பரம்பொருளும் பிரபஞ்சமும்!
பரம்பொருளும் பிரபஞ்சமும்!
அத்வைத வேதாந்தத்திலேயே புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான, மீண்டும் மீண்டும் கேட்கப்படுவதான, இனியும் எப்போதும் கேட்கப்படப் போகின்ற கேள்வி ஒன்று உண்டு; எல்லையற்ற பரம்பொருள், எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சமாக மாறியது எப்படி? இந்தக் கேள்வியை இப்போது நான் எடுத்துக் கொள்கிறேன். இதை விளக்குவதற்காக ஒரு வரைபடத்தைப் பயன்படுத்துகிறேன்.
பரம்பொருள் இதோ இருக்கிறது. பிரபஞ்சம் இதோ இருக்கிறது பிரபஞ்சம். பரம்பொருள் பிரபஞ்சமாக ஆகியிருக்கிறது. பிரபஞ்சம் என்றால், ஜட உலகம் மட்டுமன்றி, மனஉலகம், ஆன்ம உலகம், சொர்க்கங்கள், பூமிகள், ஏன், இருப்பவை அனைத்துமே அடங்கும்.
ஒருவகையான மாறுதலை மனம் என்றும், மற்றொரு வகை மாறுதலை உடல் என்றும் இப்படிப் பலவாறாகக் கூறுகிறோம். இத்தகைய மாறுதல்கள் எல்லாம் சேர்ந்ததே இந்தப் பிரபஞ்சம். பரம்பொருள், காலம், இடம் மற்றும் காரணகாரியங்களுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டதன் மூலம் பிரபஞ்சமாக மாறியிருக்கிறது. அத்வைதத்தின் மையக் கருத்து இதுதான்.
காலம், இடம், காரணகாரியங்கள் என்னும் கண்ணாடி வழியாகப் பரம்பொருள் பார்க்கப்படும்போது அது பிரபஞ்சமாகத் தெரிகிறது. ஆகவே பரம்பொருளில் காலம், இடம் காரணகாரியங்கள் எதுவும் இல்லை என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. மனமோ எண்ணங்களோ இல்லாததால், அங்கே காலம் இருக்க முடியாது. புற மாற்றம் எதுவும் இல்லாததால் இடம் என்ற கருத்தும் அங்கே இருக்க முடியாது. இனி, ஒரே பொருள் மட்டுமே இருக்கும்போது இயக்கமோ காரணகாரியங்களோ இருக்க முடியாது. பரம்பொருள் தன் நிலையிலிருந்து தாழ்வடைந்து (அப்படிச் சொல்ல நமக்கு அனுமதி இருக்குமானால்), பிரபஞ்சமாக ஆகும்போது தான் காரணகாரியங்கள் தொடங்குகின்றன என்பதை நாம் நன்கு புரிந்துகொண்டு, மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டும்.
நமது சுயேச்சை, ஆசைகள் போன்ற எல்லாமே பரம்பொருள் பிரபஞ்சமான பின்னரே வருகின்றன. ÷ஷாபனேரின் தத்துவம் சுயேச்சையே எல்லாம் என்று சொல்வதால், அவர் வேதாந்தத்தைப் புரிந்துகொள்வதில் தவறு செய்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன். அவர் பரம்பொருளின் இடத்தில் சுயேச்சையை வைக்கிறார். ஆனால் சுயேச்சையைப் பரம்பொருளாகக் கொள்ள முடியாது. ஏனெனில் சுயேச்சை மாறுதலடையக் கூடியதும், எல்லைக்கு உட்பட்டதும் ஆகும். காலம், இடம், காரணகாரியங்களுக்கு மேல் ஒரு கோடு உள்ளதே, அதற்கு மேற்பகுதியில் மாற்றங்களோ இயக்கங்களோ இல்லை. அதற்கும் கீழேதான் புற இயக்கங்களும், எண்ணம் எனப்படுகின்ற அக இயக்கமும் தொடங்குகின்றன. பரம்பொருள் நிலையில் சுயேச்சை இல்லாததால், பிரபஞ்சத்தின் தோற்றத்திற்குச் சுயேச்சை காரணமாக இருக்க முடியாது. இன்னும் சிறிது ஆராய்ந்தால் நம் உடலில்கூட, எல்லா இயக்கங்களுக்கும் சுயேச்சையே காரணமாக இருக்க முடியாது என்பதைப் பார்க்கிறோம். நான் இந்த நாற்காலியை அசைக்கிறேன். இந்த அசைவிற்கு என் சுயேச்சை காரணம். சுயேச்சை, மறுகோடியில் உடல் அசைவாக வெளிப்படுகிறது. ஆனால் இந்த நாற்காலியை அசைத்த அதே சக்திதான் இதயம், நுரையீரல்கள் ஆகியவற்றையும் இயக்குகிறது; ஆனால் சுயேச்சையின் மூலமாக அல்ல. இந்த இரண்டு வகையான இயக்கங்களுக்கும் காரணமாக இருப்பது ஒரே சக்தி என்று வைத்துக்கொண்டாலும், உணர்வுநிலைக்கு உயரும் போதுதான் அது சுயேச்சையாகிறது. அதற்கு முன்னால், அதைச் சுயேச்சை என்று சொல்வது தவறு. இதுதான் ÷ஷாபனேரின் தத்துவத்தில் மிகுந்த குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
ஒரு கல் விழுந்தால் அது ஏன் விழுகிறது என்று கேட்கிறோம். காரணமில்லாமல் காரியமில்லை என்று எண்ணுவதால்தான் இந்தக் கேள்வியே எழ முடிகிறது. நீங்கள் இந்தக் கருத்தைத் தெளிவாகப் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏன் ஒரு காரியம் நடக்கிறது என்று நாம் கேட்கும்போதே, நடப்பவை அனைத்திற்கும் ஒரு ஏன் இருக்க வேண்டும் என்று முடிவுகட்டி விடுகிறோம். அதாவது அந்தக் காரியம் நடப்பதற்கு முன்னால், அதைத் தொடங்குவதற்கு ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும்என்று எண்ணுகிறோம். இந்த முன்னால் பின்னால் ஆகிய கருத்துக்களையே காரணகாரிய நியதி என்று அழைக்கிறோம். அதாவது, பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே, மாறிமாறி, காரணமாகவும் காரியமாகவும் இருக்கின்றன. அதாவது, சில பொருட்களின் காரணமே பின்னால் காரியமாக வருகிறது. அந்தக் காரணமும் ஏற்கனவே இருந்த ஏதோ ஒன்றின் காரியம் ஆகும். இதுதான் காரணகாரிய நியதி. நம்முடைய சிந்தனைக்கெல்லாம் இது மிகவும் அவசியமாக இருக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வோர் அணுவும், அது எதுவாக இருந்தாலும் சரி, மற்ற அணுக்களைச் சார்ந்தே இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். இந்தக் கருத்து எப்படித் தோன்றியது என்பது பற்றிப் பெரும் விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது மனிதனோடு பிறப்பது என்று, உள்ளுணர்வு மிக்க ஐரோப்பியத் தத்துவ மேதைகள் சிலர் நம்பினார்கள். மற்றவர்கள், இது அனுபவத்தினால் வந்தது என்று நம்பி வந்திருக்கிறார்கள். ஆனால் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. வேதாந்தம் இதற்கு என்ன பதில் சொல்கிறது என்பதை நாம் பின்னால் பார்ப்போம். நம்மைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றிற்கும் முன்னால் சில விஷயங்கள் இருக்க வேண்டும் என்று கொள்வதால்தான் ஏன் என்ற கேள்வியையே கேட்கிறோம். இது நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
இந்தக் கேள்வியிலுள்ள மற்றொரு நம்பிக்கையைப் பார்ப்போம். எதையும் சாராமல் தனியாக இருப்பது என்று எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை, ஒவ்வொன்றின்மீதும் அதற்கு வெளியே உள்ள ஒன்று செயல்படுகிறது என்ற நம்பிக்கையே அது. ஒன்றையொன்று சார்ந்திருப்பது பிரபஞ்ச நியதி. பரம்பொருள் தோன்றியதற்கு எது காரணம்? என்று நாம் கேட்பது எவ்வளவு பெரிய தவறு! பரம்பொருளும் எதனாலோ கட்டுப்பட்டிருக்கிறது, வேறு எதையோ சார்ந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டால் தான் இந்தக் கேள்வியையே கேட்க முடியும். இப்படி நினைப்பதால் பரம்பொருளைப் பிரபஞ்ச நிலைக்குக் கொண்டுவந்து விடுகிறோம். பரம்பொருள்நிலையில் காலம், இடம், காரணகாரியம் எதுவுமே கிடையாது. அந்த நிலையில் எல்லாம் ஒன்றுதான். தனக்குத் தானாகவே தனியாக இருக்கும் ஒன்றிற்கு எதுவும் காரணமாக இருக்க முடியாது. காரணம் இருந்தால் அது சுதந்திரமாக இருக்க முடியாது, கட்டுப்பட்டதாகத்தான் இருக்க முடியும். வேறு ஒன்றைச் சார்ந்திருப்பது சுதந்திரமாக இருக்க முடியாது. ஆகவே, எல்லையைக் கடந்து நிற்பது, எப்படி எல்லைக்கு உட்பட்டதாக ஆகியது என்ற கேள்வியே இருக்க முடியாது. அது முன்னுக்குப் பின் முரணானது. தத்துவ நுணுக்கங்களை விட்டு விட்டு, நியாயபூர்வமாக, சாதாரணமாக, இந்தப் பிரச்சினையை அணுகினால், இதை வேறு ஒரு கோணத்திலிருந்து பார்க்கலாம். இந்தக் கேள்விக்கு விடை தெரிந்துவிட்டால், பரம்பொருள் பரம்பொருளாக எப்படி இருக்க முடியும்? அது வேறொன்றைச் சார்ந்திருப்பதாகி விடும் !
நாம் சாதாரணமாக அறிவு என்று சொல்வதற்கு என்ன பொருள்? அறிவு என்பது, நம் மனத்தின் எல்லைக்கு உட்பட்டது, நாம் அறிவது. அது மனத்தைக் கடந்ததாக இருக்கும்போது அதை அறிவு என்று சொல்ல முடியாது. எனவே பரம்பொருள், மனத்தின் எல்லைக்குள் வந்து விட்டால் அது பரம்பொருளாக இருக்க முடியாது, எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடும். மனத்தினால் கட்டுப்பட்டது எதுவுமே எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடுகிறது. ஆகவே பரம்பொருளை அறிவது என்று சொல்வதே முரணானது. அதனால்தான் இந்தக் கேள்விக்கு ஒரு போதும் பதிலே கிடைக்கவில்லை. பதில் கிடைத்துவிட்டால், பரம்பொருள் பரம்பொருளாக இருக்க முடியாது. கடவுளை அறிய முடியுமானால் அவர் கடவுள் அல்ல; அவரும் நம்மைப்போல் எல்லைக்கு உட்பட்டவராக ஆகிவிடுகிறார். அவரை அறிந்து கொள்ள முடியாது. அவர் அறிந்து கொள்ள முடியாதவராகவே என்றும் இருக்கிறார்.
கடவுள் அறிவுநிலைக்கு மேலானவர் என்று அத்வைதம் கூறுகிறது. இது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மாபெரும் உண்மையாகும். ஆனால், கடவுளை அறிய முடியாது என்பதை ஆஜ்ஞேயவாதிகளின் பொருளில் புரிந்துகொண்டு நீங்கள் வீடு திரும்பாதீர்கள். உதாரணமாக, இதோ இங்கே ஒரு நாற்காலி இருக்கிறது. இது நமக்குத் தெரியும். ஆனால் ஆகாசத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறது? அங்கே மனிதர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பனவெல்லாம் தெரிந்துகொள்ள முடியாதவையாக இருக்கின்றன. கடவுளை அறிவது, அறிய முடியாதது என்பது இத்தகைய பொருளில் அல்ல. அறியப்படுவதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். கடவுளை அறியமுடியாது, அவர் அறியப்பட முடியாதவர் என்றெல்லாம் சொல்வது இந்தப் பொருளில்தான். சில கேள்விகளுக்குப் பதில் தெரியாது, தெரிந்துகொள்ள முடியாது என்று நாம் சொல்வது போன்ற பொருளில் இதைப் பயன்படுத்தவில்லை. நாம் அறியக் கூடியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவர் கடவுள். இந்த நாற்காலியை நாம் அறிவோம். கடவுளோ இதைவிட மிகவுயர்ந்த நிலையில் அறியப்படக் கூடியவர். ஏனெனில் அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் நாம் இந்த நாற்காலியையே அறிய முடிகிறது. அவர் சாட்சிப் பொருள், எல்லா அறிவுக்கும் நிரந்தர சாட்சியாக அவர் இருக்கிறார். நாம் அறிவதை யெல்லாம் அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் அறிய முடியும்.
நமது சொந்த ஆன்மாவின் சாரமாக இருப்பவர் அவர். நான் உணர்வின் சாரமாக இருப்பவரும் அவரே. இந்த நான்- உணர்வின் உள்ளேயும் மூலமாகவும் அல்லாமல் நாம் எதையும் அறிய முடியாது. அதாவது, பரம்பொருளின் உள்ளேயும் அவர் மூலமாகவும்தான் நாம் எதையும் அறிய முடியும்.
இவ்வாறு கடவுள் இந்த நாற்காலியைவிட எல்லையற்ற மடங்கு நமக்கு அருகில் இருக்கிறார். அதேவேளையில் அதைவிடப் பல மடங்கு உயர்ந்த நிலையில் அவர் இருக்கிறார். அவர் அறியக் கூடியவரும் அல்ல; அறியப்பட முடியாதவரும் அல்ல. இந்த இரண்டு நிலைகளையும்விட எல்லையற்ற மடங்கு உயர்ந்த நிலையில் அவர் இருக்கிறார். அவரே நமது ஆன்மா. அந்தப் பரம்பொருள் நிறைந்திருக்காவிட்டால், இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு கணம்கூடயாரால் வாழ முடியும்? யாரால் மூச்சுவிட முடியும்? ஏனென்றால் அவருள்ளும் அவர் மூலமாகவும் தான் நாம் மூச்சுவிடுகிறோம். அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் வாழ்கிறோம். அவர் எங்கேயோ நின்றுகொண்டு என் உடலில் ரத்தத்தை ஓடச் செய்கிறார் என்பது பொருளல்ல. எல்லாவற்றின் சாரமாகவும் ஆன்மாவின் ஆன்மாவாகவும் அவர் இருக்கிறார் என்பதே பொருள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் கடவுளை அறிவதாக நாம் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது அவரைத் தாழ்த்திப் பேசுவதே ஆகும். நாம் நம்மை விட்டு வெளியே குதிக்க முடியாது. அதுபோல் நாம் கடவுளை அறியவும் முடியாது.
அறிவு என்றால், ஒன்றை நம்மிலிருந்து வேறுபடுத்தி அறிவது உதாரணமாக, நாம் ஒன்றை நினைக்க வேண்டுமானால் அதை மனத்திற்கு வெளியே கொண்டுவந்து, அதாவது அதை மனத்திலிருந்து வேறுபடுத்திதான் பார்க்க முடியும். நாம் பார்த்த, அறிந்த எல்லா விஷயங்களும் நம் மனத்தில்தான் இருக்கின்றன. அவை சித்திரங்களாக, சம்ஸ்காரங்களாக மனத்தில் உள்ளன. அவற்றைப்பற்றி நினைக்கவோ அறியவோ நாம் முயலும்போது, அவற்றை வெளியே கொண்டு வருவதுதான் அறிவின் முதல் வேலையாக இருக்கிறது. கடவுள் விஷயத்தில் இம்மாதிரி செய்ய முடியாது. ஏனெனில் அவர் நம் ஆன்மாவின் சாரமாக இருப்பவர். அவரை நமக்கு வெளியே கொண்டு நிறுத்த முடியாது.
வேதாந்தத்திலுள்ள மிக உன்னதமான கருத்துக்களில் ஒன்று இதோ இருக்கிறது. சுவேதகேதுவே, உன்னுடைய ஆன்மாவின் சாரமாக இருப்பவரே மெய்ப்பொருள். அவரே பரமாத்மா. நீயே அது. நீயே கடவுள் என்பதன் பொருள் இதுவே. வேறு எப்படியும் பரம்பொருளை நாம் விளக்க முடியாது. தந்தை, சகோதரன், நண்பன் என்று எந்த உறவாலோ மொழியாலோ கடவுளை அழைக்க முயல்வது எல்லாம் அவரைப் புறத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகளே. அது நடைபெற முடியாத ஒன்று.ஏனெனில் அவர் சாரத்தின் சாரமாக உள்ளே இருப்பவர்.
இந்த நாற்காலியை நான் பார்க்கிறேன். அது பார்க்கப்படும் பொருள்; நான் பார்ப்பவன். இதைப் போலவே பரம்பொருள் நம் ஆன்மாவைப் பார்ப்பவராக இருக்கிறார். அப்படி இருப்பவரை, நம் ஆன்மாவின் சாரமாகவும் மெய்ப்பொருளாகவும் இருப்பவரை, நம்மிலிருந்து நாம் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்? ஆகவே மீண்டும் சொல்கிறேன்; கடவுள் அறியப்படுபவரோ அறியப்படாதவரோ அல்ல; அவர் இந்த இரண்டு நிலைகளையும் விட எல்லையற்ற மடங்கு உயர்ந்த நிலையில் இருப்பவர்.
கடவுள் நம்மோடு இரண்டறக் கலந்தவர். நம்மோடு இரண்டறக் கலந்து நாமாகவே இருப்பவர் அறியப்படுபவராகவோ, அறியப் படாதவராகவோ இருக்க முடியாது. நம்மை நாமே புறத்தில் கொண்டுவந்து பார்க்க முடியாது. நம்மை வெளியே கொண்டு வந்து அறிய முடியாது. ஏனெனில் நாமே அதுவாக இருக்கிறோம். அதிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது. இனி, அது அறிய முடியாததும் அல்ல. ஏனென்றால், நாம் நம்மைவிட நன்றாக வேறு எந்தப் பொருளையும் அறிந்திருக்க முடியாது, நமது அறிவின் மையமே நாம்தானே. இந்தப் பொருளில்தான் கடவுளும் அறியப்பட முடியாதவரும் அல்ல, அறியப்படக்கூடியவரும் அல்ல என்று நாம் கூறுகிறோம். அவர் இந்த இரண்டு நிலைகளையும்விட எல்லையற்ற மடங்கு உயர்ந்த நிலையில் இருக்கிறார். அவரே நம்முடைய உண்மையான ஆன்மா.
ஆகவே முதலாவதாக பரம்பொருளுக்குக் காரணம் எது? என்ற கேள்வியே முன்னுக்குப்பின் முரணாக இருப்பதைக் காண்கிறோம். இரண்டாவதாக, அத்வைதத்திலுள்ள பரம்பொருள் தத்துவம் இரண்டற்ற ஒன்று என்பதையும் கண்டோம். ஆகவே, அறிந்தோ அறியாமலோ நாம் பரம்பொருளிலேயே வாழ்ந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருப்பதால் பரம்பொருளை நம் அறிவிற்கு இலக்காக்க முடியாது. நாம் எதைச் செய்ய வேண்டுமானாலும் அதைப் பரம்பொருளின் மூலமாகத் தான் செய்ய முடியும்.
காலம், இடம், காரணகாரியம் என்பவை என்ன என்பதை இப்போது ஆராய்வோம். அத்வைதம் என்றால் இரண்டற்றது; அதாவது இரண்டில்லை, ஒன்றுதான். இருந்தாலும், காலம், இடம், காரணகாரியம் என்ற திரையின்மூலம் பரம்பொருள் தன்னைப் பலவாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்ற கருத்தை நாம் காண்கிறோம். ஆகவே இங்கே இரண்டு இருப்பதாகத் தோன்றுகிறது; ஒன்று பரம்பொருள், மற்றொன்று மாயை (அதாவது காலம், இடம், மற்றும் காரணகாரியங்களின் மொத்தம்). இரண்டு இருப்பதாகச் சொல்வது மிகவும் சரியாகத்தான் தோன்றுகிறது.
ஆனால் அதை இரண்டு என்று சொல்ல முடியாது என்று அத்வைதி பதில் சொல்கிறான். இரண்டு என்பது இருக்க வேண்டுமானால் இரண்டு தனித்தனியான, ஒன்றையொன்று சாராத உண்மைகள் இருக்க வேண்டும். இது சாத்தியமல்ல. முதலாவதாக, காலம், இடம் மற்றும் காரணகாரியங்கள் எல்லாம் எதையும் சாராதவை என்று சொல்ல முடியாது. காலம் முற்றிலும் சார்புநிலை கொண்டது. நம் மனத்தின் ஒவ்வொரு மாறுதலுக்கு ஏற்ப அதுவும் மாறிக்கொண்டே இருக்கிறது. கனவில் சில வேளைகளில், சிறிது நேரத்திற்குள்ளேயே பல வருடங்கள் வாழ்ந்ததாகக் காண்கிறோம், வேறு சில நேரங்களில், பல மாதங்கள் ஒரே கணத்தில் ஓடிவிட்டது போல் நமக்குத் தோன்றும். ஆகவே காலம் முற்றிலுமாக நமது மனநிலையைச் சார்ந்ததாகவே உள்ளது. இரண்டாவதாக, காலம் என்ற கருத்தே சிலவேளைகளில் முழுவதுமாக மறைந்துவிடுவதும் உண்டு.
இடமும் இதே போன்றதுதான். இடம் என்பது என்ன என்று நம்மால் அறிய முடியாது. ஆனாலும் அது இருக்கிறது. அதை விளக்க முடியாது. மற்ற எதையும் சாராமல் அது தனியாக இருக்க முடியாது. காரண காரியமும் அப்படியே.
காலம், இடம், காரணகாரியங்கள் ஆகியவற்றில் நாம் காணும் ஒரு தனிப்பட்ட அம்சம், அவை மற்றவற்றைச் சாராமல் இருக்க முடியாது என்பதே. நிறம், எல்லைகள், அல்லது சுற்றியுள்ள எதனோடும் எந்தத் தொடர்பும் இல்லாத, வெறும் இடத்தை மட்டுமே நினைத்துப் பார்க்க முயலுங்கள். அது நம்மால் முடியாது. இரண்டு எல்லைகளுக்கு இடையில் அல்லது மூன்று பொருட்களுக்கு உட்பட்டதாகத்தான் அதைப்பற்றி நாம் நினைக்க முடியும். வேறு ஒரு பொருளோடு ஒப்பிட்டுத்தான் இடம் என்பது இருப்பதாகச் சொல்ல முடியும்.
காலத்திற்கும் இது பொருந்தும். காலம் என்பதைத் தனியாக நினைத்துப் பார்க்க முடியாது. இரண்டு நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்று முதலில் நடந்தது, மற்றொன்று அதைத் தொடர்ந்து நடப்பது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சி என்ற கருத்தால் இணைக்க வேண்டும். இடம், மற்ற பொருட்களைச் சார்ந்திருப்பதுபோல், காலமும் இரண்டு நிகழ்ச்சிகளைச் சார்ந்திருக்கிறது. காரணகாரியக் கருத்து, காலம், இடம் இவற்றிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்கிறது. சார்பில்லாமல் தனியாக இருக்க முடியாது என்பதுதான் இவற்றின் முக்கியமான அம்சம். நாற்காலி, சுவர் இவற்றைப்போல்கூட அவற்றிற்கு இருப்பு கிடையாது. கைக்கு அகப்படாததான நிழல்போல் அவை எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கின்றன. உண்மையான இருப்பு அவற்றிற்கு இல்லை. ஆனாலும் அவை இல்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில் எல்லாமே அவற்றின் மூலமாகத்தான் பிரபஞ்சமாக வெளிப்படுகின்றன.
ஆகவே முதலாவதாக, காலம், இடம், காரணகாரியம் இவற்றின் சேர்க்கையை, இருக்கிறது என்றோ, இல்லை என்றோ சொல்ல முடியாது என்பது தெரிகிறது. இரண்டாவதாக, இந்தச் சேர்க்கை சிலவேளைகளில் மறைந்தே விடுகிறது. உதாரணத்திற்கு, கடலில் உள்ள அலை ஒன்றை எடுத்துக் கொள்வோம். அலையும் கடலும் ஒன்றுதான் என்று நமக்கு நிச்சயமாகத் தெரியும். என்றாலும் அலை என்ற நிலையில் அது கடலிலிருந்து வேறுபட்டது என்றும் நாம் அறிகிறோம். இந்த வேறுபாட்டை உண்டாக்குவது எது? பெயரும் வடிவமும். அதாவது மனத்தில் நாம் கொண்டுள்ள கருத்தும் உருவமுமே. கடலிலிருந்து வேறுபட்டதாக அலை உருவத்தை மட்டும் தனியாக நினைத்துப் பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது. எப்போதுமே கடலோடு சேர்த்துத்தான் அலையைப்பற்றி நாம் நினைக்க முடியும். அலை அடங்கும்போது, அதன் உருவம் கண நேரத்தில் மறைந்துவிடுகிறது. ஆனாலும் நாம்கண்ட அலை உருவம் பொய்த் தோற்றமல்ல. அலை இருந்தவரையில் உருவமும் இருந்தது, அதுவரை அலையுருவத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது. இதுதான் மாயை.
ஆகவே இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே ஒரு தனி உருவம்போல் உள்ளது. பரம்பொருளே கடல். நாமும் மற்றும் சூரியன், நட்சத்திரங்கள் என்று எல்லாமே அந்தக் கடலில் எழும் வெவ்வேறு அலைகள். அலைகளை வேறுபடுத்துவது எது? உருவம் மட்டுமே. அந்த உருவம் என்பது, அலைகளைச் சார்ந்திருப்பவையான இடம் மற்றும் காரணகாரியங்களே! அலை மறைந்ததும் அவையும் மறைந்துவிடுகின்றன. இந்த மாயையை விட்டு விடுபவனுக்கு மாயை மறைந்துவிடுகிறது. அவன் முக்தி பெறுகிறான்.
காலம், இடம், காரணகாரியங்களே எப்போதும் பெரும் தடைகளாக உள்ளன. இவற்றை நாம் உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பிடியை விடுவதற்காகத்தான் இவ்வளவு போராட்டங்களும் நடக்கின்றன.
பரிணாமக் கொள்கை என்பது என்ன? அதற்கு அடிப்படையான இரண்டு அம்சங்கள் என்ன? ஒடுங்கியிருந்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயலும் அபாரமான வலிமை வாய்ந்த சக்தி ஒன்று. மற்றொன்று, அது வெளிப்படாதவண்ணம் அந்த முயற்சியைத் தடை செய்யும் சூழ்நிலை. இந்தச் சூழ்நிலையோடு போராடுவதற்காக அந்தச் சக்தி, மறுபடியும்மறுபடியும் புதிய உடல்களை எடுத்துக்கொண்டே இருக்கிறது. ஓர் அமீபாவுக்கு இந்தப் போராட்டத்தில், மற்றோர் உடல் கிடைக்கிறது. அதன்மூலம் அது சில தடைகளைக் கடக்கிறது. பின்னர் அதற்கு மற்றோர் உடல் கிடைக்கிறது. இப்படியே தொடர்கிறது. கடைசியில் மனிதனாகிறது. இந்தக் கருத்தை அதனுடைய நியாயபூர்வமான முடிவுவரை நாம் எடுத்துச் செல்வோம். அமீபாவிலிருந்து பரிணமித்து மனிதனாகிய அந்தச் சக்தி, இயற்கை அதன்முன் கொண்டுவருகின்ற தடைகளையெல்லாம் வென்று எல்லா சூழ்நிலைகளிலிருந்தும் தப்பிக்கும் நேரம் வந்துதான் ஆக வேண்டும்.
தத்துவரீதியில் இந்தக் கருத்தைப் பின்வருமாறு சொல்லலாம்: ஒவ்வோர் இயக்கத்திற்கும் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று செய்பவர்; மற்றொன்று அந்தச் செயலுக்கு இலக்காகும் பொருள் வாழ்க்கையின் ஒரே லட்சியம், இந்த செய்பவர், இலக்குப் பொருளை அடக்கியாள்வதே ஆகும். உதாரணமாக யாராவது நம்மைத் திட்டும்போது நாம் துன்பப்படுகிறோம். இந்த உதாரணத்தில் நம் போராட்டம் எல்லாம் மற்றவர் நம்மைத் திட்டும்போது, நாம் அதை லட்சியம் செய்யாமல் இருக்கும் வலிமை பெறுவதற்காகத்தான் இருக்கும். இப்படித்தான் நாம் எல்லோரும் வெற்றிக்காக முயல்கிறோம்.
ஒழுக்கம் என்பது என்ன? நம்மைப் பரம்பொருளுடன் இணைத்துக் கொண்டு வலிமை பெற்று, எல்லைக்கு உட்பட்ட இயற்கை நம்மீது ஆதிக்கம் செலுத்தாமல் செய்வதுதான். இயற்கை, எல்லைக்கு உட்பட்டதாகையால், நாம் நம் சூழ்நிலைகளை முழுவதுமாக வெல்கின்ற காலம் ஒன்று வரும் என்பது எங்கள் தத்துவத்தின் நியாயபூர்வமான முடிவாகும்.
இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. இயற்கை, எல்லைக்கு உட்பட்டது என்பது எப்படித் தெரியும்? தத்துவ அறிவு மூலமாக மட்டுமே இதை நாம் அறிய முடியும். எல்லையற்ற பொருளின் எல்லைக்கு உட்பட்ட வெளிப்பாடே இயற்கை. ஆகவே இயற்கை எல்லைக்கு உட்பட்டது. எனவே சூழ்நிலை அனைத்தையும் நாம் வெற்றிகொள்ளும் நேரம் வந்தே தீரும்.
சூழ்நிலைகளை வெற்றிகொள்வது எப்படி? புறச் சூழ்நிலைகள் எல்லாவற்றையும் வெற்றிகொள்வது என்பது இயலாத ஒன்றுதான். அது நம்மால் முடியாத காரியம்தான். மீன், நீரிலுள்ள தன் எதிரிகளிடமிருந்து தப்பிக்க விரும்புகிறது. அது எப்படித் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது? இறக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு பறவையாவதன் மூலம்தான். நீரையோ காற்றையோ அந்த மீன் மாற்றவில்லை; மாற்றம் அதனிடமே உண்டாகிறது. மாற்றம் எப்பொழுதும் அகச்சார்பு உடையது. பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், எல்லா உயிர்களும் தங்களை மாற்றிக் கொள்வதன்மூலமே இயற்கையை வெல்கின்றன என்பதை அறிகிறோம். இந்த உண்மையை மத உணர்வுக்கும் ஒழுக்கக் கோட்பாட்டிற்கும் பொருத்திப் பார்த்தால், தன்னை மாற்றிக் கொள்வதன்மூலம் மட்டுமே ஒருவர் தீமையை வெல்ல முடியும் என்றாகிறது மனிதனின் அகச்சார்பிலிருந்து தான் அத்வைத நெறிக்கு அதனுடைய முழுச் சக்தியும் கிடைக்கிறது. துன்பமும் தீமையும் வெளியே இல்லை; ஆகவே அவற்றைப்பற்றிப் பேசுவது பொருளற்றது. கோபத்தின் வசப்படாதிருக்கப் பழகிவிட்டால் எனக்குக் கோபம் வராது. வெறுப்பு என்னை அணுகாமல் பார்த்துக் கொண்டால் வெறுப்பே எனக்கு வராது. ஏனெனில் அவை என்னைத் தொடவே முடியாது. வெற்றியடைவதற்கு இதுதான் வழி; அதாவது அகச் சார்பின்மூலம் நம்மை நாமே முழுமையாக்கிக் கொள்வதுதான்.
பவுதீக விஞ்ஞானம் மற்றும் ஒழுக்கக் கோட்பாடு ஆகியவற்றின் தற்கால ஆராய்ச்சிகளுடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல், அவற்றிற்கு ஒரு படி மேலேயும் போயிருக்கும் ஒரே நெறி அத்வைதம்தான் என்று நான் தைரியமாகச் சொல்வேன். அதனால்தான் தற்கால விஞ்ஞானிகளை அத்வைதம் கவர்கிறது. பழைய துவைதக் கருத்துக்கள் அவர்களுக்குப் போதவில்லை, திருப்தி அளிக்கவில்லை.
மனிதனுக்கு வெறும் நம்பிக்கை போதாது, அறிவு பூர்வமான நம்பிக்கை வேண்டும். இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், வழிவழியாகத் தாங்கள் பின்பற்றிவரும் மதக் கருத்துக்களைத் தவிர, மற்றவை எதுவும் சரியானவை அல்ல என்ற எண்ணம் இருப்பது, மனிதனின் மனத்தில் இன்னும் பலவீனம் எஞ்சியுள்ளதையே காட்டுகிறது. அத்தகைய கருத்துக்களை விட்டுவிட வேண்டும். இந்த நாட்டில் மட்டும்தான் அந்த நிலை இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. எல்லா நாடுகளிலும் இருக்கிறது; எல்லா நாடுகளையும்விட என்னுடைய நாட்டில் மிகவும் அதிகமாக இருக்கிறது.
அத்வைதம் பொதுமக்களிடையே பரவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. முதலில் சில துறவிகள் மட்டுமே அத்வைதத்தை அறிந்திருந்தார்கள். அவர்கள் அதனைக் காட்டிற்கு கொண்டு சென்றுவிட்டார்கள். ஆகவே இதற்கு, வனத் தத்துவம் அதாவது ஆரண்யகம் என்ற பெயர் வழங்கலாயிற்று. இறையருளால் புத்தர் தோன்றி, எல்லா மக்களுக்கும் அதை எடுத்துக் கூறினார். நாடு முழுவதுமே பவுத்த மதத்தைத் தழுவியது. இதற்குப் பல காலத்திற்குப் பின், நாத்திகர்களும் ஆஜ்ஞேய வாதிகளும் மீண்டும் நாட்டைக் கெடுத்தபோது, இந்தியாவை உலோகாயதத்திலிருந்து காப்பாற்றக் கூடியது அத்வைதம் ஒன்றுதான் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்தார்கள்.
இவ்வாறு இந்தியாவை உலோகாயதத்திலிருந்து இரண்டுமுறை அத்வைதம் காப்பாற்றியிருக்கிறது. அஞ்சக் கூடிய அளவுக்கு, உலோகாயதம், புத்தர் தோன்றுவதற்கு முன்னால் இந்தியாவில் பரவியிருந்தது. அன்று அது இப்போது இருப்பதைப் போன்ற தத்துவம் அல்ல; இதைவிட மிகவும் மோசமானதும் பயங்கரமானதுமாக இருந்தது.
இருப்பது ஒன்றே என்று நம்புவதால் நான் ஒருவகையில் உலோகாயதவாதிதான். உலோகாயதவாதிகள் நம்பச் சொல்வதும் அதைத்தான். அவர்கள் அதை ஜடப்பொருள் என்கிறார்கள்; நான் அதைக் கடவுள் என்கிறேன். நம்பிக்கை, மத உணர்வு மற்றும் எல்லாமே இந்த ஜடப்பொருளிலிருந்து வந்திருக்கின்றன என்று உலோகாயதவாதிகள் சொல்கிறார்கள். இவை எல்லாமே கடவுளில் இருந்து வந்திருக்கின்றன என்று நான் சொல்கிறேன்.
புத்தருக்கு முன்னால் இருந்த உலோகாயதம் வளர்ச்சியடையாத, பக்குவப்படாத ஒன்றாக இருந்தது நன்றாகச் சாப்பிடுங்கள், குடித்துக் கும்மாளமிடுங்கள். கடவுள், ஆன்மா, சொர்க்கம் என்றெல்லாம் எதுவும் இல்லை. தீய நோக்கம் கொண்ட புரோகிதர்களின் கட்டுக் கதையே மதம் என்றெல்லாம் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள் . உயிருடன் இருக்கும்வரை சந்தோஷமாக வாழ வேண்டும், கடன் வாங்கியாவது சாப்பிட வேண்டும். கடனைத் திருப்பிக் கொடுப்பதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை- இதுதான் பழைய உலோகாயதக்கொள்கை. அன்று இந்தக் கொள்கை மிகவும் அதிகமாகப் பரவியிருந்தது. ஆகவே இன்றுகூட, ஜனரஞ்சகமான தத்துவம் என்றே அதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
புத்தர், வேதாந்தத்தை வெளியே கொண்டுவந்து, மக்களிடையே பரப்பி இந்தியாவைக் காப்பாற்றினார். அவர் மறைந்து ஆயிரம் வருடங்களுக்குப் பின், மீண்டும் எல்லாம் பழையபடியாயிற்று. பாமர மக்கள் கூட்டமும் பல்வேறு இன மக்களும் எல்லோரும் புத்த மதத்தைத் தழுவியிருந்தார்கள். மக்களில் பலர் அறிவற்றவர்களாக இருந்ததால் புத்தரின் போதனைகளுக்குக் காலப்போக்கில் வீழ்ச்சி ஏற்பட்டது.
கடவுள், பிரபஞ்சத் தலைவராகிய இறைவன் என்று எதையும் புத்தர் போதிக்கவில்லை. எனவே மக்கள் சிறிதுசிறிதாக, தங்கள் தெய்வம், பேய் பிசாசுகள் என்று பலவற்றை மறுபடியும் புத்த மதத்தில் புகுத்தி, அதை ஒரு குழப்பக் குட்டையாக்கிவிட்டார்கள். அதன் காரணமாக உலோகாயதம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியது. அது உயர்வகுப்பினரிடையே தனியுரிமையாகவும் ஏழைகளிடையே மூட நம்பிக்கையாகவும் உலவியது.
அந்த வேளையில் ஆதி சங்கரர் தோன்றி வேதாந்தத் தத்துவத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார்; அதைப் பகுத்தறிவுக்கு ஏற்புடைய ஒரு தத்துவமாகச் செய்தார். உபநிடதங்களில் உள்ள வாதங்கள் பல இடங்களில் சரியாகப் புரிவதில்லை. புத்தர் இந்தத் தத்துவத்தின் அறநெறிப் பகுதியையும், சங்கரர் அறிவுப் பகுதியையும் வற்புறுத்தினார்கள். சங்கரர் அத்வைதத்தின் அற்புதமான, கோர்வையான முறையை நன்கு ஆராய்ந்து, அறிவுபூர்வமாக மாற்றி மக்களுக்குக் கொடுத்தார்.
ஐரோப்பாவில் இன்று உலோகாயதம் தான் வழக்கில் இருக்கிறது. தற்காலத்தில் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, ஆன்ம சிந்தனை வருவதற்காக நாம் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், அறிவுக்கு ஏற்புடைய காரணத்தை அவர்கள் கேட்கிறார்கள். ஐரோப்பாவின் ஆன்மிக விழிப்பிற்கு அறிவுபூர்வமான ஒரு மதம்தான் தேவை. இரண்டற்ற ஒன்றேயான நிர்க்குண பிரம்மக் கருத்தைப் போதிக்கும் அத்வைதம் ஒன்றுதான், அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் மக்களுக்குத் திருப்தி அளிக்ககூடியதாக இருக்கிறது. தர்மம் மறைந்தது போலாகி, அதர்மம் தலைதூக்குவது போல் தோன்றும் போதெல்லாம் அத்வைதம் வருகிறது. அதனால்தான் அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வேர்பிடித்திருக்கிறது.
இந்த அத்வைதத் தத்துவத்தைப்பற்றி நான் இன்னும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். பழைய உபநிடதங்கள் நுண்மை செறிந்த கவிதைகளாக உள்ளன. அவற்றை இயற்றியவர்கள் கவிஞர்களே. கவிதை வாயிலாக மக்களுக்கு அருளுணர்வு உண்டாகிறது என்கிறார் பிளட்டோ. ஆகவே உண்மையை உணர்ந்தவர்களாகிய பழங்கால ரிஷிகள் சாதாரண மனித நிலையிலிருந்து உயர்நிலைக்குச் சென்று, இந்த உன்னதமான உண்மைகளைக் கவிதை வடிவமாக எடுத்துக்காட்டினார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் போதிக்கவோ தத்துவம் பேசவோ எழுதவோ இல்லை. அவர்கள் இதயத்திலிருந்து இசை எழுந்தது.
புத்தரிடம் உலகத்தையே தழுவக்கூடிய இதயத்தையும் எல்லையற்ற பொறுமையையும் காண்கிறோம். மதத்தைச் செயல்முறைப்படுத்தி வீடுதோறும் கொண்டு சென்றவர் அவர். சங்கரரிடம் மகத்தான அறிவுத்திறனைக் காண்கிறோம். எல்லாவற்றையும் பகுத்தறிவு என்னும் தீவிர ஒளியினால் அவர் ஆராய்ந்தார். சங்கரரின் அத்தகைய அறிவுப் பேரொளியும், புத்தரின் அன்பும் கருணையும் நிறைந்து பொங்குகின்ற எல்லையற்றுப் பரந்த அந்த அற்புதமான இதயமும் இணைந்த நிலையே இன்று நமக்குத் தேவைப்படுகிறது. இந்த இணைப்பு நமக்கு மிக உயர்ந்த தத்துவத்தைக் கொடுக்கும். விஞ்ஞானமும் மதமும் அப்போது நட்புறவு கொள்ளும். கவிதையும் தத்துவமும் நண்பர்களாகிவிடும். எதிர்கால மதம் இப்படித்தான் இருக்க வேண்டும். அதற்கு மட்டும் நம்மால் ஓர் உருவம் கொடுக்க முடியுமானால் அது எக்காலத்திலும் எல்லா மக்களும் ஒப்புக் கொள்ளும்படியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஒரு வழியில்தான் விஞ்ஞானமும் மதத்தை ஒப்புக்கொள்ளும். ஏனென்றால் விஞ்ஞானமும் ஏறக்குறைய அந்த நிலைக்கு இப்போது வந்துவிட்டது.
எல்லா பொருட்களும் ஒரே சக்தியின் வெளிப்பாடுகளே என்று விஞ்ஞானிகள் சொல்லும்போது, அது உங்களுக்கு உபநிடதங்கள் கூறும் கடவுளை நினைவுபடுத்தவில்லையா?-பிரபஞ்சத்திலுள் நுழையும் ஒரே நெருப்பு, பல உருவங்களாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைப்போல், பரம்பொருள் ஒவ்வோர் ஆன்மாவின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதோடு, இன்னும் எல்லையற்றமடங்கு உயர்ந்த நிலையிலும் இருக்கிறார். என்று உபநிடதங்கள் கூறுகின்றனவே! விஞ்ஞானம் எந்தப் பக்கம் சாய்ந்து வருகிறது என்று உங்களுக்குப் புரியவில்லையா?
இந்துக்கள் மன ஆராயச்சியின் மூலமும் தத்துவ ஆராய்ச்சியின் மூலமும் நியாயபூர்வமான ஆராய்ச்சிமூலமும் முன்னேறினார்கள். ஐரோப்பியர்கள் புற இயற்கையிலிருந்து தொடங்கினார்கள். இப்போது அவர்களும் அதே முடிவுகளுக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மனத்தின் மூலம் தேடும்போது, ஒன்றேயான, பிரபஞ்சப் பொருளான எல்லாவற்றிற்கும் உட்பொருளான, மெய்ப்பொருளான, எப்போதும் சுதந்திரமான, நிலையான ஆனந்த வடிவான, என்றென்றும் இருப்பதான அந்தப் பரம்பொருளை இறுதியில் நாம் அடைகிறோம். விஞ்ஞானத்தின் மூலமும் நாம் அதே ஒருமை நிலைக்குத்தான் வருகிறோம். எல்லா பொருட்களும், இருப்பவை அனைத்தின் ஒட்டுமொத்தமான ஒரு சக்தியின் வெளிப்பாடுகள் தான் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
மனிதர்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க விரும்பவில்லை, சுதந்திரமே அவர்களது நாட்டமாக இருக்கிறது. மனிதன் ஏன் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்? ஏனென்றால் ஒழுக்கம்தான் சுதந்திரத்திற்கு வழி; ஒழுக்கமின்மை பந்தத்தையே ஏற்படுத்துகிறது.
அத்வைதத் தத்துவத்தின் மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால், இதில் ஆரம்பத்திலிருந்தே அழிவுபூர்வமான எதுவும் இல்லை என்பதுதான். அறியாமை காரணமாக, தாழ்ந்த வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுபவர்கள் உட்பட யாருடைய நம்பிக்கையையும் குலைக்காதீர்கள் என்று தைரியமாகப் போதித்திருப்பது அத்வைதத்தின் மற்றொரு தனிப்பெருமையாகும். யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள். மனிதகுலமும் முழுவதுமே மேலும்மேலும் முன்னேறுவதற்கு உதவுங்கள் என்றுதான் அத்வைதம் கூறுகிறது. இந்தத் தத்துவம், முழுமையான, ஒட்டுமொத்தமான ஒரு கடவுளைப் போதிக்கிறது. எல்லோருக்கும் ஏற்புடையதான உலகமதம் ஒன்றை நீங்கள் உருவாக்க விரும்பினால் அதில் வெறும் மதப் பிரிவுகள் மட்டும் இருந்தால் போதாது. அதன் ஒட்டுமொத்தமாக அது இருக்க வேண்டும். மேலும், மதஉணர்வின் வளர்ச்சியினுடைய எல்லா நிலைகளும் அதில் அடங்கியிருக்க வேண்டும்.
அத்வைதத்தைத் தவிர வேறு எந்த நெறியிலும் இந்தக் கருத்து தெளிவாக இல்லை. பிற நெறிகள் வெறும் அம்சங்கள் மட்டுமே. அவை ஒவ்வொன்றும் முழுமையை அடையத்தான் போராடிக் கொண்டிருக்கின்றன. அம்சம் என்ற ஒன்று இருப்பதே அது முழுமை பெறப்போராடுவதற்காகத்தான். ஆகவே இந்தியாவில் பழக்கத்தில் இருந்துவரும் பலவகையான மதப் பிரிவுகள் எதனிடமும் முதலிலிருந்தே அத்வைதத்திற்குப் பகைமை இல்லை.
இன்று இந்தியாவில் துவைதிகள் இருக்கிறார்கள். அவர்களின் தொகைதான் மிகவும் அதிகம். குறைந்த அளவே கல்வி பெற்ற மனங்களுக்கு அது இயல்பாகவே ஏற்றதாக இருக்கிறது. பிரபஞ்சத்தைப்பற்றிய மிகவும் எளிதான, இயல்பான, பாமர மக்களுக்குச் சுலபமாகப் புரியும்படியான விளக்கமாக துவைதம் உள்ளது. ஆனால் அத்வைதத்திற்குத் துவைதிகளோடு எந்தச் சண்டையும் இல்லை.
கடவுள், பிரபஞ்சத்திற்கு வெளியே சொர்க்கத்தில் எங்கேயோ இருக்கிறார் என்று துவைதம் சொல்கிறது. நம்முடைய ஆன்மாதான் கடவுள் என்றும், அவர் நமக்கு வெளியே இருக்கிறார் என்று சொல்வது தெய்வநிந்தை என்றும் அத்வைதம் கூறுகிறது. கடவுள் தனி, நாம் தனி என்ற வாதம் அத்வைதிக்குப் பயங்கரமானதாக இருக்கிறது. அவர் நமக்கு நெருங்கியவற்றுள் எல்லாம் நெருங்கியவராக இருக்கிறார். இந்த நெருக்கத்தை விளக்க, ஒன்றாயிருப்பது என்ற வார்த்தையைத் தவிர, வேறு எந்த வார்த்தையும் எந்த மொழியிலும் இல்லை. வேறு எந்தக் கருத்துமே அத்வைதிக்குத் திருப்தி அளிப்பதில்லை. துவைதி, அத்வைதக் கருத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறான். அது பெரும் அபச்சாரம் என்று அவன் நினைக்கிறான். துவைதக் கருத்துக்கள் இருந்தேயாக வேண்டும் என்பதை அத்வைதி அறிந்திருக்கிறான். ஆகவே சரியான பாதையில் போகும் துவைதியோடு அவனுக்கு எந்தச் சண்டையும் இல்லை.
துவைதியைப் பொறுத்தவரை அவன் பன்மையைப் பார்த்தாக வேண்டும். அவனுடைய அமைப்பு அது, அவனுடைய நிலை அது. அவன் அப்படியே பார்க்கட்டும். துவைதியின் கொள்கைகள் எப்படி இருந்தாலும், தான் அடைய விரும்பும் அதே குறிக்கோளை நோக்கித்தான் அவனும் போய்க் கொண்டிருக்கிறான் என்பது அத்வைதிக்குத் தெரியும். துவைதியோ தன் கருத்திலிருந்து மாறுபடும் மற்ற எல்லா கருத்துக்களும் தவறானவை என்று கருதுகிறான். இந்த இடத்தில் துவைதியிடமிருந்து அத்வைதி வேறுபடுகிறான்.
உலகிலுள்ள துவைதிகள் அனைவரும் இயல்பாகவே சகுணக் கடவுளை நம்புகின்றனர். இந்தக் கடவுள் முற்றிலும் மனிதத் தன்மை கொண்டவராக உள்ளார். மண்ணுலக மன்னரைப்போல் அவர் சிலரை விரும்புகிறார், சிலரை வெறுக்கிறார். தன்னிச்சைப்படி, தனக்குப் பிடித்த மக்கள்மீது, பிடித்த இனத்தின்மீது அருளைப் பொழிகிறார். ஆகவே கடவுளுக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்ற முடிவு, இயல்பாகவே துவைதிக்கு வருகிறது. அந்த வேண்டியவர்களின் பட்டியலில் தானும் சேர அவன் விரும்புகிறான். நாங்கள் கடவுளுக்கு மிகவும் வேண்டியவர்கள். நாங்கள் நம்புவதைப்போல் கடவுளை நம்பினால்தான், அவருக்கு வேண்டியவர்களின் பட்டியலில் உங்களால் இடம் பெற முடியும் என்ற கருத்து, ஏறக்குறைய உலகின் எல்லா மதங்களிலுமே காணப்படுகிறது.
கடவுளின் தயவுக்குப் பாத்திரமாவதற்காக விதிக்கப்பட்ட சிலர் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் எவ்வளவு தீவிரமாக முயன்றாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் என்று வற்புறுத்தும் அளவுக்குச் சில துவைதிகள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஏறக்குறைய இத்தகைய கருத்துக்கள் இல்லாத எந்தத் துவைத நெறியையாவது உங்களால் காட்ட முடியுமா? எனவே இயற்கையாகவே துவைத நெறிகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுத்தான் ஆக வேண்டும்; அதைத்தான் செய்தும் வருகின்றன. சில விசேஷசலுகைகளைக் காட்டும்போது கல்வியறிவற்றவர்களுக்கு ஒரு கர்வம் வருகிறதே, அந்தக் கர்வத்தை வளர்ப்பதன் மூலம் துவைதிகள் அவர்கள் மனத்தைக் கவர்ந்து விடுகிறார்கள். தங்களுக்குக் கடவுளிடமிருந்து தனிப்பட்ட சலுகைகள் கிடைப்பதாக நினைக்க துவைதிகள் விரும்புகிறார்கள். தண்டிப்பதற்குத் தயாராகக் கையில் கோலை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கடவுள் இல்லாமல் நாம் நன்னெறியைப் பின்பற்ற முடியாது என்பது அவர்களின் கருத்து.
சிந்தனைத் திறனற்ற மக்கள் பொதுவாக துவைதிகளாகத்தான் இருக்கிறார்கள். பாவம், அவர்கள் பல்லாயிரம் வருடங்களாக ஒவ்வொரு நாட்டிலும் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். ஆகவே தண்டனைப் பயத்திலிருந்து விடுதலை பெறுவதுதான் மோட்சம் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு பாதிரி என்னிடம், என்ன! உங்கள் மதத்தில் சாத்தான் இல்லையா? அது எப்படி முடியும்? என்று கேட்டார்.
உலகில் பிறந்த மேலான, மகோன்னதமான மனிதர்கள் எல்லோருமே அந்த உயர்ந்த, நிர்க்குணக்கருத்தின் பின்னணியிலேயே செயல்பட்டிருக்கிறார்கள், நானும் என் பரமபிதாவும் ஒருவரே என்று கூறியவரின் சக்தி பல கோடி மக்களிடம் புகுந்திருக்கிறது. அந்தச் சக்தி பல்லாயிரக் கணக்கான வருடங்களாக உலக நன்மைக்காகச் செயல்பட்டு வந்திருக்கிறது. அதே மனிதர், அத்வைதியாக இருந்தால்தான் மற்றவர்களிடம் கருணை கொண்டவராக இருந்தார். சகுணக் கடவுளைத் தவிர வேறு உயர்ந்த கருத்தைப்பற்றி நினைக்கவே முடியாத மக்களுக்கு, பரமண்டலத்திலுள்ள பரமபிதாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவர் உபதேசம் செய்தார். சற்று உயர்ந்த கருத்தைப் புரிந்துகொள்ளும் திறமை உள்ளவர்களுக்கு, கொடி நானே, கிளைகள் நீங்கள் என்று கூறினார். தமது அந்தரங்கச் சீடர்களுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்தி, நானும் என் பரமபிதாவும் ஒருவனே என்ற மிக உயர்ந்த உண்மையைத் தெரிவித்தார்.
துவைதிகளின் தெய்வங்களைத் துளியும் லட்சியம் செய்யாதவர் புத்தர். நாத்திகர், உலோகாயதவாதி என்றெல்லாம் அவர் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் ஓர் ஆட்டிற்காகத் தம்மையே தியாகம் செய்யத்தயாராக இருந்தார். இதுவரை எந்த நாடும் போதித்துள்ளதில் மிகஉயர்ந்த அறநெறிக் கருத்துக்களை அவர் போதித்தார். அறநெறி எங்கிருந்தாலும் அது புத்தர் என்னும் சூரியனிலிருந்து வந்த ஓர் ஒளிக் கிரணம்தான்.
மனித வரலாற்றிலேயே இப்பொழுதுதான் அறிவு வளர்ச்சி, நூறு வருடங்களுக்கு முன் கனவுகூடக் கண்டிருக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்குமுன் கனவுகூடக் கண்டிருக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான அறிவு இன்று வளர்ந்திருக்கிறது. இந்த வேளையில் உலகின் பரந்த இதயங்களைக் குறுகிய எல்லைக்குள் அடைத்து வைத்திருப்பது முடியாத காரியம். மனிதர்களைக் குறுகிய எல்லைக்குள் அடைக்க முயல்வதால் அவர்களை மிருகங்களாக்கி, சிந்திக்கும் திறனற்றவர்களாக்கி இழிவுபடுத்துகிறீர்கள். அவர்களின் அற வாழ்வை அழிக்கிறீர்கள்.
எல்லையற்ற அன்புகொண்ட மிகவுயர்ந்த இதயமும் எல்லையற்ற அறிவுப்பிரகாசமும் இணைந்த சேர்க்கையே இன்று தேவையாக இருக்கிறது. எல்லையற்ற இருப்பு, எல்லையற்ற அறிவு, எல்லையற்ற ஆனந்தம்-இந்த மூன்றைத் தவிர வேறு எதையும், கடவுளைப் பற்றியதாக ஒரு வேதாந்தி கூறுவதில்லை. இந்த மூன்றையும் ஒன்றாகவே அவன் கருதுகிறான். அறிவும் அன்புமற்ற இருப்பு இருக்க முடியாது. அறிவும் அன்பும், ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. எல்லையற்ற இருப்பு, எல்லையற்ற அறிவு மற்றும் எல்லையற்ற ஆனந்தத்தின் சேர்க்கையே இன்று நமக்கு வேண்டுவது. அதுதான் நமது லட்சியம். நமக்கு வேண்டுவது இவற்றின் இணைந்த சீரான வளர்ச்சியே தவிர ஒருபக்க வளர்ச்சியல்ல.
சங்கரரின் அறிவும் புத்தரின் இதயமும் இணைந்த உன்னத நிலையைப் பெறுவது சாத்தியம்தான். நாம் எல்லோருமே அந்த உயர்ந்த நிலையை அடைவதற்குப் பாடுபடுவோம் என்று நான் நம்புகிறேன்.

Comments
Post a Comment