பன்மையில் ஒருமை!

பன்மையில் ஒருமை!

புலன்களைப் புறநோக்கு உள்ளவையாகவே இறைவன் படைத்துள்ளார். அதனால் மனிதர்கள் புறமுகமாகப் பார்க்கிறார்கள். தங்களுக்கு உள்ளே பார்ப்பதில்லை. அவர்களுள் யாரோ ஒரு தீரன் மரணமிலாப் பெருநிலையை விரும்பி புலன்களை அகமுகமாகத் திருப்பி, உள்ளே ஆன்மாவை உணர்கிறான் நான் ஏற்கனவே கூறியது போல் நாம் வேதங்களில் காணும் முதல் ஆராய்ச்சி, புறப் பொருட்களைப் பற்றியதாக இருந்தது. பிறகு, புற உலகில் பொருட்களின் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது; வெளியில் பார்ப்பதால் அல்ல, பார்வையை உள்ளே திருப்புவதால் மட்டுமே அது முடியும் என்ற கருத்துத் தோன்றியது.

ஆன்மாவைக் குறிக்கும் வார்த்தை மிகவும் பொருள் செறிந்தது. அகத்துள் போயிருப்பவர் (ப்ரத்யகாத்மா) என்பதே அந்த வார்த்தை. அவர் நமது உயிருக்கு உயிர், நம் இதய மையம், நமது அடிப்படை உண்மை, எல்லாம் எங்கிருந்து வருகின்றனவோ அந்த மையம். மனம், புலன்கள் மற்றும் நாம் பெற்றிருக்கும் எல்லாமே அந்த மையச் சூரியனிலிருந்து வெளிவரும் கிரணங்கள்தான்.

அறிவில் சிறியோரும் அஞ்ஞானிகளும் புற இன்பங்களைத் தேடி ஓடுகிறார்கள். விரிந்து கிடக்கும் மரண வலையில் அவர்கள் விழுகிறார்கள். அறிவாளிகள் மரணமிலாப் பெருநிலையைப் புரிந்துகொண்டு, எல்லைக்கு உட்பட்ட பொருட்களில் எல்லையற்றதைத் தேடுவதில்லை. முதலில் சொன்ன கருத்தே இங்கே தெளிவாக்கப்படுகிறது. எல்லைக்கு உட்பட்ட பொருட்கள் நிறைந்த இந்தப் புறவுலகில், எல்லையற்றதைக் காண்பது முடியாத காரியம். எல்லையற்றதை எல்லையற்றதில் மட்டுமே தேட வேண்டும். நம்மிடம் எல்லையற்றதாக இருக்கும் ஒரே பொருள் நம்முள் இருப்பதான நமது ஆன்மாதான். உடல், மனம், எண்ணங்கள், நம்மைச் சுற்றி நாம் காணும் உலகம் எதுவுமே எல்லையற்றது அல்ல. காண்பவன் அதாவது மனிதனின் ஆன்மாவிற்குத்தான் இவையெல்லாம் சொந்தம். மனிதனுக்கு உள்ளே எப்போதும் விழித்திருக்கின்ற அந்த ஆன்மா மட்டுமே எல்லையற்றது. பிரபஞ்சத்தின் தோற்றத்திற்குக் காரணமான எல்லையற்ற பரம்பொருளைத் தேட வேண்டுமானால் நாம் அங்குதான் தேட முடியும். எல்லையற்ற ஆன்மாவிலேயே அதை நாம் காண முடியும். இங்கே இருப்பது அங்கேயும் இருக்கிறது; அங்கே இருப்பதுதான் இங்கேயும் இருக்கிறது. பன்மையைக் காண்பவன் மரணத்திலிருந்து மரணத்திற்குப் போய்க் கொண்டே இருக்கிறான்.

சொர்க்கத்திற்குப் போகும் ஆசை முதலில் எவ்வாறு இருந்தது என்பதைப் பார்த்தோம். பழங்கால ஆரியர்கள், தங்களைச் சுற்றியுள்ள உலகில் அதிருப்தி அடைந்தவுடன், இறந்தபின் வேறு ஓர் உலகிற்குப் போவோம், அங்குத் துன்பமே இருக்காது, இன்பம் மட்டுமே நிறைந்திருக்கும் என்று இயற்கையாகவே நினைத்தார்கள். இந்த உலகங்களைத் தங்கள் கற்பனையில் பலவாகப் பெருக்கிக் கொண்டு, அவற்றைச் சொர்க்கங்கள் என்று அழைத்தார்கள். அங்கே எப்போதும் இன்பமே இருக்கும்; உடல், மனம் எல்லாமே பூரணத்துவம் பெற்றுவிடும்; பித்ருக்களோடு அங்கே வாழலாம் என்றெல்லாம் அவர்கள் நம்பினார்கள். ஆனால் தத்துவ சாஸ்திரம் தோன்றியவுடனேயே, இந்தக் கருத்து முட்டாள்தனமானது, சாத்தியமற்றது என்று உணர்ந்தார்கள். எல்லையற்ற இடம் என்ற கருத்தே முன்னுக்குப்பின் முரணானதாகும். ஏனெனில் இடம் என்பது காலத்தில் ஆரம்பித்து, காலத்திலேயே தொடர்ந்து இருப்பது. ஆகவே அவர்கள் அந்தக் கருத்தைக் கைவிட நேர்ந்தது. சொர்க்கத்திலுள்ள இந்தத் தேவர்களெல்லாம் ஒரு காலத்தில் பூமியில் மனிதர்களாக இருந்தவர்கள், தங்கள் நல்ல காரியங்களால் தேவர்களாக உயர்ந்தவர்கள். தேவத்துவம் என்பது உண்மையில் வெவ்வேறு நிலைகளே, வெவ்வேறு பதவிகளே. வேதங்களில் காணப்படும் தேவர்கள் யாருமே நிலையாக உள்ளவர்கள் அல்ல என்று கண்டார்கள்.

உதாரணமாக இந்திரன், வருணன் என்பவையெல்லாம் குறிப்பிட்ட சிலரின் பெயர்கள் அல்ல. அவை, பதவிகளின் பெயர்கள் மட்டுமே. முன்பு இருந்த இந்திரன் இப்போது உள்ள இந்திரன் அல்ல. பழைய இந்திரன் இறந்து, அந்தப் பதவி, பூமியிலிருந்த மனிதன் ஒருவனுக்குக் கிடைத்துவிட்டது. எல்லா தேவர்களின் நிலையும் இதுவே. தேவர்களின் நிலைக்குத் தங்களை உயர்த்திக்கொண்ட மனித உயிர்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வகித்து வரும் பதவிகளே இவை. இந்தத் தேவர்களுக்கும் மரணம் உண்டு. மரணமில்லாத நிலையை இந்தத் தேவர்களோடு தொடர்புபடுத்திப் பேசியிருப்பதைப் பழைய ரிக் வேதத்தில் நாம் காண்கிறோம். பின்னால் இந்தக் கருத்து முற்றிலுமாகக் கைவிடப்பட்டது. மரணமற்ற நிலை என்பது காலம், இடம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. ஆகவே எவ்வளவு நுண்ணியதாக இருந்தாலும் பவுதீக உருவம் எதனுடனும் இந்த நிலையைத் தொடர்புபடுத்த முடியாது என்று அவர்கள் கண்டார்கள். பவுதீக உருவம் எவ்வளவு நுட்பமாக இருந்தாலும், அவை காலம், இடம் இவற்றிற்குக் கட்டுப்பட்டதே. ஏனென்றால் பவுதீக உருவத்தின் மூலக்கூறுகள் இடம் என்பதிலிருந்தே வர வேண்டும். இடத்திற்குள் கட்டுப்படாத உருவத்தைக் கற்பனை செய்து பாருங்கள். முடியாது. உருவத்தை உருவாக்கும் மூலப் பொருட்களில் இடமும் ஒன்றாகும். இதுவும் இடைவிடாமல் மாறிக்கொண்டே இருக்கிறது.

இடமும் காலமும் மாயையின் உள்ளேயே உள்ளதாகும். இங்கே இருப்பது அங்கேயும் இருக்கிறது என்ற வாக்கியம் இந்தக் கருத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. தேவர்கள் இருப்பார்களானால் அவர்களும் இந்த உலக விதிகளுக்குக் கட்டுபட்டேயாக வேண்டும். இனி, எல்லா விதிகளுமே மீண்டும்மீண்டும் அழிந்து தோன்றுவதை இயல்பாகக் கொண்டவை. இந்த விதிகள் ஜடப்பொருளை வெவ்வேறு உருவங்களாக வார்க்கின்றன, பின்னர் அழிக்கின்றன. பிறந்ததெல்லாம் இறக்கத்தான் வேண்டும். ஆகவே சொர்க்கங்கள் இருந்தால் அவற்றையும் இந்த விதிகள் கட்டுப்படுத்தவே செய்யும்.

இந்த உலகில், இன்பத்தைத் தொடர்ந்து அதன் நிழலாகத் துன்பம் வருவதைக் காண்கிறோம். வாழ்க்கையின் நிழல் மரணமாக உள்ளது. அவை சேர்ந்தே இருக்கும். ஏனெனில் அவை ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, தனித்தனியானவை அல்ல. வாழ்வு-சாவு, இன்பம்-துன்பம், நன்மை-தீமை இவை எல்லாமே ஒரே பொருளின் வேறுபட்ட வெளிப்பாடுகள் மட்டுமே. நன்மையும் தீமையும் தனித்தனியானவை என்பதும், இப்படியே காலவரம்பின்றி இவை இருந்து கொண்டிருக்கின்றன என்பதும் முற்றிலும் தவறானவை. அவை ஒரே உண்மையின் வேறுபட்ட வெளிப்பாடுகள்; ஒரு சமயத்தில் தீமையாகவும் மற்றொரு சமயத்தில் நன்மையாகவும் தெரிகிறது. வித்தியாசம் தன்மையில் இல்லை, அளவில்தான் இருக்கிறது. அளவின் தீவிரத்தில்தான் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகிறது. ஒரே நரம்பு மண்டலம் தான் இன்ப உணர்ச்சிகள், துன்ப உணர்ச்சிகள் இரண்டையும் கொண்டு செல்கிறது என்பது நமக்குத் தெரிந்த உண்மை. அந்த நரம்புகள் சேதமடைந்தால் இரண்டையுமே நாம் உணர்வதில்லை. ஒரு குறிப்பிட்ட நரம்பு செயலற்றுவிட்டால், அதன்மூலம் கிடைத்து வந்த இன்ப அனுபவம் நமக்குக் கிடைப்பதில்லை; அதேபோல் துன்ப அனுபவமும் கிடைப்பதில்லை. அவை ஒருபோதும் இரண்டல்ல, ஒன்றுதான்.

ஒரே பொருள், வாழ்க்கையில், ஒரு சமயத்தில் இன்பமும் மற்றொரு சமயத்தில் துன்பமும் அளிப்பதாக இருக்கிறது. ஒரே நிகழ்ச்சி ஒருவருக்கு இன்பத்தையும் மற்றொருவருக்குத் துன்பத்தையும் அளிக்கிறது. இறைச்சியை உண்பவன் இன்பம் அடைகிறான். அந்த இறைச்சிக்காகக் கொல்லப்படும் பிராணி துன்பம் அடைகிறது. எல்லோருக்கும் ஒரேபோல் இன்பம் அளிக்கும் பொருள் என்று ஒன்று உலகத்தில் இல்லவே இல்லை. சிலருக்கு இன்பமும் வேறு சிலருக்குத் துன்பமும் கிடைக்கிறது. இப்படியேதான் நடந்து கொண்டிருக்கும். ஆகவே இரண்டு என்ற இந்த வேறுபாட்டிற்கே இடமில்லை. தொடர்வது என்ன? உலகில், தீமையே கலக்காத நன்மை மட்டுமே இருக்கும் காலம் என்றுமே வராது என்பதை இதற்கு முந்திய சொற்பொழிவில் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இது உங்களில் சிலருக்கு ஏமாற்றத்தையும் பயத்தையும் அளித்திருக்கும். ஆனால் அதை நான் சொல்லாமல் இருக்க முடியாது. மாறான கருத்தை நிரூபித்தால் என் கருத்தை மாற்றிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால், மாறான அந்தக் கருத்து நிரூபணமாகி, நானும் அதை உண்மை என்று அறியாமல், என் கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன்.

என்னுடைய கருத்திற்கு எதிரான வாதம் வெளிப்பார்வைக்கு மிகவும் திருப்திகரமாகத்தான் தோன்றுகிறது. அந்த வாதம் இதுதான்: பரிணாம வளர்ச்சியில், நம்மைச் சுற்றி நாம் காணும் தீமைகள் குறைந்துகொண்டே வருகின்றன. இவ்வாறு கோடிக் கணக்கான வருடங்களுக்குக் குறைந்துகொண்டே போகுமானால், உலகில் தீமையே இல்லாமல் நன்மை மட்டுமே எஞ்சியிருக்கும் காலம் ஒன்று வரும். இது மிகவும் சிறந்த வாதமாகத்தான் தோன்றுகிறது. இது உண்மையாக இருக்குமானால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இந்த வாதத்தில் ஒரு குறை இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நன்மை தீமை இரண்டும் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கின்றன என்று நாம் கொள்வதுதான் இந்தக் குறைபாடு. குறிப்பிட்ட அளவு தீமையும், அதேபோல் குறிப்பிட்ட அளவு நன்மையும் ஏற்கனவே இருப்பதாகவும், தீமை நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்து, கடைசியில் நன்மை மட்டுமே மிஞ்சி இருப்பதாகவும்தான் இந்த வாதம் சொல்கிறது.

இது உண்மையா? தீமை, நன்மை இரண்டுமே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதாக அல்லவா உலக வரலாறு காட்டுகிறது! காட்டில் வசிக்கும் மிகத் தாழ்ந்த மனிதனை எடுத்துக் கொள்வோம். அவனுடைய இன்பமனுபவிக்கும் சக்தி மிகக் குறைவு. அதேபோல், துன்பமனுபவிக்கும் சக்தியும் மிகவும் குறைவுதான். அவனுடைய துன்பம் புலன்நிலைக்கு அப்பால் போவதில்லை. வயிறு நிறைய உணவு கிடைக்காவிட்டால் அவன் துன்பம் அடைகிறான். நிறைய உணவும், காட்டில் விருப்பம்போல் சுற்றி வேட்டையாடும் சுதந்திரமும் கிடைத்துவிட்டால் அவனைப்போல் இன்பம் அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அவனுடைய இன்பம், துன்பம் இரண்டுமே புலனளவில்தான் இருக்கின்றன. அதே மனிதன், தன் அறிவை வளர்த்துக்கொண்டால், அவனது இன்ப அனுபவம் அதிகரிக்கிறது. அறிவுச் சுரங்க வாசல் அவனுக்குத் திறக்கிறது. அவனுடைய புலனின்பம் அறிவின்பமாக வளர்ச்சியடைகிறது. ஓர் அழகிய கவிதையைப் படிப்பதில் அவன் இன்பம் காண்கிறான். ஒரு கணிதப் பிரச்சினையில் அவன் தன்னை மறந்து ஈடுபடுகிறான். ஆனால் அதனுடன் கூடவே நுட்பமடைந்த நரம்புகள், மனத் துன்பத்திற்கு மிகவும் சுலபமாக அடிமைப் படுகின்றன. காட்டு மனிதனுக்கோ மனத்துன்பம் என்பதே இல்லை.

மிகவும் சாதாரணமான உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். திபெத்தில் திருமணச் சடங்கு இல்லை, அதனால் பொறாமையும் இல்லை. திருமணம் ஓர் உயர்ந்த நிலை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். கற்பு, பதிவிரதையான மனைவியால் ஏற்படும் இன்பம், பிறபெண்டிரை மனத்தாலும் நினைக்காத கணவனால் ஏற்படும் இன்பம் இவற்றைப் பற்றியெல்லாம் திபெத்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்களால் இதை உணர முடியாது. அதைப் போலவே, கற்புள்ள மனைவி, கணவன் இவர்களுக்குத் தோன்றும் தீவிரமான பொறாமை உணர்ச்சி, இவர்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகம், இதனால் ஏற்படும் துன்பங்கள், மனப்புண் இவையெல்லாமும் திபெத்தியர்களுக்கு இல்லை. பின்னவர்கள், ஒரு பக்கத்தில் இன்பம் அடைகிறார்கள்; மறுபக்கத்தில் துன்பம் அடைகிறார்கள்.

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடான உங்கள் நாட்டையே எடுத்துக்கொள்வோம். உங்கள் நாடு மற்ற நாடுகளைவிடப் போகம் மிகுந்தது. அதேவேளையில் இங்கே உள்ள துன்பத்தின் தீவிரம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதையும் பாருங்கள். மற்ற இனங்களோடு ஒப்பிட்டால், உங்கள் நாட்டில்தான் பைத்தியக்காரர்கள் அதிகம். ஆசைகள் தீவிரமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். இங்கே, மனிதன் தன் வாழ்க்கைத் தரத்தை மிகவும் உயர்த்திக்கொள்ள வேண்டும். இங்கே ஒருவன் ஒரு வருடத்தில் செலவழிக்கும் பணம், இந்தியாவிலுள்ள ஒரு மனிதனுக்கு ஒரு பெரும் சொத்தாகும். இங்கே உள்ளவனுக்கு, எளிய வாழ்க்கையைப்பற்றி உபதேசம் செய்ய முடியாது. ஏனெனில் இங்கே உள்ள சமுதாயம், மனிதனை ஆடம்பர வாழ்க்கைக்குத்தான் கட்டாயப்படுத்துகிறது. சமுதாயத்தின் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது. விதவைகளின் கண்ணீரையும் அனாதைகளின் அழுகையையும் அது பொருட்படுத்துவதில்லை. எங்கு பார்த்தாலும் இதே நிலைதான் இருக்கிறது. உங்களுடைய இன்பம் அனுபவிக்கும் உணர்ச்சி வளர்ச்சி அடைந்திருக்கிறது. மற்ற சில சமுதாயங்களைவிட உங்கள் சமுதாயம் மிகவும் அழகானதாகவும் இருக்கிறது. நீங்கள் அனுபவிப்பதற்கு மற்றவர்களைவிட அதிகமான விஷயங்கள் இருக்கின்றன.

உங்களைவிடக் குறைவான இன்பம் அனுபவிப்பவர்களுக்குத் துன்ப அனுபவமும் குறைவாகவே இருக்கிறது. இவ்வாறு வாதம் செய்துகொண்டே போகலாம். குறிக் கோள் உயர்ந்ததாக இருக்கும் அளவிற்கு இன்ப அனுபவம் அதிகமாக இருக்கும், அதேபோல் துன்ப அனுபவமும் அதிகமாக இருக்கும், ஒன்று மற்றொன்றின் நிழல்போல் இருக்கிறது. தீமைகள் குறைந்துகொண்டே வருகின்றன என்பது உண்மையாக இருக்கலாம். அது உண்மையானால் நன்மைகளும் குறைந்து கொண்டுதான் வரவேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த அளவில், நன்மைகள் குறைந்து கொண்டும், தீமைகள் வேகமாக அதிகமாகிக் கொண்டும் அல்லவா வருகிறது! நன்மை கூட்டல் விகிதத்தில் அதிகரித்தால், தீமை பெருக்கல் விகிதத்தில் அல்லவா அதிகரிக்கிறது! இதுதான் மாயை. இது இன்பநோக்குமல்ல; துன்பநோக்குமல்ல. உலகம் வெறும் துன்பமயமானது மட்டுமே என்பது வேதாந்தத்தின் கருத்தல்ல. அது உண்மையாக இருக்காது. அதே வேளையில் இன்பமும் வாழ்த்துக்களும் நிறைந்ததுதான் உலகம் என்று சொல்வதும் தவறாகும்.

ஆகவே இந்த உலகம் நன்மை நிறைந்தது, மலர்கள் பூத்துக் குலுங்குவது, பாலும், தேனும் ஆறாகப் பாய்வது என்று குழந்தைகளிடம் சொல்வதால் பயனில்லை. நாமும் அப்படித்தான் கனவு கண்டு வந்திருக்கிறோம். அதேவேளையில் ஒருவன் மற்றொருவனைவிட அதிகத் துன்பத்தை அனுபவிப்பதால், உலகமே தீமை நிறைந்தது என்று நினைப்பதும் தவறு. இந்த நன்மை தீமைகளாகிய இருமைகளின் விளையாடல்தான், நாம் அனுபவிக்கும் இந்த உலகத்தையே ஆக்குகின்றன. அதேவேளையில் நன்மையும் தீமையும் வெவ்வேறானவை, தனிப்பட்டவை என்று நினைக்காதீர்கள்; அவை ஒன்றேதான்; வெவ்வேறு அளவிலும், வெவ்வேறு வகையிலும் தோன்றி, ஒரே மனத்தில் வெவ்வேறு உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன என்று வேதாந்தம் கூறுகிறது.

ஆகவே புற உலகத்தில் ஒருமையைக் காண்பதுதான் வேதாந்தத்தின் முதல் காரியமாகும். அந்த ஒரே பொருள் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் வேறுபாடுகளைக் காட்டினாலும் அது ஒன்றேதான். பாரசீகர்களுடைய பழைய பண்படாத கொள்கையைப் பாருங்கள். இரு தெய்வங்கள் உலகைப் படைப்பதாகவும், நல்ல தெய்வம் நன்மையே செய்வதாகவும், தீய தெய்வம் தீமையே செய்வதாகவும் அது கூறுகிறது. இது அறிவுக்குப் பொருந்தாது என்பது வெளிப்படை. ஏனென்றால், உலகம் இவ்வாறு நடைபெற்றால், இயற்கையின் ஒவ்வொரு விதிக்கும் இரண்டு பகுதிகள் இருக்க வேண்டும்; அதில் ஒரு தெய்வம் ஒரு பகுதியில் நன்மை செய்துவிட்டுத் தன் வழியே போய்விடுவார். பின்னர் மற்ற தெய்வம் வந்து மறு பகுதியைக் கவனிக்க வேண்டும். ஆனால் இரண்டு தெய்வங்களும் ஒரே உலகத்தில் வேலை செய்கின்றனர். இந்த இரு தெய்வங்களும் ஒரு பகுதிக்குத் தீமையையும், மற்றொரு பகுதிக்கு நன்மையும் செய்தும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பதுதான் சிக்கலான பகுதி.

இது வாழ்க்கையின் இருமையைக் காட்டுகின்ற, பக்குவம் பெறாத முறையாகும். உலகத்தில் சிறிது நன்மை உண்டு, சிறிது தீமையும் உண்டு என்பது சிறிது முன்னேற்றமடைந்த கருத்து. முன்சொன்ன நிலையிலிருந்து பார்க்கும்போது இந்தக் கருத்தும் அறிவுக்குப் பொருந்தாததுதான். ஒருமை விதிதான் நமக்கு உணவு அளிக்கிறது; அதே விதிதான் விபத்துக்கள் மற்றும் ஆபத்துக்கள் மூலமாக எத்தனையோ பேரை மரணத்திலும் ஆழ்த்துகிறது.

ஆகவே உலகம் இன்பநோக்கு உடையதும் அல்ல. துன்ப நோக்குக் கொண்டதும் அல்ல. அது இரண்டும் கலந்த ஒன்று. அது மட்டுமல்ல இன்னும் ஆராய்ந்தால், மொத்தத் தவறும் இயற்கையில் இல்லை, நம்மிடம்தான் இருக்கிறது என்பதையும் நாம் உணர்வோம். இந்தச் சிக்கலிலிருந்து விடுபடும் வழியை வேதாந்தம் காட்டுகிறது. அந்த வழி தீமையை மறுப்பதல்ல. ஏனெனில் அது உண்மையை உள்ளபடியே துணிவுடன் ஆராய்கிறது, எதையும் அது மறைக்க முயல்வதில்லை. அது நம்பிக்கையை இழக்கவில்லை. கடவுளைப்பற்றிச் சந்தேகம் கொள்வதில் அது ஒரு பரிகாரத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் அதனை உறுதியானதோர் அஸ்திவாரத்தின்மீது வைக்க விரும்புகிறது. குழந்தையின் கண்களையும் வாயையும் உண்மையல்லாத ஒன்றால் கட்டிவிட்டு எதையும் செய்ய வேதாந்தம் முயல்வதில்லை. ஏனெனில் குழந்தை சில நாட்களில் உண்மையை அறிந்துகொள்ளும் என்பது வேதாந்தத்திற்குத் தெரியும்.

நான் இளைஞனாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. ஒரு வாலிபனின் தந்தை, சொத்தில்லாத நிலையில் பெரிய குடும்பத்தை அவன் தலையில் கட்டிவிட்டு இறந்துவிட்டார். அவனுடைய தந்தையின் நண்பர்கள், அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. தன் கஷ்டத்தை ஒரு மதப்பிரச்சாரகரிடம் அவன் சொன்னபோது, ஓ, எல்லாம் நன்மைக்கே, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று அவர் உபதேசம் செய்தார். பழுத்த புண்ணின்மீது தங்க இலையை வைத்து மறைப்பது போன்ற பழைய பரிகாரம் இது. பலவீனத்தையும் முட்டாள்தனத்தையும் ஒத்துக்கொள்வதே இது. வாலிபன் அங்கிருந்து போய்விட்டான். ஆறுமாதத்திற்குப் பின்னால் அந்தப் பிரச்சாரகருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர் ஒரு விருந்து வைத்தார். அதற்கு அந்த வாலிபனையும் அழைத்திருந்தார். கடவுளின் கருணைக்கு நன்றி என்று அவர் பிரார்த்தனை செய்தார். வாலிபன் எழுந்து நின்று, நிறுத்துங்கள்; இதெல்லாம் துன்பம் என்று கூறினான். ஏன்? என்று அவர் கேட்டார். என் தந்தை இறந்தபோது, வெளிப்படையாகத் தீமையாகத் தோன்றினாலும் உண்மையில் அது நன்மையே என்று கூறினீர்கள். அதன் படி பார்த்தால் உங்களுக்குக் குழந்தை பிறந்திருப்பது தீமைதானே என்று வாலிபன் கூறினான். இதுதான் உலகின் துன்பத்தைத் துடைக்கும் வழியா? நல்லவர்களாக இருங்கள். துன்புறுவோருக்குக் கருணை காட்டுங்கள். அதை மூடி மறைக்க முயலாதீர்கள். அது இந்த உலகத்தின் துன்பத்தைத் தீர்க்காது. அதற்கும் அப்பால் செல்லுங்கள்.

நன்மையும் தீமையும் கலந்தது உலகம். நன்மை இருக்கும் இடமெல்லாம் தீமை தொடர்கிறது. இந்த வெளிப்பாடுகள், முரண்பாடுகள் அனைத்தையும் கடந்து, அனைத்திற்கும் அப்பால் ஒருமையை வேதாந்தம் காண்கிறது. தீமையை விடுங்கள், நன்மையையும் விடுங்கள் என்று அது கூறுகிறது. எஞ்சியிருப்பது என்ன? நன்மை, தீமை இரண்டிற்கும் பின்னால்தான், ஒவ்வொரு தீமைக்கும், அதுபோல் ஒவ்வொரு நன்மைக்கும் அப்பால்தான் உங்களுக்குச் சொந்தமான ஏதோ ஒன்று இருக்கிறது, உண்மையான நீங்கள் இருக்கிறீர்கள். நன்மையாகவும் தீமையாகவும் அந்த ஒன்றுதான் வெளிப்படுகிறது. அதை முதலில் அறிந்து கொள்வோம். அப்போது, அப்போது மட்டுமே நாம் உண்மையான இன்பநோக்குவாதிகள் ஆவோம், அதற்கு முன்னால் அல்ல. ஏனெனில் அப்போதுதான் நம்மால் எல்லாவற்றையும் அடக்கியாள முடியும். இந்த வெளித் தோற்றங்களை அடக்கியாளும் போது உண்மையான நாம் என்பதை வெளிப்படுத்துவதற்கு நமக்குச் சுதந்திரம் இருக்கும். முதலில் உங்களுக்கே நீங்கள் எஜமானர்களாக இருங்கள். எழுந்து நில்லுங்கள், சுதந்திரர்களாக இருங்கள். இயற்கையின் விதிகளுக்கு அப்பால் செல்லுங்கள். ஏனெனில் இந்த விதிகள் உங்களை ஒருபோதும் ஆளவில்லை. அவை உங்களில் ஒரு பகுதி மட்டுமே. முதலில் நாம் இயற்கையின் அடிமைகள் அல்ல என்பதை உணர்வோம். இயற்கையின் அடிமைகளாக நாம் இருந்ததுமில்லை; இருக்கப் போவதுமில்லை. இந்த இயற்கை எல்லையற்றது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது எல்லைக்கு உட்பட்டது. நமது ஆன்மா என்னும் கடலில் அது ஒரு துளி மட்டுமே. சந்திர சூரியர்களை, நட்சத்திரங்களை எல்லாம் கடந்தவர்கள் நாம். நமது எல்லையற்ற ஆன்மாவோடு ஒப்பிடும்போது, அவையெல்லாம் வெறும் நீர்க்குமிழி போன்றவை. இதை அறிந்தால், நன்மை, தீமை இரண்டையும் நம்மால் அடக்கியாள முடியும். அப்போது மட்டுமே காட்சி முழுவதும் மாறும். துடிப்புடன் எழுந்து நின்று, நன்மை எவ்வளவு அழகாக இருக்கிறது! தீமை எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! என்று கூறுவோம்.

வேதாந்தம் போதிப்பது இதுவே. புண்களைத் தங்க இலையால் மறைத்து, புண்கள் இன்னும் மோசமானவுடன், இன்னும் அதிகமான தங்க இலைகளால் மறைப்பதைப் போன்ற பொய்யான பரிகாரத்தை வேதாந்தம் கூறுவதில்லை. இந்த வாழ்க்கை ஒரு கடினமான உண்மை. அது வலிமை பெற்றதாக இருந்தாலும், அதன் மூலம் வழியைக் கண்டுபிடித்துத் தைரியமாகச் செல்லுங்கள். எதையும் பொருட்படுத்தாதீர்கள். ஆன்மா வலிமை வாய்ந்தது. சாதாரண தெய்வங்களின்மீது அது பொறுப்பைச் சுமத்துவதில்லை. நம்முடைய அதிர்ஷ்டங்களுக்கு நாமே காரணம். நாமே நம்முடைய துன்பங்களுக்கும் காரணம். நமது நன்மை தீமைகளை நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். நாமே நம் கைகளால் கண்களை மறைத்துக்கொண்டு, இருட்டாக இருக்கிறதே என்று கதறுகிறோம். கைகளை விலக்கிவிட்டு ஒளியைப் பாருங்கள். நீங்கள் ஏற்கனவே முழுமை பெற்றவர்கள், ஒளி பெற்றவர்கள். இங்கே பன்மையைப் பார்ப்பவன், மரணத்திலிருந்து மரணத்திற்குப் போய்க் கொண்டேதான் இருக்கிறான் என்ற பாடலின் பொருளை இப்போது நாம் உணர்கிறோம். அந்த ஒன்றைப் பாருங்கள், சுதந்திரர்களாக இருங்கள்.

அதை நாம் எப்படிக் காண்பது? பொய்த் தோற்றங்களால் ஏமாற்றப்பட்ட, பலவீனமான, எளிதாக ஏமாறக் கூடியதான மனம்கூட உறுதிபெற்று, அந்த ஒன்றேயான அறிவுப்பொருளின் கணநேரக் காட்சி பெறக்கூடும். அது ஒன்றுதான் நாம் மீண்டும்மீண்டும் மரணமடைவதிலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும். மலை உச்சியில் பெய்யும் மழை, நாலா பக்கங்களிலும் வழிந்து ஓடுவது போல், இந்த உலகில் காணும் எல்லா சக்திகளும் அந்த ஒருமையிலிருந்துதான் பிறக்கின்றன. மாயைக்கு உட்பட்டு, அது பலவாகத் தோற்றமளிக்கிறது. பன்மையைப் பின்தொடர்ந்து ஓடக்கூடாது; ஒருமையை நோக்கியே போக வேண்டும். இயங்குவதில் எல்லாம் அவன் இருக்கிறான்; தூய்மையானவற்றில் எல்லாம் அவன் இருக்கிறான். பிரபஞ்சத்தில் நிறைந்திருப்பவன் அவனே; யாகத்தில் இருப்பது அவனே; விருந்தாளியும் அவனே; மனிதர்களில், நீரில், மிருகங்களில், சத்தியத்தில் எல்லாவற்றிலும் இருப்பவன் அவனே. அவனே மகத்தானவன். இந்த உலகிற்குள் வரும் நெருப்பு, பல்வேறு உருவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது போல் பிரபஞ்சத்தின் ஆன்மாவான, ஒன்றேயான இறைவனும் இந்தப் பல்வேறு உருவங்களாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார். இந்த உலகிற்குள் வரும் காற்று, பல்வேறு உருவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுபோல், எல்லா உயிரினங்களுக்கும் எல்லா ஆன்மாக்களுக்கும் ஒரே ஆன்மாவான இறைவன் பல உருவங்களாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

இந்த ஒருமையை உணரும்போதுதான், இந்த உண்மை நமக்கு உண்மையாகும். அதற்குமுன் அல்ல. அப்போது எல்லாமே இன்பநோக்குத்தான். ஏனென்றால் எங்கும் இறைவனே தெரிவான். அந்தத் தூய்மையான, ஒன்றேயான, எல்லையற்றதான பரம்பொருள்தான் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார் என்றால், எவ்வாறு அவர் துன்பம் அனுபவிப்பதாக, துயரில் உழல்வதாக, தூய்மையற்றவராக ஆனார் என்பதுதான் கேள்வி. அவர் மாறவில்லை என்கிறது உபநிடதம். எல்லா உயிர்களின் பார்வைக்கும் சூரியனே காரணம். ஆனால் எந்தக் கண்களில் உள்ள குறைபாடும் சூரியனை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. அதைப் போலவே, உடல் படும் துன்பங்களாலோ சுற்றியுள்ள துயரங்களாலோ ஆன்மா பாதிக்கப்படுவதில்லை. வியாதி காரணமாக எனக்கு எல்லாமே மஞ்சளாகத் தோன்றலாம்; அதனால் சூரியனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

அவர் ஒன்றேயானவர், எல்லாவற்றையும் படைத்தவர், எல்லோரையும் ஆட்சி புரிபவர், எல்லா உயிர்களின் அந்தராத்மா அவர். அவர் தமது ஒருமையைப் பன்மையாக்குகிறார். இவ்வாறு இறைவனையே தங்கள் ஆன்மாவின் ஆன்மாவாக உணரும் ரிஷிகளுக்கே நிலையான அமைதி உரித்தாகும்; வேறு யாருக்கும் இல்லை, வேறு யாருக்கும் இல்லை. நிலையற்ற இந்த உலகத்தில் ஒருபோதும் மாறாமல் நிலையாக இருக்கும் ஒருவரை, மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஒரே வாழ்க்கையாக இருப்பவரைக் காண்பவனுக்கு, பன்மையுள் ஒருமையைக் காண்பவனுக்கு, ஒருமையான அந்த இறைவனே தன் ஆன்மாவின் ஆன்மாவாக உணர்ந்தவனுக்கு மட்டுமே அமைதி உரித்தாகும்; வேறு யாருக்கும் அல்ல. வேறு யாருக்கும் அல்ல. இந்தப் புற உலகில் அவரை எங்கே காண்பது? சூரியர்களிலும் சந்திரர்களிலும் நட்சத்திரங்களிலும் அவரை எங்கே காண்பது? அங்கே சூரியனோ சந்திரனோ நட்சத்திரங்களோ மின்னலோ தங்கள் ஒளியை வெளிப்படுத்த முடியாது. சாதாரண நெருப்பைப்பற்றி என்ன சொல்வது? அந்த இறைவனின் ஒளியில்தான் எல்லாமே ஒளிபெறுகின்றன. எல்லாமே அந்த இறைவனிடமிருந்துதான் ஒளி பெறுகின்றன. எல்லாவற்றின் மூலமாகவும் ஒளிவீசுவது அந்தப் பரம்பொருள்தான்.

இதோ, மற்றோர் அருமையான உவமை. ஆலமரம் எப்படி ஒரே வேரிலிருந்து முளைத்து வெகுதூரம் பரவுகிறது என்பது, உங்களில் இந்தியாவுக்கு வந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இறைவன்தான் ஆலமரம் என்று வைத்துக்கொள்வோம். அனைத்தின் வேர் அவரே. பல கிளைகளாகப் பிரிந்து பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பது அவர்தான். எவ்வளவு தூரம் பரவினாலும், எல்லா கிளைகளும் விழுதுகளும் ஒன்றோடொன்று தொடர்பு உடையனவே.

வேதங்களில் பிராம்மணப் பகுதியில் பலவகையான சொர்க்கங்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால் உபநிடதங்களின் தத்துவக் கருத்துக்களில் சொர்க்கத்திற்குப் போவதைப் பற்றிய பேச்சே இல்லை. இன்பம் இந்தச் சொர்க்கத்திலோ அந்தச் சொர்க்கத்திலோ இல்லை; அது ஆன்மாவில் உள்ளது. இடங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

அனுபூதியின் பலவகைகளைப்பற்றிப் பேசும் ஒரு பகுதியைக் காண்போம். மனிதன் கனவில் பொருட்களைக் காண்பதுபோல், பித்ருலோகத்தில் உண்மையைக் காண்கிறான். கனவில் பொருட்கள் தெளிவுற்று மங்கலாகத் தெரிவது போல்தான் பித்ருலோகத்தில் உண்மையைக் காண்கிறோம். கந்தர்வலோகம் என்னும் இன்னொரு சொர்க்கத்தில் இன்னும் மங்கலாகத் தெரிகிறது. தண்ணீரில் தோன்றும் பிம்பத்தைப்போல் அங்கே உண்மை தெரிகிறது. இந்துக்கள் கற்பித்துள்ள சொர்க்கங்களில் மிக உயர்ந்தது பிரம்மலோகம். இங்கே உண்மை இன்னும் தெளிவாக, ஒளியும் நிழலும்போல், தெரிகிறது. ஆனாலும் முற்றிலும் தெளிவாகத் தெரிவதில்லை. முகம் பார்க்கும் கண்ணாடியில், முகம் முழுமையாகத் தெளிவாகத் தெரிவதுபோல், நம் ஆன்மாவில்தான் மெய்ப்பொருள் தெளிவாக ஒளிவிடுகிறது.

ஆகவே மிக உயர்ந்த சொர்க்கம் நம்முடைய ஆன்மாவில்தான் இருக்கிறது. அனைத்து சொர்க்கங்களிலும் உயர்ந்ததாக, நாம் வழிபட வேண்டிய பெரும் கோயிலாக இருப்பது மனித ஆன்மாதான் என்று வேதாந்தம் கூறுகிறது. ஏனென்றால் இந்த வாழ்க்கையில், நம்முடைய ஆன்மாவில் போல் வேறு எந்தச் சொர்க்கத்திலும் உண்மையை அவ்வளவு தெளிவாகவும் சிறப்பாகவும் நாம் அறிந்துகொள்ள முடியாது. இடத்தை மாற்றிக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவில் இருந்தபோது, குகையில் வசித்தால் உண்மை தெளிவாகிவிடும் என்று நான் நினைத்தேன். அது தவறு என்று தெரிந்தது. பிறகு, காடுகள் அதை எனக்குத் தரும் என்று எண்ணினேன். பின்னர் காசியில் எல்லாம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் எல்லா இடங்களிலும் விஷயம் ஒரேபோல்தான் இருந்தது. ஏனெனில் நம் உலகத்தை நாம்தாம் உருவாக்கிக் கொள்கிறோம். நான் தீயவனாக இருந்தால் உலகமே என் கண்ணுக்குத் தீயதாகத் தெரியும். உபநிடதம் இதைத்தான் சொல்கிறது. இந்த உண்மை எல்லா உலகங்களுக்கும் பொருந்தும். நான் இறந்து சொர்க்கங்களுக்குப் போனாலும் என் நிலை இப்படியே தான் இருக்கும். நான் தூய்மை பெறும்வரை குகைகளுக்கோ, காடுகளுக்கோ, காசிக்கோ, சொர்க்கத்திற்கோ போவதால் பயனில்லை. ஆனால் கண்ணாடியைத் தூய்மையாக வைத்துக்கொண்டால், நான் எங்கு வாழ்கிறேன் என்பது முக்கியமல்ல; மெய்ப்பொருளின் தரிசனம் உள்ளது உள்ளதுபடியே அதில் தெரியும். ஆகவே இங்கும் அங்கும் ஓடி ஆற்றலை வீணாக்காமல், கண்ணாடியைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் ஆற்றலைச் செலவழிப்பதே மேலாகும். அதே கருத்தை மறுபடியும் பார்ப்போம். அவனை யாரும் பார்ப்பதில்லை. கண்களால் அவன் உருவத்தை யாரும் பார்ப்பதில்லை. மனத்தில் தூய மனத்தில்தான் அவன் காணப்படுகிறான். இவ்வாறுதான் மரணமில்லாப் பெருநிலை அடையப்படுகிறது.

ராஜயோகத்தைப் பற்றிய எனது கோடைக்காலச் சொற்பொழிவுகளைக் கேட்டவர்களுக்கு, அந்த யோகத்திற்கும் இந்த யோகத்திற்கும் வித்தியாசம் இருப்பது வியப்பைத் தரும். நாம் இப்போது விவாதித்துக் கொண்டிருக்கும் யோகம் முக்கியமாகப் புலனடக்கத்தைப் பற்றியதாக உள்ளது. புலன்கள், ஆன்மாவிற்கு அடிமையாகி, மனத்தை எந்த விதத்திலும் சலனப்படுத்த முடியாத நிலைக்குப் போகும்போதுதான் யோகி தன் குறிக்கோளை அடைந்தவன் ஆகிறான். மனத்தின் வீணான ஆசைகளை விட்ட பின்னர், மரணத்திற்கு உள்ளாகின்றவனான இந்த மனிதனே மரணமிலாப் பெருநிலையை அடைந்தவன் ஆகிறான். இந்த உலகத்திலேயே அவன் இறைவனுடன் ஒன்றுபடுகிறான். இதயத்தின் முடிச்சுகளெல்லாம் அறுபட்டால் மனிதன் மரணத்தை வென்றவன் ஆகிறான். அவன் இங்கேயே பிரம்மத்தை அனுபவிக்கிறான்; இங்கேயே, இந்தப் பூமியிலேயே அனுபவிக்கிறான், வேறு எங்கும் இல்லை.

இங்கே சில வார்த்தைகள் சொல்வது அவசியம் ஆகிறது. வேதாந்தமும் பிற கீழை நாட்டுத் தத்துவ சாஸ்திரங்களும் இந்த உலகிற்கு அப்பாலுள்ள ஒன்றைப் பற்றித்தான் பேசுகின்றனவே தவிர, இந்த வாழ்க்கையின் இன்பங்கள், போராட்டங்கள் இவற்றைக் கருத்தில் கொள்வதே இல்லை என்று பொதுவாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது முற்றிலும் தவறு. கீழைச் சிந்தனைகளைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களும் அவற்றின் உண்மையான போதனைகளைப் புரிந்துகொள்ளும் அளவிற்குப் புத்தி இல்லாதவர்களும்தான் இவ்வாறு சொல்கிறார்கள். இதற்கு மாறான கருத்தையே எங்கள் சாஸ்திரங்களில் படிக்கிறோம். எங்கள் தத்துவ ஞானிகள் மற்ற உலகங்களுக்குப் போக விரும்பவில்லை; அந்த உலகங்களில் மனிதர்கள், சிறிதுகாலமே அழுகையும் சிரிப்புமாக இருந்துவிட்டு, மரணத்தின் வாய்ப்படுகின்றனர் என்றே கருதுகிறார்கள். நாம் பலவீனமாக இருக்கும்வரை, இந்த அனுபவங்களையெல்லாம் நாம் பெற்றேயாக வேண்டும். ஆனால் உண்மையென்று ஏதாவது உண்டானால் அது இங்கேதான் இருக்கிறது, அதுவே மனித ஆன்மா. தற்கொலை செய்துகொள்வதால் நாம் எதையும் தவிர்க்க முடியாது; எதிலிருந்தும் தப்ப முடியாது என்பதையும் எங்கள் தத்துவ ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்.சரியான பாதையை அறிவதுதான் கடினம். மேலை நாட்டினரைப்போல் இந்துக்களும் நடைமுறை வாழ்க்கையில் வல்லவர்களே. வாழ்க்கையைப்பற்றிக் கொண்டுள்ள கருத்தில்தான் இருவருக்கும் வேறுபாடு உள்ளது. நல்ல வீடு, உடை, உணவு, அறிவு, பண்பாடு இவற்றையெல்லாம் பெறுவோம். இதுதான் வாழ்க்கை என்கின்றனர் மேலைநாட்டினர். அதையே நடைமுறையிலும் சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் ஆன்மாவைப் பற்றிய அறிவு, தத்துவம் இவைதான் உலகத்தை உண்மையாகப் புரிந்து கொள்வதாகும் என்று இந்துக்கள் கருதுகிறார்கள். அந்த ஆன்மீக வாழ்க்கையை அனுபவிக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.

அமெரிக்காவில் சிறந்த ஆஜ்ஞேயவாதி ஒருவர் இருந்தார். அவர் பண்பாடு மிக்கவர், நல்லவர், சிறந்த பேச்சாளர். மதத்தினால் பயன் ஒன்றும் இல்லை என்று சொல்லிவந்தார். மற்ற உலகங்களைப் பற்றிச் சிந்தனை செய்து, நாம் ஏன் நம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும், என்ற கருத்தை வலியுறுத்துவதற்குக் கீழ்க்கண்ட உவமையைப் பயன்படுத்தினார்; இதோ ஓர் ஆரஞ்சுப் பழம் இருக்கிறது. அதில் உள்ள சாறு முழுவதையும் பிழிந்தெடுக்க நாம் விரும்புகிறோம்.

நாம் அவரை ஒருமுறை சந்தித்தேன். அப்போது அவரிடம் சொன்னேன்: நீங்கள் சொல்வதை நான் முற்றிலுமாக ஒப்புக் கொள்கிறேன். என்னிடமும் பழம் இருக்கிறது. நானும் சாறு முழுவதையும் பிழிந்தெடுக்கவே விரும்புகிறேன். பழங்களைத் தேர்தெடுப்பதில்தான் நம்முடைய வேறுபாடு இருக்கிறது. நீங்கள் ஆரஞ்சை விரும்புகிறீர்கள்; நான் மாம்பழத்தை விரும்புகிறேன். இந்த உலகத்தில், சாப்பிட்டு, குடித்துச் சிறிதளவு விஞ்ஞான அறிவோடு வாழ்ந்தால் போதுமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் எல்லோருக்கும் இந்தக் கருத்து பிடிக்க வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. அத்தகைய கருத்து எனக்கு ஒன்றுமே இல்லை. ஓர் ஆப்பிள் எப்படித் தரையில் விழுகிறது, அல்லது ஒரு மின்னோட்டம் எப்படி என் நரம்புகளைப் பாதிக்கிறது என்பதைப்பற்றி மட்டுமே அறிய வேண்டுமென்றால், அதைவிட நான் தற்கொலை செய்துகொள்வேன். பொருட்களின் மையத்திற்குச் செல்லவே நான் விரும்புகிறேன்; அவற்றின் உட்கருத்தைத் தெரிந்துகொள்ளவே விரும்புகிறேன். வாழ்க்கையின் வெளிப்பாட்டை நீங்கள் ஆராய்ச்சி செய்கிறீர்கள். ஆனால் நானோ வாழ்க்கையையே ஆராய்கிறேன். அதைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த உலகம் இருக்கிறது என்று எப்படிச் சொல்கிறோமோ, அதே பொருளில் சொர்க்கம், நரகம் போன்றவை இருக்கவே செய்தாலும், சொர்க்கம் நரகம் போன்ற எல்லா மூடநம்பிக்கைகளையும் மனத்திலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று எங்கள் தத்துவ சாஸ்திரம் வலியுறுத்துகிறது. இந்த வாழ்க்கையின் மையத்தை, அதன் சாரத்தை நான் அறிந்து கொள்ள வேண்டும். அது என்ன, எப்படி வேலை செய்கிறது, அதனுடைய வெளிப்பாடுகள் என்ன என்பன போன்ற எல்லாவற்றையுமே அறிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றின், ஏன் என்ற கேள்விக்கு நான் விடையறிய வேண்டும். எப்படி என்ற கேள்வியைக் குழந்தைகளுக்கு விட்டுவிட வேண்டும்.

நான் சிகரெட் பிடித்துக்கொண்டே ஒரு புத்தகம் எழுதினால், அது சிகரெட்டைப் பற்றிய விஞ்ஞானமாகத் தான் இருக்கும் என்று உங்கள் நாட்டுக்காரர் ஒருவர் சொல்லியிருக்கிறார். விஞ்ஞானபூர்வமான அறிவு பெற்றிருப்பது நன்மையும் பெருமையும் தரக்கூடிய விஷயம்தான். அதைத் தேடுபவர்களுக்குக் கடவுள் உதவி செய்யட்டும். வாழ்க்கையின் இன்றியமையாத விஷயத்தைப் பொருட்படுத்தாமல், வாழ்க்கை என்பதையே புரிந்து கொள்ளாமல், விஞ்ஞானமே எல்லாம் என்று ஒருவன் சொன்னால், அது முட்டாள் தனம். உங்கள் அறிவெல்லாம் ஆதாரமற்றது, பொருளற்றது என்று நான் தர்க்கம் செய்யலாம்.. வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஆராய்ச்சி செய்கிறீர்கள், ஆனால் வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டால் தெரியவில்லை என்கிறீர்கள். நீங்கள் உங்கள் ஆராய்ச்சியை நடத்துங்கள்; எங்களை, எங்கள் ஆராய்ச்சியை நடத்த விடுங்கள்.

நான் என் வழியில் செயல்முறைவாதி, சிறந்த நடைமுறைவாதி. ஆகவே மேலைநாட்டினர் மட்டுமே நடைமுறையில் சிறந்தவர்கள் என்ற உங்கள் கருத்து முட்டாள்தனமானது. நீங்கள் ஒருவிதத்தில் நடைமுறையில் சிறந்தவர்களென்றால், நாங்கள் மற்றொரு விதத்தில் சிறந்தவர்கள். உலகத்தில் பலவிதமான மனிதர்கள் உள்ளனர், மனங்கள் இருக்கின்றன. கீழை நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் போய், வாழ்நாள் முழுவதும் ஒரு காலிலேயே நின்று தவம் செய்தால் உண்மையை அறியலாம் என்று சொன்னால் அவர்கள் அதைத் தயக்கமின்றிப் பின்பற்றுவார்கள். மேலைநாடுகளில் உள்ளவர்களிடம் போய், நாகரீகம் தொடாத ஒரு நாட்டில், எங்கேயோ ஓரிடத்தில் தங்கச் சுரங்கம் இருப்பதாகக் கூறினால், உடனே அவர்கள் தங்கம் தேடுவதற்காக ஆயிரக்கணக்கில் கிளம்பி, எந்த ஆபத்தையும் சந்திக்கத் தயாராகிவிடுவார்கள்; அவர்களுள் யாராவது ஒருவன்
இந்த முயற்சியில் வெற்றி பெறலாம். அதே மனிதர்கள் தங்கள் ஆன்மாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள்; ஆனால் அதனைச் சர்ச்சின் கவனிப்பில் விடுவதுடன் திருப்தியடைந்து விட்டார்கள். கீழைநாட்டு மனிதன் காட்டுவாசிகளின் அருகில் போக மாட்டான். அவர்கள் ஆபத்தானவர்கள் என்று கூறி ஒதுங்கிவிடுவான். ஆனால் அதே மனிதனிடம் ஓர் உயரமான மலை உச்சியில் ஆன்ம ஞானத்தை உபதேசிக்கும் ஓர் அற்புதத் துறவி இருக்கிறார் என்று சொன்னால் போதும், உயிர் போனாலும் பரவாயில்லை என்று துணிந்து கிளம்பிவிடுவான்.

இருசாராரும் நடைமுறையில் வல்லவர்களே. வாழ்க்கை என்பதே இந்த உலகம் தான் என்று நினைப்பதில் தான் தவறு இருக்கிறது. உங்கள் வழி, புலனின்ப அனுபவங்கள் என்ற கானல் நீர். அது நிலையானதல்ல; மேன்மேலும் துன்பங்களையே அது கொண்டுவரும். ஆனால் எங்கள் வழி நிலையான அமைதியைத் தருவதாகும்.

உங்களுடைய நோக்கு தவறு என்று நான் சொல்லவில்லை. நீங்கள் அதைத் தாராளமாகப் பின்பற்றலாம். அது மிகவும் நன்மையையும் இன்பங்களையும் கொடுக்கிறது. ஆனால் அதற்காக என்னுடைய நோக்கு தவறு என்று சொல்லாதீர்கள். என்னுடைய நோக்கும் தன் போக்கில் நடைமுறைக்கு ஒத்ததுதான். நாம் நமது சொந்தத் திட்டங்களின்படியே உழைப்போம். இரண்டிலும் சம அளவில் நாம் செயல்முறை வழி காண கடவுள் அருள்புரிவாராக! விஞ்ஞானம், ஆன்மீகம் இரண்டு துறைகளிலுமே சமமான வல்லமை பெற்ற சில விஞ்ஞானிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களைப் போல் காலப்போக்கில் மனித குலம் முழுவதுமே ஆக வேண்டும் என்பது என் ஆழ்ந்த விருப்பம்.

ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கு நீர் கொதிநிலையை அடையும்போது கவனித்தால், முதலில் ஒரு குமிழி, பிறகு மற்றொன்று, என்று பல குமிழிகள் தோன்றி, கடைசியில் ஓர் அமர்க்களமே நடப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த உலகமும் கிட்டத்தட்ட அதைப் போன்றதுதான். ஒவ்வொரு மனிதனும் ஒரு குமிழி, நாடுகளெல்லாம் பல குமிழிகள். இந்த நாடுகளெல்லாம் சிறிதுசிறிதாக ஒன்று சேர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு இடையே இருக்கும் வேறுபாடுகளெல்லாம் மறைந்து, எந்த ஒருமையை நோக்கி நாம் எல்லோரும் போய்க் கொண்டிருக்கிறோமோ, அது தன்னையே வெளிப்படுத்திக் கொள்ளும் நாள்வரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

விஞ்ஞானம், ஆன்மீகம் ஆகிய இரு துறைகளிலும் ஒவ்வொரு மனிதனும் சமமான செயல்முறை அறிவு பெறும் நாள் வந்தே தீரும். அப்போது அந்த ஒருமையின் இயைபு உலகம் முழுவதும் பரவும். எல்லா மனிதர்களுமே ஜீவன்முக்தர்களாகி விடுவார்கள். அதாவது, இந்த வாழ்விலேயே முக்தி பெற்றவர்களாகி விடுவார்கள். நம்முடைய பொறாமை, வெறுப்பு, அன்பு, ஒற்றுமை இவற்றின் மூலமாக அந்த ஒரே குறிக்கோளை நோக்கித்தான் நாம் எல்லோரும் போராடியவாறே போய்க் கொண்டிருக்கிறோம். ஒரு பெரிய ஆறு, நம்மையெல்லாம் அடித்துக் கொண்டு கடலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. போகும் வழியில், வைக்கோல், காகிதம் இவற்றைப் போல் குறிக்கோளில்லாமல், ஆற்றின் போக்குப்படி இங்குமங்கும் அலைக்கழிக்கப் பட்டாலும்கூட, கடைசியில் சச்சிதானந்த நிலையாகிய அந்தப் பெருங்கடலை அடைந்தே தீருவோம். 

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,