிவிடும் வல்லமை படைத்தது. ஈர்ப்புச்சக்தி உணர்வற்றதே. உணர்வற்றதைப் பின்பற்றுவதில் என்ன பெருமை இருக்க முடியும்? என்றாலும், நாம் எல்லோரும் அதைக் குறித்தே போராடுகிறோம். இதுதான் மாயை.
புலன்கள் நம்மை வெளியே இழுக்கின்றன. இன்பம் என்பதே கிடைக்காத இடத்தில், மகிழ்ச்சி என்பதே கிடைக்காத இடத்தில் மனிதன் இன்பத்தைத் தேடுகிறான். மகிழ்ச்சியைத் தேடுகிறான். இந்தத் தேடல் பயனற்றது, வீண், இன்பம் இங்கே இல்லை என்று பல காலமாக நமக்குப் போதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் பாடம் படிக்கவில்லை . நாமே அனுபவிக்காமல் நம்மால் அதைக் கற்றுக்கொள்ள முடியாது. நாம் முயற்சிக்கிறோம். அடி ஒன்று விழுகிறது. அப்போதாவது புத்தி வருகிறதா? இல்லை. விட்டில்பூச்சிகள் தாங்களாகவே சென்று விளக்கில் விழுந்து சாவதுபோல், புலனின்பத்தில் திருப்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும்மீண்டும் அதில் ஈடுபடுகிறோம். புதிய சக்தியுடன் திரும்பத்திரும்ப அதில் மூழ்குகிறோம். நம் சக்திகளெல்லாம் ஒடுங்கி, ஏமாற்றமடைந்து, இறக்கும்வரை, இதே காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறோம். இதுதான் மாயை.
நம் அறிவைப் பற்றிய விஷயமும் இப்படியே. பிரபஞ்சத்தைப் பற்றிய மர்மங்களை அறிந்துகொள்ளும் ஆசையில், நிறுத்தாமல் கேள்வி கேட்கிறோம். நிச்சயமாக அதற்குப் பதில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். நமக்குப் பதில் கிடைக்காது என்பதை நம்மால் நம்ப முடிவதில்லை. சில அடிகள்தான் எடுத்து வைத்திருப்போம். உடனேயே, ஆதியும் அந்தமும் அற்ற, கடக்க முடியாத காலம் என்னும் சுவர் நம் முன்னே எழுகிறது. இன்னும் சில அடிகள், எல்லையற்ற இடம் என்ற கடக்க முடியாத சுவர் நம்முன் தோன்றுகிறது. மேலும், இவையனைத்துமே காரணம், காரியம் என்ற சுவர்களுக்குள் விடுபட முடியாதவாறு கட்டுப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றைக் கடந்து போக முடியாது. என்றாலும், நாம் போராடுகிறோம் போராட வேண்டித்தான் இருக்கிறது. இதுதான் மாயை.
நம் ஒவ்வொரு மூச்சிலும் நம் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் நம் ஒவ்வோர் அசைவிலும் நாம் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறோம். அந்தக் கணமே நாம் அவ்வாறு சுதந்திரமாக இல்லை என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. உடலாலும் மனத்தாலும் எண்ணங்களாலும் உணர்ச்சிகளாலும் நாம் இயற்கையின் அடிமைகளாக, கொத்தடிமைகளாகத்தான் இருக்கிறோம். இதுதான் மாயை.
தன்னுடைய குழந்தை மிகவும் அசாதாரணமானது, பிறவி மேதை என்று நினைக்காத எந்தத் தாயுமில்லை. அந்தக் குழந்தையை அவள் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறாள். அந்தக் குழந்தையிடம் தன் உயிரையே வைக்கிறாள். குழந்தை வளர்ந்து பெரியவனாகிறான், ஒருவேளை அவன் குடிகாரனாக, ஒரு மிருகம்போல் வளரலாம். தாயையே கொடுமைப்படுத்தலாம், அவன் துன்புறுத்துந்தோறும் அவளுக்கு அவன்மீதுள்ள பாசம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அந்தத் தாய், பிறவியிலேயே பாசத்திற்கு அடிமையாக இருக்கிறாள். அதை அவளால் மாற்றிக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ளாத உலகம் சுயநலமற்ற அன்பு என்று அவளுடைய செயலைப் பாராட்டிப் புகழ்கிறது. அந்தக் கொடுமையிலிருந்து விடுபட அவள் பல்லாயிரம் முறை முயல்கிறாள். என்றாலும் அவளால் அது முடிவதில்லை. ஆகவே தன்னுடைய இயலாமையை அற்புதமான அன்பு என்ற மலர்க் குவியலால் மறைத்துவிடுகிறாள். இதுதான் மாயை.
நாம் எல்லோருமே இப்படித்தான் இந்த உலகத்தில் நடந்துகொள்கிறோம்.
புராணக் கதை ஒன்று இருக்கிறது. ஒருமுறை நாரதர், கிருஷ்ணரைப் பார்த்து, பகவானே, மாயையை எனக்குக் காண்பியுங்கள் என்று கேட்டார். சில நாட்கள் கழிந்தன, ஒருநாள் கிருஷ்ணர் நாரதரைத் தன்னோடு ஒரு பாலைவனப் பயணத்திற்கு வருமாறு அழைத்தார். பலகாத தூரம் நடந்தபிறகு அவர் நாரதரைப் பார்த்து, நாரதா எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. சிறிது தண்ணீர் கொண்டு வர முடியுமா? என்று கேட்டார். பகவானே உடனே கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நாரதர் புறப்பட்டார்.
சிறிது தூரத்தில் ஒரு கிராமம் இருந்தது. அவர் அந்தக் கிராமத்தில் சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். அழகான இளமங்கை ஒருத்தி கதவைத் திறந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்தில், கிருஷ்ணர் தண்ணீருக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும், தண்ணீர் கிடைக்காவிட்டால் தாகத்தால் ஒருவேளை அவர் இறந்துவிடக்கூடிய சூழ்நிலையில் இருப்பதையும் நாரதர் மறந்தார். எல்லாவற்றையும் மறந்துவிட்டு அந்தப் பெண்ணோடு பேசத் தொடங்கினார். அன்று அவர் திரும்பிப் போகவில்லை. அடுத்த நாளும் அந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டே இருந்தார். அவர்கள் பேச்சு காதலாக மலர்ந்தது. இறுதியில் அந்தப் பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு அவளது தந்தையிடம் நாரதர் கேட்டார். அவர்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளையும் பெற்றார்கள். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன. நாரதருடைய மாமனார் இறந்தார். அவரது சொத்திற்கு நாரதர் வாரிசானார். மனைவி, மக்கள், நிலபுலங்கள், ஆடு மாடுகள் இவற்றோடு மிகவும் இன்பமான வாழ்க்கை வாழ்வதாகத்தான் நாரதர் நினைத்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் திடீரென்று பெரிய வெள்ளம் வந்தது. பொங்கிவந்த ஆற்று வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு கிராமத்திற்குள் புகுந்தது. வீடுகள் இடிந்து விழுந்தன. மனிதர்களும் மிருகங்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். வெள்ள வேகத்தில் எல்லாம் மிதந்து சென்று கொண்டிருந்தன. நாரதர் தப்பிக்க வேண்டியிருந்தது. மனைவியை ஒரு கையிலும், இரண்டு குழந்தைகளை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு, தோளில் ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டு, அந்தப் பயங்கர வெள்ளத்தைக் கடக்க முயன்றார். சில அடிகள் எடுத்து வைத்தவுடனேயே வெள்ளத்தின் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதை உணர்ந்தார். அவரது தோளில் இருந்த குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நாரதர் துயரத்தால் கதறினார். அந்தக் குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில், கையில் பிடித்திருந்த குழந்தைகளிலும் ஒன்று வெள்ளத்தில் சென்று விட்டது.
கடைசியில், அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த அவருடைய மனைவியையும் வெள்ளம் அடித்துச் சென்றது. அவரைக் கரையில் ஒதுக்கியது. துயரத்தால் கதறினார் அவர். அப்போது, மகனே தண்ணீர் எங்கே? நீ தண்ணீர் எடுத்துவரப் பேனாய் நான் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்; நீ போய் அரைமணி நேரம் ஆகிவிட்டது என்று ஒரு மெல்லிய குரல் அவருக்குப் பின்னால் கேட்டது. அரைமணி நேரமா! என்று நாரதர் அதிர்ச்சியோடு கேட்டார். பன்னிரண்டு நீண்ட ஆண்டுகள் அவர் மனத்தில் ஓடி மறைந்துவிட்டன. ஆனால் இந்த நிகழ்ச்சிகளெல்லாம் அரைமணி நேரத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன! இதுதான் மாயை.
நாம் எல்லோரும் ஏதாவது ஒருவிதத்தில் இந்த மாயையில் சிக்கியிருக்கிறோம். இது புரிந்துகொள்வதற்கு மிகவும் சிரமமான, கஷ்டமான விஷயம். இது எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் போதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை நம்பியவர் சிலரே. நாமே எதையும் அனுபவித்தறியாமல் நம்மால் எதையும் நம்பமுடியாது. இது எதைக் காட்டுகிறது? மிகவும் பயங்கரமான ஒன்றைத்தான். எல்லாமே பயனற்றது. எல்லாவற்றிற்கும் முடிவுகட்டும் காலம் என்ற ஒன்று வருகிறது. அது எதையும் விட்டு வைப்பதில்லை. புண்ணியவான், பாவி, அரசர், ஆண்ட அழகன், அழகற்றவன் என்று எல்லோரையும் விழுங்கி அது ஏப்பம் விடுகிறது. அது எதையுமே விட்டு வைப்பதில்லை. அழிவு என்ற ஒரே குறிக்கோளை நோக்கியே எல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றன. நம் அறிவு, நம் கலைகள், நமது விஞ்ஞானங்கள் எல்லாமே அழிவே நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றன. இந்த அலையைத் தடுக்கவோ, கணநேரம் பிடித்துவைக்கவோ யாராலும் முடியாது. ப்ளேக் நோய் பரவி விட்டால், மது, நடனம் என்று பல்வேறு வீணான முயற்சிகளால் அந்த நோயை மறப்பதற்கு மக்கள் முயல்வதுபோல், நாமும் காலத்தின் சுழற்சியை மறப்பதற்கு முயலலாம். எல்லா வகையான புலனின்பங்களிலும் ஈடுபடுவதன்மூலம், காலத்தின் சுழற்சியை மறப்பதற்கு நாம் முயல்கிறோம். இதுதான் மாயை.
இதற்கு இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. ஒரு வழி எல்லோருக்கும் தெரிந்தது. மிகவும் சாதாரணமானது. அதாவது நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால் அதைப்பற்றி நினைக்காதீர்கள் என்பதுதான். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற பழமொழியும் இதைப் பின்பற்றி வந்ததுதான். எல்லாம் உண்மை. எல்லாம் நிஜம், ஆனால் அதை லட்சியம் செய்யாதீர்கள்.உங்களால் முடிந்த அளவு இன்பங்களை அனுபவியுங்கள். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். வாழ்க்கையின் இருண்ட பக்கத்தைப் பார்க்காதீர்கள். நம்பிக்கை மிக்க வெளிச்சமான பக்கத்தைப் பாருங்கள் என்பதுதான் இந்த வழி. இதில் சிறிதளவு உண்மை இருக்கிறது. ஆனால் கூடவே ஆபத்தும் இருக்கிறது. இது நல்ல ஒரு தூண்டு சக்தியாக இருக்கிறது என்பது உண்மை. நம்பிக்கையும் ஆக்கபூர்வமான லட்சியமும் வாழ்க்கைக்கு நல்ல தூண்டுகோல்களே. ஆனால் இந்த முறையில் ஓர் ஆபத்து இருக்கிறது. வாழ்க்கையில் போராடிப் போராடி, கடைசியில் நம்பிக்கையே இழந்து முயற்சியைக் கைவிடுவதுதான் அந்த ஆபத்து.
உலகத்தை அது இருக்கின்றவாறே பாருங்கள். உங்களால் முடிந்தவரை அமைதியாக, வசதியாக இருந்து கொள்ளுங்கள். எல்லா துன்பங்களையும் பொறுத்துக் கொள்ளுங்கள். அடி விழும்போது அது அடியல்ல. மலர் அர்ச்சனையே என்று சொல்லிக் கொள்ளுங்கள். அடிமைகளாக விரட்டப்படும்போது, நீங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். இரவும் பகலும் பொய் சொல்லி உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அது ஒன்று தான் இன்பமாக வாழ்வதற்கு ஒரே வழி என்று இந்த வழியைப் போதிப்பவர்கள் சொல்கிறார்கள். இதுதான் நடைமுறைக்கு ஏற்ற அறிவாம்! இந்தக் கருத்து இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டைவிட அதிகமாக எப்போதும் உலகில் பரவியிருக்கவில்லை. ஏனென்றால் இப்போதைப்போல் அடிகள் இவ்வளவு பலமாக முன்பு எப்போதும் விழுந்ததில்லை. இவ்வளவு தீவிரமான போட்டியும் இருந்ததில்லை. மனிதனுக்கு மனிதன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதில்லை. ஆகவே இந்த ஆறுதலை மட்டும்தான் சொல்ல முடியும். இந்தக் காலத்தில் மிகவும் தீவிரமாக வற்புறுத்தப்படுகிறது. இந்த வழி தோல்வியைத்தான் தரும். அப்படியேதான் நடந்துகொண்டும் இருக்கிறது. பிணத்தை மலர்களால் மறைக்க முடியாது; அது முடியாத காரியம். அது பலநாள் தாங்காது. மலர்கள் சீக்கிரம் வாடி உதிர்ந்துவிடும்; பிணம் முன்பைவிட அதிகமாக அழுகி நாற்றமெடுக்கும். நம் வாழ்க்கையும் இப்படித்தான். நாறுகின்ற நமது புண்களைத் தங்கக் கவசத்தை நீக்கும் நாள் வரும்போது, புண்கள் இன்னும் துர்நாற்றத்தோடு வெளிப்படுகின்றன.
அப்படியானால் நம்பிக்கையே கிடையாதா? நாம் எல்லோரும் மாயையிலே பிறந்து அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நாம் அதன் அடிமைகள் என்பது உண்மைதான். அப்படியானால் இதிலிருந்து வெளியேற வழியே இல்லையா? விடிவே கிடையாதா?
நாம் துன்பத்தில் உழல்கிறோம். இந்த உலகம் உண்மையில் ஒரு சிறைச்சாலை. அழகு என்று நாம் சொல்வதெல்லாம் உண்மையில் ஒரு சிறைச்சாலையே. நம் அறிவு, மனம் எல்லாம் கூட உண்மையில் சிறைச் சாலைகளே. இவையெல்லாம் பல காலமாக அறிந்த விஷயங்கள் தான். எப்படிப் பேசினாலும், என்ன பேசினாலும் இந்த உண்மையை எப்போதாவது ஒருமுறை உணர்ந்திராத மனிதனே இருக்க முடியாது. வயதானவர்கள் இதை அதிகமாக உணர்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களுக்கு ஒரு முழு வாழ்க்கையில் அனுபவம் இருப்பதும், இயற்கையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாது என்பதுமே ஆகும். இதிலிருந்து தப்ப வழியே இல்லையா? நிலைமை இப்படியெல்லாம் இருந்தாலும், கண் முன்னாலுள்ள உண்மை பயங்கரமானதாக இருந்தாலும், இந்தத் துன்ப துயரங்களின் நடுவில், வாழ்வும் சாவும் ஒரே அர்த்தமுடையவையாக இருக்கின்ற இந்த உலகில் காலங்காலமாக எல்லா நாடுகளிலும் எல்லா இதயங்களிலும் ஒரு சிறிய குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது; எனது இந்த மாயை தெய்வீகமானது. குணங்களால் ஆக்கப்பட்டது. கடக்க மிகவும் கடினமானது. ஆனாலும் என்னிடம் வருபவர்கள் பிறவிக் கடலைக் கடந்து விடுகிறார்கள். பெரும் சுமையைத் தாங்கித் துன்பப்படுபவர்களே, என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு அளிக்கிறேன். இந்தக் குரல்தான் நம்மை வழிகாட்டி முன்னே அழைத்துச் செல்கிறது. மனிதன் இந்தக் குரலை முன்பே கேட்டிருக்கிறான்; காலங்காலமாகக் கேட்டுக் கொண்டும் இருக்கிறான். மனிதனுக்கு எல்லாமே இழந்தது போலாகி, எல்லா நம்பிக்கைகளும் அற்றுப்போய், தன் சக்தியில் வைத்திருக்கும் அனைத்து நம்பிக்கைகளும் அழிந்து, எல்லாமே கைவிரல்களுக்கிடையே கரைந்துபோவது போல் மறைந்துபோய், வாழ்க்கையே பாழான நிலையில் இந்தக் குரலைக் கேட்கிறான். இதைத்தான் மதஉணர்வு என்று சொல்கிறார்கள்.
ஒரு பக்கத்தில், இவையெல்லாம் பொருளற்றவை. எல்லாம் மாயை என்ற துணிச்சலான கருத்து உள்ளது; அதே நேரத்தில் மாயைக்கு அப்பால் அதிலிருந்து வெளியே வழி இருக்கிறது என்ற நம்பிக்கை தருகின்ற கருத்தும் இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் லவுகீக மக்கள், மதம், தத்துவம் போன்ற முட்டாள் தனமான கருத்துக்களுக்காக உங்கள் மூளையைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். உலகத்தில் வாழுங்கள். இந்த உலகம் தீமையானதுதான். முடிந்த அளவு இதிலேயே சிறப்பாக வாழ முயலுங்கள் என்று சொல்கிறார்கள். சாதாரண வார்த்தைகளில் சொல்வதானால், புண்களையெல்லாம் இயன்ற அளவு சாமர்த்தியமாக மறைக்கும் வண்ணம் ஒரு கபட வாழ்க்கை வாழுங்கள், பொய் வாழ்க்கை வாழுங்கள், ஏமாற்று வாழ்க்கையையே தொடர்ந்து வாழுங்கள். உண்மை மறைந்து போகும்வரை, ஒட்டுக்குமேல் ஒட்டாகவே போட்டு, ஒட்டுமயமாகவே ஆகிவிடுங்கள். இதுவே அவர்கள் கூறும் நடைமுறை வாழ்க்கை.
இந்த ஒட்டுவேலையில் திருப்தி அடைபவர்களுக்கு மதம் ஒரு தேவையாக இருப்பதில்லை. இப்போதைய நமது நிலை மற்றும் நமது வாழ்க்கையில் ஏற்படும் அதிருப்தி, ஒட்டுமயமான இந்த வாழ்க்கையின்மீது ஏற்படும் தீவிர வெறுப்பு, ஏமாற்று வேலைகள் மற்றும் பொய்களின்மீது ஏற்படும் எல்லையற்ற அருவருப்பு இவையே மத உணர்வு தோன்றக் காரணமாகின்றன.
நாம் மேலே கண்ட இந்த நடைமுறைக் கருத்து போதி மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, புத்தருக்குத் தோன்றியது. அது அர்த்தமற்றது என்பதை அவர் உணர்ந்தார் என்றாலும் வழி அவருக்குத் தெரியவில்லை. உண்மையைத் தேடும் முயற்சியைக் கைவிடு, உலகிற்கே திரும்பிச் சென்று ஏமாற்று வாழ்க்கை வாழ், எல்லா பொருட்களையும் தவறான பெயரிட்டு அழை, எல்லோரிடமும் பொய்களையே சொல்லிக்கொண்டு திரி என்று ஆசை அவரைத் தூண்டியது. ஆனால் அந்த மாமனிதரான புத்தர் மிகவும் தீரத்துடன் அதை வென்றார் மரங்களைப் போன்ற அஞ்ஞான வாழ்க்கையைவிட மரணமே மேலாகும். தோல்வியுடன் வாழ்வதைவிட வீர மரணமே மேலாகும் என்று அறிவித்தார். மதவுணர்வுக்கு இதுவே அடிப்படை.
ஒரு மனிதன் இந்தக் கருத்தில் நிலைபெறும்போது, உண்மையை அறிவதற்கும், கடவுளை உணர்வதற்கும் உரிய வழியில் அவன் போய்க் கொண்டிருக்கிறான் என்று பொருள். இந்தத் தீர்மானம்தான் மதஉணர்வு எழுவதற்கு முதல் தூண்டுகோலாக இருக்கிறது. நானே எனக்காக ஒரு பாதையை வகுத்துக் கொள்வேன், உண்மையை அறிவேன், அல்லது அந்த முயற்சியில் உயிரையே விடுவேன்.
உலகியலின் பக்கத்திலோ எல்லாம் வெறுமை, எதுவும் இல்லை. எல்லாம் மறைந்துகொண்டே இருக்கின்றன. அழகு, இளமை, நம்பிக்கை இவை நிறைந்த இன்றைய மனிதன், நாளைய அனுபவசாலியாக ஆகிறான். இன்று பூத்த மலர்களாகிய நம்பிக்கையும் இன்பங்களும் சுகங்களும் எல்லாம் நாளைய உறைபனியில் வாடிக் கருகிவிடும். ஒரு பக்கம் இப்படி இருக்கிறது. மற்றொரு பக்கத்தில், வெற்றியின் மேல் மனிதனுக்கு உள்ள ஆசை, வாழ்க்கையின் தீமைகளை வெல்ல ஆசை, வாழ்க்கையை வெற்றிகொள்ள ஆசை, பிரபஞ்தசதையே கீழடக்க ஆசை, இவை உள்ளன. இந்தப் பக்கத்தில்தான் மனிதர்கள் உறுதியாக நிற்க முடியும். எனவே வெற்றிக்காக, உண்மைக்காக மத உணர்வுக்காகத் துணிச்சலாகப் போராடுபவர்கள் சரியான வழியிலேயே போகிறார்கள். அதையே வேதங்களும் போதிக்கின்றன. மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது. கத்திமுனையில் நடப்பது போன்றது. ஆனாலும் சோர்வடையாதீர்கள். எழுந்திருங்கள். விழித்திருங்கள், குறிக்கோளை, லட்சியத்தை அடைந்தே தீருங்கள்.
மத உணர்வின் இந்தப் பல்வேறு வெளிப்பாடுகள், அவை எந்த உருவத்தில் மனிதர்களுக்குத் தோன்றினாலும் சரி, அவற்றின் மையக் கருத்து என்னவோ ஒன்றுதான். அவை எல்லாமே இந்த உலக வாழ்க்கை என்னும் பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தி பெறும் வழியைத்தான் போதிக்கின்றன. உலகிற்கும் மதத்திற்கும் சமரசம் ஏற்படுத்துவதற்காக அவை தோன்றவில்லை. மாறாக, பலமான கட்டை அறுத்து, மதத்தை அதன் சொந்த லட்சியத்தில் நிலைநிறுத்தத்தான் மதங்கள் தோன்றியுள்ளனவே தவிர உலகத்தை அனுசரித்துப் போவதற்காக அல்ல. எல்லா மதங்களும் போதிப்பது இதைத்தான். வேதாந்தத்தின் கடமை எல்லா மதங்களின் கருத்துக்களையும் ஒருங்கிணைத்து, மிகவுயர்ந்தது முதல் மிகத் தாழ்ந்தது வரையுள்ள எல்லா மதங்களின் பொதுவான கருத்தை வெளிப்படச் செய்வதே.
வடிகட்டின மூடநம்பிக்கை என்று நாம் சொல்லும் கருத்திற்கும், மிகவும் உன்னதமான தத்துவம் என்று நாம் சொல்வதற்கும் நோக்கம் ஒன்றாகத்தான் இருக்கிறது, அதாவது, இரண்டும் துன்பத்திலிருந்து வெளியேறும் வழியைக் காட்ட முயல்கின்றன. பல நேரங்களில் இந்த வழியைக் காட்டுபவர், இயற்கையின் நியதிகளால் கிட்டுப்படாதவராக, ஒரே வார்த்தையில் சொல்லப் போனால் சுதந்திரமாக இருக்கிறார். சுதந்திரரான இந்த வழிகாட்டி யார்? அவர் எப்படிப்பட்டவர் என்பதில் எத்தனையோ பிரச்சினைகளும் கருத்துவேற்றுமைகளும் இருந்தாலும், அவர் சகுணக் கடவுளாகவோ, மனிதனைப் போன்ற உணர்வுப் பொருளாகவோ, ஆணாகவோ, பெண்ணாகவோ, அஃறிணைப் பொருளாகவோ இருக்கலாம். இப்படிப் பலவாறாக இருப்பதாக முடிவில்லாத தர்க்கம் இருந்தாலும், அடிப்படைக் கருத்து ஒன்றுதான்.
பல்வேறு பிரிவுகளுக்கிடையே நிலவுகின்ற, ஏறக்குறைய நம்பிக்கையற்றவையான இந்த வாதப் பிரதி வாதங்களின் இடையிலும், அவற்றின் ஊடேயும் ஒருமையின் தங்க இழை ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம். வேதாந்தத் தத்துவத்தில் இந்த இழை கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. அது சிறிதுசிறிதாக நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இந்த வெளிப்பாட்டின் முதல் படி, எல்லா மதங்களும் சுதந்திரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன என்ற பொதுவான கருத்தே ஆகும்.
நமது இன்பங்கள், துன்பங்கள், கஷ்டங்கள், போராட்டங்கள் எல்லாவற்றின் இடையிலேயும் ஒரு வினோதமான நிஜம் என்னவென்றால் நாம் எல்லோரும் நிச்சயமாக சுதந்திரத்தை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதே. உண்மையில் கேள்வி இதுதான். இந்தப் பிரபஞ்சம் என்பது என்ன? இது எதிலிருந்து தோன்றியுள்ளது? எதில் போய் முடிகிறது? அது சுதந்திரத்திலிருந்து எழுகிறது, சுதந்திரத்தில் நிலைபெறுகிறது, சுதந்திரத்திலேயே மறையவும் செய்கிறது என்பதுதான் பதில்.
சுதந்திரம் என்ற கருத்தை நாம் விடவே முடியாது. சுதந்திரம் பற்றிய கருத்தில்லாத நமது செயல்கள், ஏன், நமது வாழ்க்கையே பயனற்றதுதான். நாம் அடிமைகளே, சுதந்திரர்கள் அல்ல என்பதையே ஒவ்வொரு கணமும் இயற்கை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதன்கூடவே நாம் சுதந்திரர்கள் என்ற கருத்தும் தோன்றவே செய்கிறது. ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும், மாயை நம்மை அடித்து வீழ்த்தி, நாம் அதற்கும் கட்டுப்பட்டவர்கள் என்பதைக் காண்பிக்கிறது. அதேவேளையில், இந்த அடி, கட்டுப்பட்ட உணர்ச்சி இவற்றுடன் நாம் சுதந்திரர்களே என்ற உணர்ச்சியும் தோன்றுகிறது.
நமக்கு உள்ளே இருக்கும் ஏதோ ஒரு குரல், நான் சுதந்திரர்கள் என்று சொல்கிறது. ஆனால் அந்தச் சுதந்திரத்தை உணர்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் முயன்றாலோ கடக்க முடியாத கஷ்டங்கள் நம்மை எதிர்நோக்கி நிற்கின்றன. இந்த எதிர்ப்புகளை மீறி, உள்ளே இருக்கும் அந்தக் குரல், நான் சுதந்திரன் என்று ஆணித்தரமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
உலகத்தின் பல்வேறு மதங்களையும் நாம் ஆராய்ந்தால். எல்லாவற்றிலும் சுதந்திரம் என்ற இந்தக் கருத்து இருப்பதைக் காணலாம். சுதந்திரக் கருத்தை உறுதிப்படுத்துவது மதங்கள் மட்டும் அல்ல. இந்த வார்த்தையை அதனுடைய குறுகிய நோக்கத்தில் பார்க்கக் கூடாது. சமுதாய வாழ்க்கை முழுவதுமே சுதந்திரம் என்ற இந்த ஒரு கருத்தையே உறுதிப்படுத்துகின்றன. எல்லா இயக்கங்களும் இந்தக் கருத்தையே வற்புறுத்துபவைதாம். சுமைகளைத் தாங்குபவர்களே, துன்பப்படுபவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள் என்று அழைக்கும் அந்தக் குரலை, அறிந்தோ அறியாமலோ நாம் ஒவ்வொருவரும் கேட்டிருக்கிறோம். அந்தக் குரல் ஒருவேளை ஒரே மொழியாக இருக்காது, ஒரே நடையாக இருக்காது. ஆனால் சுதந்திரத்தை உணர்த்தி நிற்கின்ற அந்தக் குரல் ஏதோ ஓர் உருவத்தில் நம்முள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆம், அந்தக் குரலின் அழைப்பைக் கேட்டுதான் நாம் இங்கே பிறந்திருக்கிறோம். நம்முடைய ஒவ்வோர் அசைவும் அதற்காகத்தான். நாம் அறிந்தோமோ அறியவில்லையோ நாம் எல்லோரும் அந்தக் குரலைப் பின்பற்றி, சுதந்திரத்தை நோக்கியே விரைந்து கொண்டிருக்கிறோம். கிராமக் குழந்தைகள் அனைவரும் புல்லாங்குழல் ஊதுபவனின் குழலிசையில் மயங்கி அவனைப் பின் தொடர்ந்து சென்றதுபோல், அந்தக் குரலின் இசையில் மயங்கி, நம்மை அறியாமலேயே நாம் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கிறோம்.
அந்தக் குரலைத் தொடரும்போதுதான் நாம் அறநெறி நிற்பவர்களாக இருக்கிறோம். மனிதன் மட்டுமல்ல, மிகத் தாழ்ந்தது முதல் மிக உயர்ந்தது வரையிலுள்ள எல்லா உயிர்களும் இந்தக் குரலைக் கேட்டு, அதை நோக்கித்தான் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டத்தில் அவை ஒன்றோடொன்று சேர்கின்றன; அல்லது ஒன்றையொன்று வழியிலிருந்து விலக்கித் தள்ளுகின்றன. போட்டி, இன்பங்கள், போராட்டங்கள், வாழ்வு, சாவு என்று பிரபஞ்சத்தில் நடைபெறும் எல்லாமே இந்தக் குரலை அடைவதற்காக நடக்கும் வெறிப் போராட்டமே. இப்படித்தான் இயற்கை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
பிறகு என்ன? காட்சி மாறுகிறது. அந்தக் குரலை அறிந்து, அது என்னவென்று புரிந்துகொண்ட பிறகு, காட்சி அடியோடு மாறி விடுகிறது. மாயையின் கொடூரமான போர்க்களமாக இருந்த அதே உலகம் நல்லதாக அழகியதாக மாறிவிடுகிறது. அதன்பின் இயற்கையை நாம் சபிப்பதில்லை; உலகம் கொடியது, எல்லாம் வீண் என்று சொல்வதில்லை. அதன்பின் நாம் அழுது கதற வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் குரலைப் புரிந்துகொண்டவுடன், இந்தப் போராட்டம்,சண்டை, போட்டி, துன்பம், கொடுமை, அற்ப சந்தோஷங்கள், மகிழ்ச்சி இவையெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கானகாரணம் நமக்குத் தெரிந்துவிடுகிறது. பொருட்களின் இயல்பே அதுதான் என்பது நமக்குத் தெரிகிறது. அப்படி இல்லாவிட்டால், நாம் அறிந்தும் சரி, அறியாமலும் சரி அடைந்தேயாக வேண்டிய இந்தக் குரலை நோக்கி நாம் போக முடியாது. மனித குலமும் இயற்கையும் அனைத்தும் சுதந்திரம் அடைவதற்காகத் தான் போராடுகின்றன. சூரியன் அந்த லட்சியத்தை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறது. பூமி அதற்காகவே சூரியனைச் சுற்றுகிறது, சந்திரன் அதற்காகவே பூமியைச் சுற்றுகிறது. கோள்கள் சுற்றுவதும் காற்று வீசுவதும் அந்தக் குறிக்கோளை அடைவதற்காகத்தான். எல்லாமே அதை அடைவதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றன. மகான் அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறார். அவரால் போகாமலிருக்க முடியாது. இதற்காக அவரை பெருமைப்படுத்த வேண்டியதில்லை. பாவியின் நிலையும் அதுதான். வள்ளலும் நேராக அந்தக் குரலை நோக்கித்தான் போகிறான். அவனைத் தடுக்க முடியாது. கருமியும் அதே பாதையில்தான் போகிறான். நன்மைக்காக எப்போதும் உழைப்பவனும் இந்தக் குரலையே தன்னுள் கேட்கிறான். அந்தக் குரலை நோக்கி அவன் போய்த்தானாக வேண்டும். போகாமலிருக்க முடியாது. சோம்பேறியாக இருப்பவனின் நிலையும் இதுவே. ஒருவன் மற்றவனைவிட அதிகமாகத் தடுக்கி விழுகிறான். அதிகமாகத் தடுக்கி விழுபவனைக் கெட்டவன் என்றும், குறைவாகத் தடுக்கி விழுபவனை நல்லவன் என்றும் நாம் அழைக்கிறோம். நன்மையும் தீமையும் இருவேறு பண்புகள் அல்ல; அவை ஒன்றேதான். வேறுபாடு, அளவில்தான் இருக்கிறதே தவிர தரத்தில் அல்ல.
சுதந்திரம் என்ற இந்தச் சக்தியின் வெளிப்பாடு தான் உண்மையிலேயே பிரபஞ்சத்தை ஆள்கிறது என்றால், நமது சிறப்புப் பிரிவான மத விஷயத்திலும் இந்தக் கருத்து உறுதியாகச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. முன்னோர் வழிபாடு, சக்தி வாய்ந்த கொடிய தேவதைகளின் வழிபாடு போன்றவற்றைக் கொண்ட மிகத் தாழ்ந்த மதங்களை எடுத்துக் கொள்வோம். இந்தத் தெய்வங்கள் அல்லது முன்னோர்களைப் பற்றிய முக்கியமான கருத்து என்னவாக இருக்கிறது? அவர்கள் இயற்கையைவிடச் சக்தி மிக்கவர்கள், இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்படாதவர்கள் என்பதுதான். இதுபோன்ற வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் இயற்கையைப்பற்றி மிகவும் எல்லைக்கு உட்பட்ட கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. மனிதனால் சுவரைத் துளைத்துச் செல்லவோ வானத்தில் பறக்கவோ முடியாது. ஆனால் அந்தத் தெய்வங்களுக்கு இந்தச் சக்தி உண்டு. தத்துவரீதியாக இதற்கு என்ன பொருள்? அதாவது சுதந்திரக் கருத்து இங்கே உறுதியாக இருக்கிறது. இங்கே மனிதனுக்குத் தெரிந்தவரையில் அவனது தெய்வங்கள், இயற்கையைவிடச் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் உயர்ந்த தெய்வங்களை வழிபடுபவர்களின் நிலையும் இப்படியே தான்.
இயற்கையைப் பற்றிய கருத்து விரிவடைய விரிவடைய, இயற்கைக்கு மேலான ஆன்மாவைப் பற்றிய கருத்தும் விரிவடைகிறது. இது கடைசியில், ஒரே கடவுள் கருத்தில் நிறைவடைகிறது. மாயை (இயற்கை) இருக்கிறது. அதை அடக்கியாளும் ஒரு தெய்வமும் இருக்கிறார் என்பதே அந்தக் கருத்து.
இந்த ஒரேகடவுள் கருத்து ஆரம்பிக்கும் இடத்தில் தான் வேதாந்தமும் ஆரம்பிக்கிறது. ஆனால் வேதாந்தத் தத்துவத்திற்கு இன்னும் அதிகமான விளக்கம் தேவைப்படுகிறது. மாயையின் வெளிப்பாடுகளுக்கெல்லாம் அப்பால், மாயையை ஆள்கின்ற, மாயையைச் சாராத ஒரு கடவுள் இருக்கிறார்; அவர் நம்மையெல்லாம் தம்மிடம் கவர்ந்திழுக்கிறார்; நாம் எல்லோரும் அவரை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற கருத்து மிகவும் சிறந்ததாகத்தான் இருக்கிறது. இந்தக் கருத்து, பகுத்தறிவுக்கு நேரடியாக முரண்பாடாக இல்லா விட்டாலும், தெளிவுற்று மங்கலாக இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. உங்களுடைய தோத்திரத்தில், இறைவா, நான் இன்னும் உனக்குப் பக்கத்தில் என்று சொல்லியிருக்கிறது. வேதாந்திகளுக்கு இது உடன் பாடானதே. ஆனால் அவர்கள் ஒரேயொரு வார்த்தையே மட்டும் மாற்றி, இறைவா, நீ இன்னும் எனக்குப் பக்கத்தில் என்று சொல்வார்கள்.
லட்சியம் மிகவும் தூரத்தில், இயற்கைக்கு அப்பால் இருந்து கொண்டு நம்மையெல்லாம் தன்னிடம் இழுத்துக் கொண்டிருக்கிறது என்னும் கருத்தை இழிவாக்காமலும், சீர்குலைக்காமலும் மேலும்மேலும் நமக்கு அருகே கொண்டு வர வேண்டும். வானத்திலிருந்த கடவுள், இயற்கையில் இருக்கும் கடவுளாகிறார். இயற்கையில் இருக்கும் கடவுள், இயற்கையாகிறார். இயற்கையாகவே ஆன கடவுள், இந்த உடலாகிய கோயிலுக்குள் உறையும் கடவுளாகிறார். இந்தக் கோயிலுக்குள் உறையும் கடவுள் இறுதியில் கோயிலாகவே ஆகிறார்; ஆன்மாவாகவும் மனிதனாகவும் ஆகிவிடுகிறார். வேதாந்தத்தின் கடைசி வார்த்தை இதுதான். ரிஷிகள் பிரபஞ்சம் எங்கும் தேடிய கடவுள் நம்முடைய இதயங்களிலேயே இருக்கிறார். நீங்கள் கேட்ட குரல் சரியானதுதான். ஆனால் அந்தக் குரல் வந்த திசையைத்தான் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள் என்கிறது வேதாந்தம். நீங்கள் கண்ட சுதந்திர லட்சியம் சரியானதுதான். அது உங்களுக்கு வெளியே இருப்பதாக நினைத்ததுதான் நீங்கள் செய்த தவறு. அந்தக் குறிக்கோளை உங்களுக்கு நெருக்கமாக, மிகவும் நெருக்கமாக் கொண்டு வாருங்கள். அப்போது அது என்றென்றும் உங்களுக்குள்ளேயே, உங்கள் ஆன்மாவின் ஆன்மாகவாகத்தான் இருந்தது என்பதை உணர்வீர்கள்.
அந்தச் சுதந்திரம் உங்கள் சொந்த இயல்பு. மாயை ஒருபோதும் உங்களைக் கட்டவே இல்லை. இயற்கை உங்களை ஆள முடியாது. இயற்கை உங்கள் கழுத்தை நெரிப்பதாகக் கனவுகண்டு நீங்கள் ஒரு குழந்தையைப் போல் பயந்தீர்கள். உங்கள் குறிக்கோள் இந்தப் பயத்திலிருந்து விடுபடுவதுதான். இந்தக் குறிக்கோளை அறிவுபூர்வமாக மட்டுமல்லாமல், உண்மையிலேயே பார்த்து, இந்த உலகத்தை உணர்வதைவிட நிச்சயமாக அதை நாம் உணர வேண்டும். அப்போதுதான் நாம் சுதந்திரர்கள் என்பதை உணர்வோம். அப்போது, அப்போது மட்டுமே எல்லா துன்பங்களும் மறையும். அப்போதுதான் இதயத்திலுள்ள குழப்பங்களெல்லாம் நீங்கி இதயம் அமைதி பெறும். எல்லா கோணல்களும் நேராக்கப்படும். பல்வேறு வெளிப்பாடுகள், இயற்கை போன்ற மன மயக்கங்கள் எல்லாம் மறையும். மாயை இப்போது இருப்பதைப்போல் ஒரு பயங்கரக் கனவாக இல்லாமல், அழகு மிகுந்ததாக மாறிவிடும். இந்தப் பூமி இப்போது உள்ளதைப்போல் சிறைச்சாலையாக இல்லாமல் விளையாட்டு மைதானமாக மாறிவிடும். அபாயங்கள், துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் தெய்வீகமாகித் தங்கள் உண்மை இயல்பை நமக்குக் காட்டும்; எல்லாவற்றிற்கும் பின்னால், எல்லாவற்றின் உள்ளும் புறமுமாக நிற்பது ஒரே உண்மைப் பரம்பொருள்தான் என்பதை அப்போது தான் நாம் உணர்வோம்.

Comments
Post a Comment