ஆன்மா

ஆன்மா

பேராசிரியர் மாக்ஸ்முல்லரின் வேதாந்தத் தத்துவம் பற்றிய மூன்று சொற்பொழிவுகள் என்ற பிரபல நூலை உங்களுள் பலர் படித்திருப்பீர்கள். அதே விஷயத்தைப் பற்றி பேராசிரியர் டய்சன் ஜெர்மானிய மொழியில் எழுதிய நூலை சிலர் படித்திருக்கலாம். இந்திய மதச் சிந்தனையைப்பற்றி மேலை நாடுகளில் எழுதியும் கற்பித்தும் வருபவற்றுள் ஒரு நெறி முக்கியமாகக் கையாளப்படுகிறது. அது அத்வைதம். வேதங்களின் போதனைகள் முழுவதும் அந்த ஒரு நெறியிலேயே அடங்கி விட்டது என்றும் கருதப்படுகிறது. ஆனால் இந்தியச் சிந்தனையில் பல நிலைகள் இருக்கின்றன. மற்ற நிலைகளோடு ஒப்பிட்டால், அத்வைதம் சிறுபான்மை நெறி என்றே சொல்ல வேண்டும்.

மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியச் சிந்தனையில் பல பிரிவுகள் இருந்திருக்கின்றன. இன்ன பிரிவினர் இன்ன கோட்பாட்டை நம்ப வேண்டும் என்றெல்லாம் வகுத்துத் தருவதற்கான அத்தாட்சி பெற்ற எந்தச் சங்கமோ அமைப்போ இல்லாததால், மக்கள் தங்களுக்குப் பிடித்த மதப் பிரிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு தத்துவத்தையும் மதப்பிரிவையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் சுதந்திரம் இருந்தது. எனவே மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியா மதப் பிரிவுகளால் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். இப்போதுகூட எத்தனை நூறு மதப் பிரிவுகள் இந்தியாவில் இருக்கின்றன என்பதோ, ஆண்டுதோறும் எத்தனை புதிய பிரிவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன என்பதோ எனக்குத் தெரியாது. இந்தியாவின் மதப் பேரூற்று வற்றாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.

இந்தப் பல பிரிவுகளையும் இரண்டு தலைப்புகளின் கீழே கொண்டு வந்துவிடலாம். ஒன்று வைதீகம், மற்றொன்று அவைதீகம், அதாவது வைதீகம் அல்லாதது. இந்துமத சாஸ்திரங்களான வேதங்கள் நிலையான அருள் வெளிப்பாடுகள் என்று நம்பும் பிரிவுகள் வைதீகமானவை. வேதங்களை மறுத்து, வேறு பிரமாணங்களைக் கொள்கின்ற பிரிவுகள் அவைதீகமானவை. தற்கால அவைதீகப் பிரிவுகளில் முக்கியமானவை சமண மதமும் புத்த மதமுமே. வைதீகப் பிரிவினருள் சிலர், பகுத்தறிவைவிட வேதங்களே உயர்ந்த பிரமாணங்கள் என்கிறார்கள். வேறு சிலர், சாஸ்திரங்களில் அறிவுபூர்வமானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறார்கள்.

வைதீகப் பிரிவுகளுள் சாங்கியம், நையாயிகம், மீமாம்சகம் என்பவை முக்கியமான மூன்று ஆகும். இவற்றுள் முதலிரண்டும் தத்துவங்களுடன் நின்று விட்டனவே தவிர எந்த நெறிகளையும் அவை படைக்கவில்லை. மீமாம்சகர் அல்லது வேதாந்திகளே இப்போது உண்மையில் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்ற ஒரே பிரிவினர். அவர்களுடைய தத்துவமே வேதாந்தம். இந்து மதத்திலுள்ள எல்லாத் தத்துவப் பிரிவுகளும் வேதாந்தம் அல்லது உபநிடதங்களிலிருந்தே தொடங்குகின்றன. ஆனால் அத்வைதிகள் தங்களுக்கு, அந்தப் பெயரை ஒரு சிறப்புப் பெயராக வைத்துக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் வேதாந்தத்தைத் தவிர வேறு எந்த அடிப்படையிலும் அமைக்க விரும்பவில்லை. காலப்போக்கில் வேதாந்தம் மட்டும் வேரூன்றிவிட்டது. இப்போது உள்ள இந்து மதப் பிரிவுகள் எல்லாமே வேதாந்தத்தின் ஏதாவது ஒரு நெறியுடன் தொடர்பு உடையனவாகவே இருக்கின்றன. இருந்தாலும் இந்தப் பிரிவுகளின் கருத்துக்களெல்லாம் ஒருமித்தமாக இல்லை.

வேதாந்தத்தில் நாம் மூன்று முக்கியமான வேறுபட்ட கோட்பாடுகளைக் காண்கிறோம். ஒரு விஷயத்தை அவர்கள் எல்லோருமே கடவுளை நம்புகிறார்கள். மேலும், வேதங்கள் இறைவனால் வெளியிடப்பட்டவை என்றும் நம்புகிறார்கள். ஆனால் இது கிறிஸ்தவர்களோ முஸ்லீம்களோ தங்கள் நூல்களைப் பற்றி நம்புவதுபோல் அல்லாமல், சற்று மாறுபட்ட, தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது. வேதங்கள் கடவுளைப் பற்றிய அறிவை வெளிப்படுத்துபவை. கடவுள் நிரந்தரமானவர், ஆதலால் அவரைப் பற்றிய அறிவும் அவரிடம் நிரந்தரமாக உள்ளது. எனவே வேதங்களும் நிரந்தரமானவை என்பது வேதாந்திகளின் கருத்து.

வேதாந்திகளிடம் மற்றொரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. படைப்பு சுழற்சியாக நடைபெறுகிறது என்பதே அது. படைப்பு முழுவதுமே தோன்றி மறைகிறது. அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, சிறிதுசிறிதாகத் தூலத் தன்மை பெற்று, கணக்கிட முடியாத காலத்திற்குப் பிறகு, சிறிதுசிறிதாகநுட்பத்தன்மை அடைந்து, கடைசியில் மறைந்து ஒடுங்கிவிடுகிறது. அந்த ஒடுங்கிய நிலையிலேயே சிலகாலம் இருக்கிறது. பின்னர் மறுபடியும் இதே சுழற்சி நடைபெறுகிறது. ஆகாசம், பிராணன் என்ற இரண்டு தத்துவங்களை அவர்கள் கற்பித்துக் கொள்கிறார்கள். இதில் ஆகாசம் என்பது ஏறுக்குறைய விஞ்ஞானிகள் கூறும் ஈதர் போன்றது.. பிராணன் என்பது ஒரு சக்தி. இந்தப் பிராணனின் அதிர்வினால்தான் பிரபஞ்சம் தோன்றுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒரு சுழற்சி முடிந்தவுடனேயே, இயற்கையின் எல்லா வெளிப்பாடுகளும் சிறிதுசிறிதாக நுட்பத்தன்மை அடைந்து ஆகாசத்தில் கரைந்துவிடுகின்றன. ஆகாசத்தைப் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் இந்த ஆகாசத்திலிருந்துதான் எல்லாமே தோன்றுகின்றன. இயற்கையின் பலவித சக்திகளான ஈர்ப்புசக்தி, கவர்ச்சி சக்தி, விலங்கு சக்தி, சிந்தனை, உணர்ச்சிகள், நரம்புகளின் இயக்கம் எல்லாமே பிராணனில் ஒடுங்குகின்றன. அப்போது பிராணனின் அதிர்வும் நின்றுவிடுகிறது. அடுத்த சுழற்சி ஆரம்பிக்கும் வரையில் பிராணன் அதே நிலையில் இருக்கிறது. மறுபடியும் பிராணன் அதிரத் தொடங்குகிறது. அந்த அதிர்வு ஆகாசத்தின்மீது செயல்படுகிறது. பிரபஞ்சத்திலுள்ள உருவங்கள் அனைத்தும் ஒழுங்குமுறையுடன் அதிலிருந்து வெளிவருகின்றன.

துவைதம் எனப்படுகின்ற வேதாந்தப் பிரிவைப் பற்றித் தான் நான் முதலில் உங்களிடம் பேசப் போகிறேன். பிரபஞ்சத்தைப் படைத்து அதை ஆள்பவரான கடவுள், இயற்கையிலிருந்தும் மனித ஆன்மாவிலிருந்தும் என்றென்றைக்குமாக வேறுபட்டவர் என்று துவைதிகள் நம்புகிறார்கள். கடவுள் என்றென்றும் இருப்பவர், இயற்கையும் என்றென்றும் இருப்பது, ஆன்மாக்களும் அப்படியே. இயற்கையும் ஆன்மாக்களும் தங்களை வெளிப்படுத்துகின்றன. மாற்றமடைகின்றன. ஆனால் கடவுள் மாறுவதில்லை; எப்போதும் ஒருபோலவே இருக்கிறார். கடவுள் சகுணமானவர்; குணங்கள் உள்ளவர், ஆனால் உடல் உள்ளவர் என்பதல்ல. அவருக்கு மனிதக் குணங்களெல்லாம் உள்ளன. அவர் கருணைமயமானவர், நியாயமானவர், சக்தி வாய்ந்தவர், சர்வ வல்லமை படைத்தவர், அவரை நாம் அணுக முடியும், பிரார்த்தனை செய்ய முடியும், அவரிடம் அன்பு செலுத்த முடியும், பிரதியாக அவரும் நம்மீது அன்பு செலுத்துகிறார் என்பனவெல்லாம் துவைதிகளின் கடவுள் பற்றிய கருத்துக்களாகும்.

ஒரே வார்த்தையில் சொல்லப்போனால், அவர் மனிதக் கடவுள். ஆனால் மனிதனைவிடப் பன்மடங்கு உயர்ந்தவர். மனிதர்களிடமுள்ள தீய குணங்கள் எதுவும் அவரிடமில்லை. எல்லையற்ற நற்குணக் களஞ்சியமே கடவுள் என்பதுதான் கடவுளைப்பற்றி துவைதிகளின் விளக்கம். மூலப் பொருட்கள் இல்லாமல் அவரால் படைக்க முடியாது. அந்த மூலப்பொருள் இயற்கை. அதைக்கொண்டே அவர் பிரபஞ்சம் முழுவதையும் படைக்கிறார்.

வேதாந்திகள் அல்லாத, அணுவாதிகள் என்ற சில துவைதிகள் இருக்கிறார்கள். இயற்கை முழுவதும் எல்லையற்ற அணுக்கூட்டமே தவிர வேறொன்றுமில்லை; இறைவனின் சங்கல்பம் இந்த அணுக் கூட்டத்தின்மீது செயல்படுவதால்தான் இந்தப் படைப்பு நிகழ்கிறது என்பது அவர்கள்கூற்று. வேதாந்திகள் இந்த அணுக்கொள்கையை மறுக்கிறார்கள். இந்த வாதம் அறிவு பூர்வமானதாக இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். பகுக்க முடியாத இந்த அணுக்கள், ஜியோமிதிப்புள்ளிகள் போன்றவை. அதாவது, அவற்றிற்குப் பகுதிகளோ பரிமாணங்களோ இல்லை. பரிமாணம் இல்லாதவற்றை எல்லையற்றமுறை பெருக்கினாலும் அவை முன்பிருந்தபடியேதான் இருக்கும். பகுதிகள் இல்லாத எதனாலும், பகுதிகள் உள்ள ஒன்றை ஆக்க முடியாது. எவ்வளவு பூஜ்யங்களைக் கூட்டினாலும் ஒரு முழு எண்ணைப் பெற முடியாது. அணுக்களுக்கும் பகுதிகளோ பரிமாணங்களோ இல்லையென்றால், இவற்றிலிருந்து பிரபஞ்சம் தோன்றுவது என்பது முடியாத காரியம். ஆகவே வேதாந்தத் துவைதிகளின் கருத்துப் படி, வேறுபாடில்லாமல், எங்கும் ஒரே போல் இருக்கும் இயற்கையிலிருந்துதான் கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார்.

இந்தியர்களில் பெரும்பான்மையோர் துவைதிகளே. சாதாரணமாக மனித இயல்பு உயர்ந்த எதையும் புரிந்து கொள்ளாது. மத நம்பிக்கை உள்ள உலக மக்களுள் நூற்றுக்குத் தொண்ணூறுபேர் துவைதிகளாக இருப்பதையே காண்கிறோம். ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலுள்ள எல்லா மதங்களுமே துவைத மதங்கள்தாம். அப்படித்தான் இருக்கவும் முடியும். நுட்பமானவற்றைச் சாதாரண மனிதனால் சிந்திக்க முடியாது. தன் அறிவுக்கு எட்டியவற்றைப் பிடித்துக் கொள்ளத்தான் அவன் விரும்புகிறான். அதாவது உயர்ந்த ஆன்மீக லட்சியங்களையும் தன்னுடைய நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம்தான் அவனால் புரிந்துகொள்ள முடியும். நுட்பமான கருத்துக்களைப் பவுதீக நிலைக்கு மாற்றினால்தான் அவன் புரிந்து கொள்வான். உலகம் முழுவதுமுள்ள சாதாரண மக்களின் மதம் இது தான். தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தங்களை அடக்கியாளும் வல்லமை படைத்த சக்கரவர்த்தி போன்ற ஒரு கடவுளே அவர்களுக்கு வேண்டும். அவரைப் பூமியிலுள்ள சக்கரவர்த்திகளை எல்லாம்விடத் தூயவர் ஆக்குகிறார்கள். எல்லா நற்பண்புகளையும் உடையவராக அவரைக் காண்கிறார்கள், தீய பண்புகளை அவரிடமிருந்து விலக்குகிறார்கள். ஆனால் நன்மையும் தீமையும் தனித்தனியாக இருப்பது சாத்தியமல்ல என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இருட்டைப் பற்றிய கருத்து இருக்க முடியும் என்று சொல்வதைப்போல் இருக்கிறது, அவர்கள் சொல்வது!

துவைதக் கருத்துக்கள் எல்லாவற்றிலுமே ஒரு பெரிய குறை இருக்கிறது. நற்குணக் களஞ்சியமாகவும், நீதியும் கருணையும் நிறைந்திருப்பவராகவும் இருக்கும் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட இந்த உலகில், இவ்வளவு தீமைகள் இருப்பது ஏன்? எல்லா துவைத நெறிகளிலும் இந்தக் கேள்வி எழுந்தது. ஆனால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்காக இந்துக்கள் எந்தச் சாத்தானையும் உருவாக்கவில்லை. ஒரேமனதாகக் குற்றத்தை மனிதனின் மீதே சுமத்தினார்கள் அது அவர்களுக்குச் சுலபமாகவும் இருந்தது. ஏன்? ஏனென்றால் நான் சற்றுமுன் சொன்னது போல், சூன்யத்திலிருந்து ஆன்மாக்கள் படைக்கப்பட்டதாக இந்துக்கள் நம்பவில்லை. நம்முடைய எதிர்காலத்தை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதை இந்த வாழ்க்கையில் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும், மறுநாளுக்கான ஏற்பாடுகளைச் செய்யவே முயன்று கொண்டிருக்கிறோம். இன்று, நாளைய விதியை நிர்ணயிக்கிறோம். நாளை, நாளைக்கு அடுத்த நாளின் விதியை நிர்ணயிப்போம். இவ்வாறே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வாதத்தை இறந்தகாலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது, நியாயமானதே. நாம் நமது செயல்களாலேயே நம் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்கிறோம் என்றால், அதே விதியை இறந்தகாலத்திற்கும் ஏன் பொருத்திப் பார்க்கக்கூடாது? ஓர் எல்லையற்ற சங்கிலித் தொடரில், ஒரே மாதிரியான சில சங்கிலிப் பிணைப்புகள் மாறி மாறி வந்து கொண்டிருந்தால், இந்த இணைப்புகளின் சேர்க்கையில் ஒரு பகுதியை மட்டும் ஆராய்வதன் மூலம், முழுச் சங்கிலியின் இயல்பையும் நம்மால் விளக்கிவிட முடியும். ஆகவே காலம் என்னும் எல்லையற்ற சங்கிலியில் ஒரு பகுதியை மட்டும் பிரித்து, அதைப் புரிந்துகொள்ள முடிந்தால், அத்துடன் இயற்கை எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதும் உண்மையாக இருக்குமானால், காலம் என்னும் முழுச்சங்கிலியையும் நாம் விளக்கி விட முடியும். இந்தக் குறைந்த கால அளவில், இங்கே, நாமே நமது விதியை உருவாக்கிக் கொள்கிறோம் என்பது உண்மையானால், நாம் இப்போது காண்பதுபோல் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பது உண்மையானால், இப்போது இருக்கும் நாம், நம்முடைய இறந்தகாலச் செயல்கள் முழுவதன் பலனே என்பதும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

ஆகவே மனிதகுலத்தின் விதியை நிர்ணயிப்பதற்கு, மனிதனைத் தவிர வேறு யாருமே தேவையில்லை. உலகிலுள்ள தீமைகள் எல்லாவற்றிற்கும் நாம்தான் காரணம். தீய செயல்களின் பலனாகத் துன்பங்கள் வருவது நமக்குத் தெரிகிறது. எனவே இப்போது உலகில் காணப்படும் துன்பங்களுக்கு, மனிதன் முன்பு செய்த தீய செயல்கள்தாம் காரணமாக இருக்க வேண்டும். இந்தக் கருத்தின்படி, மனிதனே எல்லா துன்பங்களுக்கும் காரணம், கடவுள்மீது பழி சுமத்தக் கூடாது. அவர் எப்போதும் மாறாத கருணையுள்ள தந்தை. அவர்மீது குற்றம் சாட்டக் கூடாது. எதை நாம் விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.

ஒவ்வோர் ஆன்மாவும் முக்தியடைந்தே தீரும் என்பது துவைதிகளின் மற்றொரு வினோதமான கோட்பாடு. யாரும் இதற்கு விலக்கல்ல. சாதகமற்ற சூழ்நிலைகள் வழியாக, பல்வேறு இன்பதுன்பங்கள் வழியாகச் சென்று, கடைசியில் ஒவ்வொருவரும் வெளிவரத்தான் வேண்டும். எதிலிருந்து வெளிவர வேண்டும்? பிரபஞ்சத்தை விட்டு எல்லா ஆன்மாக்களும் வெளியேற வேண்டும் என்பது இந்து மதத்திலுள்ள எல்லா பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு கருத்து. நாம் பார்க்கின்ற உணர்கின்ற இந்தப் பிரபஞ்சமோ, அல்லது கற்பனை செய்துகொள்ளும் ஒரு பிரபஞ்சமோ, உண்மையான சரியான பிரபஞ்சமாக இருக்க முடியாது. ஏனென்றால் இரண்டிலுமே நன்மையும் தீமையும் கலந்துதான் இருக்கின்றன. துவைதிகளின் கருத்துப்படி, இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால், நன்மையும் இன்பமும் மட்டுமே நிறைந்த ஓர் உலகம் இருக்கிறது. அந்த உலகை அடைந்துவிட்டால் பிறவி, மறுபிறவி, வாழ்வு, சாவு எதற்குமே அவசியமில்லை. இந்தக் கருத்து அவர்கள் மிகவும் விரும்புகின்ற ஒன்றாகும். அங்கே வியாதிகளோ மரணமோ இல்லை. அங்கே நிரந்தரமான இன்பம் இருக்கும். அந்த உலகை அடைபவர்கள் எப்போதும் கடவுளின் திருமுன்னர் இருந்துகொண்டு, அவரைக் கண்ணும் மனமும் குளிர தரித்துக் கொண்டிருப்பார்கள்.

சாதாரணமான புழுவிலிருந்து உயர்ந்த நிலையிலிருக்கும் தேவர்கள்வரை எல்லோருமே ஒருநாள் துன்ப மற்ற அந்த உலகை அடைந்தே தீர வேண்டும். ஆனால் இந்த உலகம் முடிந்து விடாது! எல்லையற்ற காலம்வரை இருந்துகொண்டேதான் இருக்கும். அதன் இயக்கம் அலை போன்றதாக, எழுவதும் வீழ்வதுமாக இருக்கும். அத்தகைய சுழற்சியான இயக்கமாக இருந்தாலும் அது முடிவதில்லை. காக்கப்பட வேண்டிய, முக்தி பெற வேண்டிய ஆன்மாக்களின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. சிலஆன்மாக்கள் செடிகொடிகளிலும், சில, தாழ்ந்த மிருகங்களிலும், சில, மனிதர்களிலும், சில, தேவர்களிலும் இருக்கின்றன. ஆனால் உயர்ந்த தேவர்கள் உட்பட அனைவருமே நிறை நிலையை அடையாதவர்கள், பந்தத்தில் கட்டுண்டவர்கள். அந்தப் பந்தம் எது? பிறப்பதும், இறந்தேயாக வேண்டும் என்ற அவசியமும்தான். அது. மிக உயர்ந்த தேவர்களுக்குக் கூட மரணம் உண்டு.

இந்தத் தேவர்கள் என்பது என்ன? அவை சில நிலைகள், சில பதவிகள். உதாரணமாக, தேவர்களின் அரசனாகிய இந்திரன் என்பது ஒரு பதவி; மிக உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட்ட ஓர் ஆன்மா. அது இந்தக் கல்பத்தில் அந்தப் பதவியை நிரப்புகிறது. இந்திரனாக இருந்தவன் இந்தக் கல்பம் முடிந்ததும் பூமியில் மனிதனாகப் பிறக்கிறான். இந்தக் கல்பத்தில் மிகவும் நல்லவனாக இருந்தவன் அடுத்த கல்பத்தில் அந்த இந்திரப் பதவியை நிரப்புகிறான். மற்ற தேவர்களின் நிலையும் கதியும் இதுதான். கோடிக்கணக்கான ஆன்மாக்கள் மாறிமாறி நிரப்பிய பதவிகளே இவை. அந்தப் பதவிகளை வகித்தபின் அவர்கள் பூமியில் மனிதர்களாகப் பிறக்கிறார்கள். சொர்க்கத்தை அடையும் எண்ணத்துடனேயோ, புகழ் பெறுவதற்காகவோ இந்த உலகில் நற்காரியங்கள் செய்பவர்கள் இறந்தபின் அந்த நற்செயல்களுக்கான பலனை அடைவார்கள். அவர்கள் இந்தத் தேவர்கள் ஆவார்கள். ஆனால் இது முக்தியல்ல. பலனை எதிர்பார்த்து வேலை செய்தால் முக்தி கிடைக்காது.

மனிதன் எதை விரும்பினாலும் அதைக் கடவுள் கொடுக்கிறார். அவன் அதிகாரத்தை விரும்புகிறான், கவுரவத்தை விரும்புகிறான், தேவர்கள் அனுபவிப்பது போன்ற இன்பங்களை விரும்புகிறான், அவை நிறைவேறவும் செய்கின்றன. ஆனால் எந்தச் செயலானாலும் அதன் பலன் நிரந்தரமானதல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பலன் தீர்ந்துவிடும். தீர்வதற்குப் பல யுகங்கள் ஆகலாம்; ஆனால் அது தீரவே செய்யும். அப்போது தேவர்கள் மறுபடியும் பூமியில் மனிதர்களாகப் பிறந்து, முக்திக்கு வழி தேட மறுபடியும் ஒரு வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.

தாழ்ந்த மிருகங்கள் உயர்ந்து, மனிதர்களாகின்றன; பிறகு தேவர்கள் ஆகின்றன. ஒருவேளை மறுபடியும் மனிதர்களாகலாம் அல்லது மிருகங்களாகலாம். இன்பம் அனுபவிக்கும் ஆசையையும், வாழ்க்கை மீதுள்ள மோகத்தையும், நான், எனது என்ற பற்றுக்களைப் பிடித்துக் கொண்டிருக்கும் உடும்புப் பிடியையும் விடும்வரை இப்படியேதான் நடந்து கொண்டிருக்கும். நான், எனது என்பவைதான் எல்லா தீமைகளுக்கும் மூலகாரணமாகும். ஒரு துவைதியைப் பார்த்து, இந்தக் குழந்தை உன்னுடையதா? என்று கேட்டால், இல்லை, கடவுளுடையது; என் சொத்துக்களெல்லாம் எனக்குச் சொந்தம் அல்ல, கடவுளுக்கே சொந்தம் என்று அவன் சொல்வான். எல்லாவற்றையுமே கடவுளுக்குச் சொந்தமானதாகத்தான் கருத வேண்டும்.

இந்தியாவிலுள்ள இந்தத் துவைதப் பிரிவினர் எல்லோருமே சைவ உணவு உண்பவர்கள்; தீவிர அஹிம்சாவாதிகள். ஆனால் அவர்களுடைய கருத்து பவுத்தர்களின் கருத்திலிருந்து வேறுபட்டது. எந்த மிருகத்தையும் கொல்லக்கூடாது என்று ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள்? என்று ஒரு பவுத்தனைக் கேட்டால், அவன், எந்தப் பிராணியையும் கொல்ல நமக்கு உரிமை இல்லை என்று சொல்வான். ஒரு துவைதியிடம் நீ எந்தப் பிராணியையும் ஏன் கொல்வதில்லை? என்று கேட்டால், அது கடவுளுக்குச் சொந்தமானதாக இருப்பதால்தான் என்று பதில் கூறுவான். ஆகவே, நான், எனது என்பதைக் கடவுளுடன், கடவுளுடன் மட்டுமே இணைத்துச் சொல்ல வேண்டும். நான், என்பது கடவுள் மட்டுமே. எல்லாமே அவருக்குத்தான் சொந்தம். நான், எனது என்ற எண்ணங்கள் அடியோடு இல்லாமல் போய் எல்லாவற்றையும் கடவுளுக்குச் சொந்தமாக்கி, எல்லோரிடமும் அன்பு செலுத்தி, பலனை எதிர்பார்க்காமல், ஒரு பிராணிக்காகத் தன் உயிரை இழக்கவும் தயாராக இருப்பவனுடைய இதயமே பரிசுத்தமானது. அத்தகைய இதயத்தில்தான் இறையன்பு தோன்றும்.

ஒவ்வோர் ஆன்மாவையும் தன்னை நோக்கிக் கவர்ந்துகொள்வது கடவுள்தான். களிமண்ணால் மூடியுள்ள ஊசியைக் காந்தத்தால் கவர முடியாது. களி மண்ணை நீக்கிவிட்டால் காந்தம் ஊசியைச் சுலபமாகக் கவர்ந்துவிடும் என்று துவைதி சொல்வான். கடவுளே காந்தம், ஆன்மாவே ஊசி. அதன் தீய செயல்களே அதை மூடிக்கொண்டிருக்கும் மண்ணும் தூசியும். ஆன்மா தூய்மையடைந்த உடனே, இயல்பாகவே அது கடவுளால் கவரப்பட்டு, அவரை அடைந்து, அவரோடு எப்போதுமே இருக்கும். ஆனால் அவரிடமிருந்து நிரந்தரமாக வேறுபட்டே நிற்கும்.

நிறைநிலையை அடைந்த ஆன்மா, தான் விரும்பினால், எந்த உருவத்தையும் எடுத்துக்கொள்ள முடியும்; நூறு உடல்களைக்கூட எடுத்துக்கொள்ள முடியும், எந்த உடலையுமே எடுத்துக்கொள்ளாமல் வேண்டுமானாலும் இருக்க முடியும். அது ஏறக்குறைய எல்லாம் வல்லதாக ஆகிவிடுகிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் அதனால் படைக்க முடியாது. அந்தச் சக்தி கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது. எவ்வளவுதான் நிறைநிலையடைந்த ஆன்மாவாக இருந்தாலும் பிரபஞ்சத்தை நடத்த முடியாது. அந்த வேலை கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால் எல்லா ஆன்மாக்களும் நிறைநிலை அடைந்ததும் நிலையான பேரின்பத்தில் திளைக்கின்றன, நிரந்தரமாகக் கடவுளுடனேயே வாழ்கின்றன. இதுதான் துவைதிகளின் கருத்து.

துவைதிகள் இன்னுமொரு கருத்தையும் பிரச்சாரம் செய்கிறார்கள். இறைவா, எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று பிரார்த்திப்பதை அவர்கள் கண்டிக்கிறார்கள். அப்படிச் செய்வது தவறு என்று அவர்கள் நினைக்கிறார்கள். லவுகீக ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ள விரும்பினால், தாழ்ந்த நிலையிலுள்ள தேவர்களையே பிரார்த்திக்க வேண்டும். தேவர்களில் ஒருவரிடமோ, ஒரு தேவதையிடமோ, நிறைநிலை பெற்ற ஒருவரிடமோதான் இதைப் போன்ற பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும். கடவுளிடம் பக்தி மட்டுமே செலுத்த வேண்டும். இறைவா, எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று கேட்பது ஏறக்குறைய தெய்வ நிந்தனைதான். இந்தத் தேவர்களில் ஒருவரைப் பிரார்த்தனை செய்வதன்மூலம் தனக்கு வேண்டிய எதையும் ஒரு மனிதன் இன்றோ நாளையோ பெறுவான். ஆனால் முக்தி வேண்டுமென்றால் கடவுளைத்தான் வழிபட வேண்டும். இந்தியாவிலுள்ள சாதாரண மக்களின் மதம் இதுதான்.

வேதாந்தத் தத்துவம் உண்மையில் விசிஷ்டாத்வைதத்திலிருந்துதான் தொடங்குகிறது. காரியம், காரணத்திலிருந்து ஒருபோதும் வேறுபடுவதில்லை. காரணத்தின் வேறுபட்ட உருவமே காரியம். பிரபஞ்சம் காரியமாகவும் கடவுள் காரணமாகவும் இருந்தால், பிரபஞ்சம் என்பது கடவுளேதான்; வேறு எப்படியும் இருக்க முடியாது. கடவுளே பிரபஞ்சத்தின் உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருக்கிறார் என்ற உறுதிப்பாட்டுடன் தான் அவர்கள் தங்கள் வாதத்தை ஆரம்பிக்கிறார்கள். கடவுள்தான் படைப்பவர். பிரபஞ்சத்திற்குக் காரணமான மூலப்பொருளும் அவரே. (படைப்பு) என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை சமஸ்கிருதத்தில் இல்லை. ஏனெனில் மேலை நாடுகளில் நம்புவதைப்போல் சூன்யத்திலிருந்து எதையோ உருவாக்குவது என்ற கருத்தை இந்தியாவின் எந்த மதப் பிரிவினரும் நம்புவதில்லை. ஒரு காலத்தில் இதுபோன்ற எண்ணமுள்ள சிலர் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு வெகுசீக்கிரமே வாய்ப்பூட்டு போடப் பட்டுவிட்டது. தற்காலத்தில் இப்படி நம்பும் இந்திய மதப் பிரிவு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே இருக்கும் ஒன்றின் வெளிப்பாடுதான் படைப்பு என்பதே எங்கள் கருத்து. விசிஷ்டாத்வைதத்தின் கருத்துப்படி பிரபஞ்சம் என்பது கடவுளேதான். பிரபஞ்சத்திற்குக் காரணமான மூலப்பொருளும் அவர்தான். சிலந்தி தன் உடலிலிருந்தே நூலெடுத்து வலை பின்னுகிறது..., அது போல் கடவுளிடம் இருந்தே பிரபஞ்சம் முழுவதும் வெளிவந்திருக்கிறது. என்று நாம் வேதங்களில் படிக்கிறோம்.

காரணமே காரியமாகத் தோன்றியிருக்கிறது என்றால் ஜடப்பொருள் அல்லாத, நிரந்தரமான பேரறிவு படைத்த கடவுளிடமிருந்து, ஜடப்பொருளான மந்தமான அறிவற்ற பிரபஞ்சம் தோன்றியது எப்படி? காரணம், தூய்மையாகவும் முழுமையாகவும் இருக்கும்போது, காரியம் வேறுபட்டிருப்பது எப்படி? என்பதே கேள்வி. இதற்கு விசிஷ்டாத்வைதிகள் என்ன பதில் சொல்கிறார்கள்? அவர்களுடைய கொள்கை மிகவும் விசித்திரமானது.

கடவுள், இயற்கை, ஆன்மா ஆகிய மூன்றும் உண்மையில் ஒரே பொருள்தான் என்கிறார்கள் விசிஷ்டாத்வைதிகள். இயற்கையும் ஆன்மாக்களும் கடவுளின் உடம்பு போலவும் கடவுள்தான் ஆன்மா என்றும் கூறுகிறார்கள் அவர்கள். எனக்கு ஓர் உடலும் ஓர் ஆன்மாவும் இருப்பது போலவே, பிரபஞ்சமும் எல்லா ஆன்மாக்களும் சேர்ந்து கடவுளின் உடலாகவும் கடவுளே ஆன்மாக்களுக்கெல்லாம் ஆன்மாவாகவும் இருக்கிறார். இவ்வாறு கடவுள் பிரபஞ்சத்தின் உபாதான காரணமாக இருக்கிறார். உடல் மாறலாம்; இளமையாகவோ, முதுமையாகவோ, பலம் படைத்ததாகவோ, பலவீனமாகவோ ஆகலாம். அது ஆன்மாவை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. உடலின் மூலம் தன்னை வெளிப்படுத்தியவாறு ஆன்மா எப்போதும் நிரந்தரமாக இருக்கிறது. உடல்கள் வரும், போகும். ஆனால் ஆன்மா மாறுவதில்லை. அதேபோல் பிரபஞ்சம் முழுவதுமே கடவுளின் உடல்தான். அந்த விதத்தில் பிரபஞ்சம் கடவுளே. ஆனால் பிரபஞ்சத்தில் ஏற்படும் மாறுதல்கள் கடவுளை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. இந்த மூலப்பொருளிலிருந்தே அவர் பிரபஞ்சத்தைப் படைக்கிறார். ஒரு கல்பத்தின் முடிவில், அவரது உடல் நுட்பமானதாகி சுருங்கி விடுகிறது. அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில் அது மறுபடியும் விரிவடைந்து, அதிலிருந்து பல்வேறு உலகங்களும் வெளிப்படுகின்றன.

ஆன்மா இயல்பாகவே தூய்மையானது; ஆனால் அதனுடைய செயல்களாலேயே அது தன் தூய்மையை இழந்துவிடுகிறது என்று துவைதிகள், விசிஷ்டாத்வைதிகள் இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள். அதனைத் துவைதிகளைவிட விசிஷ்டாத்வைதிகள் அழகாக வெளியிடுகிறார்கள். ஆன்மாவின் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் சுருங்கி, பின்னர் விரிகின்றன. அதன் பேரறிவு, தூய்மை, அதற்கே இயல்பான சக்தி எல்லாவற்றையும் மறுபடியும் வெளிப்படுத்தவே நாம் முயன்று கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆன்மாக்களுக்குப் பல குணங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவற்றிற்குச் சர்வ வல்லமையோ, எல்லாம் அறியும் தன்மையோ இல்லை. ஒவ்வொரு தீய செயலும் ஆன்மாவின் இயல்பைச் சுருக்குகிறது. ஒவ்வொரு நற்செயலும் அதை விரிவடையச் செய்கிறது. இந்த ஆன்மாக்கள் எல்லாம் கடவுளின் அம்சங்களே. கொழுந்துவிட்டெரியும் நெருப்பிலிருந்து, அதே இயல்புள்ள பல கோடிக்கணக்கான தீப்பொறிகள் சிதறுவதுபோல், எல்லையற்ற பரம்பொருளிடமிருந்து இந்த ஆன்மாக்கள் தோன்றியிருக்கின்றன. எல்லா ஆன்மாக்களுக்கும் குறிக்கோள் ஒன்றுதான்.

விசிஷ்டாத்வைதிகளின் கடவுளும் சகுணமானவரே. அவர் நற்குணக் களஞ்சியமாக விளங்குகிறார்; பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கிறார்; எங்கும் எதிலும் அந்தர்யாமியாக இருக்கிறார். கடவுளே எல்லாமாக இருக்கிறார் என்று சாஸ்திரங்கள் சொல்லும் போது, அவர் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கிறார் என்பதே பொருள். கடவுளே சுவராக இருக்கிறார் என்பது அல்ல, கடவுள் சுவருள் இருக்கிறார் என்பதே பொருள். அவர் இல்லாத துகளோ அணுவோ பிரபஞ்சத்தில் இல்லை. ஆன்மாக்களுக்கு எல்லை உண்டு. அவை எங்கும் நிறைந்தவை அல்ல. அவற்றின் சக்தி விரிவடைந்து அவை நிறைநிலை பெற்றவுடன், பிறப்பு இறப்பு அற்றவை ஆகிவிடுகின்றன; என்றென்றைக்குமாகக் கடவுளுடன் வாழ்கின்றன.

இனி நாம் இறுதித் தத்துவமான அத்வைதத்திற்கு வருவோம். தத்துவம் மற்றும் மதம் என்னும் மலர்களுள், இதுவரை எந்த நாடும் எந்தக் காலத்திலும் உருவாக்கியவற்றுள் மிகச் சிறந்தது என்று இதனை நாம் கருதுகிறோம். இங்கே மனித சிந்தனை அதன் மிக உயர்ந்த சிகரத்தை எட்டுகிறது; ஊடுருவிச் செல்ல முடியாததைப்போல் தோன்றிய மர்மங்களையும் துளைத்து அப்பால் செல்கிறது. இதுதான் அத்வைத வேதாந்தம். புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக, மிகவும் உயர்ந்த தத்துவமாக இருப்பதால் இது சாதாரண மக்களின் மதமாக இருக்க முடியவில்லை. அதன் பிறப்பிடமான இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாகத் தனியரசு செலுத்தி வந்தபோதிலும், சாதாரண மக்களிடம் நுழைய முடியவில்லை. எந்த நாட்டிலும் உள்ள ஆண்களிலும் பெண்களிலும் உள்ள மிகச் சிறந்த சிந்தனையாளர்களால்கூட அத்வைதத் தத்துவத்தைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்பதைப் போகப்போக அறிந்து கொள்வோம்.

நாம் நம்மை மிகவும் பலவீனர்களாக்கிக் கொண்டு விட்டோம்; நம்மை மிகவும் தாழ்த்திக் கொண்டுவிட்டோம். நாம் பெரிய சாதனைகளைப் புரிந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இயல்பாகவே நமக்கு யார் துணையாவது வேண்டியிருக்கிறது. எப்போதும் கொழுகொம்பை நாடுகின்ற பலவீனமான கொடிகளைப் போலவே நாம் இருக்கிறோம். வசதியான மதம் ஏதாவது இருக்கிறதா, என்று எத்தனை முறை என்னை எத்தனையோ பேர் கேட்டிருப்பார்கள்! உண்மை வேண்டும் என்று எண்ணுபவர்கள் வெகுசிலரே; அதை அறியும் தைரியமுள்ளவர்கள் இன்னும் குறைவு; உண்மையை உணர்ந்து எல்லா விதத்திலும் அதன்படி நடக்கும் தைரியம் உள்ளவர்களோ மிகமிகக் குறைவு. அது அவர்களது தவறு அல்ல; மூளையின் பலவீனமே. எந்தப் புதிய சிந்தனையும், குறிப்பாக, உயர்ந்த சிந்தனைகள் மூளையில் ஒரு புதிய பாதையை உருவாக்க முயல்வது போலுள்ளது. இந்த முயற்சி, நரம்பு மண்டலத்தையே உலுக்கி, மனிதர்களை நிலைகுலையச் செய்துவிடுகிறது. மனிதர்கள் பிறவியிலிருந்தே ஒருவகையான சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டு விடுகிறார்கள். அது மட்டுமல்லாமல், பழங்கால மூடநம்பிக்கைகள், பரம்பரை மூட நம்பிக்கைகள், இன மூட நம்பிக்கைகள், நகர மூட நம்பிக்கைகள், நாட்டு மூட நம்பிக்கைகள், இவற்றைத் தவிர மனிதனுக்குள்ளே இயற்கையாகவே ஊறிக்கிடக்கும் அளவில்லாத மூட நம்பிக்கைகள் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் அவன் விடுபட வேண்டியுள்ளது. ஆனாலும் உண்மையைப் புரிந்து கொண்டு அதை ஏற்று, வாழ்க்கையிலும் அதைக் கடைசி வரை பின்பற்றும் துணிவு மிக்க வீரர்களும் சிலர் இருக்கிறார்கள்.

அத்வைதம் தீர்மானமாகக் கூறுவது என்ன? கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால், பிரபஞ்சத்தின் நிமித்த காரணமும் உபாதான காரணமும் அவரே. படைப்பவர் மட்டுமல்ல, படைப்பும் அவரே. அவரே இந்தப் பிரபஞ்சம். அது எப்படி முடியும்? தூய, உணர்வுமயமான கடவுள் பிரபஞ்சமாக ஆனாரா? ஆம். அப்படித்தான் தோன்றுகிறது. அறியாமை மிக்கவர்கள் எதைப் பிரபஞ்சமாகப் பார்க்கிறார்களோ, அது உண்மையில் இல்லை. நீங்கள், நான், நாம் பார்க்கும் பொருட்கள் இவையெல்லாம் என்ன? எல்லாம் சுய மனோவசியம்தான். இருப்பது ஒன்றே. அது எல்லையற்றது; எப்போதும் ஆனந்தமயமானது. இருக்கின்ற அந்த ஒரு பொருளிலேயே நாம் இந்தப் பல்வேறு கனவுகளையெல்லாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

உள்ளது ஆன்மா ஒன்றுதான். அது எல்லாவற்றையும் கடந்தது, எல்லையற்றது. நாம் அறிந்த, அறியக்கூடிய எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அதிலேயே, அதன் மூலமாகவே நாம் பிரபஞ்சத்தைக் காண்கிறோம். இருக்கும் உண்மை அது ஒன்றுதான். இந்த மேஜை அதுதான். என் முன்னால் இருக்கும் கூட்டம் அதுதான். சுவரும் அதுதான். நாமரூபத்தை எடுத்துவிட்டால் எல்லாமே அதுதான். மேஜை என்ற பெயரையும் மேஜை உருவத்தையும் எடுத்து விட்டால் எஞ்சுவது அதுதான். வேதாந்தி அதை அவன் என்றோ அவள் என்றோ அழைப்பதில்லை. இவையெல்லாம் கட்டுக்கதைகள்; மனித மூளையின் மயக்கங்கள்.

ஆன்மாவில் பால்வேறுபாடு இல்லை. மன மயக்கத்திற்கு அடிமையாகி, மிருகங்கள்போல் ஆகிவிட்டவர்கள் தான் ஆணையோ பெண்ணையோ பார்க்கிறார்கள். மனித தெய்வங்கள் ஆணையோ பெண்ணையோ பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் கடந்தவர்களுக்குப் பால்வேறுபாடு பற்றிய எண்ணம் எப்படி வரும்? எல்லோருமே எல்லாமே ஆன்மாதான்; ஆண்பெண் பேதமற்ற, தூய்மையான, எப்போதும் ஆனந்தமயமான ஆன்மாதான். ஜடப்பொருட்களான பெயர், உருவம், உடல் இவைதான் இந்த வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. பெயர், வடிவம் ஆகிய இரண்டு வேறுபாடுகளையும் நீக்கிவிட்டால், பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுதான்; இரண்டு என்பதே இல்லை; எங்குமே ஒன்றுதான். நீங்களும் நானும் ஒன்றே. இயற்கையோ கடவுளோ பிரபஞ்சமோ இல்லை. உள்ளது ஒன்றே. அது எல்லையற்றது. எல்லாமே நாம ரூபங்களால் அதிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன. அறிபவனை அறிவது எப்படி? அது அறிய முடியாதது; அறிவுக்கு எட்டாதது. நமது ஆன்மாவை நாமே எப்படிப் பார்க்க முடியும்? அதைப் பிரதிபலிக்கத்தான் முடியும். ஆகவே நிரந்தரமான பரம்பொருளின் பிரதிபலிப்பே பிரபஞ்சம். இதைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளின் நல்ல மற்றும் தீய இயல்புக்கேற்ப பிரதிபலிப்பும் மாறுபட்டுத் தெரிகிறது. ஒரு கொலைகாரனில் பிரதிபலிக்கும்போது, ஆன்மா தூய்மையற்றது என்று பொருளல்ல; பிரதிபலிக்கும் கண்ணாடிக்கு அந்தத் தீய தன்மை இருக்கிறது என்பதே பொருள். ஒரு மகானில் பிரதிபலிக்கும்போது, கண்ணாடி தூய்மையாக இருப்பதால், பிரதிபலிப்பும் தூய்மையாக இருக்கிறது. ஆன்மா இயல்பாகவே தூய்மையாகத்தான் இருக்கிறது. சாதாரணமான புழுவிலிருந்து, மிக உயர்ந்த நிறைமனிதன் வரையிலும் தன்னைப் பிரதிபலித்துக் கொள்வது இந்த ஒன்றேயான ஆன்மாதான்.

பவுதீகரீதியாக, மனரீதியாக, தார்மீகரீதியாக, ஆன்மீக ரீதியாக இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தனி ஒருமைதான். இந்த ஒன்றையே நாம் பலவாகக் கண்டு, அதன்மீது பலஉருவங்களைக் கற்பனை செய்து கொள்கிறோம். மனிதனாகத் தன்னை எல்லைப்படுத்திக் கொண்ட உயிருக்கு, இந்த உலகம் மனிதர்களின் உலகமாகத் தெரிகிறது. இன்னும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உலகம் சொர்க்கமாகத் தெரியலாம். பிரபஞ்சத்தில் இருப்பது ஒரே ஆன்மாதான்; இரண்டல்ல. அது வருவதுமில்லை, போவதுமில்லை. அது பிறக்கவுமில்லை, இறப்பதுமில்லை. அதற்கு மறுபிறவியும் இல்லை. அது எப்படிச் சாக முடியும்? அது எங்கே போக முடியும்? சொர்க்கங்கள், பூமிகள் என்று எல்லா இடங்களுமே மனத்தின் வீண் கற்பனைகள். அவை இல்லாதவை; அவை முன்பும் இல்லை, இப்போதும் இல்லை, இனி இருக்கவும் செய்யாது.

நான் எங்கும் நிறைந்தவன்; அழிவற்றவன். நான் எங்கே போக முடியும்? நான் ஏற்கனவே இல்லாத இடம் எது? நான் இயற்கை என்னும் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பக்கத்தை முடிக்கிறேன். அந்தப் பக்கத்தைத் திருப்புகிறேன். அதனுடன் ஒரு வாழ்க்கைக் கனவும் முடிகிறது. வாழ்க்கையின் அடுத்த பக்கத்தைப் படிக்கிறேன், அடுத்த வாழ்க்கைக் கனவு வருகிறது, அதுவும் முடிகிறது. இப்படியே தொடர்ந்து செல்கிறது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், அதை ஒருபுறமாக வைத்துவிட்டு, நான் தனியாக விலகி நிற்கிறேன். பின்னர் புத்தகத்தை எறிந்துவிடுகிறேன். எல்லாம் முடிந்து விடுகின்றன.

அத்வைதி போதிப்பது என்ன? இதுவரை இருந்த, இனிமேல் இருக்கப் போகின்ற எல்லா தேவர்களையும் அவன் சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிடுகிறான். சூரியனை விட, சந்திரனைவிட, சொர்க்கங்களைவிட உயர்ந்த மனித ஆன்மாவை அந்தச் சிம்மாசனத்திற்கு அதிபதியாக்குகிறான். மனிதனாகத் தோன்றுகின்ற அந்த ஆன்மாவின் சிறப்பை எந்தப் புத்தகத்தாலும், எந்த சாஸ்திரத்தாலும், எந்த விஞ்ஞானத்தாலும் கற்பனைகூடச் செய்ய முடியாது. அந்த ஆன்மா ஒன்றுதான் என்றும் சிறப்பு வாய்ந்ததாக இருந்த ஒரே தெய்வம். முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இனிமேல் இருக்கப்போகின்ற ஒரே கடவுள் அதுதான். ஆகவே நான் வழிபட வேண்டியது என் ஆன்மாவைத் தவிர வேறு யாரையும் அல்ல. நான் என் ஆன்மாவையே வழிபடுகிறேன் என்று அத்வைதி கூறுகிறான். நான் யாருக்கு அடிபணிய வேண்டும்? எனது ஆன்மாவிற்கு மட்டுமே. உதவி தேடி யாரிடம் செல்வேன்? எல்லையற்ற ஆன்மாவாகிய எனக்கு யாரால் உதவி செய்ய முடியும்? இவையெல்லாம் முட்டாள்தனமான கனவுகள்! பொய்த் தோற்றங்கள். இதுவரை யாராவது யாருக்காவது உதவி செய்திருக்கிறார்களா? இல்லை.

ஒரு துவைதி, பலவீனமான மனிதன், விண்வெளிக்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்றிடமிருந்து உதவியை எதிர்பார்த்து, அழுது கதறுகிறான். தனக்குள்ளேயே அந்த விண்வெளி இருப்பதை உணராததாலேயே அவன் அவ்வாறு செய்கிறான். அவன் வானத்திலிருந்து உதவியை எதிர்பார்க்கிறான். உதவி வருகிறது. அது வருவது நமக்குத் தெரிகிறது, ஆனால் அது அவனுள்ளிருந்தேதான் வருகிறது. வெளியிலிருந்து வருவதாக அவன் தவறாக நினைத்துக் கொள்கிறான். படுக்கையில் கிடக்கின்ற நோயாளிக்கு யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. அவன் எழுந்து, கதவைத் திறக்கிறான், வெளியே யாரும் இல்லை. படுக்கையில் சென்று படுக்கிறான், மீண்டும் தட்டப்படும் சத்தம் கேட்கிறது. எழுந்து சென்று கதவைத் திறக்கிறான். அங்கே யாரும் இல்லை. கடைசியில் தன்னுடைய இதயத் துடிப்பையே, கதவு தட்டும் சத்தமாக நினைத்ததை அவன் உணர்கிறான். இவ்வாறு தனக்கு வெளியே பல தெய்வங்கள் இருப்பதாக நினைத்து, வீணாகத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மனிதன், எங்கே ஆரம்பித்தானோ அங்கேயே திரும்பி வருகிறான். அதுதான் மனித ஆன்மா. மலைகளிலும் காடுகளிலும் அருவிகளிலும் அவன் தேடிய, கோயில்கள்தோறும் தேடிய, சர்ச்சுகளில் தேடிய, சொர்க்கங்களில் அவன் தேடிய கடவுள், சொர்க்கத்தில் அமர்ந்துகொண்டு உலகை ஆள்வதாக அவன் கற்பனை செய்துகொண்டிருந்த கடவுள், உண்மையில், அவனுடைய ஆன்மாவேதான் என்பதை உணர்கிறான். நானே அவன்; அவனே நான் நானேதான் கடவுளாக இருந்தேன். அற்ப மனிதனான நான் எப்போதுமே இருக்கவில்லை.

அது சரி. அந்தப் பூரணப் பரம்பொருள் எப்படி மனமயக்கத்திற்கு உட்பட்டார்? அவர் மனமயக்கத்திற்கு உட்படவே இல்லை. பூரணப் பரம்பொருள் எப்படிக் கனவு காண முடியும்? அவர் கனவே காணவில்லை. உண்மை, கனவு காண்பதில்லை. இந்தப் பொய்த் தோற்றம் எங்கிருந்து எழுந்தது என்ற கேள்வியே அபத்தமானது. பொய்த் தோற்றம் பொய்த் தோற்றத்தில் இருந்தே எழுகிறது. உண்மையைக் காண்கிற அந்தக் கணமே பொய்த் தோற்றம் மறைந்துவிடுகிறது. பொய்த் தோற்றம் எப்போதும் ஆதாரமாகக் கொண்டிருப்பது பொய்த் தோற்றத்தைத்தான். கடவுள், அதாவது உண்மை, அதாவது ஆன்மா ஒருபோதும் பொய்த் தோற்றத்திற்கு இடமாவதில்லை. நாம் ஒருபோதும் மனமயக்கத்திற்கு உள்ளாகவில்லை. அந்த மயக்கம் நமக்கு உள்ளே, நமக்கு முன்னால் இருக்கிறது. ஒரு மேகத்தைப் பார்க்கிறோம்; வேறு ஒரு மேகம் வந்து அதைத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது. இன்னுமொரு மேகம் வந்து இதைத் தள்ளிவிடுகிறது. எப்போதும் நீலமான வானம் இருக்கிறது. பலநிறங்கள் கொண்ட மேகங்கள் அதன்முன் வருகின்றன. சிறிதுநேரம் இருக்கின்றன, பின்னர் விலகிச் செல்கின்றன. இவற்றால் எல்லாம் வானம் பாதிக்கப்படுவதே இல்லை. அதைப் போலவே, நாமும் எப்போதும் தூயவர்கள், எப்போதும் முழுமையானவர்கள். நாமே பிரபஞ்சத்தின் கடவுளர்கள், இல்லையில்லை, இரண்டு இல்லை, இருப்பதே ஒன்றுதானே! நீங்களும் நானும் என்று சொல்வதே தவறு; நான் என்றுதான் சொல்ல வேண்டும்.

கோடிக்கணக்கான வாய்களின் மூலமாக உண்பது நானே; எனக்குப் பசி ஏது? எண்ணற்ற கைகளின் மூலமாக வேலை செய்வது நானே; நான் எப்படிச் செயலற்று இருக்க முடியும்? இந்தப் பிரபஞ்சம் முழுவதன் வாழ்க்கை முழுவதிலும் வாழ்வது நானே; எனக்கு மரணம் ஏது? நான் எல்லா வாழ்வையும் கடந்தவன், எல்லா சாவையும் கடந்தவன். சுதந்திரத்தைத் தேடி நான் எங்கே போவது? நான் இயல்பாகவே சுதந்திரமானவன். பிரபஞ்சத்தின் கடவுளான என்னை யார் கட்டுப்படுத்த முடியும்? பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒரே பொருளான எனது மகிமையை விளக்க முயல்கின்ற சிறுசிறு வரைபடங்களே இந்த உலகின் சாஸ்திரங்கள் எல்லாம். இந்தப் புத்தகங்களால் எனக்கு என்ன பயன்? இவ்வாறு சொல்கிறான் அத்வைதி.

உண்மையை அறிந்து, இந்தக் கணமே சுதந்திரமாக இரு. அப்போது இருளெல்லாம் விலகிவிடும். எப்போது மனிதன் தன்னைப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற பொருளுடன் ஒன்றாகக் காண்கிறானோ, எப்போது அவனிடம் வேறுபட்டு உணர்ச்சி இல்லாமல் போகுமோ, எப்போது ஆண்கள், பெண்கள், தெய்வங்கள், தேவதைகள், பிராணிகள், தாவரங்கள், ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே அந்த ஒருமையில் கரையுமோ அப்போது எல்லா பயமும் அவனிடமிருந்து அகல்கிறது. நான் என்னையே வருத்திக் கொள்ள முடியுமா? நான் என்னையே கொல்ல முடியுமா? நான் என்னையே காயப்படுத்த முடியுமா? யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்? நம்மைப் பார்த்தே நாம் பயப்பட முடியுமா? அப்போதுதான் எல்லா துன்பமும் மறையும். எனக்கு எது துன்பம் தர முடியும்? பிரபஞ்சத்தில் இருப்பது நான் மட்டுமே. அப்போது பொறாமைகள் எல்லாம் மறையும்; யாரைப் பார்த்துப் பொறாமைப்படுவது? என்னைப் பார்த்தேயா? அப்போது எல்லா தீய எண்ணங்களும் மறையும். யாருக்கு எதிராக என்னிடம் தீய எண்ணம் இருக்க முடியும்? எனக்கு எதிராகவா? பிரபஞ்சத்தில் இருப்பது நான் மட்டுமே.

ஞானம் பெற இதுதான் ஒரே வழி என்று வேதாந்தி கூறுகிறான். வேறுபாட்டை அழித்து ஒழியுங்கள். பன்மை உள்ளது என்ற மூட நம்பிக்கையை ஒழியுங்கள். பன்மை நிறைந்த உலகில் அந்த ஒன்றைக் காண்பவர் யாரோ, உணர்வற்ற இந்தப் பிரபஞ்சத்தில் அந்த ஒரே உணர்வுப் பொருளைக் காண்பவர் யாரோ, நிழல்கள் நிறைந்த இந்த உலகத்தில் சத்தியத்தைக் காண்பவர் யாரோ, அவனுக்கு மட்டுமே நிரந்தரமான அமைதி கிட்டுகிறது; வேறு யாருக்கும் இல்லை; வேறு யாருக்கும் இல்லை.

கடவுளைப் பற்றிய இந்திய மதச் சிந்தனையின் மூன்று முக்கியமான படிகளின் முக்கியமான அம்சங்கள் இவை. பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள சகுணமான கடவுள் என்ற கருத்துடன் அது ஆரம்பித்தது. கடவுள், பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கிறார் என்பதிலிருந்து, பிரபஞ்சத்தின் உள்ளே இருக்கிறார், எல்லா பொருட்களிலும் அந்தர்யாமியாக இருக்கிறார் என்ற கருத்திற்கு உயர்ந்தது. கடைசியில், கடவுளும் இந்த ஆன்மாவும் வெவ்வேறல்ல, ஒன்றே தான்; அதன் வெளிப்பாடுதான் பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு தோற்றங்கள் என்ற உயர்ந்த கருத்தில் நிறைவுறுகிறது. வேதங்களின் அறுதி வாக்கு இதுதான். துவைதமாக ஆரம்பித்து, விசிஷ்டாத்வைதமாகத் தொடர்ந்து, அத்வைதமாக முடிந்திருக்கிறது. உலகத்தில் மிகச் சிலரே இந்தக் கடைசி முடிவுக்கு வருவார்கள். அதிலும் சிலரே இதை நம்புவார்கள். மிகமிகச் சிலரே இதைப் பின்பற்றும் துணிவு உடையவர்களாக இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.

ஆனாலும் பிரபஞ்சத்திலுள்ள தார்மீகம், ஒழுக்கம், ஆன்மீகம் எல்லாவற்றிற்கும் விளக்கம் அத்வைதத்தில் உள்ளது. பிறருக்கு நன்மை செய்யுங்கள் என்று எல்லோரும் சொல்வது எதனால்? இதற்கு விளக்கம் என்ன? சான்றோர்கள் மனித குலத்தின் சகோதரத்துவத்தைப்பற்றி ஏன் பிரச்சாரம் செய்தார்கள்? இன்னும் மேலானோர் உயிர்கள் அனைத்தின் சகோதரத்துவத்தைப்பற்றி ஏன் பிரச்சாரம் செய்தார்கள்? ஏனெனில் அறிவுக்கு ஒவ்வாத, தனிப்பட்ட மூடநம்பிக்கைகளின் ஊடே, வேறுபாடுகளை மறுத்து, பிரபஞ்சமே ஒன்றுதான் என்பதை வலியுறுத்திய வண்ணம், ஆன்மப் பேரொளி தெரிந்தோ தெரியாமலோ அவர்களிடம் இடையீடற்றுப் பிரகாசித்துக் கொண்டிருந்ததுதான் காரணம்.

இனி, அத்வைதம் நமக்கு ஒரே பிரபஞ்சக் கருத்தைத் தருகிறது. புலன்களின் மூலமாகப் பார்க்கும்போது ஜடப்பொருளாகவும், அறிவின் மூலமாகப் பார்க்கும்போது ஆன்மாக்களாகவும், உணர்வின் வழியாகப் பார்க்கும் போது கடவுளாகவும் அதுவே தெரிகிறது. தீமை என்று உலகம் சொல்கின்ற முகமூடியைப் போட்டுக் கொண்டவனுக்குப் பிரபஞ்சம் பயங்கரமான இடமாகத் தெரிகிறது. இன்பத்தை நாடுகின்ற மனிதனுக்கு அது உருமாறி, சொர்க்கமாகத் தெரிகிறது. நிறைநிலையை அடைந்தவனுக்கோ எல்லாம் மறைந்து அது அவனது ஆன்மாவாக விளங்குகிறது.

இப்போது சமுதாயம் இருக்கும் நிலையில், இந்த மூன்று நிலைகளுமே அவசியம். இவற்றில், ஒன்று மற்றொன்றிற்கு முரண்பாடானது அல்ல; ஒன்று மற்றொன்றை நிறைவு செய்கிறது. அத்வைதியோ விசிஷ்டாத்வைதியோ துவைதம் தவறு என்று சொல்வதில்லை. அது சரியான கருத்துதான்; ஆனால் சற்று தாழ்ந்த கருத்து. அதுவும் உண்மையை நோக்கித்தான் போகிறது. ஒவ்வொருவரும் தங்கள் கருத்துப்படி இந்தப் பிரபஞ்சத்தைக் கற்பனை செய்து கொள்ளட்டும். யாரும் மற்றவர்களுடைய கருத்துக்களை மறுத்து, அவர்களைப் புண்படுத்த வேண்டாம். மனிதனை அவனிருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொள்ளுங்கள். முடிந்தால் அவர்கள் மேல்நிலைக்கு உயர உதவுங்கள். ஆனால் அவர்களைப் புண்படுத்தாதீர்கள், அழிக்க முயற்சிக்காதீர்கள். எல்லோருமே காலப்போக்கில் உண்மையை அடைவார்கள். இதயத்தில் உள்ள எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டால், அழியும் தன்மை உள்ள நாம் அழியாத் தன்மை பெறுவோம். அப்போது மனிதனே கடவுளாகி விடுவான்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,