ஆன்மா: அதன் தளையும் முக்தியும்

ஆன்மா: அதன் தளையும் முக்தியும்

அத்வைத வேதாந்தத்தின் கருத்துப்படி, பிரபஞ்சத்தில் உண்மையாக இருப்பது ஒன்றே. அதைப் பிரம்மம் என்று அத்வைத வேதாந்தம் குறிக்கிறது. மற்ற எதுவுமே உண்மையற்றவை, மாயையின் சக்தியால் பிரம்மத்திலிருந்து வெளிப்படுவை, உருவாக்கப்படுபவை. அந்தப் பிரம்மத்தை மீண்டும் அடைவதே நமது குறிக்கோள். நாம் ஒவ்வொருவரும் அந்தப் பிரம்மமாகிய உண்மையும் இந்த மாயையும் கலந்த கலவைதான். மாயை அல்லது அறியாமையிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால், நாம் உண்மையில் யாரோ அதுவாக ஆவோம். இந்தத் தத்துவத்தின்படி, ஒவ்வொரு மனிதனும் மூன்று பகுதிகளால் ஆனவன்-உடல், அந்தக்கரணம் அல்லது மனம், அதன் பின்னால் ஆன்மா. இந்த ஆன்மாவின் புறப் போர்வை உடல், அகப் போர்வை மனம். உண்மையில் ஆன்மாவோ எல்லாவற்றையும் உணர்ந்து அனுபவிக்கிறது. உடலில் உறைவது ஆன்மாவே. இதுவே அந்தக்கரணமான மனத்தின்மூலம் உடலை இயக்குகிறது.

மனித உடலில் ஜடப்பொருள் அல்லாதது இந்த ஆன்மா ஒன்றுதான். ஜடப்பொருளாக இல்லாததால் அது கூட்டுப்பொருளாக இருக்க முடியாது. கூட்டுப்பொருள் அல்லாததால் அது காரணகாரிய விதிகளுக்கு உட்பட்டதல்ல. ஆகவே அது அழிவற்றது. அழிவற்ற ஒன்றிற்கு ஆரம்பம் இருக்க முடியாது. ஏனென்றால் ஆரம்பம் உள்ள எதற்கும் முடிவும் இருந்தேயாக வேண்டும். அத்துடன், ஆன்மா உருவம் இல்லாதது என்றும் ஆகிறது. ஜடப்பொருள் அல்லாத எதற்கும் உருவம் இருக்க முடியாது. உருவம் உள்ள எதற்குமே ஆரம்பமும் முடிவும் இல்லாத உருவம் எதையும் யாருமே பார்த்திருக்க முடியாது. சக்தியும் ஜடப்பொருளும் இணைந்தே உருவம் உண்டாகிறது. இந்த நாற்காலிக்கென்று ஒரு தனிப்பட்ட உருவம் இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட ஜடப்பொருளின்மீது ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி செயல்பட்டு அதை இந்தக் குறிப்பிட்ட உருவமாக்கியிருக்கிறது. பொருள், சக்தி இரண்டின் சேர்க்கையால் உண்டாவதுதான் உருவம். இந்தச் சேர்க்கை நிரந்தரமானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு சேர்க்கையும் பிரிந்து போகின்ற காலம் வந்தே தீரும். எனவே எல்லா உருவங்களுக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு.

நமது உடல் அழிந்துவிடும் என்பது நமக்குத் தெரியும். அதற்கு ஓர் ஆரம்பம் இருப்பதால் முடிவும் உண்டு. ஆனால் ஆன்மா உருவமற்றதாக இருப்பதால், ஆரம்பம், முடிவு என்ற விதிகளுக்கு அது கட்டுப்படுவதில்லை. அது எல்லையற்ற காலம்முதல் இருந்துவருகிறது. எப்படிக் காலம் நிரந்தரமானதோ அதேபோல் ஆன்மாவும் நிரந்தரமானது. இரண்டாவதாக, ஆன்மா எங்கும் நிறைந்ததாகத் தான் இருக்க வேண்டும். உருவமுள்ளதைத்தான் இடம் கட்டுப்படுத்துகிறது. உருவமற்றதை இடத்தால் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே அத்வைத வேதாந்தத்தின் கருத்துப்படி, உங்களுள், என்னுள் என்று எல்லோருள்ளேயும் உள்ள ஆன்மா எங்கும் நிறைந்தது. நாம் பூமியில் எப்படி இருக்கிறோமோ, அதேபோல் சூரியனிலும் இருக்கிறோம். நீங்கள் அமெரிக்காவில இருக்கிறீர்கள், அது போலவே இங்கிலாந்திலும் இருக்கிறீர்கள். ஆனால் உடல் மற்றும் மனத்தின்மூலமே ஆன்மா செயல்படுகிறது. ஆகவே உடலும் மனமும் இருக்கும் இடத்திலெல்லாம் ஆன்மாவின் செயல் வெளிப்படையாகத் தெரிகிறது.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நம் மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது. அதை சம்ஸ்கிருதத்தில் சம்ஸ்காரம் என்கிறார்கள். இந்தச் சமஸ்காரங்களின் கூட்டுப்பலனே குணம் என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரும் சக்தி. ஒவ்வொரு மனிதனும் தன் குணத்தைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். அவன் தன் வாழ்க்கையில் மனத்தாலும் உடலாலும் செய்த செயல்களின் பலனே குணம். மரணத்திற்குப் பின், ஒரு மனிதன் போகுமிடத்திற்கு வழிகாட்டுவது, அவனது சம்ஸ்காரங்களின் கூட்டுப்பலனே. ஒருவன் இறக்கிறான். உடல் வீழ்ந்து பஞ்சபூதங்களுடன் கலந்துவிடுகிறது. அப்போது சம்ஸ்காரங்கள் அழிவதில்லை. அவை மனத்துடன் சேர்ந்திருக்கின்றன. மனம் மிக நுட்பமான பொருளால் ஆக்கப்பட்டிருப்பதால், அது அவ்வளவு விரைவில் அழிவதில்லை. ஏனென்றால் ஒரு பொருள் எவ்வளவு நுட்பமான பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவிற்கு அது நிலைத்ததாகவும் இருக்கிறது. காலப்போக்கில் மனமும் அழிந்து விடுகிறது. அதற்காகத்தான் நாம் போராடுகிறோம்.

இந்த வேளையில் எனக்குத் தோன்றும் சிறந்த உதாரணம் சுழல்காற்றைப் பற்றியதுதான். பல திசைகளிலிருந்து வரும் பல காற்றோட்டங்கள் ஓரிடத்தில் சந்தித்து, ஒன்றுசேர்ந்து, சுழல ஆரம்பிக்கின்றன. அவ்வாறு சுழலும்போது காகிதம், வைக்கோல் போன்றவற்றைத் தங்களுக்குள் இழுத்துக்கொண்டு புழுதிப்புயலாக மாறுகின்றன. வேறோரிடத்தில் அவற்றை உதறிவிட்டு, வேறு பொருட்களை இழுத்துக் கொள்கின்றன. இவ்வாறே, தங்கள் வழியில் இருக்கும் பொருட்களைக்கொண்டு, பலவிதமான புழுதிப் படலங்களை உருவாக்கியவாறே செல்கின்றன. அதைப் போலவே, சம்ஸ்கிருதத்தில் பிராணன் என்று சொல்லப்படும் சக்திகள் ஒன்றுசேர்ந்து ஜடப்பொருளிலிருந்து உடலையும் மனத்தையும் உருவாக்குகின்றன. பிறகு உடல் விழும்வரை சுழன்று செல்கின்றன. விழுந்ததும்,மறுபடியும் வேறு பொருட்களிலிருந்து வேறு உடலையும் மனத்தையும் உருவாக்குகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. ஜடப்பொருள் இல்லாமல் சக்தியால் பயணம் செய்ய முடியாது. எனவே உடல் வீழ்ந்தவுடன் மனமாகிய பொருள் எஞ்சி நிற்கிறது. பிராணன் சம்ஸ்கார வடிவில் மனத்தின்மீது செயல்படுகிறது. பிறகு பிராணன் வேறோரிடத்திற்குப் போய் புதிய பொருட்களிலிருந்து புதிய உடலை உருவாக்கிக்கொண்டு மறுபடியும் இதேபோல் செயல்படுகிறது. இப்படியே, தன்னுடைய சக்தி முழுவதும் செலவழியும்வரை, இடத்திற்கு இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன்பிறகு தான் அது கீழே விழுகிறது. அதன் செயலும் முடிகிறது. ஆகவே மனம் அழிந்து தூள் தூளாகச் சிதறி, சம்ஸ்காரங்களையும் விட்டுவைக்காமல் போகும்போதுதான், நாம் பரிபூரண சுதந்திரம் அடைவோம். அதுவரை நாம் கட்டுப்பட்டேதான் இருப்போம். அதுவரை ஆன்மா மனத்தின் சுழற்சியால் மூடப்பட்டிருக்கிறது; தான் இடம்விட்டு இடம் மாறுவதாகக் கற்பனையும் செய்து கொள்கிறது. சுழல் அழிந்தவுடன், தான் எங்கும் நிறைந்திருப்பதை ஆன்மா உணர்கிறது. அது இப்போது, தான் விரும்பும் இடத்திற்குப் போக முடியும். அது முழுச் சுதந்திரம் பெற்றுவிடுகிறது; தான் விரும்பும் அளவுக்கு, உடல்களையும் மனங்களையும் படைத்துக் கொள்ளும் சக்தி அதற்கு வந்துவிடுகிறது. ஆனால் அதுவரையில் அது சுழலுக்குள்தான் சிக்கியிருக்க வேண்டும். இந்தச் சுதந்திரம் அல்லது முக்தியாகிய குறிக்கோளை நோக்கியே நாமெல்லோரும் போய்க் கொண்டிருக்கிறோம்.

இந்த அறையில் ஒரு பந்து இருப்பதாக வைத்துக் கொள்வோம். நாம் ஒவ்வொருவரும் ஒரு மட்டையால் அந்தப் பந்தைப் பல திசைகளிலிருந்தும் அடிக்கிறோம். அது அங்குமிங்கும் ஓடி, கடைசியில் அறையை விட்டு வெளியே பறந்து செல்கிறது. அது எந்தத் திசையில், எவ்வளவு சக்தியோடு வெளியே போகும் என்பது, இந்த அறையில் அந்தப் பந்தின்மேல் செயல்பட்ட சக்திகளுக்கு ஏற்பவே அமையும். நாம் கொடுத்த ஒவ்வோர் அடியும் அதன் பலனைக் கொடுக்கும். மனத்தாலும் உடலாலும் நாம் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் அந்த அடியைப் போன்றவை. மனித மனம்தான் அடிபடும் அந்தப் பந்து. உலகமாகிய இந்த அறையில் நாம் அடைபட்டு அடிபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்திலிருந்து நாம் விடுபடுவது, நாம் வாங்கும் அடிகளின் சக்தியைப் பொறுத்தே இருக்கிறது. மேலே சொன்ன இரண்டு நிகழ்ச்சிகளிலுமே, பந்து வாங்கும் அடிகளே அதன் வேகத்தையும் திசையையும் நிர்ணயிக்கின்றன. ஆகவே இந்த உலகில் நாம் செய்யும் செயல்களே நமது அடுத்த பிறவியை நிர்ணயிக்கின்றன.

நம்முடைய இப்போதைய பிறவி முற்பிறவியின் பலனே. இதோ ஓர் உதாரணம்! நான் உங்களிடம் ஒரு முடிவில்லாத சங்கிலித் தொடரைக் கொடுப்பதாகவும், அதில் கறுப்பு மற்றும் வெள்ளை வளையங்கள் ஒன்றன் பின் ஒன்றாக, மாறிமாறி அமைந்திருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். அந்தச் சங்கிலிக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. அந்தச் சங்கிலியின் இயல்பைப்பற்றி நான் உங்களைக் கேட்கிறேன். இரண்டு முனைகளிலும் சங்கிலி முடிவில்லாததாக இருப்பதால், அதன் இயல்பைக் கண்டு பிடிப்பதில் முதலில் உங்களுக்குச் சிறிது சிரமம் இருக்கும். ஆனால் அது ஒரு சங்கிலி என்பதை நீங்கள் மெதுவாகத் தெரிந்து கொள்வீர்கள். இந்த எல்லையற்ற சங்கிலி மாறி மாறி, கறுப்பு, வெள்ளை வளையங்களால் ஆனது, இந்த வளையங்களை எல்லையில்லாமல் பொருத்தியதால் ஆனதே இந்தச் சங்கிலி என்பதையும் கண்டுபிடித்து விடுவீர்கள். சங்கிலியிலுள்ள ஒரு வளையத்தின் இயல்பு தெரிந்துவிட்டால், முழுச்சங்கிலியின் இயல்பும் தெரிந்து விடும். ஏனெனில் முற்றிலும் ஒரே வகையான அமைப்பைத் திரும்பத்திரும்பக் கொண்டதே இந்தச் சங்கிலி.

நமது முற்பிறவி, இந்தப் பிறவி, மறுபிறவி எல்லாம் சேர்ந்து, தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு சங்கிலித் தொடரைப்போல் இருக்கிறது. அந்தச் சங்கிலியின் ஒவ்வொரு வளையமும் பிறப்பு, இறப்புக்கு இடையிலுள்ள ஒரு பிறவியாகும். அந்த இணைப்பின் இரண்டு முனைகளே பிறப்பும் இறப்பும் ஆகும். இந்தப் பிறவியில் நம்முடைய இயல்பும் செயல்களும் சிறிது மாறுபாடுகளுடன் மீண்டும்மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு வளையங்களின் இயல்பையும் நாம் அறிந்து விட்டால், நாம் இந்த உலகத்தில் கடந்து செல்ல வேண்டிய வழிகளைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளலாம். ஆகவே நாம் கடந்துவந்த வழிகளே இப்போது நாம் கடந்து கொண்டிருக்கும் வழியைத் தீர்மானித்துள்ளன. அதைப்போல் நம்முடைய செயல்களாலேயே நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம். நாம் இந்த உலகத்தை விட்டு வெளியே போகும்போது, நம் செயல்களின் கூட்டுப் பலனை நம்மோடு எடுத்துச் செல்வதைப்போல், இந்தப் பிறவியை எடுக்கும்போது, முற்பிறவியில் செய்த செயல்களின் கூட்டுப் பலனோடு இவ்வுலகிற்குள் வருகிறோம். நம்மை எது வெளியே எடுத்துச் செல்கிறதோ, அதுவேதான் நம்மை உள்ளேயும் கொண்டுவருகிறது.

நம்மைப் பிறக்கச் செய்வது எது? நமது முன் வினைகள். நம்மை இவ்வுலகிலிருந்து வெளியே கொண்டு போவது எது? இங்கே நாம் செய்யும் செயல்கள். இவ்வாறே தொடர்ந்து நடைபெறுகிறது. பட்டுப்புழு தன் வாயிலிருந்து வெளிப்படும் நூலைக்கொண்டே கூட்டைப் பின்னி, அதற்குள் அகப்பட்டுக் கொள்வதைப்போல் நாமும் நமது செயல்களாகிய வலையை நாமே பின்னி அதற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். காரணகாரிய விதியை நாம் தொடங்கி வைத்துவிட்டோம். அதிலிருந்து விடுபடுவது நமக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. சக்கரத்தைச் சுழற்றிவிட்டு விட்டோம். இப்போது அதுவே நம்மை நசுக்குகிறது. ஆகவே, நல்லதும் கெட்டதும் ஆகிய நம்செயல்களால் நாம் ஒருபோலவே கட்டுப்பட்டிருக்கிறோம் என்று இந்தத் தத்துவம் நமக்குப் போதிக்கிறது.

ஆன்மாவிற்குப் போக்கும் வரவும் இல்லை. அதற்குப் பிறப்போ இறப்போ இல்லை. இயற்கைதான் ஆன்மாவின் முன்னால் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் பிரதிபலிப்பு ஆன்மாவில் தெரிகிறது. ஆன்மா, அறியாமை காரணமாக, தான் இயங்குவதாகவும் இயற்கை நிலையாக இருப்பதாகவும் நினைத்துக் கொள்கிறது. அவ்வாறு நினைக்கும்போது அது பந்தப்பட்டுவிடுகிறது. தான் இயக்கமற்றிருப்பதையும், எங்கும் நிறைந்திருப்பதையும் அது உணரும்போது சுதந்திரம் அடைகிறது. தளையில் கட்டுண்ட ஆன்மாதான் ஜீவன். ஆகவே ஆன்மா வருகிறது போகிறது என்றெல்லாம் சொல்வது, சுலபமாகப் புரிந்து கொள்வதற்காகத்தான். சூரியன் பூமியைச் சுற்றுவதில்லை என்பதே உண்மையானாலும், வான இயலைப் படிக்கும் போது அது பூமியைச் சுற்றுவதாகப் பாவித்துக் கொள்வதைப் போன்றதே இது. அதுபோலவே ஜீவாத்மா உயர்ந்த நிலைகளுக்கோ தாழ்ந்த நிலைகளுக்கோ செல்கிறது. மறுபிறவி பற்றிய பிரபலமான விதி இது. படைப்பு அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும்.

மனிதன் மிருகத்திலிருந்து தோன்றினான் என்ற கருத்தைப் பயங்கரமானதாக நினைக்கிறார்கள் இந்த நாட்டு மக்கள். ஏன்? கோடிக்கணக்கான இந்த மிருகங்களின் கதி என்ன? அவை என்ன பயனற்றவையா? நமக்கு ஆன்மா உண்டு என்றால் அவற்றிற்கும் உண்டு. அவற்றிற்கு ஆன்மா இல்லை என்றால் நமக்கும் இல்லை. மனிதனுக்கு மட்டுமே ஆன்மா உண்டு, மிருகங்களுக்கு இல்லை என்று சொல்வது அபத்தம். மிருகங்களைவிடக் கேவலமான மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன்.

சம்ஸ்காரங்களின் பலனுக்கு ஏற்ப, ஆன்மா உயர்ந்த மற்றும் தாழ்ந்த பிறவிகளை எடுத்துக்கொண்டே இருக்கிறது; ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகிறது. மனிதன் என்ற உயர்ந்த பிறவியில்தான் அது சுதந்திரத்தை அடைய முடியும். தேவதைகளைவிட மனித நிலைதான் உயர்ந்தது. எல்லா பிறவிகளிலும் உயர்ந்தது மனிதப் பிறவி. மனிதப் பிறவியில் மட்டுமே ஜீவன் சுதந்திரம் பெற முடிவதால், மனிதன்தான் படைப்புக்களிலேயே மிகச் சிறந்தவன்.

பிரபஞ்சம் முழுவதுமே பிரம்மத்தில்தான் இருந்தது. அதிலிருந்து வெளிப்பட்டது. அது எங்கிருந்து வெளிப்பட்டதோ, அதற்குள் அடங்குவதற்காகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. டைனமோவிலிருந்து வெளிப்படும் மின்சக்தி ஒரு சுற்றை முடித்துக்கொண்டு, மீண்டும் டைனமோவில் அடங்குவது போன்றதே இது. ஆன்மாவின் விஷயமும் இப்படித்தான். அது பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டு, பல்வேறு வகையான தாவரங்களாக, மிருகங்களாகப் பிறந்து, கடைசியில் மனிதனாகப் பிறக்கிறது. மனிதப் பிறவிதான் பிரம்மத்தை மிகவும் நெருங்கிய நிலையாகும். நாம் எந்தப் பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டோமோ அந்தப் பிரம்மத்தை அடைவதற்கான முயற்சி தான் வாழ்க்கையின் பெரிய போராட்டம். நாம் அதை அறிந்திருக்கிறோமோ இல்லையா என்பது பெரிய விஷயம் அல்ல. பிரபஞ்சத்தில் நாம் காணும் எல்லா இயக்கங்களும் , தாதுப் பொருட்கள், தாவரங்கள், மிருகங்கள் என்று எல்லாவற்றிலும் நாம் காணும் போராட்டங்களும் மையத்திற்குத் திரும்பிச் சென்று அமைதி பெறுவதற்கான முயற்சிகளே.

முதலில் ஒரு சமநிலை இருந்தது. அது கலைந்து விட்டது. எல்லா பகுதிகளும் எல்லா அணுக்களும் எல்லா மூலக்கூறுகளும் இழந்த தங்கள் சமநிலையைத் திரும்பப் பெறவே போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டத்தில், அவை ஒன்றுசேர்ந்து, பல்வேறு உருவங்களைப் படைத்து, இயற்கை என்றும் இந்த அற்புதக் கோலத்தை விரிக்கின்றன. தாவர உலகிலும் மிருக உலகிலும் எங்கும் உள்ள போராட்டங்கள், போட்டிகள், சமுதாயப் போராட்டங்கள், போர்கள் எல்லாமே, அந்தச் சமநிலையைத் திரும்ப அடைவதற்கான இடையீடற்ற போராட்டத்தின் வெளிப்பாடுகளே.

பிறப்பிலிருந்து இறப்புவரையிலான இந்த வாழ்க்கை, இந்தப் பயணம் தான் சம்ஸ்கிருதத்தில் சம்சாரம் அதாவது பிறப்பு-இறப்புச் சுழல் எனப்படுகிறது. இந்தச் சுழலில் சுழன்று கொண்டிருக்கும் படைப்புகள் எல்லாமே, என்றோ ஒருநாள் நிச்சயமாகச் சுதந்திரம் அடைந்தே தீரும். எல்லோரும் சுதந்திரம் அடைவோம் என்றால் அதற்காக நாம் ஏன் போராட வேண்டும்? எல்லோரும் சுதந்திரம் அடைந்தே தீருவோம் என்றால் அமைதியாக அமர்ந்து, போராடாமல் காத்திருக்கலாமே! இன்றோ நாளையோ எல்லோரும் சுதந்திரம் அடைந்தே தீருவோம் என்பது உண்மைதான். யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. எதுவும் அழிய முடியாது. எல்லாமே மேலே வரத்தான் வேண்டும். அப்படியானால் நமது போராட்டத்தின் பயன் என்ன? முதலில், போராட்டம்தான் நம்மை மையத்திற்குக் கொண்டு செல்லும் ஒரே வழி. இரண்டாவதாக, நாம் ஏன் போராடுகிறோம் என்பதே நமக்குத் தெரியாது. நாம் போராட வேண்டும், அவ்வளவுதான். ஆயிரக்கணக்கானோரில் ஏதோ சிலருக்கே தாங்கள் சுதந்திரம் அடைந்து விடுவோம் என்ற விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது. மிகப்பெரும்பாலோர் லவுகீக விஷயங்களிலேயே திருப்தி அடைகின்றனர். சிலருக்குத்தான் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பிப் போக வேண்டும், இந்த விளையாட்டு போதும் என்ற விழிப்புணர்ச்சி உண்டாகிறது. இவர்கள் உணர்வுபூர்வமாகப் போராடுகிறார்கள்; மற்றவர்கள் உணராமல் போராடுகிறார்கள்.

வேதாந்தத் தத்துவத்தின் முதலும் முடிவுமாக உள்ளது உலகைத் துறந்துவிடு; உண்மையற்றதை விலக்கி, உண்மையை ஏற்றுக்கொள் என்பதுதான். உலகத்தை விட்டு வெளியேறி எல்லாவற்றிற்கும் மையத்தை அடைய ஏன் முயல வேண்டும்? நாம் எல்லோரும் கடவுளிடமிருந்து தோன்றியவர்களாகவே வைத்துக் கொள்வோம், ஆனால் இந்த உலகம் இன்பமயமானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருக்கிறதே! எனவே மேன்மேலும் உலக இன்பங்களை ஏன் நாடக்கூடாது? இதிலிருந்து வெளியே போக ஏன் முயல வேண்டும்? என்று லவுகீகர்கள் கேட்கலாம். நாளுக்கு நாள் உலகில் காணும் அற்புத முன்னேற்றங்களைப் பாருங்கள். என்னென்ன வசதிகள் தினந்தோறும் உருவாக்கப்படுகின்றன! இது மிகவும் இன்பம் தரக்கூடியதாக இருக்கிறது. இதைவிட்டு வெளியே போய், இது அல்லாத வேறொன்றை அடைய ஏன் முயல வேண்டும்? என்று அவர்கள் கேட்கிறார்கள்.

அதற்கு விடை இதோ: இந்த உலகம் நிச்சயமாக அழிந்துவிடும்; தூள்தூளாகச் சிதறிவிடும்; பலமுறை நாம் திரும்பத்திரும்ப ஒரே மாதிரி இன்பங்களை அனுபவித்திருக்கிறோம். நாம் பார்க்கும் எல்லா உருவங்களும் மறுபடியும் மறுபடியும் வெளிப்பட்டுக்கொண்டே இருப்பவைதாம். நாம் வாழும் இந்த உலகமும் இதற்கு முன் பலமுறை இங்கே இருந்திருக்கிறது. நான் இங்கே உங்கள் முன், இதற்கு முன்பு பலமுறைகள் பேசியிருக்கிறேன். இது இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் இப்போது கேட்டுக் கொண்டிருப்பதுபோல் இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கிறீர்கள். இன்னும் பலமுறை இப்படியேதான் நிகழும். ஆன்மாக்கள் என்றும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றன. உடல்கள் மட்டுமே அழிந்து, மறுபடியும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இரண்டாவதாக, இந்த விஷயங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும்மீண்டும் நடந்துகொண்டே இருக்கின்றன. நம்மிடம் மூன்று நான்கு பகடைக் காய்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவற்றை உருட்டினால் 5,4,3,2 என்று விழுவதாகவும் வைத்துக் கொள்வோம். உருட்டிக்கொண்டே இருந்தால், இந்தச் சேர்க்கை மறுபடியும் எப்போதாவது வந்தே தீரும். உருட்டிக்கொண்டே இருங்கள். எவ்வளவு முறை உருட்டிய பிறகு இந்தச் சேர்க்கை மறுபடியும் வரும் என்று கணிக்க முடியாது. இதுதான் தற்செயல் விதி.

ஆன்மாக்கள் மற்றும் அவற்றோடு தொடர்பு உடையவைகளின் விஷயமும் இதுதான். கால வித்தியாசம் எவ்வளவு இருந்தாலும், ஒரே மாதிரி சேர்க்கைகளும் அழிவுகளும், மறுபடியும்மறுபடியும் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். அதே பிறவி, அதே போல் உண்பதும், உறங்குவதும், பிறகு அதேபோன்ற சாவு இவை சுழன்றுசுழன்று வந்துகொண்டே இருக்கின்றன. உலகிலுள்ள இன்பங்களைவிட உயர்ந்த எதுவும் இருப்பதாக சிலர் நினைப்பதே இல்லை. ஆனால் உயர் நிலைகளை அடைய விரும்புபவர்கள், புலனின்பங்களே எல்லாம் என்று நினைப்பதில்லை. அவை அந்த உயர்ந்த நிலைக்குப் போகும் வழியில் இருப்பவை என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.

சாதாரணமான புழுவிலிருந்து மனிதன் வரையிலுள்ள எல்லா உருவங்களுமே, முன்பு நாம் கண்டது போல் தொடர்ந்து சுற்றிக் கொண்டேயிருக்கும் ரங்க ராட்டினத்திலுள்ள தொட்டில்களைப் போன்றவை. உட்காருபவர்கள்தாம் மாறுகிறார்கள். ஒரு மனிதன் ஒரு தொட்டிலில் உட்கார்ந்து, சுற்றிவிட்டு, இறங்குகிறான். ஆனால் ரங்கராட்டினம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஓர் ஆன்மா ஓர் உருவத்தை எடுக்கிறது; அதில் சிலகாலம் வசிக்கிறது; பின்னர் அதை விட்டுவிட்டு, வேறு உருவங்களுக்குத் தாவுகிறது. ராட்டினத்தை விட்டு விடுதலை பெற்று வெளியே வரும்வரை இந்தச் சுழற்சி நடந்து கொண்டே இருக்கிறது.

மனித வாழ்க்கையின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலங்களை அறிந்து சொல்லும் வியக்கத்தக்க சக்தியுள்ளவர்கள் எல்லா நாட்டிலும் எல்லா காலங்களிலும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. ஆன்மா இயல்பாகவே சுதந்திரமானது. ஆன்ம சுதந்திரம் அடைந்தவர்களிடம், ஆன்மா காரணகாரிய விதிகளிலிருந்து விடுபட்டு, தன் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதிலிருந்து இது தெரிய வருகிறது. ஆனாலும் ஜீவாத்மா என்ற நிலையில் இருக்கும்வரையில் அதன் செயல்பாடுகள் பொதுவாக காரணகாரிய விதிகளைச் சார்ந்தே இருக்கின்றன. ஆகவே காரணகாரிய விதிகளின் பலனை முன்கூட்டியே அறியும் திறன் உள்ளவர்களுக்கு, இறந்தகாலம் மற்றும் எதிர் காலங்களைப்பற்றித் துல்லியமாகச் சொல்ல முடிகிறது.

ஆசைகளும் தேவைகளும் இருக்கிறது என்றால் அது முழுமையடையாத நிலையையே குறிக்கிறது. நிறைநிலையும் சுதந்திரமும் அடைந்த எதற்கும் ஆசை இருக்க முடியாது. கடவுள் எதையும் விரும்ப முடியாது. விரும்பினால் அவர் கடவுளாக இருக்க முடியாது; அவர் நிறை நிலையை அடையாதவராகத்தான் இருப்பார். கடவுள் இதனை விரும்புகிறார், அதனை விரும்புகிறார், கோபம் அடைகிறார், மகிழ்ச்சி கொள்கிறார் என்றெல்லாம் சொல்வது வெறும் குழந்தைப் பேச்சு. அதற்குப் பொருளே இல்லை. ஆகவேதான் எதற்கும் ஆசைப்படாதீர்கள்; ஆசைகளையெல்லாம் துறந்துவிட்டு, பரிபூரணத் திருப்தியோடு இருங்கள் என்று எல்லா மகான்களும் போதித்திருக்கிறார்கள்.

ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கும்போது, ஊர்ந்துகொண்டும் பல் இல்லாமலும் பிறக்கிறது. அவன் கிழவனாகி இறக்கும்போதும் ஊர்ந்துகொண்டும் பல் இல்லாமலும் உலகை விட்டு வெளியேறுகிறான். இரண்டு எல்லைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஆனால் குழந்தைக்கு வாழ்க்கை அனுபவம் இல்லை. கிழவனோ வாழ்ந்து அனுபவித்து முடித்துவிட்டான். ஆகாசத்தின் அதிர்வுகள் மிகவும் குறைவாக இருக்கும்போது நமக்கு வெளிச்சம் தெரிவதில்லை, நாம் இருளில் இருக்கிறோம். அதிர்வுகள் மிகவும் அதிகமாக இருக்கும்போது இருள்தான் இருக்கிறது. இரண்டு எல்லைகளும் பொதுவாக ஒன்று போலவே தெரிகிறது. ஆனால் இரண்டிற்கும் இடையே இரு துருவங்களுக்கிடையே உள்ள தூரம் உள்ளது. சுவருக்கு ஆசை இல்லை; நிறைநிலை பெற்ற மனிதனுக்கும் ஆசை இல்லை. சுவருக்கு, ஆசைப்படுவதற்கான அறிவு இல்லை. நிறைநிலை பெற்ற மனிதனுக்கோ ஆசைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆசையே இல்லாத முட்டாள்கள் உலகில் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்கள் மூளையிலுள்ள குறைபாடுதான். அதேவேளையில் ஆசையற்ற நிலையே மிக உயர்ந்த நிலை. ஆனால் இரண்டும் ஒரே நிலையின் எதிர் துருவங்கள், ஒன்று மிருகநிலைக்கு அருகில் உள்ளது, மற்றது தெய்வ நிலைக்கு அருகில் உள்ளது.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,